வெள்ளிநிலா முற்றம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

வெள்ளிநிலா முற்றம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

வெள்ளிநிலா முற்றம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

‘‘நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
"உடன்பிறப் பில்லா உடம்புபாழ்" பாழே
மடக்கொடி யில்லா மனை’’
- என்று இன்றியமையாத அம்சங்கள் குறித்து அவ்வைப் பாட்டி பாடினாள்.

இந்த வரிசையில் முற்றம் இல்லாத வீட்டின் பொலிவு பாழ் என்றொரு வார்த்தையை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்.

ஆம்...

வீடு என்று ஒன்று இருந்தால், அதில் முற்றம் இருந்தால் தான் அழகு.

முற்றம் என்பது பாரம்பரிய வீட்டுகளின் மையத்தில் உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே இருக்கும். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாகவும் இருக்கும். வீட்டில் சூரிய ஒளி வருவதற்கும்,  வீடு காற்றோட்டமாக இருப்பதற்கும் முற்றம் வசதியாக இருக்கும். சிலர் இந்த முற்றத்தில் துளசி மாடத்தை வைத்திருப்பது வழக்கமாகும்.

இவையெல்லாம் முற்றத்தின் பயன்பாடுகள். ஆனால், முற்றத்தின் முக்கியமான பயன்பாடு அழகை ரசிப்பது ஆகும். காதலர்கள் முற்றத்தில் அமர்ந்து நிலவை ரசிப்பதை விட இனிமையான ஒன்று உலகில் இல்லை என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

அதேபோல், குடும்பத்தினர் முற்றத்தில் அமர்ந்து முழு வெள்ளிநிலவைப் பார்த்து ரசித்தபடியே உணவு  உண்பார்களாம். முற்றம் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் அமர்ந்து நிலவை  பார்த்தபடியே உணவு உண்பது இன்பம் தரும் அனுபவம் என்றால் அது மிகையில்லை.

முற்றம் குறித்து இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.  சங்க இலக்கியங்களில்  குறிப்பிடத்தக்கதும், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றானதுமான நெடுநல்வாடை, பாண்டிய மன்னனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய பாடல் நூல் ஆகும். இது அகப்பொருள், புறப்பொருள் அதாவது காதல், வீரம் ஆகிய இரண்டையும் போற்றக்கூடியது ஆகும். அதில் பாண்டிய மன்னனின் அந்தப்புரத்தில் முற்றம் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது என்று விளக்குகிறார் நக்கீரர்....

‘‘திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்  ...’’ என்பதே அந்த பாடல் வரிகள்.

அதாவது, பாண்டிய அரசியின் அரண்மனைக்குத் ‘திருநகர்’ என்று பெயராம். அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம் அமைந்திருக்குமாம். வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள அழகு மிகுந்த முற்றத்தில் வெண்ணிற எகினம், அதாவது வெண்மையான நிறம் கொண்ட கோழியைப் போன்ற பறவையும்,  அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தனவாம். அந்த அளவுக்கு பாண்டிய  மன்னனின் அந்தப்புரத்து முற்றம் அவ்வளவு பெரியதாக இருந்ததாம்.

இளங்கோவடிகள் அவரது சிலப்பதிகாரத்தில் முற்றம் குறித்து பல இடங்களில் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின் கதைக்களமான பூம்புகாரின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி மருவூர்ப்பாக்கம் ஆகும். அதன் அழகை விவரிக்கும் இளங்கோவடிகள்,‘‘மருவூர்ப்பாக்கத்தில் ஒளிநிலா முற்றங்களும், சிறப்புமிக்க பலவகை அணிகளால் அழகு செய்யப்பட்ட அறைகளும், மான்விழி போலமைந்த சாளரங்களும் கொண்ட மாளிகைகள் பலவாக அமைந்திருந்தன’‘ என்று குறிப்பிடுகிறார்.

மற்றொரு இடத்தில், ஆடலரசியான மாதவியின் நடன அரங்கேற்றத்தின் போது மாதவிக்கு 1008 கழஞ்சு பொன் மதிப்புடைய மாலையை மன்னன் பரிசாகத் தருகிறான். மாதவியை பெரும் பணக்காரன்  ஒருவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கும் அவளது தாய் சித்திராபதி, மன்னன் பரிசாக அளித்த மாலையை விலை கொடுத்து வாங்கும் பணக்காரன் மாதவியை அடையலாம் என்று அறிவித்து, மாதவியின் தோழியான கூனியிடம் கொடுத்து வீதியில் நிறுத்துகிறாள். அந்த மாலையை வாங்கித் தான் மாதவியை அடைகிறான் கோவலன். அதன்பின் நிலா முற்றத்தில் கோவலனும் மாதவியும் கூடிக் களிப்பதாக குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

இன்னொருபுறம் பார்த்தால் கோவலன் அனைத்தையும் இழந்து கண்ணகியின் வீடு திரும்பும் போது, வீட்டு முற்றத்தில் பூவும் நெல்லும் தூவி அழகுபடுத்தினர்;விளக்கேற்றி வைத்தனர் என்று வர்ணிக்கிறார் இளங்கோவடிகள். இவ்வாறாக கண்ணகி வீடாக இருந்தாலும், மாதவி வீடாக இருந்தாலும், மற்றவர்கள் வீடாக இருந்தாலும் முற்றம் என்பது கண்டிப்பாக இருந்தது என்பதை பல தருணங்களில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

ஆனால், இப்போது கட்டப்படும் வீடுகளில் முற்றத்தை காண முடியவில்லை. நகர்ப்புறங்களில் இல்லா விட்டாலும் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளிலாவது வெள்ளி நிலா முற்றம் அமைக்கலாமே... அது தானே வீட்டுக்கு அழகு!
                                

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages