தாழம்பூவே... நீ
என்றும் வாசம் வீசு! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழ் இலக்கியங்களில் மிக அதிக அளவில் இடம் பெற்ற மலர் என்றால் அது தாழம்பூ தான். அக நானூற்றில் தொடங்கி மணிமேகலை வரையிலும், இன்றைய திரைப்பட பாடல்கள் வரையிலும் தாழம்பூவின் வாசம் வீசிக் கொண்டு தான் இருக்கிறது.
‘‘தலைவிரித்த பேய் போல தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ளதாக’’ அகநானூறில் வெங்கண்ணனார் கூறுகிறார். ‘‘நாரை கோதுகின்ற சிறகுபோல, தாழையின் அரும்புகள் விரிந்து மலர்வதாக’’ குறுந்தொகை கூறுகிறது. அன்னப்பறவை போல மலர்வதாக சிறுபாணாற்றுப்படை வர்ணிக்கிறது.
நற்றினையில் நக்கண்ணையார் எழுதிய பாடலில் தான் தாழம்பூ மிகவும் சுவையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இலையில் உள்ள முட்கள் சுறாமீனின் பற்களாகவும், சொரசொரப்பான தாழையின் அடிப்பகுதி இறால் மீனின் முதுகாகவும், கூர்மையான முனை உள்ள இதன் மொட்டு யானையின் தந்தமாகவும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. தாழம்பூ மலர் முதிர்ந்து தலைசாய்த்து நிற்பது மான் தலை சாய்த்து நிற்பது போலவும், தாழம்பூ மலர்ந்து மணம் பரப்புவது, விழா நடைபெறும் இடத்தில் கமழும் தெய்வமணம் போலவும் உள்ளதாக நக்கண்ணையார் நற்றிணையில் விவரித்திருக்கிறார்.
நான் படிந்து வியந்த நூல்களில் ஒன்றான மணிமேகலையிலும் கைதை மலருக்கு இடம் உண்டு. மணிமேகலையில் உவவனத்தில் அதாவது மலர்வனத்தில் மணிமேகலை மலர் பறிக்க செல்லும் காட்சியை வர்ணிக்கும் மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் ‘‘முடமுள் தாழை’’ , அதாவது ‘‘வளைந்த முள்ளினை உடைய தாழை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நான் படித்து ரசித்ததுடன் உங்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றொரு நூலான சிலப்பதிகாரத்திலும் கைதை மலர் (தாழம்பூ) பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவலனைக் காணாமல் ஏங்கும் மாதவியைப் பற்றி வர்ணிக்கும் போது ,‘‘ கைதை வேலி கழியாய் வன்தூம்’’ என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.
அதாவது தாழம்பூ மரங்களை வேலியாய்க் கொண்ட இந்த கடற்கரைக் கழிக் கானலில் நம்மை மகிழ்வித்துச் சென்ற தலைவர் தாம் கூறியவாறு திரும்பவில்லை என்றாலும் அவர் நம்முடைய மனதில் இருந்து அகலாதவர் ஆவர் என்று மாதவி கூறுவதாக சிலப்பதிகாரம் உரைக்கிறது.
தாழம்பூவுக்கு ‘கைதை’ என்று ஒரு பெயர் உண்டு. தாழம்பூவின் இலையைத் தொடும் போது, அதில் உள்ள முள்கள் கைகளில் குத்தும் என்பதால் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சித்த மருத்துவத்தில் தாழம்பூவை கைதகப்பூ என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆறுகள், சிற்றாறுகள், ஓடைகள், குளக்கரைகள் ஆகியவற்றில் தாழம்பூ மரம் மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுமாம்.
உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி என்ன தெரியுமா?
தாழம்பூ மரம் கடற்கரைகளில் அதிக அளவில் காணப்படும் என்பது தான். 25 அடி உயரம் வரை வளரக்கூடிய தாழம்பூ மரம் கடல் அரிப்பைத் தடுக்கும் தன்மை கொண்டதாகும்.
தாழம்பூவில் ஆண் பூ, பெண் பூ என இரு வகை உண்டு. இவற்றில் ஆண் மலருக்கு தான் அதிக வாசம் உண்டு. ஆண் மலர் மலர்ந்த பிறகு ஒரு நாள் மட்டும் தான் மரத்தில் இருக்குமாம். 24 மணி நேரத்திற்குப் பிறகு அந்த மலர் உதிர்ந்து விடுமாம். உதிர்ந்த பிறகும் கூட தாழம்பூ வாசம் வீசுமாம்.
பல நேரங்களில் தாழம்பூ இரு நாட்களுக்கு மேலாகவும் மணம் வீசும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தாழம்பூ என்ற திரைப்படத்தில் ‘‘தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்...அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்’’ என்று குறிப்பிடுவதன் இதை உறுதி செய்கிறார் கவிஞர் வாலி.
ஆனால், மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், தாழம்பூ அருகிக் கொண்டிருக்கிறது என்பது தான். இப்போது தாழம்பூவை பார்ப்பதே அரிதாகி விட்டது. அதற்குக் காரணம் ஆறுகள், சிற்றாறுகள், ஓடைகள், குளக்கரைகள் என தாழம்பூ மரம் வளரக்கூடிய நிலப்பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்படுவது தான். இது மிகவும் ஆபத்தானது ஆகும். இது கடலோரங்களிலும், ஆற்றங் கரைகளிலும் நில அரிப்புக்கு வழி வகுத்து விடும் என்பது தான் எனது அச்சமாகும்.
தாழம்பூவை பார்ப்பது அரிதாகி விட்ட காலத்தில், தாழம்பூ குறித்த நினைவு வந்தால், அதைப் பற்றி எழுதப்பட்ட கீழ்க்கண்ட பாடல்களை கேட்டு ரசிப்பது எனது வழக்கம்....
‘‘தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து (படம்: பாகப்பிரிவினை)’’
‘‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா ( படம்: முள்ளும் மலரும்)’’
‘‘தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும் (தாழம்பூ)’’
‘‘தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு (படம்: கை கொடுக்கும் கை)’’
‘‘தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு (படம்: இன்று நீ நாளை நான்)’’
‘‘தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது (படம்: ராதா திலகம்)’’
இந்த பாடல்களைக் கேட்கும் போதே மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். இந்த பாடல்களை நீங்களும் கேட்டு ரசியுங்கள். அது மட்டுமே முக்கியமல்ல. அருகி வரும் தாழம்பூ மரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்த்து, தாழம்பூவின் வாசத்தை எப்போதும் அனுபவிக்க வகை செய்யுங்கள்!
*****************
No comments:
Post a Comment