9. சுக்கா... மிளகா... சமூகநீதி? 27% இட ஒதுக்கீடு நிறைவேறிய கனவு! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

9. சுக்கா... மிளகா... சமூகநீதி? 27% இட ஒதுக்கீடு நிறைவேறிய கனவு! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

9. சுக்கா... மிளகா... சமூகநீதி?
27% இட ஒதுக்கீடு நிறைவேறிய கனவு! - மருத்துவர் இராமதாசு அய்யா

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி வரலாறு படைத்தவர் வி.பி.சிங் அவர்கள் தான். அதனால் அவர் சமுகநீதிக் காவலராக போற்றப்படுகிறார் என்றாலும் கூட, அடிப்படையில் அவர் சமூகநீதி குறித்த புரிதலோ, ஆர்வமோ கொண்டவர் அல்ல; எதிரானவரும் அல்ல. காலமும், சூழலும் தான் அவரை சமூகநீதிக் காவலராக மாற்றியது.

அடிப்படையில் வி.பி.சிங் ராஜபுத்திரர்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா பகுதியின் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர்.   மண்டா மாகாணத்தின் மன்னராக இருந்த ராஜா கோபால்சிங் அவர்கள், குழந்தை பருவத்திலேயே அவரை தத்து எடுத்து தமது வாரிசாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தமது பத்தாவது வயதிலேயே மண்டா மாகாணத்தின் மன்னராக முடி சூட்டி வைக்கப்பட்டவர் வி.பி.சிங்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு 38 வயதில் சட்டமன்ற உறுப்பினர், 40 வயதில் நாடாளுமன்ற உறுப்பினர், 43 வயதில் இந்திரா காந்தி அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பதவி, இந்திரா காந்திக்கு பிறகு ராஜிவ்காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், இடைப்பட்ட காலத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் என இளம் வயதிலேயே முக்கிய பதவிகளை அடைந்து அரசியலில் உச்சத்தைத் தொட்டவர். இவர் நிதி அமைச்சராக இருந்த போது அம்பானி குழுமம், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு எதிராக வருமான வரி சோதனைகளை நடத்தினார். அதனால் இவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய ராஜிவ்காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சராக அமர்த்தினார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தான் போபர்ஸ் ஊழலை வி.பி.சிங் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தார். ஆனால், அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.சிங், முதலில் ஜன்மோர்ச்சா என்ற பெயரிலும், பின்னர் பிரிந்து கிடந்த ஜனதா கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற பெயரிலும் கட்சிகளைத் தொடங்கினார். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் ஊழல் ஒழிப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து தான் விபி.சிங் வெற்றி பெற்று பிரதமரானார்.

வி.பி.சிங் குறித்த இந்த வரலாறுகள் எல்லாம் இங்கு தேவையா? என்று தோன்றலாம். வி.பி.சிங் எவ்வாறு சமூகநீதிக் காவலராக உருவெடுத்தார் என்பதை அறிந்து கொள்ள இவை அனைத்தும் அவசியம் ஆகும். இளம் வயதிலேயே செல்வச் செழிப்பில் திளைத்த வி.பி.சிங் அவர்களுக்கு பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல் குறித்த புரிதலோ, அக்கறையோ கிடையாது. மண்டல் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க முதலமைச்சராக வி.பி.சிங் இருந்தார். ஆனால், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று ஒருமுறை கூட அவர் குரல் கொடுக்கவில்லை. 1989-ஆம் ஆண்டில்  பிரதமர் ஆன போதும் கூட ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்க வேண்டும் என்பது தான் வி.பி.சிங்கின் நோக்கமாக இருந்தது. அப்போதும் அவர் இட ஒதுக்கீடு குறித்து சிந்தித்துக் கூட பார்த்தது கிடையாது.

பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை வி.பி.சிங்கின் மனதில் ஏற்படுத்திய சம்பவம் 1990-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி தான் நடந்தது. அந்த நாளில் தான் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் உரையாற்றினார். அப்போது ஹரியானா தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த அமளி ஒரு சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பெரும் சூறாவளி வீசியது.

லோக்தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ராம் அவதேஷ்சிங் தமது இருக்கையிலிருந்து எழுந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தின் முன்பகுதிக்கு சென்று மண்டல் ஆணைய அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் குறிப்பிடப்படாததைக் கண்டித்து  முழக்கம் எழுப்பி அறப்போராட்டம் நடத்தினார். ‘‘குடியரசுத் தலைவர் அவர்களே... மண்டல் குழு பரிந்துரையை செயல்படுத்த வி.பி.சிங் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது (Mr. President what is the action taken by the VP singh Government to implement the Mandal Commission Report?) என்று அவர் எழுப்பிய முழக்கம் அவையை அதிர வைத்தது.

வழக்கமாக இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுபவர்கள்  ஒரு சில நிமிடங்கள் மட்டும் முழக்கம் எழுப்பி விட்டு, இருக்கையில் அமர்ந்து விடுவார்கள் அல்லது  வெளிநடப்பு செய்து விடுவார்கள். ஆனால், இராம் அவதேஷ்சிங் மட்டும் தனி ஆளாக நீண்ட நேரம்  போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அவரை இருக்கையில் அமரும்படி சக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அவர் தமது முழக்கத்தை நிறுத்தவில்லை. மாறாக, குடியரசுத் தலைவரை நோக்கி, ‘‘தொடர்ந்து உரையாற்ற நான் உங்களை அனுமதிக்க மாட்டேன் (I wont allow you to speak further)’’ என்று ஆவேசமாக முழங்கினார். அவரது ஆவேசத்தை கண்ட   குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் அவர்களே ஒரு கட்டத்தில் தமது உரையை நிறுத்தி விட்டு, உறுப்பினர் இராம் அவதேஷ் சிங் அவர்களை  அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரது முயற்சிக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

அவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி, கொண்டிருந்த இராம் அவதேஷ்சிங்கை சமாதானப்படுத்துவதற்காக அவையின் கடைசி இருக்கையிலிருந்து சிவசேனா கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வந்தனர். ஆனால், அப்போதும் அவதேஷ்சிங் தமது நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, அவரை வலுக்கட்டாயமாக இழுக்க அந்த உறுப்பினர்கள் முயன்றபோது சிறிய கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் மூத்த அமைச்சர்களான மது தண்டவதே, பி.உபேந்திரா ஆகிய இருவரும் அவையின் முன்பகுதிக்கு சென்று அவதேஷ் சிங்கை சமாதானப் படுத்த முயன்றனர். அவர்களின் முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது. ஒரு கட்டத்தில் வெளிநடப்பு செய்த இராம் அவதேஷ் சிங்குடன் சமூக நீதியில் அக்கறை கொண்ட உறுப்பினர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு முன்பே 1989-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற  கூட்டு கூட்டத்திலும் இதே பிரச்சினைக்காக இராம் அவதேஷ்சிங் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் போது ஓர் மூத்த உறுப்பினர் இவ்வளவு கடுமையாக போராட்டம் நடத்துகிறார் என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகத் தானே இருக்க முடியும்? குடியரசுத் தலைவர்  உரையின் போது இராம் அவதேஷ்சிங் நடத்திய போராட்டத்தை முன்வரிசையிலிருந்து பார்த்த பிரதமர் வி.பி.சிங், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, மண்டல் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை குறித்து அப்போது தான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்.  அது தான் வி.பி.சிங்கை சமூகநீதிக் காவலராக உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்தது. அந்த நேரத்தில் தான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து பிரதமரை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும்  என்று இராம் அவதேஷ் சிங்கும், வே.ஆனைமுத்துவும்  கோரிக்கை விடுக்கிறார்கள். அது குறித்து  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வானை சந்தித்து பேசும்படி வி.பி.சிங் கூறுகிறார். 

இந்த சந்திப்பு குறித்த விவரங்களை இராம்விலாஸ் பாஸ்வான் மூலமாக அறிந்த பிறகு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வி.பி.சிங் தீர்மானிக்கிறார். நாடாளுமன்றத்தில் மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தி இராம் அவதேஷ் சிங் நடத்திய போராட்டமும், அதைத் தொடர்ந்து இராம் அவதேஷ் சிங், ஆனைமுத்து ஆகியோர் இராம்விலாஸ் பாஸ்வானுடன் நடத்திய பேச்சுகளும் தான்  மண்டல் ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்தும் விஷயத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தின என்றால் அது மிகையல்ல.

இங்கு ஒரு சிறிய விளக்கம்....

சமூகநீதிக் காவலர் என்று போற்றப்படும் வி.பி.சிங் அவர்களுக்கு மண்டல் ஆணைய அறிக்கை, பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து போதிய புரிதல் இல்லை என்பது கேட்பதற்கே வியப்பாகத் தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. இன்னும் கேட்டால் மண்டல் ஆணையத்தின் பரிந்துரையில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகள் குறித்து மட்டுமல்ல, கல்வியிலும் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்த விஷயம் 2001&ஆவது ஆண்டு வரை வி.பி.சிங் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

மண்டல் ஆணையப் பரிந்துரை செயல்படுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆன பிறகு 2001&ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தமது உற்ற தோழர் கலச. இராமலிங்கம் மற்றும் குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழ் இளம் அதிகாரிகளுடன் வி.பி.சிங் அவர்களை  ஆனைமுத்து அவர்கள் தில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, ‘‘மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளில் வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, கல்வியிலும் இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், உங்களுடைய அரசு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கத் தவறிவிட்டது’’ என்று  வி.பி.சிங்கிடம் ஆனைமுத்து உரிமையுடன் சுட்டிக்காட்டினார். அதைக்கேட்ட வி.பி.சிங், மண்டல் ஆணைய அறிக்கையில் கல்வியிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றா குறிப்பிடப்பட்டிருந்தது? என்று  வியப்புடன் கேட்டிருக்கிறார்.

அந்த நிமிடம் வரை அந்தக் குறைபாடு வி.பி.சிங்குக்கு தெரியவில்லை. அவரது அமைச்சரவையில் இட ஒதுக்கீட்டுக்கு பொறுப்பு வகித்த அமைச்சரான இராம்விலாஸ் பாஸ்வானும் இது குறித்து வி.பி.சிங் அவர்களுக்கு எடுத்துக் கூறவில்லை. இந்தியாவின் மிகச்சிறந்த  சமூகநீதித் தலைவரான இராம் மனோகர் லோகியாவின் வழி வந்த பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் பலரும் வி.பி.சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் யாருமே இதுகுறித்து வி.பி.சிங் அவர்களிடம் எடுத்துக் கூறவில்லை. பொதுவாகவே அந்த நேரத்தில் வட இந்தியத் தலைவர்கள் எவருக்குமே கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அவர் அப்போதே கல்வியிலும்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.

சரி.... மீண்டும் பின்னோக்கிப் போவோம்....

இராம்விலாஸ் பாஸ்வானுடன் நடத்திய பேச்சுக்களுக்குப் பிறகு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக 24.04.1990&ல் ஆனைமுத்து அவர்களுக்கு இராம்விலாஸ் பாஸ்வான் கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டு அறிவிப்பை விரைந்து வெளியிடும்படி 26.05.1990&ல் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு  ஆனைமுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.
மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் வி.பி.சிங் அவர்களுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடிகள் ஆரம்பமாயின. ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பாரதிய ஜனதா ஒரு பக்கம் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தீர்மானித்து, அதை வலியுறுத்தி ரதயாத்திரை உள்ளிட்ட   நடவடிக்கைகளை அறிவித்தது. மற்றொருபுறம் துணைப்பிரதமராக இருந்த தேவிலாலுக்கு பிரதமர் பதவி மீது ஆசை துளிர்த்தது. வி.பி.சிங் அரசை கவிழ்த்து விட்டு பதவிக்கு வர அவர் தயாராகியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் ஜுலை மாத மத்தியில் வி.பி.சிங் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணமாகச் சென்றார். ஜூலை மாதம் கடைசி வாரத்தில் அவர் தாயகம் திரும்பிய போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. துணைப்பிரதமர் தேவிலால் வெளிப்படையாகவே போர்க்கொடி உயர்த்தினார். நிலைமையை சமாளிப்பதற்காக தேவிலாலை பதவியிலிருந்து நீக்கினார் வி.பி.சிங்.  அவருக்கு தமது வலிமையை காட்டுவதற்காக ஆகஸ்ட் 9&ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்தப்போவதாக தேவிலால் அறிவித்தார். இந்த நெருக்கடிகள் அனைத்திலிருந்தும் மீளவும், பின்தங்கிய மக்களிடம் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது மட்டும் தான் சிறந்த வழி என்று நினைத்தார் வி.பி.சிங்.

அதன்படி, தேவிலால் அறிவித்த பேரணி நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பாக, அதாவது ஆகஸ்ட் 7-ஆம் தேதி மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வி.பி.சிங் அறிவித்தார். அதற்கான அரசாணையை அவரது அரசு ஆகஸ்ட் 13&ஆம் தேதி வெளியிட்டது. அடுத்த இரு நாட்களில் நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவிலும் 27% இட ஒதுக்கீடு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று வி.பி.சிங்  அறிவித்தார்.

இவ்வாறாக மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற ஒரு பகுதி மட்டும் நனவானது.
நாளை.....
வில்லனாக்கப்பட்ட வி.பி.சிங்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages