சென்னை தலைமைச் செயலகத்தில் 25.11.1987 - யில் இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் - மருத்துவர் இராமதாசு அய்யா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. - Agnipuratchi

சென்னை தலைமைச் செயலகத்தில் 25.11.1987 - யில் இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் - மருத்துவர் இராமதாசு அய்யா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

Share This

சென்னை தலைமைச் செயலகத்தில் 25.11.1987 - யில் இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் - மருத்துவர் இராமதாசு அய்யா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான். 1931&ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிலேயே இந்த உண்மை தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் மட்டுமின்றி, மேற்கு மாவட்டங்களிலும் வன்னிய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் பரப்பளவில் பாதிக்கும் மேல் நாங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றாலும் வன்னியர்களின் ஆதரவு தேவை. கடந்த காலங்களிலும் வன்னியர்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தான் ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

மக்கள்தொகையில் மட்டுமல்ல.... தமிழக அரசுக்கு வரி செலுத்துவதிலும் வன்னியர்கள் தான் முதன்மை சமுதாயம் ஆவர். சொத்துவரி, நிலவரி உள்ளிட்ட அனைத்து வகையான வரிகளையும் நாங்கள் தவறாமல் செலுத்துகிறோம். வெற்றிலைப் பாக்கு, பீடி, சிகரெட், உணவுப் பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தின் மூலமாகவும் நாங்கள் செலுத்தும் வரி தமிழக அரசுக்கு கிடைக்கிறது. இப்படியாக நேரடி வரியாக இருந்தாலும், மறைமுக வரியாக இருந்தாலும் நாங்கள் முறையாக செலுத்துகிறோம். ஆனால், எங்கள் சமுதாயம் சமூகரீதியாவும், கல்வியிலும் மிகவும்  பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. பொருளாதார நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் எவரும் பெருநிழக்கிழார்கள் அல்ல. எங்களில் எவரிடமும் 100 ஏக்கர், 200 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் கிடையாது. எங்கள் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் சிறிய அளவில் நிலம் வைத்துள்ள உழவர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தான். இத்தகைய நிலையில் உள்ள சமுதாயத்தை முன்னேற்ற வேண்டுமானால் அதற்கு கல்வியும், அரசு வேலைவாய்ப்பும்  கட்டாயம் தேவை. ஆனால், தமிழக அரசு வேலைவாய்ப்பும், கல்வியும் எங்களுக்கு கிடைப்பதே இல்லை.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னியர்களுக்கு ஒர் விழுக்காடு கூட கிடைப்பதில்லை. வன்னியர்கள் தான் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெரும்பான்மை சமுதாயம். ஆனால், ஒரு விழுக்காடு தான் இட ஒதுக்கீடு கிடைக்கிறது. தமிழக அரசின் பல துறைகளின் வேலைவாய்ப்பில் எங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை.

மருத்துவப் படிப்பில் அதுகூட கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 500 மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால், வன்னியர் சமுதாயத்தினருக்கு  வெறும் 3 இடங்கள் மட்டும் தான் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் வன்னியர்கள் தான் பெரும்பான்மை சமுதாயம். ஆனால், அங்குள்ள வன்னிய மாணவர்களில்  ஒருவருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் எங்களுக்கு கிடைக்காத போது அதை சமூகநீதி என்று எவ்வாறு கூற முடியும்.

வன்னியர்கள் என்றாலே மூத்த அமைச்சர்களுக்கு கசக்கிறது; வன்னியர்களுக்கு பெயர் கிடைத்து விடக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். இதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும் என்றாலும், ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூற விரும்புகிறேன்.

நீங்கள் (எம்.ஜி.ஆர்) முதலமைச்சராக இருந்த போது இதய அறுவை மருத்துவ வல்லுனர் பஞ்ச மூர்த்தியை பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தீர்கள்.  பயிற்சி முடித்து மருத்துவர் பஞ்சமூர்த்தி திரும்பியதும் அவரைத் தலைவராகக் கொண்டு புதிய துறை ஒன்றைத் தொடங்க நீங்கள் ஆணை பிறப்பித்தீர்கள். ஆனால், அதன்பின் ஓராண்டாகியும் உங்கள் ஆணை நிறைவேற்றப்படவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் ப.உ.சண்முகம் தான் புதிய துறை உருவாக்கப்படுவதைத் தடுத்தார். இதற்குக் காரணம் மருத்துவர் பஞ்சமூர்த்தி வன்னியர் என்பது தான். மருத்துவர் பஞ்சமூர்த்தி வேறு சாதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், அவர் தலைமையில்  எப்போதோ புதிய துறை அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. அதற்கு ஒரே தீர்வு வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான். அந்தக் கோரிக்கையை உங்களிடம் வலியுறுத்த வேண்டும்; அதற்காக உங்களை சந்தித்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று 7 ஆண்டுகளாக முயன்று வருகிறோம். உங்கள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனை பலமுறை சந்தித்து நேரம் கேட்டோம். ஆனால், உங்களை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது தான் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உங்களை முதன்முறையாக சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. மனு வடிவிலும், நேரடியாகவும் எடுத்துக் கூறிய எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், மீண்டும் தீவிரமாக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

வன்னியர் சங்க சாலைமறியல் போராட்டத்திற்கு எதிராக அமைச்சர்கள் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். அதேபோல், காவல்துறை தலைவர் ஸ்ரீபாலும், அவரது காவலர்களும்  அட்டூழியங்களை செய்தனர். வன்னியர்கள் மீது பொய் வழக்கு போடுவது இன்னும் தொடர்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும்’’

- 25.11.1987-இல் (33 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்) சென்னை தலைமைச் செயலகத்தில் இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
                       ********

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages