முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிக அனுமதி
“ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும்
அனுமதி கூடாது" முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சிகள் கூட்டத்தில் திமுக கருத்து
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதா? - முத்தரசன்
ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து
நடத்த வேண்டும் ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையில் அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை- முத்தரசன்
ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்:
தீர்மானங்கள்:
மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். பிராண வாயுவின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.
தற்காலிக பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்த குழு, பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
No comments:
Post a Comment