சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

1.முன்னுரை

தமிழ் இலக்கியத்தில் போற்றிப் புகழப்பட வேண்டிய நூல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று சிலப்பதிகாரம் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள். சேர நாட்டு மன்னன் செங்குட்டுவனின் தம்பியான இவர் இளவரசர் பட்டத்தை துறந்து துறவியானவர். ஆனாலும், சிலப்பதிகாரம் நூலில் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும், துன்பங்களையும் சித்தரித்துள்ளார்.

இலக்கியம் பயில விரும்பும் அனைவரும் பயில வேண்டிய முதல் நூல் இதுவாகும். சிலப்பதிகாரத்தை நான் பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். சிலப்பதிகாரத்தின் சுவை குறையாமல் உரையை தரும் நூல் ‘‘சிலப்பதிகாரம் மூலமும் உரையும்’’ என்ற நூலாகும். வ.த. இராமசுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. அதில் நான் படித்து மகிழ்ந்த பகுதிகளை உங்களுக்காக வழங்குகிறேன். படித்து மகிழுங்கள்.

முன்னுரை .
தமிழ் இலக்கியத்தில் ஐந்து பெருங்காப்பிய நூல்கள் உள்ளன. இவை சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இரட்டைக்காப்பியங்களாகும். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைவது மணிமேகலை எனலாம். மணிமேகலை என்னும் காவியத்தில் நாயகியாக வரும் மணிமேகலை என்பவள் மாதவி பெற்ற மகளாவாள். இவளைப் பற்றிய செய்தி சிலப்பதிகாரக் காப்பியத்தில் வருதலையும் காணலாம். முக்கியமாக மணிமேகலை துறவறம் மேற்கொண்டதற்குரிய  காரணத்தைச் சேரன் செங்குட்டுவன் அறிய விரும்பியது தனிச் சிறப்புத் தன்மையுடையது எனலாம்.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் இந்திய நாடு முழுமையும் தொடர்பு கொள்ளும் அரிய காப்பியமாகத் திகழ்வதாகும் . இக்காப்பியத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர்களைப்  பற்றிய செய்திகளோடு கொங்கர், மாளுவவேந்தர், கலிங்கர் முதலானோரும், மற்றும் மன்னர்களான நூற்றுவர் கன்னர், கனகவிசயர்  ஆகியவர்களைப் பற்றிய செய்திகளும் வருவனவாம். இமயத்திலிருந்து கல்கொண்டு வந்து கண்ணகிக்குத் திருச்செங்குன்றத்தில் சிலையமைத்து நிறுவி வழிபாடு செய்யப்படும் முறையானது சமுதாய இணக்கத்திற்கும் ஒருமை உணர்வுக்கும் சான்றாகக்கூறலாம்.

இந்நூல் சமயக்கருத்துகள் யாவும் ஒன்றினையொன்று ஏத்தப் போற்றும் வகையில் அமைதலையும் கருதத்தக்கது. சமணத்துறவியாகிய கவுந்தியடிகளின் பெருமையும், இருமால் வழிபாடாகிய ஆய்ச்சியர் குரவையும், கொற்றவை வழிபாடு புரியும் வேட்டுவ வரியும் பின்பு வேடுவர் சாற்றும் குன்றக் குரவையும் இனிது ஏத்துதற்கு உரியன.

முத்தமிழும் விரவப் பெறும் சிறப்பானது அரங்கேற்று காதை, இந்திர விழா ஊர் எடுத்த காதை ஆகியவற்றில் தனிப்பெரும் சிறப்புடன் விளங்குவது உணரத்தக்கது. இல்லறத் தலைவியான கண்ணகி தன்கணவன்பால் குறை காணாது கற்பின் பால் ஒழுகிய திறம் புகார்க் காண்டத்தில் இனிது விளங்க, அவளது வியத்தகு ஆற்றல் கற்பின் வயத்தால் மதுரைக் காண்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது எனலாம். அடுத்து வஞ்சிக் காண்டத்தில் தெய்வ நிலையடைந்து தன் கணவனோடு வானுலகம் சென்றனன்.

இவளது வழிபாடு நன்மை தருவது என்னும் வகையில் சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வந்து செங்குன்றத்தில் சிலை அமைத்துக் கோயில் எழுப்பி நித்திய வழிபாட்டுக்கும் வழி அமைத்தனன். அத்தன்மையில் கண்ணகி தெய்வத்தன்மையுடன் விளங்கி, அனைவருக்கும் நலம் புரியும் நாயக நங்கை ஆயினள் . இக்காப்பியத்தில் நல்லறக் கருத்துகள் பல சாற்றப்பட்டுள்ளன. மாடல் மறையோன் வாயிலாகச் சேரன்செங்குட்டுவனுக்குச் சாற்றப்படும் அற நெறிகள் யாவும் நாட்டு மக்களுக்கு உணர்த்தப்படும் அறிவுரைகள் எனலாம் . இதனினும் மேலாக இக்காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகளுக்குத் தெய்வக் கண்ணகி உரைத்த செய்தியை ஆசிரியர் தன்னிலைக் கூற்றாகச் சாற்றப்படுதலும்   நோக்கத்தக்கது.

முப்பெரும் உண்மைகளை உணர்த்தும் வகையில் இந்நூல் 1. அரசியல்  பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். 2. உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் 3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று சாற்றும் நீதி நூலாக இருந்தாலும், தமிழ்நாட்டின் ஐந்திணை மருங்கின் அறம், பொருள், இன்பம் ஆகியனவற்றை இனிது விளக்குவதாகும்.

நாளை... புகார்க் காண்டம்
                            

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages