காங்கிரஸ் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர். ரகசிய நியமனம்? டெல்லியில் வீசும் திடீர் சூறாவளி!!
அண்மைக்காலமாக, ‘டூல் கிட்’ என்ற சொல் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது ஏதோ புதுமையான ஆங்கில வார்த்தை என நினைத்து விட வேண்டாம். தமிழில் செயல்திட்டம் என்று இதை சுருக்கமாக அழைக்கலாம். அதாவது ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதை இலக்காக வைத்து தொலைநோக்குடன் செயல்படுவது.
காங்கிரஸின் டூல்கிட் :
இதுபோன்றதொரு டூல் கிட்டைத்தான், சமீபகாலமாக பிரதமர் மோடிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிராக காங்கிரஸ் பயன்படுத்தி வருவதாக பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சாம்பிட் பத்ரா குற்றம்சாட்டி வருகிறார். இந்த செயல் திட்டத்தில் சுமார் ஒரு டஜன் பிரச்சார உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
அதாவது, நாட்டில் நிலவும் பிரச்சனைகளை எப்படி பாஜகவுக்கு எதிராக திருப்பிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தியாக்கி அதை உலகளவில் பரப்பவேண்டும், பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் போன்றோரை எவ்வாறு கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்பது போன்ற செயல்திட்டங்கள் அடங்கிய டூல் கிட்டை காங்கிரஸ் உருவாக்கியதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
அதிலும் மிகக் குறிப்பாக, பிரதமர் மோடியின் செல்வாக்கை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சீர்குலைக்கும் விதமாக உருமாறிய கொரோனா வைரஸ் என்பதை மோடியின் உருமாறிய கொரோனா வைரஸ், ஹரித்வார் கும்பமேளாவை கோவிட் சூப்பர் ஸ்பிரெடர் கும்பமேளா என்று அழைக்கவேண்டும், கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்காமல் டெல்லியில் மத்திய அரசின் தலைமைச் செயலகம் கட்டும் சென்டரல் விஸ்டா திட்டத்தை பற்றி தொடர்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்பவை, இதில் முக்கிய அம்சங்களாகும்.
ஆனால், “இதுபோன்றதொரு டூல் கிட்டை நாங்கள் உருவாக்கவில்லை, எங்களுக்கு அந்த அவசியமும் இல்லை” என்று மறுத்துள்ள காங்கிரஸ், இதுதொடர்பாக பாஜக மீது டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளது.
2024 தேர்தலும்…. தேர்தல் ஆலோசகராக பி.கே.வும்:
இப்படி காங்கிரஸ் கூறுவதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று நம்ப கடினமாக இருக்கிறது. அதேநேரம், கடந்த ஒரு மாதமாக, மோடி அரசு மீது காங்கிரஸ் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளை கூர்ந்து கவனித்தால் டூல்கிட் விவகாரம் பற்றி பாஜக கூறுவது உண்மை என்றே கருதத் தோன்றுகிறது.
இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. ஏனென்றால், காங்கிரசின் முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி, மாநிலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அத்தனை பேருமே சொல்லி வைத்ததுபோல் இந்த பிரச்சனைகள் குறித்து ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இத்தனைக்கும் இதற்கு இணையான பல முக்கிய பிரச்சனைகள் இருந்தாலும் அதைப்பற்றி காங்கிரஸ் கட்சியினர் அவ்வளவாக கண்டு கொள்வதும் இல்லை. விமர்சிப்பதும் கிடையாது.
இதையொட்டியே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் விதமாக பிரசாந்த் கிஷோரை அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் அரசியல் ஆலோசகராக காங்கிரஸ் ரகசியமாக நியமித்து இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.
இதுதொடர்பான ஒப்பந்தம் இருதரப்பிலும் ஏற்படவில்லை. காங்கிரசுக்கு வெளிப்படையாக அரசியல் உத்திகளை வகுத்துக் கொடுக்காமல் ராகுல் காந்தியின் பின்னாலிருந்து அவரை இயக்குவதற்கு பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டிருக்கிறார், என்கிறார்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், மோடி மத்தியில் ஆட்சியமைக்கும் விதமாக தேர்தல் விதிகளை பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.
ஸ்டாலின், மம்தா உதாரணம் :
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2022-ல் பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கின் அரசியல் ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுகவிற்கும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அரசியல் ஆலோசகராக செயல்பட ஒப்புக்கொண்டு, அதன்படி இந்த இரு கட்சிகளையும் பிரசாந்த் கிஷோர் வெற்றிபெற வைத்ததை சோனியாவுக்கும், ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக் காண்பித்துள்ளனர்.
இப்படி முன்கூட்டியே வியூகங்களை வகுத்து பிரசாந்த் கிஷோர் செயல்படும் விதம் காங்கிரஸ் தலைமைக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். இதைத்தொடர்ந்தே அவரை அரசியல் ஆலோசகராக பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
பி.கே.வின் முதல் கண்டிஷன் :
இதில் முக்கிய நிபந்தனை, பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்காக வகுத்துக் கொடுக்கும் வியூகங்கள் தற்போதைக்கு வெளியே தெரியக்கூடாது என்பதுதான். அதேபோல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட பின்புதான் தானும், தனது ஐபேக் குழுவினரும் வெளிப்படையாக காங்கிரசுக்காக களம் இறங்குவோம் என்று பிரசாந்த் கிஷோர் உறுதி கூறி இருப்பதாக தெரிகிறது.
பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக காங்கிரஸ் ரகசியமாக நியமித்துள்ளதாக கூறப்படுவது பற்றி, டெல்லி செய்தியாளர்கள் கூறும்போது,”ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தான் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக அவருடைய வியூகம் தமிழ்நாட்டிலும் மேற்கு வங்காளத்திலும் எப்படி சாத்தியமானது என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம். ஏனென்றால் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்ட போதிலும் தமிழக மக்களிடையே ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்கிற எண்ணத்தை 2 வருடங்களுக்கு முன்பே விதைத்து அதை சாதித்தும் காண்பித்தும் விட்டார்.
அதேபோல்தான் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. மம்தா பானர்ஜிக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பலையும் காணப்பட்டது. அவருடைய கட்சி படுதோல்வி அடையும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பிரசாந்த் கிஷோர் வழிவகுத்தார்.
அதாவது, ஒரு மாநிலத்தில் எதிர்க் கட்சிக்கும், இன்னொரு மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும் ஏற்ப பிரசாந்த் கிஷோர் கையாண்ட உத்தி தான் காங்கிரசுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
மோடி vs எதிர்கட்சிகள் :
மேலும், தமிழக, மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, நான் வெகு வருடங்களாக அரசியல் ஆலோசகராக இருந்து சலித்துப் போய்விட்டது. அதனால் சிறிது காலம் ஓய்வு எடுப்பேன். அடுத்து வரும் தேர்தல்களில் அரசியல் வியூகங்களை வகுக்க எனது
‘ஐ பேக்’ நிறுவனத்தில் உள்ள இதர நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிப்பேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதுவும் தற்போது அவர் நேரடியாக காங்கிரசுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படாததற்கு முக்கிய காரணமாகும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராகுல் காந்தியை, பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தற்போது மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது வெளிப்படையான உண்மை” என்று அவர்கள் தெரிவித்தனர்.
2024-ல் மோடிக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றுதிரண்டு தேர்தலை சந்திக்குமா? என்பதை அறிய இன்னும் 3 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்!
No comments:
Post a Comment