சிலப்பதிகாரம் அறிவோம்- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This


13 - கவுசிகன்‌  என்னும்‌ மறையவன்‌ கோவலனைக்‌கண்டு மாதவி கொடுத்தனுப்பிய கடிதத்தைத்‌தருதல்‌

காதலி தன்னொடு கானகம்‌போந்ததற்கு
ஊது உலைக்‌குருகின்‌உயிர்த்தனன்‌ கலங்கி

உள்புலம்பு உறுதலின்‌உருவம் ‌திரிய,
கண்புல மயக்கத்துக்‌கெளசிகன்‌ தெரியான்‌
“கோவலன்‌பிரியக்‌கொடுந்துயர்‌எய்திய
மாமலர் நெடுங்கண்‌மாதவி போன்று இவ்‌
அருந்திறல்‌வேனிற்கு அலர்‌களைந்துடனே

வருந்தினை போலும்‌நீ மாதவி” என்று ஓர்
பாசிலைக்‌குருகின்‌பந்தரில்‌பொருந்திக்‌
கோசிக மாணி கூறக்‌கேட்டே
யாது நீ கூறிய உரை ஈது இங்கு எனத்
தீதிலன்‌கண்டேன் எனச் சென்று எய்தி

கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்‌
இருநிதிக்‌ கிழவனும்‌, பெருமானைக் கிழத்திவயும்‌,
அருமணி இழந்த நாகம் போன்றதும்,
இன்னுயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றும் துயர்க்கடல் வீழ்ந்ததும்,

ஏவ லாளர்‌யாங்கனும்‌சென்று
கோவலன் தேடிக் கொணர்க எனப்‌பெயர்ந்ததும்‌
பெருமகன்‌ஏவல்‌அல்லது யாங்கணும்‌
அரசே தஞ்சம்‌என்று அருங்கான்‌அடைந்த
அருந்திறல்‌பிரிந்த அயோத்தி போலப்‌

பெரும் பெயர் ‌மூதூர்‌ பெரும் பேது உற்றதும்‌,
வசந்த மாலைவாய்‌மாதவி கேட்டுப்‌
பசந்த மேனியள்‌படர்நோய்‌உற்று
நெடுநிலை மாடத்து இடைநிலத்து ஆங்கோர்‌
படையமை சேக்கைப்‌பள்ளியுள்‌வீழ்ந்தும்‌,

வீழ்துயர்‌உற்றோள்‌விழுமம்‌கேட்டுத்‌
தாழ்துயர்‌எய்தித்‌தான்சென்று இருந்ததும்‌
இருந்துயர்‌உற்றோள்‌“இணையடி தொழுதேன்‌
வருந்துயர்‌நீக்கென மலர்க்கையின்‌எழுதிக்‌
கண்மணி அனையாற்குக்‌காட்டுக” என்றே

மண்ணுடை முடங்கல்‌மாதவி ஈத்ததும்‌,
ஈத்த ஒலைகொண்டு இடைநெறித்திரிந்து
தீத்திறம்‌புரிந்தோன்‌சென்ற தேயமும்‌
வழிமருங்கு இருந்து மாசுஅற உரைத்து ஆங்கு
அழிவுடை உள்ளத்து ஆரஞர்‌ஆட்டிப்‌

போது அவிழ்‌புரிகுழல்‌பூங்கொடி நங்கை
மாதவி ஓலை மலர்க்கையின்‌நீட்ட;

தெளிவுரை:
அன்பின்‌ மிக்க மனைவியோடு காட்டு வழியே வந்த கோவலன்‌
கொல்லனின் ‌ஊதுலை போல்‌ பெருமூச்சு விட்டுக் கொண்டு
குளத்தின்‌ கரையில்‌ வருத்தத்தோடு நின்றிருந்தான்‌. அவனது
மனக்கவலையானது அவன் ‌மேனியின் ‌எழில்‌ நலனை மாற்றியது;
ஆங்கு மாதவியால்‌ அனுப்பப்பட்ட கவுசிகன்‌ என்னும்‌ அந்தணப்‌
பிரமச்சாரி  இவன் ‌கோவலன் ‌தானோ என ஐயுற்றான்‌. பின்பு ஓர்‌
உத்தியைக்‌ கையாளும் வகையில் ‌அங்கிருந்த மாதவிக் கொடியைப்‌
பார்த்தவாறு, கோவலனது பிரிவுத்துயரைத் தாங்காது வருத்தும்‌”
மாதவியைப்‌ போன்று கொடிய வெப்பத்தைத் ‌தாங்காது நீயும்‌
வாடி வதங்கினையோ? என்றான்‌. இவ்வார்த்தைகளைக் ‌கேட்ட
கோவலன்‌ அக்கவுசிகனை நோக்கி, நீங்கள்‌யார்? நீங்கள் உரைத்த
வார்த்தைகளின் ‌கருத்து யாது? என வினவினான்‌.

கோவலனது உரையைக்‌கேட்ட கவுசிகன் தான் வந்த நோக்கம்
நிறைவேறியது என எண்ணி இவன் கோவலனே என உறுதிசெய்து‌
மேலும் ‌தெரிவிக்கலானாள்‌.

“அன்பனே பெருஞ்செல்வனாகிய நின் தந்தை மாசாத்துவானும்
நின்‌ அன்னையும்‌ மாணிக்கத்தை இழந்த நாகம் போலவும் இனிய
உயிரை இழந்த உடல் போலவும் நின்னைப் பிரிந்த வருத்தத்தில்
உணர்வற்று ஆழ்ந்தனர். நின் சுற்றத்தினர் யாவரும் துன்புற்றனர்.
மேலும் ‌அவர்கள் ‌நின்னைத் ‌தேடி அழைத்துக் கொண்டு வருமாறு
ஏவலர்கள் ‌பலரை அனுப்பியுள்ளனர்‌. தந்தை சொல் கேட்டு
நடப்பதே சிறந்தது என்று கானகம்‌ சென்ற இராமபிரானைப் பிரித்த
அயோத்தி மக்கள்‌ போன்று, புகழ்மிக்க புகார்‌ நகரத்து மக்கள்‌
பெருந்துயரில்‌ உள்ளார்கள்‌. மாதவியானவள்‌ முன்பு வசந்த
மாலையிடம்‌ கொடுத்து அனுப்பிய கடிதத்தை நீ பெறுவதற்கு
மறுத்ததால்‌ அவள்‌ மேனியில் ‌பசலை நோய்‌ படரப் ‌பிரிவுத்‌
துன்பத்தால்‌ வருந்‌தினாள்‌. ஏழ்நிலை மாளிகையின்‌ இடையில் ‌உள்ள
பஞ்சணையில் ‌சோர்ந்து விழுத்து பெருந்துன்பத்தில் ‌ஆழ்ந்தனம்‌.
அவளது துன்பத்தை அறிந்து நான்‌ காணச் சென்ற போது அவள்‌
என் ‌பாதங்களை வணங்கி “என்‌ கண்ணைப்‌போன்ற கோவலனிற்கு
இக்கடிதத்தைத்‌தருக!' என்று கூறிக்‌கொடுத்தாள்‌. வேள்வி செய்து
மேவும்‌யான்‌ இக்கடிதத்தைப்‌ பெற்றுக்‌கொண்டு எல்லா இடங்‌களிலும்‌
தேடி அலைந்து இங்கு உன்னைக்‌கண்டேன்‌'

இவ்வாறு உரைத்த கவுசிகன்‌தன்னிடம்‌இருந்த கடிதத்தைக்‌
கோவலனிடம்‌கொடுத்தான்‌.

சிறப்புரை:
கோவலன் வழிநடைப் பயணத்தால் மேனி துவண்ட நிலையில் அவனை அறியும் வகையில் மாதவிசெடியானது வாடிய தன்மையினைச் சுட்டிக்காட்டி கவுசிக அந்தணன் உண்மை நிலையை அறியலானான் என்பது ஈண்டு நயம் விளங்கும் முறையில் உணர்த்தியமை காண்க. தவிரவும் மாதவியை வெறுத்த கோவலனது உள்ளப் பாங்கினை நன்கு அறியும் வகையில் அம்மறையவன் மாதவிக் கோடியை முன்னிறுத்தி உரைத்தமையும் உணரத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages