சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
6. கோவலன் வரிப் பாடல்களை
யாழில் இசைத்துப் பாடுதல்
காவிரியின்சிறப்பு உரைத்தல்:
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல்அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்!
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !
மன்னும் மாலை வெண் குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய்வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்'
புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்பு என்று
அறிந்தேன்வாழி காவேரி!
உழவர் ஒதை மதகோதை
உடைநீர் ஒதை தண்பதங்கொள்
விழவர் ஒதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
விழவர் ஒதை சிறந்தார்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி!
புகார்நகரின்சிறப்பு உணர்த்தல்:
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல் தெய்வம் காட்டிக் காட்டி
அரிய சூள் பொய்த்தார் அறன்இலர் என்று
ஏழையம் யாங்கு அறிகோம் ஐய!
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும் கண்டு ஆம்பல்
பொதி அவிழ்க்கும் புகாரே எம்ஊர்.
காதலர்ஆகிக் கழிக்கானல்
கையுறை கொண்டுளம் பின்வந்தார்
ஏதிலர்தாம் ஆகி யாம் இரப்ப
நிற்பதை யாங்கு அறிகோம் ஐய!
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டு ஊசல்
ஆடும்புகாரே எம்ஊர்.
மோது முது திரையால் மொத்துண்டு
போந்து அசைந்த முரல் வாய்ச்சங்கம்
மாதர் வரி மணல் மேல் வண்டல்
உழுது அழிப்ப மாழ்கி ஐய!
கோதை பரிந்து அசைய மெல்விரலால்
கொண்டு ஓஒச்சும் குவளைமாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்ஊர்.
தெளிவுரை:
கீழ்வருவன காவிரியின் சிறப்பைக்கூறுவன:
ஆத்தி மாலை தரித்த சோழ மன்னன் வட்டமான குளிர்ந்த
நிலவை ஒத்த வெண்கொற்றக் குடையின் கீழ் விளங்குபவனாய்ச்
செங்கோல் செலுத்து, வடநாடு சென்று கங்கையைத் தன்பால்
கொண்டாலும் காவிரி அவளை விட்டு நீங்காது விளங்குவாள்.
கயல்போலும் விழியுடைய பெண்ணே! அவன் கங்கையைச்
சேர்ந்தாலும் காவிரியானவள் நீங்காதிருப்பதற்குக் காரணம்,
மாதர்கள் பெருங்கற்பின் தண்மையோடு இருப்பதேயாகும் என்று
அறிந்தேன். காவிரியே நீ வாழ்க!
குறிப்பு:
இங்கு கங்கையைப் பெண்ணாக உருவகப் படுத்தினாலும்
வடநாட்டில் சோழன்பெற்ற வெற்றியைக் குறித்ததாயிற்று.
பெருமை விளங்கும் ஆத்திமாலை சூடியவனும் வெண்கொற்றக்
குடையின் கீழ் இருந்து நீதி நெறி தவறாது செங்கோல் ஆட்சி
புரிபவனும் ஆகிய சோழமன்னன் குமரியைச் சேர்ந்த நிலையிலும்
காவிரி ஊடல் கொண்டிலள். கயல் போன்ற கண்களையுடைய
பெண்ணே! இதற்குக் காரணம் யாது எனில் மாதர்கள்பால்
விளங்கும் பெருங்கற்பு என்று அறிந்தனன். காவிரியே! நீ வாழ்க
குறிப்பு:
இங்குக் கன்னி எனப்படும் தெற்கில் உள்ள குமரிக்கடல் வரை
படை எடுத்துச்சென்று வெற்றிகொண்ட சிறப்பினைக் கன்னி
என உருவகித்துச் சாற்றியமையாம்.
உழவர்கள் நிலத்தில் உழுகின்ற ஓசையும், மதகன் வழியே நீர்
பெருகும் ஓசையும், வயல்வரப்புகளின் மடைகள் மாறப்பட்டு
நீரானது விரைந்து செல்லும் ஓசையும், புதுப்புனல் வருதலைக்
கண்டு விழா எடுப்பவர்கள் செய்யும் ஆரவார ஓசையும், சிறந்து
விளங்க, எங்கும் நிறைந்து செல்லும் காவிரியே நீ இனிது பெருமிதத்தோடு
செல்லுதற்குரிய காரணம், சோழநாட்டு வீரர்கள் போர்முழக்கம்
செய்யும் தன்மையில் விளங்கும் சோழ மன்னனது வளமேயாகும்.
காவிரியே நீ வாழ்க
கீழ்வருவன பூம்புகாரின்சிறப்பினைக்கூறுவது:
ஐயனே! கருமையுடைய குவளை மலர்போலும் கண்களுடைய
தலைவியின் கரத்தைப் பற்றிக் கடல் தெய்வமாகிய வருண்
தேவனை முன்னே சாட்சியாக வைத்து மறவாமை குறித்துக்
கூறிய சபதத்தைத் தலைவன் மறந்தனன். இத்தலைவர்
அறநெறியை மீறுபவர் என்று யாம் எங்ஙனம் அறிவோம்? விரிந்த
கதிர்களையுடைய சந்திரனும் நட்சத்திரங்களும் என விளங்கும்
சங்கையும் முத்தையும் கண்டு ஆம்பல் மலர்கள்தம் இதழ்களை
விரிக்கும் இயல்புடையது புகார் நகரம் ஆகும். அதுவே எமது ஊர்.
குறிப்பு:
இங்குச் சங்கானது சந்திரனுக்கும் முத்தானது நட்சத்திரத்துக்கும்:
உவமை கூறப்பட்டது.
எம்பால் காதல் கொண்டு கடற்கரைச் சோலைக்கு எங்கள்
பின்னே வந்த தலைவர் அயலவர் போன்று ஆனார். ஐயனே!
யாம் கவலை கொண்டு வருந்துமாறு இவர் செய்யக்கூடியவர்
என்று எங்ஙனம் அறிவோம்? பெண்களின் கண்களையும், வானில்
தோன்றும் நிலவைக் கண்டு மலர்ந்த குவளை மலர்களையும்
பார்த்து, எது கண் என்று அறியாது வண்டுகள் ஊசலாடும் தன்மையுடையது
புகார் நகரம். அதுவே எங்கள் ஊர்ஆகும்.
குறிப்பு:
இங்கு மாதரார் கண்களுக்கும் குவளை மலர்களுக்கும்
வேறுபாடு காணப் பெறாது வண்டுகள் ஊசலாடும் என்னும் நயம்
தோன்றச் சாற்றியமை நோக்குக.
ஐயனே! கடலில் வீசுகின்ற அலைகள் கரையில் மோத,
அதனால் சங்குகள் விளங்கும் கடற்கரையில் சிறுமியர் கட்டிய
மணல் வீடுகளை அழிக்கும். இதனைக் கண்டு வெகுண்ட அச்சிறுமியர்கள்
தமது மென்மையான விரல்களால் தாம் சூடியிருந்த
குவளை மலர்மாலைகளைக் கழற்றி வீசி விரட்டுவார்கள்.
அவ்வாறு வீசிய மாலைகளிலிருந்து சிதறி வீழ்ந்த மலர்இதழ்கள்
பாதியளவு மூடிய கண்களைப் போன்று விளங்கும். அப்போது
அங்கே கடந்து செல்வோர் இவையனைத்தும் கண்கள் என்றே
மயங்கியவர்களாய் நின்று விடுவர். இத்தன்மையான சிறப்புடையது
புகார்நகரம். இதுவே எமது ஊர்ஆகும்.
சிறப்புரை:
இங்குப்பாடல் 8-இல், கங்கையும், பாடல் 2 -இல் குமரியும்
பெண்ணாக உருவகப்படுத்திக் காவிரிப் பெண் அரசனை வெறுக்காது
போற்றுவதற்குக் காரணமாக நவிலப்பட்டது. இங்கு நாட்டு
மன்னனின் வீரத்தைக் குறித்தமையாயினும், கோவலன் பிற மாதர்பால்
கொண்டுள்ள வேட்கையைக் குறிப்பின் வழி உணர்த்துவதாக
மாதவி கருதினாள்என்பதாம். பின்னர்மாதவி பாடும்
பாடல்களுக்கு இவையே அடிப்படைக்கருவாயிற்று எனக்
கொள்க.
No comments:
Post a Comment