சுக்கா... மிளகா... சமூகநீதி? 8. மண்டல் ஆணைய அறிக்கை - ராஜிவ் காந்தியின் அருவருப்பு! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சுக்கா... மிளகா... சமூகநீதி? 8. மண்டல் ஆணைய அறிக்கை - ராஜிவ் காந்தியின் அருவருப்பு! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சுக்கா... மிளகா... சமூகநீதி?
8. மண்டல் ஆணைய அறிக்கை
- ராஜிவ் காந்தியின் அருவருப்பு! - மருத்துவர் இராமதாசு அய்யா

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை எப்படியும் செயல்படுத்தி விட வேண்டும் என்று உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜெயில்சிங் நினைத்தார். அதற்காக அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் தான் அவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தினார் இந்திரா காந்தி. 1982-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தனி வேட்பாளரும், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவருமான ஹன்ஸ்ராஜ் கன்னாவை 4 லட்சத்து 71 ஆயிரத்து 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயில்சிங், நாட்டின் ஏழாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் பதவி தான் இந்தியாவின் முதன்மைப் பதவி என்றாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி. மத்திய அமைச்சராக இருந்திருந்தால் கூட மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்க ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால், குடியரசுத் தலைவரான பிறகு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியதைத் தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஜெயில் சிங் இல்லாத இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவை மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மண்டல் ஆணையத்தின்  பரிந்துரைகளை இந்திரா காந்தி அரசு நிறைவேற்றாது என்பதை சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரும் அறிந்திருந்திருந்தார்கள். ஆனால், தமது ஆணையத்தின் பரிந்துரைகளை இந்திராகாந்தி நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று தமது வாழ்நாளின் கடைசி வினாடி வரை மண்டல் நம்பினார்.  மண்டல் ஆணையத்தின் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்த போதும், அதன்பின் பல்வேறு தருணங்களிலும் அந்த நம்பிக்கையை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தினார்.

‘‘ இந்த ஆணையம் முந்தைய ஜனதா கட்சி அரசால் அமைக்கப்பட்டது என்றாலும் கூட, இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆணையத்துக்கு இரு முறை காலநீட்டிப்பு வழங்கியது மட்டுமின்றி,  நாங்கள் எங்களின் பணியை முடிப்பதற்கு தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் நலனில் இந்திரா காந்தி எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு இது தான் சாட்சியாகும்’’
என்று மண்டல் கூறியிருந்தார்.

ஆனால், மண்டலின் நம்பிக்கைகளை இந்திரா காந்தி பொய்யாக்கினார். மண்டல் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு 34 மாதங்கள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஆனால், ஒருமுறை கூட மண்டல் ஆணையத்தின் அறிக்கையை புரட்டிக் கூட பார்க்கவில்லை இந்திரா காந்தி.

1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31&ஆம் தேதி இந்திகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அன்று மாலை 6.00 மணிக்கு யாருடைய கருத்தையும் கேட்காமல் தமக்கு இருந்த அரசியலமைப்பு சட்டத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவின் புதிய பிரதமராக இராஜிவ்காந்திக்கு ஜெயில்சிங் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில், எதிர்மறையாக பாட்டன் நேரு எட்டடியும், தாயார் இந்திரா 16 அடியும் பாய்ந்தால் ராஜிவ் காந்தி 32 அடி பாய்ந்தார். இந்திய மக்கள்தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் சமூக, கல்வி முன்னேற்றம் மற்றும் ஜனநாயக அமைப்புகளில் தங்களுக்குள்ள விகிதாச்சார பங்கை பெறுவதற்குமான மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ராஜிவ்காந்தி வெறுத்தார். அவர் பிரதமராக இருந்த கடைசி நிமிடம் வரை மண்டல் ஆணையத்தின் அறிக்கை இருந்த திசையைக் கூட திரும்பிப் பார்க்கவில்லை என்பதிலிருந்தே பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரான உணர்வு அவர் ரத்தத்தில் எந்த அளவுக்கு  ஊறியிருந்தது என்பதை அறிய முடியும்.

மண்டல் ஆணையத்தின் அறிக்கையை அவர் அருவருப்பாக பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

கியானி ஜெயில்சிங்குக்கு பிறகு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர் இருந்தார் என்றால், அவர் பி.சிவசங்கர் அவர்கள் தான். திரு. சிவசங்கர் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மாவட்டம்  மாமிடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய  அவர், ஓய்வுபெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையிலும், ராஜிவ்காந்தி தலைமையிலான அமைச்சரவையிலும் செல்வாக்கு மிகுந்த மத்திய அமைச்சராக திகழ்ந்தார். காப்பு என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிவசங்கர், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த தலைவர்களில் முக்கியமானவராவார்.

இந்திரா அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சிவசங்கர் அவர்களை வே.ஆனைமுத்து அவர்கள் தலைமையிலான குழு 02.05.1981-இல் தில்லியில் சந்தித்து மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அது தொடர்பான கோரிக்கை மனுவை படித்துப் பார்த்த சிவசங்கர் அவர்கள், அதில் உள்ள அம்சங்கள் குறித்து ஆனைமுத்து உள்ளிட்ட குழுவினரிடம் விரிவாகவும் நிதானமாகவும் விவாதித்தார். பின்னர்,‘‘ கோரிக்கை மனுவில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் மிகவும் மென்மையானவை. அவை இன்னமும் கடுமையாக இருக்க வேண்டும். இவ்வகையில் நான் உங்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது. பிரதமர் இந்திரா காந்தி எதுவும் செய்ய மாட்டார். நீங்கள் போராட வேண்டியது தான்’’ என்று கூறினார்.

மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்தும் விஷயத்தில் இந்திரா காந்தியின் அணுகுமுறை குறித்து உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் என்ன கூறினாறோ, அதே வார்த்தைகளைத் தான் சிவசங்கர் அவர்களும் கூறினார். தாம் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடும்படி ஜெயில்சிங் கூறியதைப் போலவே, தாம் சட்ட அமைச்சர் என்பதை மறந்து மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்தக் கோரி போராடும்படி  சிவசங்கர் கேட்டுக் கொண்டார். பின்னர் மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு இவரும் உதவினார். ஆனாலும், ஜெயில்சிங் இல்லாத சூழலில் இவரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

இந்திராவின் மறைவுக்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் சிவசங்கர் அவர்களும் இடம் பெற்றார். வெளியுறவுத்துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றிய இவர், ஒரு கட்டத்தில் பிரதமர் ராஜிவ்காந்தியை சந்தித்து, மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்துவது குறித்து கேட்டார். ஆனால், அவருக்கு ராஜிவ்காந்தி எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக, அவரை சில நிமிடங்கள் மவுனமாக பார்த்து விட்டு ராஜிவ்காந்தி அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின் தம்முடன் வந்த தமக்கு நெருக்கமானவர்களில் ஒருவரிடம்,‘‘ மண்டல் ஆணையத்தின் அறிக்கை புழுக்கள் நிரப்பப்பட்ட குடுவை. அதை நான் ஒருபோதும் திறக்க மாட்டேன் "(Mandal Commission report is a can of worms; I won't touch it.).” என்று ராஜிவ்காந்தி கூறினார். அதன்பின் ராஜிவ்காந்தியின் பதவிக்காலம் முடிவடையும் வரை மண்டல் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கை கிடப்பிலேயே கிடந்தது.

ஒவ்வொரு  முறையும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டுக் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை உச்சத்தை அடையும் போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக போராடும் தலைவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்படப் போவதாக மனதிற்குள் கொண்டாடுவார்கள். ஆனால், அந்த கனவு மிக விரைவாகவே கலைந்து விடும். இந்தியாவின் அதிகாரம் மிக்க குடும்பத்திலிருந்து பிரதமர்களாக வந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, இராஜிவ் காந்தி ஆகியோரிடமிருந்து கிடைத்த அனுபவம் அப்படிப்பட்டதாகத் தான்  இருந்தது.

இந்தியாவில் முதன்முதலில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைத்த மொரார்ஜி தேசாய், சரண்சிங் ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்தாவது சில விஷயங்களை சாதிக்க முடிந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு மண்டல் ஆணையத்தை அமைத்த அவர்கள் தலைமையிலான ஜனதா அரசு, அதன் பரிந்துரைகளை நிறைவேற்றும் மனநிலையில் தான் இருந்தது. ஆனால், ஆணையத்தின் அறிக்கை தயார் செய்யப்படுவதற்கு முன்பாகவே ஆட்சியாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த அரசு கவிழ்ந்து விட்டது.

அதன்பின் மீண்டும் தொடக்கத்திலிருந்து போராட்டங்களைத் தொடங்க வேண்டியிருந்தது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வலியுறுத்தி வட மாநிலங்களில் ஆனைமுத்து அவர்கள் இரண்டாம் கட்ட பயணம் மேற்கொண்டார். இராம் அவதேஷ் சிங் அவர்களும் தீவிரமாக போராடினார்.

அத்தகைய சூழலில் தான் 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜனதா தளம் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. அது மத்தியில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் அல்லாத இரண்டாவது அரசு ஆகும். அந்த ஆட்சியின் பிரதமராக வி.பி.சிங் அவர்கள் 02.12.1989-இல் பொறுப்பு ஏற்றார்.

1977-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசின் நீட்சி தான் இது என்பதால், இந்த அரசாவது மண்டல் ஆணையத்தின் அறிக்கைப்படி பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையின் பயனாக 23.02.1990-இல் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு ஆனைமுத்து ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,‘‘ சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அது அந்த வகுப்பினர் மக்கள்தொகையில் பெற்றுள்ள விகிதாச்சார அளவான 52% ஆக இருக்க வேண்டும். அரசு நிர்வாக ஆணை மூலமாகவே இதை வழங்க முடியும்’’ என்று கூறியிருந்தார். கடந்த காலங்களில் சென்னை மாகாண அரசும், தமிழ்நாடு அரசும் இட ஒதுக்கீட்டுக்காக பிறப்பித்த  நிர்வாக ஆணைகளையும் அவர் விபிசிங்குக்கு எழுதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பினார்.

அதன்தொடர்ச்சியாக இதுகுறித்து பேசுவதற்காக பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து பேச இராம் அவதேஷ்சிங், ஆனைமுத்து ஆகியோர் முயன்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற வி.பி. சிங் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் குறித்து அவற்றை செயல்படுத்தும் துறையான தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வானை சந்தித்து பேசும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி ஆனைமுத்து, இராம் அவதேஷ்சிங் ஆகிய இருவரும் 22.03.1990-இல் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வானை தில்லியில் சந்தித்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசினார்கள்.  சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீட்டுக்காக நீதிக்கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட நிர்வாக ஆணைகளின் நகல்களை அவரிடம்  கொடுத்த இருவரும், அதனடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளித்து நிர்வாக ஆணை பிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இராம்விலாஸ் பாஸ்வானுடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்திருந்தாலும் கூட, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வேட்கை வி.பி.சிங்குக்கு இருந்ததாக தெரியவில்லை. இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள் தொடர் கதையாக நீண்டன.

நாளை....

27% இட ஒதுக்கீடு: நிறைவேறிய கனவு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages