சுக்கா... மிளகா... சமூகநீதி?
7. மண்டல் ஆணைய அறிக்கை-
புகழப்படாத நாயகன் கியானிஜெயில்சிங்! - மருத்துவர் இராமதாசு அய்யா
இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மண்டல் ஆணையத்தின் அறிக்கை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. காகா கலேல்கர் குழு ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்த அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு எவ்வாறு விரும்பவில்லையோ, அதேபோல் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்துவதில், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது பிரதமராக இருந்த, இந்திராகாந்திக்கும் விருப்பம் இல்லை. அவருடைய எண்ணமும் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை வெளியில் தெரியாமல் புதைக்க வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. அதற்கு காரணம் மண்டல் ஆணையத்தின் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவான பரிந்துரைகள் தான்.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 52% என்று மண்டல் ஆணையம் கண்டறிந்தது. இந்தியாவில் மொத்தம் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று ஆணையம் அறிவித்தது. 2006&ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 5013 ஆக அதிகரித்து விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை சாதிவாரியாக இல்லை. இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதால், 1931&ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கணக்கெடுக்கப்பட்டனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் முன்னேறிய வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய சமுதாயங்களின் மக்கள்தொகையை கழித்து மீதமுள்ள மக்கள்தொகை தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று மண்டல் ஆணையம் கணக்கிட்டது.
இந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்களோ, அதே அளவில் தான் இந்துக்கள் அல்லாதவர்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டது. இறுதியாக இந்திய மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் அளவு 52 விழுக்காடு என்ற முடிவுக்கு மண்டல் ஆணையம் வந்தது. முதலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கத்தான் மண்டல் ஆணையம் தீர்மானித்தது.
ஆனால், மொத்த இட ஒதுக்கீடு 50%க்கும் மேல் செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்ததால், அதை மீறக்கூடாது என்று கருதி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர்கள் தீர்மானித்தார்கள்.
அதனடிப்படையில் அவர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
வேலைவாய்ப்பு
1. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொதுப்போட்டி பிரிவுக்கு தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றால் அவர்களை அந்தப் பிரிவிலேயே நியமனம் செய்ய வேண்டும். அவர்களை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியிடங்களில் நியமிக்கக் கூடாது.
2. இந்த இட ஒதுக்கீடு அனைத்து நிலைகளிலும், பதவி உயர்வுக்கான பணியிடங்களுக்கும் பொருந்தும்.
3. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால், அவை அடுத்த மூன்றாண்டுகளுக்கும் கணக்கில் கொண்டு செல்லப்பட வேண்டும். அது வரை அவை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களாகவே நீடிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் நிரப்பப்படாவிட்டால் தான் அவற்றை பொதுபோட்டிப் பிரிவுக்கு மாற்ற வேண்டும்.
4. பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினத்தவருக்கும் அளிக்கப்படுவது போலவே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நேரடி நியமனத்தின் போது வயது வரம்பில் உச்சவரம்பை தளர்த்த வேண்டும்.
5. பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினத்தவருக்கும் கடைபிடிக்கப்படுவதைப் போலவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஒவ்வொரு வகை பதவிகளுக்கும் சுழற்சி முறைமை (ரோஸ்டர் முறை) உரிய அதிகாரம் பெற்ற அதிகாரியால் பின்பற்றப்பட வேண்டும்.
6. மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றின் பணிகளுக்கான நியமனங்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டு முறை அப்படியே பொருந்தும்படி செய்ய வேண்டும்.
7. அரசு உதவி பெறும் அனைத்து நிறுவனங்களிலும், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் இதே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.
8. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள கல்லூரிகளிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
9. மேற்கண்ட பரிந்துரைகளை உரிய அளவுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு இப்போதுள்ள சட்டங்கள், விதிகள், நடைமுறைகள் ஆகியவை எந்த அளவுக்கு போதுமானதாக இல்லையோ, அந்த அளவுக்கு புதிய சட்டங்களையும், திருத்தங்களையும் அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும்.
கல்வியிலும் இட ஒதுக்கீடு
10. பணிகளில் இட ஒதுக்கீடு என்பது கல்வி பெற்ற பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களில் மிகக் குறைந்த விழுக்காட்டினருக்கே வேலைகளை பெற்றுத் தர முடியும் என்பதால், அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தொழில் திறனை பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதேநேரத்தில் தொழிற்கல்வியிலும், தொழில்நுட்பக் கல்வியிலும் மற்றவர்களுடன் போட்டியிட்டு இடம் பிடிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களால் இயலாது என்பதால், மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்துக்குட்பட்ட அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஏதேனும் மாநிலங்களில் ஏற்கனவே 27%&க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தால் அதை இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் பாதிக்காது.
11. கல்வியில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் போது, அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்கல்வியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உயர்கல்வியின் முழுப் பயனும் கிடைப்பதற்கு வழி காணப்பட வேண்டும். சீரழிந்த பண்பாட்டுப் பிண்ணனியிலிருந்து வருகின்ற பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பிற மாணவர்களுக்கு சமமாகத் தங்களை வைத்துக் கொள்ள முடிவதில்லை. எனவே, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரையும் பிற மாணவர்களுடன் சமநிலையை அடையச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்த்து விட்டதால் தங்கள் பணி முடிவடைந்து விட்டதாக கல்வி நிறுவன அதிகாரிகள் நினைக்கக் கூடாது. உண்மையாகக் கூறினால் அவர்களின் பணி அதன் பிறகு தான் தொடங்குகிறது. அந்த மாணவர்களுக்கு தொடர் நடவடிக்கையாக தனிப்பயிற்சி அளித்து பிற மாணவர்களுடன் சமநிலைக்கு கொண்டு வராவிட்டால், அவர்கள் மனமுடைந்தும், தன்மானம் குன்றியும் போவதுடன் நாட்டில் தரம் குறைந்த போதிய திறன் பெறாத பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், பிற தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் உலவிக் கொண்டிருப்பார்கள். எனவே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை பிற மாணவர்களுக்கு இணையாக உயர்த்த தனிப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
12. பரம்பரைத் தொழில் சமுதாயத்தினருக்கு என கூட்டுறவு சங்கங்கள் அனைப்பது பெருமளவுக்கு துணை செய்யும். அத்தகைய கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாகவும், நிர்வாகக் குழுவினராகவும் அந்தந்தப் பரம்பரைத் தொழில் சமுதாயத்தினரே இருக்க வேண்டும். பிற சமுதாயத்தினர் அச்சங்கத்தில் ஊடுருவிச் சுரண்டுவது தடுக்கப்பட வேண்டும். இதில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு மண்டல் ஆணையம் அதன் அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ஒரே தொகுப்பாக வழங்கக்கூடாது என்றும், அதை இரு தொகுப்புகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் ஆணையத்தில் இடம் பெற்றிருந்த உறுப்பினர் எல்.ஆர் நாயக் யோசனை தெரிவித்தார். ஆனால், அந்த யோசனையை ஆணையம் ஏற்றுக் கொள்ளாததை அடுத்து அவர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்று அறிவித்து விட்டார்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஓர் ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் தான் அதில் உள்ள பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக வெளியுலகுக்கு தெரிய வரும். அதன் அடிப்படையில் தான் ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் எழும்; அவற்றை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படும். ஆனால், மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
கேரளத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 28.06.1981&இல் சென்றிருந்த உள்துறை அமைச்சர் ஜெயில்சிங், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைக்காக போராடி வரும் தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மண்டல் ஆணையத்தின் அறிக்கை தான் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டுமே தவிர, அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய இன்னொரு குழு அமைத்து அதன் அறிக்கையை தாக்கல் செய்வது நியாயமல்ல என்று எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
தமிழகத்திலிருந்து வே. ஆனைமுத்து இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஜெயில்சிங்குக்கு 24.07.1981&இல் ஒரு கடிதம் எழுதினார். அதில்,‘‘மண்டல் குழுவின் அறிக்கை அப்படியே நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக மண்டல் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய இன்னொரு குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும்’’ என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்திக்கும் அவர் கடிதம் எழுதினார். ஆனால், அதற்கு எந்த பயனும் இல்லை.
அதனால், மண்டல் ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததைக் கண்டித்து 1982&ஆம் ஆண்டு குடியரசு நாளில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்ற தகவலை தெரிவித்து பிரதமர் இந்திரா காந்திக்கு ஆனைமுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து மண்டல் ஆணைய அறிக்கை குறித்து உள்துறை அமைச்சர் ஜெயில்சிங்கை சந்தித்து பேசும்படி அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. அதன்படி, 25.01.1982இல் ஜெயில்சிங்கை தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் ஆனைமுத்து சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பு தான் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் பின்னாளில் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தன. மண்டல் ஆணையத்தின் சிறப்புகள் குறித்தும், அதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற முடியும் என்றும் உள்துறை அமைச்சர் ஜெயில்சிங்குக்கு நன்றாக புரியும்படி ஆனைமுத்து எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட ஜெயில்சிங்,‘‘ மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், பிரதமர் இந்திராகாந்தி பிராமணர் என்பதால் அதை செய்ய மாட்டார். ஆகவே, நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்து தெருவுக்கு வந்த் போராடுங்கள்’’ என்று ஆனைமுத்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மண்டல் ஆணைய அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதன் காரணமாகத் தான் மத்திய அரசின் சார்பில் பெரியவர் ஆனைமுத்துவை கியானி ஜெயில்சிங் அழைத்து பேசினார். வழக்கமாக இத்தகைய சூழலில் எந்தவிதமான போராட்டமும் நடத்தக் கூடாது என்று தான் அமைச்சராக இருப்பவர்கள் கூறுவார்கள்; சில தருணங்களில் மிரட்டவும் செய்வார்கள். ஆனால், கியானி ஜெயில்சிங் அவ்வாறு செய்யவில்லை. மாறாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று போராடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதிலிருந்தே பிற்படுத்தப்பட்டோர் நலனில் அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார் என்பதை அறியலாம்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக 04.03.1982&ல் ஜெயில்சிங்கை ஆனைமுத்து மீண்டும் சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்குப் பிறகு மண்டல் ஆணையத்தின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், சமுதாய அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், பிரதமர் இந்திரா காந்தியோ, அதை முறியடிக்கும் வகையில், ‘‘மண்டல் ஆணையத்தின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், அதேநேரத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது தான் சரியானதாக இருக்கும்’’ என்று கூறினார். இதற்கிடையே தமது ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை பார்க்காமலேயே 13.04.1982=இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் காலமானார்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கையை எவ்வாறு நிறைவேற்றச் செய்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயில்சிங், ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தின்படி 30.04.1982&ல் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அதன் பரிந்துரைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்தன.
மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதில் ஜெயில்சிங் தீவிரம் காட்டுவதை அறிந்த இந்திரா காந்தி எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று துடித்தார். ஜெயில்சிங்கை அடக்கியோ, மோதியோ வெற்றி பெற முடியாது என்பதை இந்திரா உணர்ந்திருந்தார். அந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயில் சிங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்தார். ஜெயில்சிங்கும் வேறுவழியின் அதை ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை இந்திரா காந்தி மீண்டும் கிடப்பில் தள்ளினார்.
வியாழக்கிழமை ....
மண்டல் அறிக்கை- ராஜிவ் காந்தியின் அருவருப்பு
No comments:
Post a Comment