போலிகளின் முகத்திரைகளை கிழித்தெறியும் பதிவு! கவிஞர் ஜெயபாஸ்காரனுக்கு பாராட்டுகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

போலிகளின் முகத்திரைகளை கிழித்தெறியும் பதிவு! கவிஞர் ஜெயபாஸ்காரனுக்கு பாராட்டுகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

போலிகளின் முகத்திரைகளை கிழித்தெறியும் பதிவு! கவிஞர் ஜெயபாஸ்காரனுக்கு பாராட்டுகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காமலும் வாடிக் கொண்டிருக்கும் சமுதாயம் வன்னியர்கள். அவர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதை போலி நடுநிலைவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களின் மனங்களில் அமிலம் சுரக்கிறது; வயிறுகளில் எரிச்சல் ஏற்படுகிறது. அதைத் தீர்த்துக் கொள்ள  நம்மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவர்களிடமிருந்து வெளியாகும் வன்மம் நிறைந்த வார்த்தைகளிலும், பதிவுகளிலும் உண்மை இல்லை.  மாறாக, வன்னியர்கள் முன்னேறி விடுவார்களோ? என்ற பொறாமை தான் நிறைந்திருக்கிறது.  அவை அனைத்தையும் கவிஞர் ஜெயபாஸ்கரன் அம்பலப்படுத்தியிருக்கிறார். சரியான நேரத்தில் சரியான பதிவு. வாழ்த்துகள்... பாராட்டுகள் கவிஞர் ஜெயபாஸ்கரன்!
==========================================
இனி கவிஞர் ஜெயபாஸ்கரனின் பதிவு

வணக்கம் நண்பர்களே!

பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து கோருகின்ற  வன்னியருக்கு 20% தனி இடப்பங்கீடு பற்றிய ஒரு நீண்ட பதிவு இது!

ஒரு வர்க்கத்தின் வாழ்வாதாரத் கோரிக்கை ஓலம், சற்று நீண்டுதானிருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே சிறிது நேரம் ஒதுக்கி இப்பதிவைப் படியுங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள சுயநலம் மிக்க சில நச்சுச் சிந்தனையாளர்கள், பா.ம.க.நடத்தும் இடப் பங்கீட்டுப் போராட்டங்கள் குறித்துப்  பொதுச் சமூகத்தின் முன் சித்தரிக்கின்ற, முற்றிலும் அவதூறான, கருத்துகளைக் குறித்த  சில தெளிவுகளை ஏற்படுத்தவே இப்பதிவை முன் வைக்கிறேன்!

கடந்த 1.12.2020 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு வந்த பா.ம.க.மற்றும் வன்னியர் சங்கத்தினர் பெருங்களத்தூரில் ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசல்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அல்லல்கள் குறித்து, என் இருபதாண்டுக் கால இனிய நண்பர் திரு.இளையபெருமாள்(சுகதேவ்) அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு, ' பாரம் சுமந்து' ஒரு பதிவை முன் வைத்திருந்தார்!

அதைப்போலவே எனது முப்பதாண்டுக் கால நண்பர் 'ஈஷா' திரு.பாலச்சந்தர் அவர்கள், பெருங்களத்தூரில் ஓர் ஆம்புலன்சுக்குக் கூட வழிவிடாமல்(?) பா.ம.க.வினர் போராட்டம் நடத்துவதாக ஒரு காணொளிக் காட்சியைத் தன் பங்கிற்குப் பரப்பியிருந்தார்!

'இந்த வன்னியர்களே இப்படித்தான்!' என்று யாரோ ஒரு பாட்டி மனம் வருந்தி சாபமிட்டதாக இன்னொரு இனிய நண்பர் என்னிடம் தொலைபேசியில் பட படத்தார்!

இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போன்ற இன்னும் நூற்றுக்கணக்கானவர்களும், 'உள்வெறி' கொண்ட ஊடகத்தினர் சிலரும் இதுபோன்ற கருத்துகளையே பரப்பினர், தொடர்ந்து பரப்பி வருகின்றனர்!

இந்நிலையில், 'போலி'சாதி ஒழிப்புப் (?) போராளிகளுக்கும், அரைகுறைச் சித்தாந்த அறிவு ஜீவிகளுக்கும், 'வாராந்தர விடுமுறை நாள்' களின்   புரட்சியாளர்களுக்கும் சில வினாக்களை முன் வைத்தாக வேண்டிய அவசியம் நமக்கு நேர்ந்திருக்கிறது!

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டக் கோரிக்கையின் இடையறாத நீட்சியாக, உரிய காலத்துக்கு முன்னதாகவே முறையாக அறிவிப்பு செய்யப்பட்டு, இந்தப் போராட்டம் நடத்தப் பெற்று வருகிறது!
நிகழும் 2020 -ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியில், இந்தப் போராட்டம் நடத்தப்படுவதற்கு முதலில் தேர்வு செய்யப்பெற்ற இடம், சென்னை பாரிமுனையில் உள்ள 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்'!
காவல் துறையினர் அங்கு  அனுமதி தர மறுத்து விட்டதால் அதற்கு அடுத்தக் கட்டமாக போராட்டக் குழுவினர், காவல் துறையினருடன் நடத்திய மிக நீண்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தீவுத்திடல் அருகே அனுமதி பெற்றனர்!

திடீரென போராட்டத்திற்கான இடம் ‌மாற்றப்பட்ட செய்தியை,   இரவு முழுவதும் தங்களது இயக்கத்தினருக்குத் தெரிவித்த அவர்கள், அனைவரையும் தீவுத்திடலுக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர்!
அதை ஏற்று தமிழகம் முழுவதும் இருந்து புறப்பட்ட, ஏற்கனவே புறப்பட்டுவிட்ட பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும் சென்னைக்குள் நுழைந்த போதுதான் பெருங்களத்தூரில் மட்டுமல்ல, சென்னையின் எட்டு நுழைவுச் சாலைகளிலும் தடுத்து நிறுத்தப் பட்டனர்!

'போராட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு இரவு முழுவதும் பயணித்து வந்த பிறகு எங்களைத் தடுத்து நிறுத்துவது சரியா?

எங்களைப் போராட்டத்திற்குச் செல்ல அனுமதியுங்கள்! 'என்று கேட்டும்  காவல் துறையினரின் அனுமதி கிடைக்காமல் போகவே போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்தனர்!

சில தொண்டர்கள் பாய்ந்து வந்த ரயிலையே எதிர்நின்று நிறுத்துமளவிற்கு ஆத்திரமூட்டப் பட்டனர்!

எனவே அந்தப் போக்குவரத்து நெரிசலுக்கும்‌, அப்போது நேர்ந்த சில இடையூறுகளுக்கும்  பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும் எவ்வகையிலும்  காரணமானவர்கள் அல்ல என்பதை, சொகுசுக்குப் பழகிப்போன 'சிந்தனைக் குள்ளர்கள்' தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை!

அதுமட்டுமல்ல, அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்? என்கிற கேள்வியை தங்களது முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டு அவர்கள் காவல் துறையினரிடம் கேட்டிருக்க வேண்டும்!
அப்படியெல்லாம் எதுவும் கேட்கப்படவில்லை!

ஏனென்றால் நிகழ்காலத் தமிழகத்துச் சிந்தனைப் புரட்சியாளர்களின் கவலையெல்லாம், கூழுக்கும் வக்கற்றுக் கிடக்கின்ற கோடிக்கணக்கான மக்களைப் பற்றியல்ல, அவர்கள் தங்களது 'லஸ்ஸி' க்கு சர்க்கரை குறைவதாக நினைக்கிறார்கள் அல்லவா? அதைப் பற்றியதுதான்!

1987-ஆம் ஆண்டு செப்டம்பர்-17- இடப் பங்கீட்டுப் போரில்,21 கைநாட்டு வன்னியர்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.

பல்லாயிரக் கணக்கான கைநாட்டு வன்னியர்கள் மிகக் கொடுமையான சித்திர வதைகளுக்கும், பல்லாயிரக் கணக்கான வழக்குகளுக்கும் உள்ளாக்கப்பட்டுச் சிதைந்து போனார்கள்!
அந்தக் கைநாட்டு வன்னியர்கள் விட்ட தங்களது உயிர்களுக்கும்,கொட்டிய குருதிக்கும், காவல் துறையினரின் வாகனங்களில் அடைந்து நீதிமன்றத்துக்கும் சிறைகளுக்கும் அலைந்து திரிந்த அவலங்களுக்கும் விடையாகக் கிடைத்ததுதான் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான 20% இடப் பங்கீடு!

இந்த இடப் பங்கீட்டின் வாயிலாக அந்தத் தியாகிகளுக்கு எப்பயனும் கிடைக்கவில்லை!

எதுவும் கிடைக்காது என்று அவர்களுக்கும் தெரியும்!

ஆனாலும் கூட, அவர்களது 'டாக்டர் அய்யா' சொன்னவற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து தங்களது அடுத்தடுத்த தலைமுறையினராவது வாழட்டுமே என்று அந்தக் கைநாட்டு வன்னியர்கள், களத்தில் இறங்கிப் போராடிக் குண்டடிப்பட்டுக் கண்களை மூடினார்கள்!

அவர்கள் அன்றைக்கு வேரில் பாய்ச்சிய குருதிதான், இன்றைய நமது பல்லாயிரக்ணக்கான இளையதலைமுறையினரை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், பல்வேறு வகையான பட்டதாரிப் பணியாளர்களாகவும் 'பூக்க' வைத்திருக்கிறது!

ஆனாலும் கூட, 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு வறிய சமூகத்தின் தேவைக்கும், கொடுக்கப் பட்டதற்குமான இடைவெளி மிகவும் நீண்டதாக இருப்பதால்தான், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களும், அவர்தம் பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் சேர்ந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தங்களுக்கெனத் தனியாக 20% இடப் பங்கீடு என்னும் கோரிக்கையை அழுத்தந் திருத்தமாக முன் வைத்திருக்கிறார்கள்!

தங்களுக்கு மட்டுமல்ல தங்களின் சகோதரச் சமூகங்கள் ஓவ்வொன்றுக்கும் அதனதன் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் நியாயம் கேட்கிறார்கள்... அவ்வளவுதான்!
மேலும் மிகவும் பிற்படுத்தப் பட்ட, பாவப்பட்ட, பரதேசிகளாகிவிட்ட,கோடிக்கணக்கில் கூலிக்காரர்களாக மாற்றப்பட்டு விட்ட வன்னியர்களின், 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-சமூக நீதிப் போராட்டத்தின் காரணமாக, கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் கருணையோடு 'அழுகிய கனியாக' அருளப்பட்ட, 108  சமூகங்களுக்கான 20%இடப் பங்கீட்டில் எத்தனைப் பேர் வன்னியர்கள்? என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் கேட்கிறார்கள்! அவ்வளவுதான்!

இந்தத் தகவல் முறைப்படி தெரிவிக்கப் பட்டால் வன்னியர்களில் மட்டுமல்ல, மற்ற பெரும்பான்மைச் சமூகங்களிலும் எவ்வளவுபேர் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள், நய வஞ்சகமான முறையில் ஏமாற்றப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, வெட்ட வெளிச்சமாகிப்  போகும் என்பதே அவர்களது கோரிக்கையின் நியாயம்!

நமது நாட்டில் பல நூற்றாண்டுகளாகப்‌ பின் தங்கிக் கிடக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, சமூக நீதி என்றால் என்ன? என்பதை மருத்துவர் அய்யா திரு.இராமதாசு அவர்கள், கடந்த நாற்பது ஆண்டுக் காலமாகப் படாத பாடுபட்டுப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்!

அதன் அறிவியல் பூர்வமான விளைவுதான், சமூக நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மைச் சமூகங்களின் இன்றைய எழுச்சி!

இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத சுகபோகச் சரித்திரம் கொண்டவர்கள்தான், 'அரசாங்கத்தின் கரோனா படுக்கைகளில் கூட ராமதாஸ் இட ஒதுக்கீடு கேட்பார்!' என்று எழுதி அவரையும் சமூக நீதியையும் தொடர்ந்து கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

சமூக நீதிக்கான மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டங்களை மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் சமூக நீதியின் பகைவர்கள் தான்!

இருக்கிற எல்லா வகையான வாய்ப்புகளையும் காலங்காலமாக இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளித் தின்று அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான்!

சமூக நீதி பெறவேண்டிய தமிழ்சமூகங்களின் பெரும்பான்மை மக்கள், மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டங்களைக் குறித்து எந்த அளவுக்குப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி தான்!

ஆனால் அவரது சமூக நீதிக் கோட்பாடுகளின் பகைவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்!

ஒரு புள்ளி விவரத்தை இங்கே முன் வைக்கிறேன் படியுங்கள்!

1) நமது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் செயலகத்தில், உயர் அதிகாரிகள் மொத்தம் -49 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்டவர்கள்/ பட்டியலினத்தவர்கள்- 4 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்- 6 பேர்!

அப்படியானால் மற்ற அந்த 39 பேர்?

2) குடியரசுத் துணைத் தலைவரின் செயலகத்தில் உயர் அதிகாரிகள் மொத்தம்- 7 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்-0/

பட்டியல் இனத்தவர்கள்-0/

பிற்படுத்தப் பட்டவர்கள்-0/

அப்படியானால்  அந்த -7 பேர்?

3) கேபினட் உயர் செயலர்கள் மொத்தம்- 20 பேர்!

இவர்களில் தாழ்த்தப் பட்டவர்/பட்டியல் இனத்தவர் -1/

பிற்படுத்தப்பட்டவர்கள்-2 பேர்!

அப்படியானால் மற்ற அந்த -17 பேர்?

4) பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 -உயர் அதிகாரிகள்!

இவர்களில் தாழ்த்தப்பட்டவர் -1

பட்டியலினத்தவர்-1

பிற்படுத்தப் பட்டவர்கள்-2 பேர்!

அப்படியானால் மற்ற அந்த -31 பேர்?

5) வேளாண்மைத் துறையில் துறையில் மொத்தம் -314 உயர் அதிகாரிகள்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பட்டியல் இனத்தவர்கள்- 45 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்-10-பேர்!

அப்படியானால், மற்ற அந்த -259 பேர்?

6) பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்த உயர் அதிகாரிகள் -1,379 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பட்டியல் இனத்தவர்கள்-48 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்- 32 -பேர்!

அப்படியானால், மற்ற அந்த 1,300 பேர்?

7)சமூக நலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மொத்தம் -209 ‌பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பட்டியலினத்தவர்கள்-17 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்-60-பேர்!

அப்படியானால் மற்றும் உள்ள அந்த 132- பேர்?

8) நிதி அமைச்சகத்தின் மொத்த உயர் அதிகாரிகள்-1008 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பட்டியல் இனத்தவர்கள்-20 பேர்!

பிற்படுத்தப்பட்டவர்கள்-46-பேர்!

அப்படியானால் மற்ற அந்த 942-பேர்?

9) பிளானட் அமைச்சகத்தில் (விண் அறிவியல்) மொத்தம் -409 உயர் அதிகாரிகள்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/ பட்டியல் இனத்தவர்கள் -19 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்-63 பேர்!

அப்படியானால்,மற்ற அந்த 327-பேர்?

10) தொழில் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மொத்தம்- 74 -பேர்!

இவர்களில்,தாழ்த்தப்பட்டவர்கள்/பட்டியல் இனத்தவர்கள்-4 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்-9 பேர்!

அப்படியானால் மற்ற அந்த -61 பேர்?

11) ரசாயனம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மொத்தம் 121- பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பட்டியல் இனத்தவர்கள்-9 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்-21 பேர்!

அப்படியானால்,மற்ற அந்த -91பேர்?

12) ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மொத்தம் -27 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/, பட்டியல் இனத்தவர்கள்-0/

பிற்படுத்தப்பட்டவர்கள்- 2 பேர்!

அப்படியானால்,மற்ற அந்த -25 பேர்?

13) வெளி நாட்டுத் தூதுவர்கள் மொத்தம் -140 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பட்டியல் இனத்தவர்கள்-3 பேர்!

பிற்படுத்தப்பட்டவர்கள்-5 பேர்!

அப்படியானால், மற்ற அந்த -132 பேர்?

14) மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மொத்தம்-116 பேர்!

இவர்களில், தாழ்த்தப் பட்டவர்கள்/பட்டியல் இனத்தவர்கள்-3பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள் -5 பேர்!

அப்படியானால், மற்ற அந்த 108 பேர்?

15) மத்திய அரசு பொதுச் செயலாளர்கள் மொத்தம் -26 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/ பட்டியல் இனத்தவர்கள்-1

பிற்படுத்தப்பட்டவர்கள்-7 பேர்!

அப்படியானால், மற்ற அந்த -18 பேர்?

16) உயர் நீதிமன்ற நீதிபதிகள்- மொத்தம் -330 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/ பட்டியல் இனத்தவர்கள்-4 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்-20 பேர்!

அப்படியானால் மற்ற அந்த 306- பேர்?

17) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மொத்தம் -26 பேர்!

இவர்களில், தாழ்த்தப்பட்ட வர்கள்/பிற்படுத்தப் பட்டவர்கள்-1

பிற்படுத்தப்பட்டவர்கள்-2 பேர்!

அப்படியானால், மற்ற அந்த 23- பேர்?

18) இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மொத்தம்-3,600 பேர்!

இவர்களில், தாழ்த்தப் பட்டவர்கள்/ பட்டியல் இனத்தவர்கள்-300 பேர்!

பிற்படுத்தப் பட்டவர்கள்- 350 பேர்!

அப்படியானால், மற்ற அந்த 2,950- பேர்?

?????? ????????? ?????

இந்தியா விடுதலை அடைந்து -73 ஆண்டுகள் கடந்த பிறகும் நமக்கு வழங்கப் பட்டுள்ள சமூக நீதியின் ஒரு பகுதி புள்ளி விவரங்கள் இவைதான்!

இதையெல்லாம் நான் சொல்லவில்லை!

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற 'யங் இந்தியா' என்ற மானுடவியல் ஆய்வு நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுத் தந்துள்ள புள்ளி விவரங்கள் இவை!

இந்திய அரசின் மற்ற துறைகளிலும், அனைத்து மாநிலங்களின் அரசுத் துறைகளிலும்  சமூக நீதியின் நிலை இப்படித்தான் இருக்கிறது!

பயணச்சீட்டு வாங்கியவர்களுக்குக் கூட  ரயில் கதவுகளைத் திறக்காத உள்ளிருக்கும் பயணிகளைப் போல, அரசின் அதிகார மையங்களை ஆக்கிரமித்து கொண்டிருப்பவர்கள், இன்றளவும் அப்படித்தான் செயல்பட்டு க் கொண்டிருக்கிறார்கள்!

இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.மட்டுமே இதையெல்லாம் கேள்விகளாகக்  கேட்கின்ற, சமூக நீதிக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது!

பா.ம.க.சந்திக்கின்ற அத்தனை விதமான  அவலங்களுக்கும், சாதி வெறிச் சமூகம் என்கின்ற ஒவ்வாத ஒற்றைக் குற்றச்சாட்டுக்கும் அடிப்படையான மூல காரணங்களாக இருப்பவை,உறுதியான அதன் சமூக நீதிக் கோட்பாடுகள் தான்!

தற்போது சில புதிய சித்தாந்திகள் தோன்றியிருக்கிறார்கள்!

அவர்கள் சொல்வது என்னவென்றால், மத்திய மாநில அரசுகளின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையே ஒரு கோடியைத் தாண்டாது!

இந்த நிலையில்,  அரசுப் பணிகளில் இந்தியாவின் 137 -கோடி மக்களுக்கான சமூக நீதி என்பது எப்படிச் சாத்தியமாகும்? என்கிறார்கள் அவர்கள்!

இந்தக் கருத்தின் பின் பக்கம் மறைந்துள்ள நயவஞ்சகத்தனம் மிகவும் இழிவானது!

மத்திய அரசிலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், பெரும் பற்றாக்குறை இருப்பினும் கூட இன்னமும் முறையாக இட்டு நிரப்பப் படாத அரசுப் பணியிடங்கள் பல லட்சக் கணக்கில் உள்ளன!

இன்றைய சமூக நீதி மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுப்படி அரசுப் பணியிடங்களை நிரப்பிவிட்டால் அப்பணிகளின் பயனாளிகள் வேறு வேறு தரப்பினராகத் தானே இருப்பார்கள் என்று, ஆதிக்க உணர்வு கொண்ட அரசுகள் கருதக் கூடுமென ஐயுருவதற்கும் இதில் முகாந்திரம் உள்ளது!

அதாவது, அரசு நிர்வாகத் துறைகளின் பணிகளுக்கு எல்லோருமே ஆசைப்பட்டு விடக் கூடாது,அதை ஏற்கனவே அங்கு காலங்காலமாகக் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதே அதன் உட் பொருள்!

ஓர் அரசின் அனைத்து நிலை நிர்வாகங்களிலும்‌ அனைத்துத் தரப்பு மக்களின் விகிதாசாரப் பங்களிப்பு இல்லாமல் இருந்தால் அது என்ன வகையான ஜனநாயக நாடு???

சமூக நீதிக்கான போராட்டங்களை எப்படி யெப்படியெல்லாம் திசை திருப்புகிறார்கள் என்பதற்கு மேற்குறிப்பிட்டுள்ள கருத்தும் ஒரு சான்று!

இதையெல்லாம் தான், நமது வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர் முதல்  தந்தை பெரியார் வரையிலான நூற்றுக்கணக்கான தலைவர்கள் கேள்வி கேட்டுப் போராடினார்கள்.

அப் போராட்டங்களின் தொடர்ச்சியை மருத்துவர் அய்யா திரு.ச.இராமதாசு அவர்கள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து தமிழக அரசியல் வரலாற்றில் மற்ற  தலைவர்கள் சாதிக்க இயலாதவற்றையெல்லாம் சாதித்துக் காட்டியிருக்கிறார்!

இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்குமான இடப் பங்கீட்டுச் சமூக நீதியை போராடி அவர் சாத்தியப்படுத்தி இருக்கிறார்!

அவ்வகையில், அவர் கேட்பதுதான் சமூக நீதியின் படி, வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு!

இந்தக் கோரிக்கையில் இருக்கின்ற தூய்மையான நியாயம் தமிழ் நாட்டில் இருக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்!

அதனால் தான் நாடார்,தேவர்,யாதவர், தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்டத் தமிழகத்தின் பெரும்பான்மைச் சமூகங்கள் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன!

தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் எதுவும் இந்தப் போராட்டம் தவறானது என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது!

அவற்றுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் இப்போராட்டம் தவறானது என்றால், எப்படி என்பதை விளக்கியாக வேண்டும்.எதாவது சொத்தையான காரணங்களைச் சொல்லி இப்போராட்டத்தை எதிர்த்தாலும், அந்தந்த கட்சிகளில் இருக்கின்ற வன்னியர்களின் வாக்குகளுக்கும் 'சுயமாக வேட்டு வைத்துக் கொண்ட' நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடும்!

சரி! இப் போராட்டம் மிகவும் சரியானது தான் என்று அவர்கள் அறிவித்தால், அது பா.ம.க.வுக்கும் மருத்துவர் அய்யாவுக்குமான அரசியல் வலிமையாக மாறிவிடும்!

எனவேதான் தமிழக அரசியல் கட்சிகள், வன்னியருக்கான 20% தனி இடப் பங்கீட்டுப் போராட்டத்தில் அதீதமான கள்ள மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றன!

உலகின் வரலாறு என்பது சமூகச் சமத்துவ, விடுதலைப் போராட்டங்களின் வரலாறுதான்!

பல்லாயிரக்கணக்கான சமூக நலப் போராட்டங்களின் விளைவாகவே படிப்படியாக இந்த உலகம் இன்றைய முன்னேற்ற நிலையை எட்டியிருக்கிறது!

உலக, இந்திய,தமிழக மானுட குலத்தின் சமூக நீதிப் பயணம் என்பது, நிறைவை நோக்கிச் செல்வது தானே தவிர,   'நிறைந்து முடிந்து விட்ட' ஒன்றல்ல!

உலகின் எத்தகையப் போராட்டங்களும், மிகப் பெரும்பாலும் அதை நடத்துகிறவர்களுக்குப் பயன் தருவதில்லை!

அடுத்தடுத்து வருகின்ற தலைமுறையினருக்கே அது விளைந்து கொடுக்கும்!

நமது முன்னோர்கள், இந்தியாவின் விடுதலைக்குக் கொடுக்கக் கூடாத கொடும் விலைகளையெல்லாம் கொடுத்தார்கள்!

நாம் இன்றைக்கு 'இது நமது சுதந்திரம்' என்கின்ற உணர்வின்றியே எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

அது போலத்தான் சமூக நீதிக்கான இன்றைய போராட்டங்களும்!

இதைத்தான் நமது முன்னோர்கள்,'தென்னையை நட்டவன் தின்னுட்டு சாவான், பனையை நட்டவன் பார்த்துட்டு சாவான்' என்று பழமொழியாகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்!

எனெனில், பனை என்பது நட்ட உடனே பழம் பறித்துத் தின்ன முடியாத மரம்!

அது முழுமையாகப் பயன்களை விளைவிக்க பற்பல ஆண்டுகள் காத்திருக்கத் தான் வேண்டும்!

நாளைய தேர்தலுக்கு இன்றைய 'இலவசங்கள்' வாக்குகளாக மாறலாம்!

ஆனால் சமூகநீதிப் போராட்டங்களின் பயன் வாக்குகள் அல்ல, தமிழினத் தலைமுறைகளின் தலை நிமிர்வு!

அதனால்தான், மருத்துவர் அய்யா திரு.இராமதாசு அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் போராட்டம், தனது இலக்கினைப் படிப்படியாக அடைந்த வண்ணம்  வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது!

எனவே தேர்தல், வாக்குகள் என்று பா.ம.க.வின் சமூக நீதிப் போராட்டங்களுக்கு உட் பொருள் கற்பித்து  யாரும் கொச்சைப் படுத்த வேண்டாம்!

போராட்டம் என்றால் என்றவென்றே விளங்கிக் கொள்ளாதவர்கள் 'அறிவு ஜீவி'களாகத் தங்களைக் கருதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் இன்றையத் தமிழ்ச் சமூகத்தின்  மிகப் பெரிய சாபக்கேடு!

அவர்கள் தங்களை முற்போக்காளர்களாகவும் காட்டிக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்பது கூடுதல் அவலம்!

மச்சான் வீட்டுக்குப் புதிய சினிமா சிடி ஒன்று வாங்கிக் கொண்டு போகும்போது,  ஏதோவொரு வர்க்கத்தின் வாழ்வுரிமைப் போராட்டம் ஒன்று வழியை மறிக்கிறது என்றால், உடனே அந்தச் 'சிடி'  சித்தாந்திகள் சினந்து எழுந்து எழுதத் தொடங்கிவிடுகிறார்கள்!

இவர்களின் சமுதாயப் பார்வைகள், வெட்கப்படக் கூடிய அளவுக்கு மேலோட்டமாகவும், வன்மமும் வெறுப்பும் நிறைந்த உட் கருத்துகள் கொண்டவையாகவும் இருக்கின்றன!

வாழ்வுரிமைகளுக்கானபோராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பொலிவியா, புரவியா என்று ஏதோவொரு நாட்டில் நடந்தால் இவர்களுக்கு இனிக்கிறது!

அதே போராட்டம், இந்தத் தமிழ்  மண்ணில் நடந்தால் இவர்களுக்குப் பெருங் கசப்பாக இருக்கிறது!

அதனால்தான், உலகின் முதல் போக்கு வரத்து நெரிசல் என்பதைப் போல  டிசம்பர்1 நெரிசலை வர்ணித்து வர்ணித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு மறியலின் காரணமாக,வேலைக்குப் போகிற மக்களின் பயணம் தடைபட்டு, அவர்கள் இடையூறு களுக்கு ஆளாவதில் கடுகளவும் நமக்கு உடன்பாடில்லை!

ஆனால், அதற்குக் காரணம் போராட்டக் காரர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி நடந்த உண்மைகளை எழுதாதவர்கள், எந்தவகை அறிவு ஜீவிகளாக இருப்பார்கள்?
தெரியவில்லை!
ஓர் உள்ளூர் 'புள்ளி'யின் இறுதி ஊர்வலத்தின் பொருட்டு, திட்டமிட்டு வெடி போட்டுப் போக்குவரத்து முழுவதையும் நிறுத்தி விடுகின்ற இன்றைய அன்றாடக் கலாசாரத்தில் பழகிப்போன இவர்களுக்கு, ஒரு மாபெரும் சமூகத்தின் போராட்ட அதிர்வுகள் தாங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன!

அதற்குக் காரணம்  ஏதோவொரு வகையானஅதீத 'வன்மம்'அன்றி வேறென்ன?

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்தான்! ஆனால் அந்தப் போர்வையில் வருகிறவர்கள்,நேர்காணலுக்கு முன் நிற்பவர்களிடம் மிகக் கடுமையாக விவாதிக்கிறார்கள், அவர்களை ஆத்திரப்படுத்திவிட்டுச் சிரிக்கிறார்கள், பொய்ச் செய்திகளைக் கூச்சமின்றிப் பரப்புகிறார்கள்!

இந்த நிலையிலும், நமது நிகழ் காலத்தின் மிகப்பெரிய ஆறுதலாகவும் மாபெரும் நம்பிக்கையாகவும் இருப்பது மொழி, இனம், சமூக நீதி, சுற்றுச்சூழல்  போன்ற சமூகத்தின் பல்வேறு கூறுகளைக் குறித்து, தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான இரு பால் இளைய தலைமுறையினருக்கும் ஏற்பட்டிருக்கின்ற தெளிவும் புத்தெழுச்சியும் தான்!

அவ்வகையில் மருத்துவர் அய்யா திரு.ச.இராமதாசு அவர்களின் நாற்பதாண்டுக் கால அயராத கடுமையான சமூகப் பணிகளிலும், பல்லாயிரக் கணக்கான சமூக நீதிப் போராட்டங்களிலும் எதுவொன்றும் வீண் போகவில்லை!

பா.ம.க.மற்றும் வன்னிய இளைஞர்களிடம் மட்டுமல்ல அவற்றுக்கு அப்பாற்பட்ட பெருவாரியான இளைஞர்களிடமும், அவரது போராட்ட அறத்தின் ‌நியாயங்கள் சென்றடைந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன!

அடித்தட்டு மக்களுக்கான வாழ்வாதார உரிமைகளை எந்த நாடும், எந்த அரசும், தாம்பாளத் தட்டுகளில் வைத்து கூடவே கொஞ்சம் பழங்களையும் பூக்களையும் வைத்துத் தருவதில்லை என்பதை,
'போக்கு வரத்து நெரிசல்' குறித்துப் புலம்புகிற சிந்தனைச் சிற்பிகள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்!

புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை! காலத்தின் கால்கள் அவர்களை ஒரு ஓரமாகத் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கும்!

நிறைவாக, போராட்டத்திற்கு வந்தவர்கள் அந்த நெரிசலுக்குக் காரணமில்லை என்றாலும், அன்றைய போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களே... உங்கள் அனைவரிடமும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

ஆனால் நீங்கள் நெரிசலில் சிக்கியது குறித்துக் கண்ணீர் விடுகிறவர்கள், வேறு ஏதேனும் ஒரு காரணத்தால் அந்த நெரிசல் ஏற்பட்டிருந்தால், அதை சர்வ சாதாரணமானதொரு அன்றாட நிகழ்வாகக் கருதிக் கடந்து போயிருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!

அப் போராட்டத்தில், உங்கள் தலைமுறைப் பிள்ளைகளின் வாழ்வாதார உரிமைகளும் உள்ளடங்கியிருப்பதையும் உணருங்கள்!

'வசதி படைச்சவன் தரமாட்டான்!
வயிறு பசிச்சவன் விடமாட்டான்!'
என்றார், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

பசித்திருப்பவர்களுக்கும் அவர்களுக்குக் கொடுக்க மறுப்பவர்களுக்கும் நடக்கின்ற சமூக நீதிப் போராட்டங்களைக் குறித்து, குதர்க்க வாதம் செய்து கும்மியடிக்கிற இழி செயலை இனியேனும் விட்டொழியுங்கள்! அப்படி விட்டொழிக்கவில்லையெனில்....
நான் முன்னமே குறிப்பிட்டதைப் போல காலம் தன் கால்களால் உங்களைத் தள்ளிவிட்டு அது பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும்!
மிகவும் கவனமாக இருங்கள்!

எதை எடுத்துப் போர்த்திக் கொண்டாலும் உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற அதீத வன்மங்கள் உங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages