பா.ம.க. தேர்தல் அறிக்கை
விண்ணப்பிக்கும் அனைவருக்கும்
உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மருத்துவர் இராமதாசு அய்யா உறுதி
உயர் கல்வியைப் பொறுத்தவரை இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு தான். உயர்கல்வி மாணவர் சேர்க்கை தேசிய அளவில் 28.3% என்ற அளவிலேயே உள்ளது. புதிய கல்விக் கொள்கையில், தேசிய உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 2035ஆம் ஆண்டிற்குள் 50% என்ற அளவுக்கு உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 2018&19ஆம் ஆண்டு நிலவரப்படி 49% ஆகும். தேசிய அளவில் சிக்கிம் 53.9%, சண்டிகர் 50.6% மாணவர் சேர்க்கையை எட்டி முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது. ஆனாலும், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் இன்றைய நிலையில், 50 விழுக்காட்டை கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த விகிதத்தை 60 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இந்த இலக்கை எட்டவேண்டுமானால், உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் அளவுக்குப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, உயர்கல்வி கற்பதற்குக் கல்விக் கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அந்த அளவுக்குக் கல்விக் கட்டணங்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் அல்லது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
உயர்கல்வித் துறைக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குறுதிகள்
கல்விக் கடன் தள்ளுபடி;
ஏழைகளுக்கு உயர்கல்வி இலவசம்
உயர்கல்வி கற்பதற்காகப் பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழைகளும் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும்.
அண்ணா பல்கலைக் கழகமும், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகமும் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப மற்றும் மருத்துவப் பல்கலைக் கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும். இதன் மூலம், உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 1000 பேரும், மாணவிகளில் 1000 பேரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு உயர்கல்வி பயில அனுப்பப்படுவர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.
மாணவர்கள் ஆணையம்
எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் மாணவர்களின் நலன்கள் அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ, கல்விக் கட்டணம் அல்லது நன்கொடை என்ற பெயரில் மாணவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டாலோ அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாநில மாணவர்கள் ஆணையம் அமைக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பல்கலைக்கழக நிர்வாகப் பொதுச் சட்டம் கொண்டு வரப்படும்.
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் முதல் பேராசிரியர்கள் வரையிலான ஆசிரியர்களையும், ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்களையும் தேர்வு செய்யத் தனி ஆணையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பல்கலைக் கழகப் பணி நியமனங்களில் ஊழல் தடுக்கப்படும்.
ஒருமைப் பல்கலைக் கழகங்கள் & ஆராய்ச்சிக் கோவில்கள்
சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாகத் (Centre of Excellence) தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஓர் அரசு மருத்துவக் கல்லூரியும், கடலூர் மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்
நான்காம் தொழில் புரட்சி காரணமாக வேலைவாய்ப்புச் சந்தையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அதை எதிர்கொள்வதற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் உயர்கல்வியில் மாற்றங்கள் செய்யப்படும்.
சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research - IISER) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஓராண்டிற்குள் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) அமைக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.
பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும். இதற்காகத் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். அதன்படி கட்டுமானப் பொறியியல் மாணவர்கள் படிக்கும் போதே 6 மாதங்களுக்கு ஏதேனும் கட்டுமான நிறுவனத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்தப் பயிற்சிக் காலத்தின் போது பயிற்சி பெறும் நிறுவனமும், அரசும் உதவித் தொகை வழங்கும். படிப்பு மற்றும் பயிற்சியின் போது அவர்களின் திறன் மதிப்பிடப்பட்டுத் தரம் நிர்ணயிக்கப்படும். இதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் அதிகரிக்கும்.
தொழில்நுட்பத் தொழில்கல்வி மற்றும் பயிற்சி (Technical Vocational Education and Training - TVET): தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கத் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி மிகவும் தேவையாகும். ஒருபுறம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், மறுபுறம் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்காத நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி, உலகத்தரம் கொண்ட தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்படும். இந்தக் கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு வேலை உறுதி என்ற நிலை உருவாக்கப்படும்.
உயர்கல்வியில் சமூகநீதி
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்புப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும்.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்தியப் பல்கலைக் கழகம், தேசியச் சட்டப் பள்ளி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50% இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.
No comments:
Post a Comment