சமத்துவத்தையும், ஈகையையும் போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துக் கொண்டார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கும், தனி மனிதனுக்கும் பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் இரமலான் திருநாளாகும்.
தூய்மையாக இருக்க வேண்டும்; நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும்; எதிரிகளையும் மன்னிக்க வேண்டும்; அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பது தான் இரமலான் நோன்பு போதிக்கும் பாடங்களாகும். இவை தான் இஸ்லாமியர்களை அவர்களின் வாழ்க்கை முறையில் புடம் போட்ட தங்கங்களாக மாற்றுகின்றன.
மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment