வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட மாவீரன் கயத்தூர் முத்துவின் தாயார் பொற்கிலை அம்மாள் கயத்தூர் கிராமத்தில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.
மாவீரன் முத்துவை ஈன்றெடுத்த வீரத்தாய் பொற்கிலையின் வீரமும், தியாகமும் ஈடு இணையற்றவை. அவரது புதல்வரான கயத்தூர் முத்து கடந்த 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்றைய தென்னாற்காடு மாவட்டம் பனையபுரத்தில் நடைபெற்ற வன்னியர் தனி இட ஒதுக்கீட்டு சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். சமூகநீதியை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய கயத்தூர் முத்துவை காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தெடுத்தன. முத்து கொல்லப்பட்ட செய்தியறிந்த பொற்கிலை அம்மாள் மகனின் உடலைப் பார்ப்பதற்காக ஓடோடி வந்தார். ஆனால், அவரை மகனின் உடலைக் கூட பார்க்க விடாமல் பெண் காவலர்கள் துரத்தியடித்தனர். அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான், விடுதலையானவுடன் பொற்கிலை அம்மாளை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினார். அன்று முதல் தமது கடைசி மூச்சு வரை பொற்கிலை அம்மாள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அவரது மறைவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று வீரத்தாயார்களை நாம் இழந்திருக்கிறோம். பிப்ரவரி மாதத்தில் கோலியனூர் கோவிந்தனின் தாயார் சின்னப்பொண்ணு, ஏப்ரல் மாதத்தில் கயத்தூர் முனியனின் தாயார் அன்னலட்சுமி ஆகியோரை இழந்த நாம், இப்போது பொற்கிலை அம்மாளை இழந்திருக்கிறோம். போராட்டக் களத்தில் கயத்தூர் முனியனும், கயத்தூர் முத்துவும் அடுத்தடுத்து உயிர்தியாகம் செய்தனர். இப்போது அதே வரிசையில் இருவரின் தாயாரும் நம்மை விட்டு பிரிந்து சென்றிருப்பது கண்களை குளமாக்குகின்றன. பொற்கிலை அம்மாளின் வாழ்க்கை நமது தலைமுறைக்கு வீரவரலாறு ஆகும்.
வீரத்தாய் பொற்கிலை அம்மாளை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கயத்தூரில் இன்று (21.05.2021) மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. சார்பு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பொற்கிலை அம்மாளுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
No comments:
Post a Comment