சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
9. கோவலன்கையிலிருந்த யாழை
வாங்கி மாதவி இசைத்துப்பாடுதல்
கட்டுரை
ஆங்குக் கானல் வரிப்பாடல் கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்,
மன்னும் ஓர் குறிப்புண்டு இவன்
தன்னிலை மயங்கினான் எனக்
கலவியால் மகிழ்ந்தாள் போல்
புலவியால் யாழ் வாங்கித்
தானும் ஓர் குறிப்பினள் போல்
கானல் வரிப் பாடல் பாணி
நிலத்தெய்வம் வியப்பெய்த
நீள் நிலத்தோர் மனம் மகிழ
கலத்தொடு புணர்ந்த மைத்த
கண்டத்தால் பாடத் தொடங்கும் மன்.
காவிரியை வாழ்த்திப்பாடுதல்
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்க யற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!
பூவார் சோலை பயில் ஆலப்
புரிந்து குயில்கள் இசை பாடக்
காமர்மாலை அருகு அசைய
நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகு அசைய
நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே
அறிந்தேன் வாழி காவேரி!
வாழி அவன் தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி!
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஒம்பும்
ஆழி ஆள்வான் பகல் வெய்யோன்
அருளே வாழி காவேரி!
பூம்புகார்நகரைப்போற்றுதல்
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய்
மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும் நீர்முகத்து என்று வைகலும்
மால்மகன் போல் வருதிர் ஐய!
வீங்கு ஒதம்தந்து விளங்கு ஒளிய
வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர் போல்
மீளும்புகாரே எம் ஊர்
மறையின் மணந்தாரை வன்பரதர்
பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம்
எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய?
நிறைமதியும் மீனும் என அன்னம்
நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறை மலிபூங்கொம்பு ஏற வண்டு
ஆம்பல்ஊதும்புகாரே எம்ஊர்.
உண்டாரை வெல்நறா ஊண் ஒளியாப்
பாக்கத்துள் உறை ஒன்றின்றித்
தண்டா நோய்மாதர் தலைத்தருதி
என்பது யாங்கு அறிகோம் ஐய?
வண்டல் திரை அழிப்பக்கையால்
மணல் முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய் வேல் நீர்மல்க மாதர்
கடல்தூர்க்கும் புகாரே எம்ஊர்.
தெளிவுரை:
இவ்வாறு கோவலன் யாழை மீட்டிப்பாடிய கானல் வரியைக்
கேட்ட மான் போன்ற நீண்ட விழியுடைய மாதவி, தன் காதலன்
மனத்தில் வேறு ஒரு காதல் உணர்வு உள்ளமையால் மயக்கம்
உற்றனன் போலும் என எண்ணினாள். உடனே தானும் கலவி
கொண்டு மகிழ்ந்தவள் போன்றதொரு குறிப்பினை உணர்த்துபவள்
ஆயினள். எனவே ஊடல் வயப்படுபவள் என்னும் தன்மையில்
அவன் கையிலிருந்த யாழை வாங்கி, தானும் கானல்வரிப்
பாடல்களைப் பாடுவதற்குத் தொடங்கினாள். யாழிசையோடு
இயைந்து பண்ணோடு பாடிய அப்பாடல்கள் விண்ணுலகமும்
மண்ணுலகமும் மயங்கும் வகையில் இருந்தன.
காவிரியை வாழ்த்திப்பாடுதல்:
ஆற்றின் இரு கரையும் பூக்களை மொய்த்து விளங்கும்
வண்டுகள் இசை பாடவும், பூக்களாகிய ஆடையை மேலே உடுத்தியிருத்தல்
போன்று திகழ மீன்களாகிய கண்களை விழித்தபடி
செல்லும் காவிரியே! நீ வாழ்க! இவ்வாறு கண்களை விழித்தபடி
நீ செல்வதானது நின் தலைவனாகிய சோழ மன்னனது நீதி தவறாத
செங்கோலாட்சியின் மாட்சிமையால் நிகழ்வது என்று அறிந்தனன்
காவிரியே நீ வாழ்க
காவிரிப்பெண்ணே! பூக்கள் நிறைந்த சோலையில்வாழும்
மயில்கள் ஆடவும், குயில்கள்இசை பாடவும்நீ தரித்துள்ள
மலர் மாலைகள் அசைந்தாடவும் நடந்து செல்லும் தன்மையுடையவளே!
நீ மகிழ்ச்சியுடன் செல்வதற்குக் காரணமாவது நின்
தலைவனாகிய சோழ மன்னன், பகைவர் கண்டு அஞ்சுமாறு
வலிமையான வேலாற்றலுடன் விளங்குதலேயாகும் என்பதை
நான் அறிவேன். நீ வாழ்க!
காவிரிப்பெண்ணே! சோழ மன்னனது வளமையான நாட்டை
வளர்க்கும் தன்மையில் குழந்தையை வளர்க்கும் தாய்போன்று
ஆயினை. இவ்வாறு ஊழிக்காலத்திலும் இருந்து காத்து வருபவளாயினை.
இவ்வாறு நீ செய்து வருவதற்குக் காரணம் உயிர்களைப்
பாதுகாக்கும் நடுவு நிலைமையுடைய சோழ மன்னனின் அருளேயாகும். நீ வாழ்க!
இனி, புகார் நகரத்தின் சிறப்பினைப்
போற்றுமாறு அமைவதாம்.
ஐயனே! குளிர்ந்து மேவும் இனிய ஒளியை உமிழும் முழு
நிலவைப் போலும் முகம் உடைய இவள் சிவந்த வாயிலிருந்து
முகிழ்க்கும் வெண்பல் தோன்ற விளங்கும் சிரிப்புக்குக் கடலிலிருந்து
கிடைக்கப்பெறும்முத்துக்கள்இணையாகாது. ஆயினும்
இத்தகைய முத்துக்களை வாங்கிக் கொள்ளுமாறு மன்மதனைப்
போன்று வந்து சூழ்கின்றீர். இக்கடல் தன்னிடம் உள்ள வெண்முத்துக்களை
கரையிலே கொட்டிய பின்பு, அதற்கு மாற்றாகக்
கரையிலுள்ள பூமாலைகளை விலை கூறும் வணிகர் போல
வாங்கச் செல்கின்றது. இத்தகைய வளமுடையது புகார். இதுவே எமது ஊர்.
ஐயனே! பிறர் அறியாதவாறு களவின் முறையால் கூடிய
பரதவர்கள் விளங்கும் பாக்கத்தில் உள்ள பெண்களின்
கைகளிலிருந்து வளைகள்கழன்று விழுந்து அவர்களுடைய
செயலைப் புலப்படுத்துதலை யாங்கள்அறியாது இருப்போமோ?
அன்ம பறவைகள் புன்னை மரத்தின் இளைகளில் இருக்க அங்குத் திகழும்.
எழில் தோற்றத்தை வெண்மதியும் நட்சத்திரங்கள் எனக் கருதப்
பொய்கையில் உள்ள ஆம்பல் மலர, வண்டினங்கள் மொய்க்கும்
வளம் உடையது புகார் நகரம்ஆகும். அதுவே எமது ஊர்.
குறிப்பு:
வெண்மையான அன்னப்பறவையை முழுநிலவுக்கும் புன்னைப்
பூக்களை நட்சத்திரங்களுக்கும் உவமை சாற்றப்பட்டவையாம்.
ஐயனே! கள்ளை அருந்தியவர்கள் போதையில் கட்டுண்டு.
அடிமையாகிய பாக்கங்களில் வாழ்பவர்கள், வேறு மருந்து
இன்றிக்காண்பவரைப் பற்றிப் பிணிக்கும் காமநோயைப் பெண்கள்
பால் தந்துள்ளதை யாம் அறிவோமோ? கடற்கரையில் மணல்
வீடுகளைக்கட்டி விளையாடக் கடல் அலைகள் அவற்றைச் சிதறச்
செய்துவிடும். அதைப் பொறுக்காத அப்பெண்கள் கடலையே
தூர்த்து விடுதல் போன்று தம் கையில் உள்ள மண்ணை வீசி
எறிவர். முழுநிலவு போலும் உள்ள அவர்கள் முகத்தில் பார்வையினால்
வேல் போன்று தாக்கும் கண்களையுடைய அப்பெண்கள்
வாழுகின்ற இடம், புகார் நகரம் ஆகும். அதுவே எமது ஊர்.
குறிப்பு:
இப்பாடலில் காமநோயை உண்டாக்குபவர்களும் அதற்கு
மருந்தாக விளங்குபவர்களும் பெண்கள் எனச்சுட்டுதலை
நோக்குக. இத்தன்மையில் காம நோய் தரும் பெண் அந்நோய்
தீர்க்கும் மருந்து என விளங்குதலைத் திருவள்ளுவர்,
“பிணிக்கு மருந்து பிறமன்அணிஇழை
தன்நோய்க்குத்தானே மருந்து” -திருக்குறள்:1102
என்று சாற்றியவாறும் காண்க.
No comments:
Post a Comment