அக்னிப்புரட்சி இன்றைய (16.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.31 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* பால் விலை குறைப்பு இன்று முதல் அமல்:

ஆவின் பால் விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நீல நிற பால் பாக்கெட், 1 லிட்டர், 40 ரூபாய்; 500 மி.லி., 20 ரூபாய்; பச்சை நிற பால் பாக்கெட், 500 மி.லி., 22; ஆரஞ்சு நிற பால் பாக்கெட், 24 ரூபாய் என, புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பால் பாக்கெட்டில் விற்பனை தேதியும், புதிய விலையும், ஆவின் கார்டுதாரர்களுக்கான விலையும் அச்சிடப்பட்டு உள்ளது.

* அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

கன்னியாகுமரி: தொடர் மழை காரணமாக பழையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

* உத்தரப்பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3 மாதங்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்க மாநில அரசு முடிவு

தினக்கூலி தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், சாலையோர கடை வைத்திருப்பவர்களுக்கு ₹1000 வழங்கவும் முடிவு

* திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே இரவில் 10 பேர் கொரோனாவிற்கு பலி. அதிகரிக்கும் கொரோனா வெருவிப் பரவலை கட்டுபடுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறல்

* மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆறுகள் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

* மோதி அரசு மீது RSS குற்றச்சாட்டு!
நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலுக்கு அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமுமே காரணம் என RSS தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு.

* ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாதோருக்கு பரிந்துரைக்கக் கூடாது என மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

* இந்தியாவை உலுக்கும் கொரோனா 2 வது அலை  ஒரே நாளில் 4,077 பேர் பலி.

இந்தியாவில் புதிதாக 3,11,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,84,077 ஆக உயர்ந்தது.

புதிதாக 4,077 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,62,437 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,07,95,335 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36,18,458 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சதவிகிதம் 83.83% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 15.07% ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், நாட்டின் இதுவரை 18,22,20,164 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.

மே 17 முதல் 31ஆம் தேதிவரை இயக்கப்படவிருந்த 7 சிறப்பு ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னை எழும்பூர் - மன்னார்குடி, கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், ஆலப்புழா - கண்ணூர், கண்ணூர் - ஆலப்புழா, சென்னை எழும்பூர் - திருச்சி, திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* மயானங்களில் பணியாற்றுபவர்கள் இனி முன்களப்பணியாளர்களாக கருதப்படுவர் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பரமணியன்.

முன்களப் பணியாளர்களுக்கான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படும்

* டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு.

* தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 3.50 லட்சமாக அதிகரித்த‌து மத்திய அரசு.

அனைத்து மாநிலங்களுக்கான மொத்த ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு 76 லட்சமாக அதிகரிப்பு.

* தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் விற்பனை. சென்னையில் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

நோயாளியின் உறவினர் தனியார் மருத்துவமனை சென்று மருந்தை வாங்க அனுமதி கிடையாது- தமிழக அரசு.

தனியார் மருத்துவமனையின் பிரதிநிதி மட்டும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மருந்தை நேரடியாக பெறலாம்.

ஆக்ஸிஜன் தேவையுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரெம்டிசிவிர் மருந்து ஒதுக்கீடு.

நோயாளிக்கு தேவையற்ற முறையில் ரெம்டிசிவிர் மருந்து கேட்டு சீட்டு அளிக்கக் கூடாது.

மீறி ரெம்டிசிவிர் மருந்து கேட்டால் மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகத்தின் தலைவராக
ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ். நியமனம்!

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.

தமிழ்நாட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் இவர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு ஆகியவற்றில் தீவிரம் காட்டினார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களைச் சேர்த்தார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதற்காக, கல்லூரிகளில் மட்டுமல்லாது பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக 16.07.2003 முதல் 21.11.2004 முடிய பணியாற்றினார். அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். பின்னர், தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.

* கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1 மாத குழந்தை:

ஒடிஷாவை சேர்ந்த பீரீத்தி அகர்வால் மற்றும் அங்கித் அகர்வால் தம்பதியினருக்கு கடந்த மாதம் குடியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து 25 நாட்களே ஆன நிலையில் திடீரென கொரியாவுக்கு காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டது.

உடனடியாக குடியாவை மருத்துவமனையில் அனுமதித்து RTPCR பரி சோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

25 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்றுடன், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்களை அதிர்ச்சியிடைந்தனர். எனினும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைகளை தொடங்கினர்.

குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 10 நாட்கள் வெயிலில் வைத்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

பின்னர் சுவாசத்தில் முன்னேற்றம் ஏற்பட வென்டிலேட்டர் உதவியின்றி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 3 வார சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவை வென்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் குடியா.

இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர் என்ற சிறப்பைப் பெற்று மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் குடியா.

* செய்தி வாசிப்பாளர்கள் மாஸ்க் அணிந்து செய்தி வாசிக்க வேண்டும்... தமிழக அரசு உத்தரவு (தொடக்கத்தில் மட்டும்)

* சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அரசு அறிவிப்பு

* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எக்காரணம் கொண்டும் விலக்கி கொள்ளும் எண்ணம் அரசுக்கு இல்லை. தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

* தமிழகத்திற்கான 1 லட்சம்  ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக ஒதுக்கி 3.50 லட்சமாக வழங்குவதாக நடுவண் அரசு அறிவிப்பு

* நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், சிறந்த அறிவியல் படைப்புக்கான CSIR விருது பெற மே 31 வரை https://www.csir.res.in/  தளத்தில் விண்ணப்பிக்கலாம்

சிறந்த அறிவியல் படைப்புகள், கருத்துருக்கள், கண்டுபிடிப்புகளுக்காக CSIR விருதை வழங்குகிறது நடுவண்  அறிவியல்& நுட்பியல் துறை அமைச்சகம்

* தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு!

தமிழகத்தில் பரவலாக  மருத்துவமனைகள், ஆரம்ப கொழுமை  நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி போட வரும் மக்களை  ஊழியர்கள் திருப்பி அனுப்பும் நிலை தான் உள்ளது. தற்போது கொரோனா வெருவிப் பரவல் விரைவு எடுத்த நிலையில் தடுப்பூசி மிக அத்தியாவசியமான ஒன்றாகிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை.

10 ஆயிரம் காலி உருளைகளை வாங்கும் தமிழக அரசு!
புதியவைகளுக்கு  நாளும்  ₹750,  பயன்படுத்தியவைகளுக்கு நாளும் ₹500 வாடகையாக இறுதி செய்யப்பட்டுள்ளது

* மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறப்பு வசதி : தமிழக அரசு நடவடிக்கை

* 84 நாட்களுக்குப் பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது விழுங்குக்கான  இணையதள பதிவுக்கு அனுமதி

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் செல்லுபடியாகும். எனினும் விருப்பமுள்ளோர் தங்களது பதிவை 84 நாட்களுக்குப் பிறகு மாற்றிக் கொள்ளலாம்

💥கங்கை கரையில் புதைக்கப்படும் பிணங்கள்! : கொரோனா தொற்றால் உயிரிழந்த சடலங்களா என உத்திரப் பிரதேச காவல்துறையினர் தீவிர விசாரணை!

எங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருக்கிறோம்: ஐ நா அவையில் இந்திய பிரதிநிதி பேச்சு

* கொரொனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு  அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்

* அல் ஜசீரா ஊடக கட்டிடத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்..!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் நீடித்துவருகிறது. முதல் உலகப்போர் சமயத்திலிருந்தே இரு நாடுகளும் பகை நாடுகளாக திகழ்கின்றன. ஜெருசலேத்தை இந்த இரு நாடுகளுமே புண்ணிய பூமியாக கருதுவதால், இரு நாடுகளுமே ஜெருசலேம், காசா ஆகிய பகுதிகளுக்கு சொந்தம் கொண்டாடிவருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவிவந்த நிலையில், தற்போது பெரிய சண்டையாக வெடித்துள்ளது. கடந்த சில தினங்களாக இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல் நடத்திவருவதால், மிகவும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற காசா பகுதியை மையமாக கொண்டு ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் வெடிக்க, ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் முகாமிட்டிருப்பதாக கருதப்படும் கட்டிடத்தை தகர்க்க முடிவு செய்தது இஸ்ரேல்.

காசா பகுதியில் உள்ள அல் ஹலாலா என்ற கட்டிடத்தில் சர்வதேச ஊடகங்களான அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ்(ஏபி) ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. அதே கட்டிடத்தில் தான் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த கட்டிடத்தை தகர்க்கப்போவதாக கூறி அங்கிருந்து அனைவரும் வெளியேறுமாறு எச்சரித்தது இஸ்ரேல்.

இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து, அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எச்சரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களில் வான்வழி தாக்குதல் மூலம் அந்த கட்டிடத்தை இஸ்ரேல் தகர்த்தது. இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் தரைமட்டமானது. முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான சண்டையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

*:மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

தமிழகத்திற்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை நாளொன்றுக்கு 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி - முதலமைச்சர்.

உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்களின் தேவை இன்றி அமையாதது - முதலமைச்சர்.

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏக்கள் ஆலோசனை குழு அமைப்பு.

அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி குழு அமைப்பு.

13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம்.

திமுக - எழிலன், அதிமுக - சி.விஜயபாஸ்கர், பாஜக - நயினார் நாகேந்திரன், பாமக - ஜி.கே.மணி.

இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் - தமிழக அரசு.

💥தமிழகத்தில் இன்று மேலும் 33,181 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி.

இரண்டாவது நாளாக 300க்கும் மேற்பட்டோர் ( 311) பேர் உயிரிழப்பு!
21,317 பேர் மீண்டனர்

💥கொரோனா தொற்றால் பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்சிஜன் வசதி பெற இணைய வழியில்  விண்ணப்பம் செய்யலாம்.

தமிழக அரசின் 'கட்டளை மையம்' சார்பில் புதிய இணையதளம் தொடக்கம்
https://ucc.uhcitp.in/publicbedrequest

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages