9. இசையின் இசை தமிழ் மக்கள் இசை! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழிசையின் முதன்மையான வடிவங்களில் ஒன்று, தமிழ் மக்கள் இசை ஆகும். இதை நாட்டுப்புற இசை என்று ஒரு தரப்பினர் அழைக்கின்றனர். ஆனால், இதை தமிழ் மக்கள் இசை என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இசை என்பது இடம் சார்ந்தது அல்ல... இனம் சார்ந்தது. அந்த இன மக்கள் தங்கள் இடங்களின் சிறப்புகளைக் கூறுவது இயல்பு தான். தமிழ் மக்கள் இசை தமிழ் மக்களின் வாழ்வியலை உலகுக்கு எடுத்துக் கூறுவதற்கான தமிழிசையின் வடிவம் ஆகும். தமிழர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கான பாடல் இசைக்கூறுகள் தவிர்க்க முடியாதவையாக விளங்குகின்றன.
தொடக்க அத்தியாயங்களில் நான் குறிப்பிட்டிருந்ததைப் போல மனிதன் கருவில் உருவாவதில் தொடங்கி இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளிலும், ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப தமிழ் மக்கள் இசை தான் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இதை மக்கள் இசை என்கிறோம்.
தமிழிசை எப்போது தோன்றியதோ, அப்போதே தமிழ் மக்கள் இசையும் தோன்றி விட்டது. பக்தி இசை, கீர்த்தனைகள் போன்ற தமிழிசை வடிவங்களை விட தமிழ் மக்கள் இசை தொன்மையானது ஆகும். தமிழிசை நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் முதன்முதலில் அகத்தியத்திலும், அதைத் தொடர்ந்து தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன.
பண்ணத்தி
தமிழிசை குறித்து அதிக எண்ணிக்கையிலான குறிப்புகள் இடம் பெற்றுள்ள தொல்காப்பியத்தில் தமிழ் மக்கள் இசை பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் பல இடங்களில் ‘பண்ணத்தி’ என்ற சொல்லும், ‘புலன்’ என்ற சொல்லும் பெருமளவில் காணப்படுகின்றன. இவை இரண்டுமே தமிழ் மக்கள் இசையை குறிக்கும் சொற்கள் ஆகும். பண்ணத்தி என்பது இசைக் கூறுகள் மிகுந்த பாடல் என்றும், புலன் என்பது இசைக்கூறுகள் குறைந்த பாடல் என்றும் தமிழிசை அறிஞர்கள் விளக்குகின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக சங்க காலத்திலும், அதற்கு முந்தைய தொல்காப்பியக் காலத்திலும் தமிழிசையின் முதன்மை இசைக் கருவிகளாக குறிப்பிடப்பட்டுள்ள யாழ், பறை போன்றவை தமிழ் மக்கள் இசைக்காக பயன்படுத்தப்படுபவை என்பதும், ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப் பரவலான அளவில் பயன்பாட்டில் இருந்தது என்பதை தொல்காப்பியம் உறுதி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கவை.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவையான கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றில் உள்ள பாடல்கள், தமிழ் மக்கள் இசைப் பாடல்களை ஒத்திருக்கின்றன என்பதை தமிழிசை வல்லுனர்கள் உறுதி செய்துள்ளனர். தமிழிசைக் கூறுகள் மிகுந்துள்ளதாகக் கூறப்படும் சிலப்பதிகாரத்திலும் தமிழ் மக்கள் இசைப் பாடல்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக ‘‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’’ பாடல் மங்கல வாழ்த்து என்ற வகையைச் சேர்ந்த மக்கள் தமிழ் இசைப் பாடல் ஆகும். சிலப்பதிகாரத்தில் ‘‘கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப் பாட்டு’’ ஆகியவையும் தமிழ் மக்கள் இசைப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவையே.
பக்தி இலக்கியத்திலும் மக்களிசை
ஆழ்வார்களும், நாயன்மார்களும் படைத்த பக்தி இசைப் பாடல்களிலும் தமிழ் மக்களிசையின் கூறுகள் நிறைந்து இருப்பதைக் காண முடியும். தொல்காப்பியக் காலத்தில் தொடங்கி இன்று வரை தமிழ் மக்கள் இசையானது அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது. இதற்கான காரணங்களில் முதன்மையானது ஏற்கனவே நான் கூறியதைப் போல மக்களின் வாழ்க்கையுடன் தமிழிசை நெருக்கமாக இருந்து வருகிறது. அடுத்ததாக, தமிழ் மக்கள் இசை மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியதாகும். வளைகாப்பு, குழந்தைப்பேறு, இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான பாடல்கள் எனப்படுபவை, ஏற்கனவே உருவாக்கப்பட்டு, இந்த நிகழ்வுகளுக்காக பொருத்திக் கொள்ளப்பட்டவை அல்ல. மாறாக இந்த நிகழ்வுகளின் போது மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகையில் விளைந்தவை தான் தமிழ் மக்கள் இசைப் பாடல்கள் ஆகும். இன்றளவிலும் இவற்றின் செல்வாக்குக்கு இது தான் காரணம் ஆகும்.
தமிழ் மக்கள் இசைப் பாடல்கள் அவை எந்தெந்த தருணத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து தாலாட்டுப் பாடல்கள், குழந்தை வளர்ச்சி நிலைப்பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழப்புப் பாடல்கள் என 8 வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடல்கள் ஒவ்வொரு நிகழ்வையும் மையப்படுத்தியப் பாடல்களாக மட்டும் இல்லாமல் நல்வழிகளையும், வாழ்வின் அறங்களையும் உரைக்கின்றன பாடல்களாகவும் அமைந்துள்ளன. மேலும் இப்பாடல்களை உரிய பணிக்களங்களில் பயன்படுத்தும் போது மக்கள் தங்களின் உழைப்பின் காரணமான உடல்வலிகளை மறந்து ஊக்கம் பெற்றனர்.
தாலாட்டுப் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்களின் முதன்மை நோக்கம் குழந்தைகளை உறங்க வைப்பது தான். ஆனால், குழந்தைகளை உறங்க வைப்பதற்கான பாடல்களில், அவர்கள் பெரியவர்களான பிறகு எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளும் சேர்த்து புகட்டப்படுகின்றன. அதேபோல, தனது குடும்பத்தின் சக உறுப்பினர்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளையும், அப்பாடல்களின் சொல்வதை ஒரு மரபாக தமிழர்கள் கொண்டுள்ளனர். ‘‘மாமன் அடித்தானோ மல்லிகைப்பூ செண்டாலே.... அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே...’’ என்ற பாடல் இந்தத் தன்மை கொண்டது தான்.
குழந்தைப் பருவத்தில் கேட்கும் செய்திகள் மனத்தில் ஆழமாகப் பதியும் என்ற மருத்துவ அறிவியலை புரிந்து கொண்டு தான் தாலாட்டுப் பாடல்களில் பல்வேறு வகையான நல்வழிக் கருத்துகளை தமிழர்கள் புகுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி, தமிழர் பண்பாடு, உறவுமுறைகள் ஆகியவை குறித்தும் தாலாட்டுப்பாடல்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டிருக்கின்றன. தாலாட்டுப்பாடல்களின் பண்களும், இசை அமைப்பும் குழந்தைகளை மயக்கி உறக்கத்தை தூண்டும் வகையில் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு. இதற்குச் சான்றாக பல்வேறு வகையான தாலாட்டுப் பாடல்களை பட்டியலிட முடியும்.
குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்
குழந்தைகள் படிப்படியாக வளரத் தொடங்கும் போது அவர்களின் ஒவ்வொரு நிலையிலும், அதற்கேற்ற தமிழ் மக்கள் இசைப் பாடல்கள் பாடப்படுகின்றன. குழந்தை தவழும்போதும், உண்ணும் போதும், சாய்ந்தாடும் போதும், அம்புலி தூக்கும் போதும் குழந்தைக்காகப் பாடப்படும் பாடல்கள் குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்களில் குறிப்பிடத்தக்கவை. அழும் குழந்தையைச் சிரிக்க வைத்தல், விளையாட்டு காட்டுதல், தாய்மொழியாம் தமிழ்மொழியை திருத்தமாக பேசுவதற்கான பயிற்சிகளைத் தருதல் ஆகியவை தான் இந்த வகைப் பாடல்களின் முதன்மை நோக்கமும் சிறப்பும் ஆகும்.
சான்றாக, குழந்தைகள் பேசத் தொடங்கும் காலத்தில் அவர்களிடம்...
‘‘யாரு தச்ச சட்ட
தாத்தா தச்ச சட்ட’’
என்ற பாடலைப் பாடும் பெரியவர்கள், அந்த வரிகளைத் திரும்பப் பாடும்படி கூறுவார்கள். குழந்தைகள் இந்த வரிகளை மீண்டும், மீண்டும் திருத்தமாகக் கூறும் போது அவர்களுக்கு சிக்கலான, நுணுக்கமான தமிழ்ச் சொற்களையும் சரியாக உச்சரிக்கும் திறன் ஏற்படுகிறது என்பது உண்மை.
விளையாட்டுப் பாடல்கள்
சடுகுடு, கிட்டிப்புள், கிள்ளிப்பிராண்டி, ஊஞ்சல் பாட்டு, பூப்பறிக்கும் விளையாட்டு, நொண்டி ஆட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளின் போது பாடப்படும் தமிழ் மக்கள் இசைப் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பாடல்கள் எதிரியை சீண்டும் வகையிலும், தமது பெருமையை மீண்டும், மீண்டும் கூறும் வகையிலும் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு சடுகுடு விளையாட்டுப் போட்டியில் எதிரணியின் எல்லைக்குள் செல்பவர் பாடும் பாடலைப் பார்ப்போம்....
‘‘நான் தாண்டா வீரன் நல்ல முத்துப் பேரன்
வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரேண்டா
தங்கப் பிரம்பெடுத்து தாலி கட்ட வாரேண்டா’’
சடுகுடு போட்டிகளின் போது இவ்வாறானப் பாடல்கள் பாடப்படுவதன் நோக்கங்களில் முதன்மையானது எதிரணியின் எல்லைக் கோட்டுக்குள் செல்பவரின் மூச்சுத் திறனை சோதிப்பது ஆகும். இரண்டாவது இவ்வாறு பாடுவதன் வாயிலாக எதிரணியினரைச் சீண்டி, அவர்களைத் தீவிரமாக விளையாட்டில் ஈடுபட வைப்பது ஆகும் என்று தமிழிசை வல்லுனர்களின் ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழில் பாடல்கள்
தமிழர்கள் மிகக்கடுமையாக உழைக்கும் வழக்கம் கொண்டவர்கள். கடுமையான உழைப்பின் சோர்வு தெரியாமல் இருப்பதற்காக பாடப்படும் பாடல்கள் தான் தொழில்பாடல்கள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழர்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். அத்தொழிலுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர். இப்போது இருப்பது போன்று நீர் இறைப்பதற்கான எந்திர வசதிகள் அக்காலத்தில் இல்லை. ஏற்றம், கமலை போன்றவற்றின் வாயிலாகத் தான் நீர் இறைக்க வேண்டும். பகல் பொழுதில் ஏற்றம் வாயிலாக நீர் இறைக்கும் போது கடுமையான சோர்வும், பசியும் ஏற்படும். அந்த நேரத்தில் தங்களுக்கு தாங்களே ஊக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேளாண் மக்கள் பாடல்களைப் பாடுவார்கள். அவற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம்....
‘‘தோழா துவளாதே- நமக்கு இப்ப
சோறு வரும் நேரம்
கஞ்சா துவளாதே
கஞ்சி வரும் நேரம்
மின்ன ஓடும் தோழா - உனக்கு
என்னடாதான் தேவ’’
‘‘ஓடிப்போன மானை
தேடிப் போனான் இராமன் -அது
மானில்லடிப் பெண்ணே - அந்த
மாரீசன்டி சீதா’’
நானும் என் இளம் வயதில் கமலை வாயிலாக தண்ணீர் இறைத்திருக்கிறேன். அப்போது இங்கு குறிப்பிட்டுள்ள பாடல்களைப் போல பல தொழில்பாடல்களை பாடியிருக்கிறேன். அது ஒரு பொற்காலம். இவற்றைப் போல் நடவுப் பாடல், களையெடுக்கும் பாடல் என ஒவ்வொரு தொழிலுக்கும் பொருத்தமான பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஏற்றம் இறைத்தல், ஏர் உழுதல், நாற்று நடுதல், கதிர் அடித்தல், கடினமான பெரும் சுமைகளை கையாளுதல், படகில் சென்று மீன் பிடித்தல் போன்ற எவ்வகை தொழிலாக இருப்பினும் அந்த தொழிலின் உழைப்புத் தன்மைக்கு ஏற்றவாறு இசைந்து பாடப்படுவதால் இவை இசைப்பாட்டு என்றும், மக்கள் மொழியில் எசப்பாட்டு என்றும் குறிப்பிடப்படுகிறது.
வழிபாட்டுப் பாடல்கள்
இறைவழிபாடு இன்றி தமிழர் வாழ்க்கை இல்லை. தமிழர்கள் அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாளில் உழவுக்கு உதவிய இயற்கையை வழிபடுபவர்கள். தங்களின் வாழ்க்கையில் சோதனை ஏற்படால், அவற்றைத் தீர்க்கும்படி இறைவனை வழிபடுவார்கள். அவ்வாறு வழிபடும் போது இறைவனிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தான் வழிபாட்டுப் பாடல்களாக உருவெடுத்தன. ‘‘எனது வேண்டுதலை நீ நிறைவேற்றி வைத்தால், உனக்கு நான் இவ்வளவு காணிக்கை செலுத்துவேன்’’ என்ற ஒரு வகையான விண்ணப்பம் இத்தகையப் பாடல்களில் இருப்பதைப் பார்க்க முடியும்.
கொண்டாட்டப் பாடல்கள்
மகிழ்ச்சி, திருவிழா, குடும்ப ஒன்று கூடல் உள்ளிட்ட தருணங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பாடப்படும் பாடல்கள் தான் கொண்டாட்டப் பாடல்கள் ஆகும். காதணிவிழா, மஞ்சள் நீராட்டு விழா, மணவிழா நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளின் போது அவ்வாறான பாடல்கள் பாடப்படுகின்றன. சமயம் சார்ந்த விழாக்களில் பொதுமக்கள் கும்மி, கோலாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு ஆடிப்பாடுவர். இந்தப் பாடல்கள் அனைத்தும் நமக்கு கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தும்.
ஆலயங்களின் திருவிழாக்களில் உடுக்கைப் பாட்டு, வில்லுப் பாட்டு, தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளில் கதைத் தொடர்புடைய பாடல்களை கலைஞர்கள் பாடுவார்கள். இவையும் கொண்டாட்டப் பாடல்கள் தான்.
இரத்தல் பாடல்கள்
ஊர் ஊராகச் செல்லும் நாடோடிகள் உணவு, பணம் உள்ளிட்ட பொருள்களை வேண்டி பாடும் பாடல்கள் தான் இரத்தல் பாடல்கள் ஆகும்.
இழப்புப் பாடல்கள்
ஒப்பாரி பாடல்கள் தான் இழப்புப் பாடல்களில் முதன்மையானவையாகும். உறவுகளை இழத்தல், பொருட்களை இழத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து பாடப்படும் பாடல்களுக்கும் இழப்புப் பாடல்கள் தான். இறப்பு, இழப்பு , பிரிவு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் துயரத்தின் வலியைப் போக்குவதே இத்தகைய பாடல்களின் நோக்கமாகும்.
தமிழிசை எப்போதுமே மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறது. தமிழிசையின் பல்வேறு வடிவங்களிலும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானது தமிழ் மக்கள் இசை தான். இதற்கு காரணம் இவை தமிழர்களின் உணர்வுகளை உடனுக்குடன் தூண்டுவது தான். உணர்வுகளைத் தூண்டும் பாடல்களுக்கு எப்போதும் உயிருண்டு; அதனால் தமிழ் மக்கள் இசைக்கு எப்போதும் பின்னடைவு இல்லை.
நாளை....
தமிழிசை வளர்ச்சியில் பாரதியார், பாரதிதாசன்!
*********
No comments:
Post a Comment