தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டர் பெரியவர் வே. ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டர் பெரியவர் வே. ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டர் பெரியவர் வே. ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

97 வயது வரை வாழ்ந்து தமது தள்ளாத வயதிலும் தொண்டாற்றிய பெரியவர் ஆனைமுத்து குறித்து தமிழகம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் சமூகநீதிக்காக குரல் கொடுத்த முதல் ஓபிசி தலைவர் வே.ஆனைமுத்து அவர்கள் தான். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்காகவே தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். இந்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாச்சார வகுப்புவாரி  இடப்பங்கீட்டுக்காக தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சியும் பாடுபடாத நிலையில் 29.04.1978 அன்று தில்லிக்கு சென்று மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்களை சந்தித்து ஓபிசி இடப்பங்கீட்டுக்காக வலியுறுத்தியவர்.

ஓபிசி இடப்பங்கீட்டுக்கான மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதற்கு 8 மாதங்கள் முன்பாகவே  தில்லி சென்று, பின்னாளில் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட பிந்தேஸ்வரி பிரசாத் மண்டலை சந்தித்து  தென் மாநிலங்களில் இடப்பங்கீடு இருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி ஓபிசிக்கு இந்திய அரசில் இட ஒதுக்கீடு பெறுவதற்காக போராடத் தூண்டியவர். ஓபிசிக்கு 27% இடப்பங்கீடு கோரி 1979&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15&ஆம் தேதி முதல் 26&ஆம் தேதி வரை தில்லியில் பிரதமர் சரண்சிங் வீட்டின் முன் தொடர் போராட்டத்தை நடத்தியவர். மண்டல் ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததை அப்போதைய உள்துறை அமைச்சர் ஜெயில்சிங்கிடம் சுட்டிக்காட்டி, அவர் மூலமாக 30.04.1982&ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தவர். அதன் பயனாகவே பின்னாளில் ஓபிசி பிரிவுக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது.

தமிழ்நாட்டில் சமூகநீதி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு இயக்கங்களை நடத்தியவர். எந்த  ஒரு கோரிக்கையை முன்வைத்தாலும் அது நிறைவேற்றப்படும் வரை உறுதியாக போராடக்கூடியவர்.  தந்தை பெரியாருடன் மிகவும் நெருக்கமாக பழகியவர். கொள்கை அளவில் பெரியாரின் நம்பிக்கை, ஆதரவைப் பெற்றவர். தந்தைப் பெரியாரின் கொள்கைகளை அனைத்துத் தரப்பினரிடமும் பரப்பியவர்.

என் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர். நான் நடத்திய சமூகநீதி இயக்கங்களுக்காக என்னை மிகவும் மதித்தவர்; பாராட்டியவர். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்திய வி.பி. சிங் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், அவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட பெரியவர் ஆனைமுத்து அவர்கள், ‘‘அனைத்திந்திய அளவில் சமூகநீதிக்காக போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஈடு இணை வேறு எந்தக் கட்சியும் இல்லை’’ என்று பாராட்டினார். ஓபிசி வகுப்பினருக்கான 27% இடஓதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 19.10.1991 அன்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் வீட்டு முன் எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆனைமுத்து அவர்களும் கலந்து கொண்டார். சமூகநீதிக்கு அவர் ஆற்றிய தொண்டை பாராட்டி சென்னையில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தி சிறப்பித்தோம்.

அண்மையில் கூட ஆனைமுத்து அவர்களின் 95&ஆவது பிறந்தநாளின் போது கூட நான் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணையவழியில் நடத்தப்பட்ட சமூகநீதி வார நிகழ்வுகளிலும் கூட ஆனைமுத்து அவர்கள் கலந்து கொண்டார். பெரியவர் ஆனைமுத்து அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தேன். விரைவில் அவர் நலம் பெற்று வருவார் என நம்பிக் கொண்டிருந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது. அவரது மறைவு பெரியாரியவாதிகளுக்கும், சமூகநீதியாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

பெரியவர் ஆனைமுத்து அய்யா அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்த நிலையில், மறைவுக்குப் பிறகும் தமது உடலை தானமாகத் தந்து தொண்டாற்றியுள்ளார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages