மருத்துவர் அய்யா அவர்களின் பாராட்டு ஜெகன்ரெட்டிக்கு கிடைத்த அங்கீகாரம்! - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெங்கடரமண ராவ் பேட்டி
ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 51 ஆணையங்களை ஜெகன் மோகன் ரெட்டி அமைத்திருக்கிறது. ஆந்திர அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்னிகுல சத்திரிய சமுதாயத் தலைவருமான வெங்கடரமண ராவ் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதற்கான பதிலும் வருமாறு:
கேள்வி: ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஆணையங்கள் அமைக்கப் பட்டது குறித்து தேசிய அளவில் பிற கட்சிகளிடமிருந்து எத்தகைய வரவேற்பு கிடைத்தது?
வெங்கடரமணராவ் பதில்: நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று கோரி எங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் வி.விஜயசாய் ரெட்டி தனிநபர் மசோதா கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஆதரித்தே தீர வேண்டும் என்ற அழுத்தம் அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையங்களை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களை இனி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற நெருக்கடி அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் முக்கியப் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி ஆணையம் முடிவை வரவேற்று எங்கள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய கடிதமே, எங்கள் நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு சான்று. இது சமூகநீதியையும், சமூக முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தங்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன் என்று மருத்துவர் அய்யா அவர்கள் பாராட்டியுள்ளார். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் சாதிகளை பிற்போக்கின் அடையாளமாக பார்க்கும் போலி நாகரிக கலாச்சாரம் பெருகி வரும் சூழலில், சாதிகளை சமூகநீதியின் அடித்தளமாகவும், மாநில வளர்ச்சிக்கான அலகாகவும் ஜகன்மோகன் ரெட்டி பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி ஜெகன்மோகன்ரெட்டியை ஆந்திரப் பிரதேசத்தின் சமூகநீதிக்காவலர் என்றும் மருத்துவர் அய்யா அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். இதைத் தான் எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
இவ்வாறு வெங்கடரமண ராவ் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
***********
No comments:
Post a Comment