கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜன்
தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நேற்றிரவு (17.05.2021) புதுச்சேரியில் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள இடைசெவல் என்ற சிற்றூரில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப் பிடித்தவர். தமிழ் இலக்கியவெளியை ஆக்கிரமித்திருந்த மேட்டிமை மொழியை உடைத்து, மக்களின் பேச்சுமொழியை உயர்த்திப்பிடித்த கலகக்காரர். இவரது முதல் சிறுகதை "மாயமான்" சரஸ்வதி இதழிலும், அதைத்தொடர்ந்து இவரது "கதவு" சிறுகதை தாமரை இதழிலும் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றன. கரிசல்காட்டு சம்சாரிகளின் பாடுகளை தமிழ் இலக்கியத்தில் ஆழமாகப் பதிவுசெய்தவர் கி.ரா.
இவரது முதல் நாவலான "கோபல்ல கிராமம்" வந்த புதிதில், நாவலுக்கான எந்த இலக்கணங்களும் அதில் இல்லை என்று பல முன்னணி எழுத்தாளர்களால் நிராகரிக்கப்பட்டது. அதுவே பல பதிப்புகள் கண்டு தற்போதும் பலராலும் கொண்டாடப்படும் படைப்பாக காலத்தை வென்று நிற்கிறது.
இடைசெவலில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியவர் கி.ரா. ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். இவருடைய நெருக்கமான நண்பரும் எழுத்தாளருமான கு.அழகிரிசாமியுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தைக் கட்டமைத்தவர். சமகாலத்தில், பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி, பூமணி, ச.தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ.தர்மன், சூரங்குடி முத்தானந்தம், கழனியூரன், கோணங்கி, உதயசங்கர், கௌரிஷங்கர், அப்பாஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, சாரதி, திடவை பொன்னுசாமி என எழுத்தாளர்கள் பலரும் உருவாகக் காரணமாக இருந்தவர் கி.ரா.
"எனக்கு மொத்தம் நான்கு தலைகள். முதல் தலை சங்கீதம் தான். ரெண்டாவது தலை அரசியல். மூணாவது தலை இலக்கியம். நாலாவது எனது சொந்தத்தலை " என்று சொல்லும் கி.ரா. சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இளம் வயதில், நாதஸ்வர வித்துவான் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் சங்கீதம் கற்றவர். விளாத்திகுளம் சுவாமிகள், காருகுறிச்சி அருணாச்சலம், வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
எண்பதுகளின் துவக்கத்தில் உதயசங்கர், மாரிஸ், முருகன் ஆகியோர் துணையுடன் "கரிசல் சொல்லகராதி"யைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் முயற்சி இது. ஒரு பல்கலைக்கழகம் செய்திருக்கவேண்டிய பணி இது.
கோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சியாய் இவர் எழுதிய "கோபல்லபுரத்து மக்கள்" நாவலுக்கு 1991ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. திருநங்கைகளின் துயரங்களைப் பற்றி அறுபது வருடங்களுக்கு முன்பே "கோமதி" என்ற சிறுகதையில் பதிவுசெய்தவர் கி.ரா. அவரது முக்கியமான சிறுகதை "நெருப்பு". கிராமத்தில் நள்ளிரவில் வீடுகள் தீப்பற்றி எரிகின்றன. அம்மை கண்ட குழந்தை ஒன்று எரிகிற வீட்டில் கிடக்கிறது. அதைக்காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்துப் பாய்ந்தவள் அவ்வூரின் சேரியைச் சேர்ந்த பெண். கடைசியில் இருவருமே இறந்து கரிக்கட்டையாய்ப் போகிறார்கள். இரண்டு பிரேதங்களும் சேர்ந்தே கிடக்கின்றன. நெருப்புக்கு தீண்டாமை உண்டா, இரண்டு உயிர்களின் சாதி தெரியுமா நெருப்புக்கு என்பதான கேள்விகளை எழுப்புவதாய் அக்கதையை எழுதியிருப்பார் கி.ரா. குழந்தைகளுக்காக அவர் எழுதிய "பிஞ்சுகள்" என்ற குறுநாவல் குறிப்பிடத்தக்க படைப்பு. பறவைகளைப் பற்றியும், பறவைகளின் விதவிதமான முட்டைகளைப் பற்றியும் பல தகவல்கள் பிரமிக்கவைக்கும்.
இந்தியாவில் பல படைப்பாளிகள் நூறு வயதுவரை வாழ்ந்திருந்தாலும், தனது கடைசிமூச்சு வரை பேனா பிடித்து எழுதியவர் அநேகமாய் கி.ரா ஒருவர் மட்டுமே இருக்கக்கூடும். 97வது வயதில் அவர் "அண்டரெண்ட பட்சி" குறுநாவலை தனது அழகான கையெழுத்தில் எழுதி வெளியிட்டார். இதை யாரும் அச்சிட வேண்டாம் என்றே சொல்லிவிட்டார். சமீபத்தில் வெளியான "மிச்சக்கதைகள்" அவரது நினைவிலிருந்து எழுதப்பட்ட தொகுப்பு.
அவரை புதுச்சேரி படைப்பாளிகளும், மக்களும் கடந்த 25 ஆண்டுகாலமாக பாதுகாத்திருக்கிறார்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக பணியாற்றிய பெருமை இந்த ஏழாங்கிளாஸ் பெயிலான மாணவனுக்கு கிடைத்தது என்று அடிக்கடி சொல்வார் அவர். தனது படைப்புகளின் உரிமையை வாசகர் ஒருவருக்கு எழுதிவைத்த முதல் எழுத்தாளர் கி.ரா. அந்தப் பெருமையைப் பெற்றவர் புகைப்படக்கலைஞர் புதுவை இளவேனில்.
தேயிலை பற்றி கி.ரா
கடந்த 1980களில் மத்தியில், மதுரை பல்கலைக் கழகத்தில் சில முக்கிய சமூக ஆளுமைகளுக்கான பாராட்டுக் கூட்டம் ஒன்று நடந்தது.
இதில் சில அரசு அதிகாரிகள் இலக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இலக்கியத்துக்காக மணிக்கொடி சிட்டி மற்றும் அமரர் கி.ராஜநாராயணன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் பேசியவர்கள் தாங்கள் சந்தித்த நபர்கள் படித்த சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவங்களாகப் பகிர்ந்துகொண்டனர்.
கி.ரா.அவர்கள் பேசும்போது.. தேயிலையின் பயன்பாடு பற்றி சுவையான ஒரு கதை சொன்னார்.
அதாவது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்... தேயிலை பற்றி சரியாக அறியாத ஒரு கிராமத்தில் ஒரு காகிதத்தில் கட்டப்பட்ட தேயிலை சற்று காய்ந்த நிலையில் நண்பர் மூலம் அக் கிராமத்துப் பெரியவருக்குக் கிடைக்கிறது. இதைப் பொடித்துப் பாலுடன் கலந்து காபி போல் சாப்பிடலாம் என்பதையும் அறிந்திருந்தார். பெரியவர் வீட்டில் மகன், மகள், மருமகள், குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 25 பேர் உண்டு. அனைவரும் கடுமையான உழைப்பாளிகள். இரவு 9 மணி வரை உழைப்பு. பின் ஓய்வு. மீண்டும் காலை 3 மணிக்கு எழுந்தால் நாள் முழுக்க உழைப்பு என அக்கிராமத்துக்கே முன்னுதாரணமாகக் திகழும் குடும்பம்.
வீட்டுப் பெண்கள் அன்று இரவு சாப்பாடு முடிந்து, அத் தேயிலையின் மகத்துவம் பற்றி சற்று அறிந்து அடுப்பில் வென்னீர் வைத்து தேயிலை கொதித்ததும் சிலர் பால் கலந்தும் மற்றவர்கள் Black Tea யாகவும் அருந்தினர். பின் தத்தம் வேலைகளைக் கவனித்து விட்டு அன்று அனைவரும் வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரம் முன்னதாகவே படுத்துவிட்டனர். ஒரு மணி நேரம் ஆயிற்று உறக்கம் வரவில்லை. பின் மேலும் ஒரு மணி நேரம் ஆனது. இப்படி மூன்று மணி நேரம் புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. அனைவருக்கும் சந்தேகம் தாங்கள் சாப்பிட்ட தேயிலையில் ஏதாவது கோளாறா....? நேரம் சென்று கொண்டிருந்தது. குடும்பத் தலைவர் உட்பட அனைவரும் எழுந்து வேறு வழியின்றி மறுநாள் செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் அன்றிரவே செய்துமுடித்தனர். மறு நாள் அனைவரும் காலை 3 மணிக்கு எழுந்து வழக்கம் ஆனால் உட்கொண்ட தேநீரால் தூக்கமின்றி அனைத்தையும் இரவே முடித்தனர்.
அப்போதுதான் களைப்புடன் தூக்கமும் மெதுவாக அவர்களை ஆட்கொண்டது. வாசல் கதவுகள் திறந்திருக்க குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த தூக்கத்தில் ஆழ்ந்தனர். காலை 4... 5.... 6... 8 என நேரம் கடக்க... இன்னும் அனைவரும் உறக்கத்தில்!
அவ்வூரிலிருந்த பலருக்கும் சந்தேகம் எழுந்து கிராமத் தலைவருக்குச் சொல்லி ஊரே வீட்டிற்கு வந்து பார்த்து விசாரித்தபோது... மெதுவாக எழுந்து.. நிலைமை உணர்ந்து தாங்கள் சாப்பிட்ட தேநீர் பற்றிய மகத்துவத்தை சொல்லி முடித்தனர். அதாவது இரவு நேரத்தில் கண் விழிக்கும் அவசியம் இருந்தால் மட்டுமே தேநீர் சாப்பிடுவது உசிதம்.
கி.ரா. சொல்லி முடித்ததும் அரங்கமே சிரிப்பு.. கரகோஷத்தால் குலுங்கியது!
No comments:
Post a Comment