சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
21. கண்ணகி செங்குன்றத்தையடைந்து
வானகம் ஏகுதல்
கருத்துறு கணவன் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இல்லேன்
கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்துக்
கீழ்த்திசை வாயில் கணவனோடு புகுந்தேன்!
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்குஎன்.
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு,
அவல என்னாள் அவலித்து இழிதலின்,
மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடர்இலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்ஓர்
தீ த்தொழில் ஆட்டியேன் யான்” என்று ஏங்கி
எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்
தாழுநாள் இதுஎனத் தோன்ற வாழ்த்திப்
பீடு கெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி,
வாடா மாமலர் மாரிபெய்து ஆங்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்தக்
கோநகா் பிழைத்த கோவலன் தன்னொடு
வான ஊர்தி ஏறினள் மாதோ !
கான் அமர் புரி குழல் கண்ணகிதான் என்.
வெண்பா
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு வாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் தெய்வமாய்
மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து.
தெளிவுரை:
மதுராபதித் தெய்வம் உரைத்த வரலாற்றைக் கேட்ட கண்ணகி,
“என் கருத்துக்கு உகந்த எந் கணவரைக் கண்ணால் காணும் வரை
ஓரிடத்தில் நிலைத்து இருக்கவும், நின்று கொண்டு இருக்கவும்
விரும்பிலேன்” என்று உரைத்துத் தான் இருந்த கொற்றவையின்
கோயில் வாயிலின் முன்பு தன்னுடைய கையிலிருந்த வளையலை
உடைத்தெறிந்தாள்.பின்னர்த் தான் இவ்வூருக்குக் கிழக்கு”
வாயிலின் வழியாகப் புகுந்த வகையில், மேற்கு வாயில் வழியாக
நீங்கச் செல்வதாகக் கூறினாள்.
இவ்வாறு ஏதும் இல்லாதவளாக இரவும் பகலும் வைகையின்
கரைமீது மேற்கு நோக்கிநடந்து சென்ற கண்ணகி தன்னுடைய
வருத்தத்தைக் கருதாது, கணவன் மீது கொண்ட அன்பினால்
மேடு எனவும் பள்ளம் எனவும் ஆகிய வழினடையின் இடரை
நோக்காது நடந்தனள். கடலுக்குள் நகரத்தை அமைத்த சூரபத்
மனையும் கிரவுஞ்சமலையாக இருந்த தாருகனையும் கொன்ற
சுடர்வேல் வேல் ஏந்திய குமரன்எழுந்தருளியுள்ள செங்குன்றத்தை
அடைந்து அதன் உச்சியில் ஏறினாள். அங்குப் பூத்துக் குலுங்கும்
வேங்கைமரத்தின் கீழ்வந்து நின்று தான் பெருந்தீவினை செய்த
பாவியேன் என்று துயருற்று அழுதாள். பதினான்கு நாள் கடந்த
பின்பு கணவன் நினைவைப் போற்றி ஏத்தும் நாள் அதுவே
எனத்தெளிந்து அவனை எண்ணி வணங்கினாள். அப்போது
தேவலோகத்துக் கற்பகமலர், மழை போலப் பொழிய தேவர்கள்,
கோவலனோடு வந்து கண்ணகியை ஏத்தினார்கள். மதுரை நகரத்
தாரால் தவறாகத் தீங்கு கூறப்பட்ட கோவலனோடு நறுமணம்
கமழும் கூந்தலையுடைய கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச்
சுவர்க்கம் புகுந்தாள்.
வேறு கடவுளரைத் தொழாது தன் கணவணையே தெய்வமாகத்
தொழும் உறுதிமேவிய வகையில் தானே தெய்வமாகி நிலவுலகப்
பெண்களுக்குக் கற்பின் அணியாகிய கண்ணகி, தேவர்களுக்கு
விருந்தாகத் திகழ்ந்தனள்.
No comments:
Post a Comment