மணிமேகலை: மலர்வனத்தில் மலர் பறிக்க மணிமேகலை நுழைந்த அழகு! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

மணிமேகலை: மலர்வனத்தில் மலர் பறிக்க மணிமேகலை நுழைந்த அழகு! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

மணிமேகலை: மலர்வனத்தில் மலர்
பறிக்க மணிமேகலை நுழைந்த அழகு! - மருத்துவர் இராமதாசு அய்யா

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை இலக்கிய நூலை படித்து வருவதாக தெரிவித்திருந்தேன் அல்லவா.  அதில் மலர்வனத்தில்  மலர் பறிப்பதற்காக மணிமேகலை நுழையும் அழகைப் பார்த்து அன்னம் நாணியதாம். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் வர்ணிக்கும் அந்த காட்சி சிறப்பானது. அதை நீங்கள் ரசிப்பதற்காக இங்கு பதிவிட்டுள்ளேன்.  நீங்களும் படித்து மகிழுங்கள்.

மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்
நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள
வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை
மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாம்உள பாவைதன் கிளவிக்கு
எஞ்சல கொல்லோ இசையுந அல்ல
என்றுஇவை சொல்லி யாவரும் இனைந்துஉக
செந்தளிர்ச் சேவடி நிலம்வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் 
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு 
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமே கலைஎன்.

பொருள்:

மணிமேகலை மலர் கொய்ய மலர்வனத்தில் புகுந்தால், இவளது நடையைப் பார்த்து அங்கிருக்கும் நல்ல இளமையான அன்னம் நாணாமல் இருக்க முடியுமா?
அங்குள்ள மயில் இவளது நோற்றச் சாயலைப் பார்த்து கற்றுக்கொள்ளாமல் இருக்குமோ? அங்குள்ள கிளிகள் பாவை இவளது பேச்சைக் கேட்டுத் தோற்றுப்போகாமல் இருக்க முடியுமா?
என்று சொல்லிக்கொண்டு எல்லாரும் வருந்தினர்.

நிலத்தின் சுவடு மணிமேகலை காலடியில் படாமல் மலர்வனத்தில் பூக்கள் உதிர்ந்து பூத்துணி விரித்து வைத்தது. குரவம், மரவம், குருந்து, கொன்றை, திலகம், வகுளம், சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சி, நரந்தம், நாகம், பரந்து பூத்திருக்கும் புன்னை, பிடவம், தளவம், வளைந்த முள்ளினை உடைய தாழை, குடசம், வெதிரம், கொழுத்த காம்பினை உடைய அசோகம், செருந்தி, வேங்கை, பெருஞ்சண்பகம், எரிவது போன்ற மலர் கொண்ட இலவம், ஆகியவையெல்லாம் விரிந்து பூத்து, சித்திரம் தீட்டிய திரைத்துணி போர்த்தியது போல, உவவனம் காட்சி அளித்ததாம்.
இந்த மலர்வனத்தில் சுதமதியோடு சேர்ந்து மலர் கொய்ய மணிமேகலை புகுந்தாள் என்று சீத்தலைச் சாத்தனார் வர்ணித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages