நான்காம் தொழிற்புரட்சி
(Fourth Industrial Revolution - IR 4.0)
என்றால் என்ன? - மருத்துவர் இராமதாசு அய்யா.
நான்காம் தொழிற்புரட்சி என்பது தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் ஆகும். உலகில் தொழில்துறை குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது. 1760&ஆம் ஆண்டு வரை பொருட்களை உற்பத்தி செய்ய எந்திரங்கள் எதுவும் இல்லை. அனைத்து உற்பத்திகளும் கைகளால் தான் நடைபெற்றன. 1760 முதல் 1820 வரையிலான காலகட்டத்தின் தான் நீர் சக்தி, நீராவி சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி இயந்திரம் மூலமாக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது தான் முதலாவது தொழில் புரட்சி ஆகும்.
இரண்டாவது தொழில் புரட்சி என்பது தொழில்நுட்ப புரட்சி ஆகும். 1871 முதல் 1914 வரையிலான கால கட்டத்தில் இந்தப் புரட்சி நடைபெற்றது. இந்த காலத்தில் தான் மின்சாரம், தொடர்வண்டி, தந்தி சேவை ஆகியவை சாத்தியமாயின. அதனால் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது தான் மூன்றாவது தொழில்புரட்சி ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் இது நடைபெற்றது. இந்த புரட்சியின் அடிப்படை கணினி தான். பின்னாளில் வந்த தகவல் தொழில்நுட்பம் மூன்றாவது தொழில்புரட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான்காம் தொழில்புரட்சி என்பது ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். உற்பத்தியை தானியங்கி தன்மை கொண்டதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் ஆகும். செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence ), இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தளங்கள் (Internet of things (IoT) platforms), ஸ்மார்ட் சென்சார்ஸ், பெருந்தரவு (Big Data ) ஆகியவை தான் நான்காம் தொழில் புரட்சியின் அடிப்படை ஆகும்.
நான்காம் தொழில்புரட்சி (Fourth Industrial Revolution - IR 4.0) நமது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைக்கப் போகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும். இது எந்த அளவுக்கு மாற்றத்தை உண்டாக்கும் என்பதற்கு ஒரு விளக்கத்தைக் கூறுகிறேன்.
நாம் நமது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போதே மருத்துவராக்க வேண்டும், பொறியியலாளராக்க வேண்டும், கணிதத்தில் வல்லுனராக்க வேண்டும், நிர்வாகப் பணியாளராக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கேற்ற வகையில் தான் அவர்களின் கல்விப் பாதையை தீர்மானிக்கிறோம். ஆனால், இனி அது சாத்தியமாகாது. உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum) செய்துள்ள ஆய்வின்படி, இன்றைய நிலையில் தொடக்கப்பள்ளிகளில் சேர்ந்துள்ள குழந்தைகளில் 65 விழுக்காட்டினர், இதுவரை உருவாக்கப்படாத, இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் உருவாக்கப் பட உள்ள பணிகளில் தான் சேரப் போகிறார்கள்.
அதுமட்டுமல்ல... நான்காவது தொழில்புரட்சியின் நோக்கம் உற்பத்தியை தானியங்கி முறைக்கு மாற்றுவதன் மூலம் உற்பத்திச் செலவை பெருமளவில் குறைப்பது தான். உற்பத்தியில் தொழில்நுட்பத்தை புகுத்தும் போது, இப்போது உற்பத்தித் துறையில் உள்ள தொழில்நுட்பத்தை பழகிக்கொள்ளாத பணியாளர்கள் வேலை இழப்பார்கள். அதே நேரத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்றவர்களுக்கு இப்போது வழங்கப்படுவதை விட பல மடங்கு அதிக ஊதியத்தில் பணி கிடைக்கும்.
நான்காம் தொழில் புரட்சியின் காரணமாக 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக அளவில் மனித வாழ்க்கை கீழ்க்கண்டவாறு மாறியிருக்கும்.
1. உலக மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பார்கள்.
2. உலக மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் இணையவசதி பெற்றிருப்பார்கள்.
3. முப்பரிமாண அச்சுக்கருவியை (3D Printer) பயன்படுத்தி உலகின் முதலாவது வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கும்.
4. ஒரு லட்சம் கோடி சென்சார்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
5. உலகிலுள்ள வாகனங்களில் 10% வாகனங்கள் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும்.
6. வீடுகளில் உள்ள அன்றாட பயன்பாட்டு பொருட்களில் 50% இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் நமது கல்வியிலும், திறன் பயிற்சியிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்கான வாக்குறுதியை பாட்டாளி மக்கள் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கிறது.
No comments:
Post a Comment