ஜம்மு விமானப்படை தளம் மீது டிரோன் மூலம் குண்டுவீச்சு
அதிகாலையில் தீவிரவாதிகள் கைவரிசை நாட்டில் முதல்முறையாக நடந்த சம்பவம் கட்டிடங்கள் சேதம், 2 வீரர்கள் காயம்
ஜம்மு: நாட்டிலேயே முதன் முறையாக ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது நேற்று அதிகாலை அடுத்தடுத்து 2 முறை, ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 2 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்தன. ஜம்முவில் விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் உளவு பார்க்கும் முயற்சியை தடுக்கவும் தனிக்குழு செயல்பட்டு வருகிறது. எல்லையில் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து வந்து ஆளில்லா விமானங்கள் உளவு பார்க்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு விமானப்படை தளத்தின் மீது நேற்று அதிகாலை 1.40 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை 6 நிமிடங்கள் இடைவெளிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த 2 வெடிகுண்டு தாக்குதலும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டு இருப்பது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு குண்டு தொழில்நுட்ப பிரிவு செயல்படும் கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதனால், மேற்கூரை சேதமடைந்தது. மற்றொறு குண்டு திறந்தவெளியில் விழுந்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலால் பெரிய அளவில் சேதம் இல்லை, உயிரிழப்புகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு வீரர்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். உச்சகட்ட பாதுகாப்பில் உள்ள ஒரு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து ஜம்மு காஷ்மீர் டிஜிபி, விமானப்படை உயரதிகாரிகள், தடவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், என்ஐஏ அதிகாரிகள் ஆகியோர் விமானப்படை தளத்திற்கு விரைந்தனர். தடவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக தடயங்களை சேகரித்தனர். உயரதிகாரிகள் அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை துணை தலைமை ஏர் மார்ஷல் எச்.எஸ்.அரோராவிடம் தொலைபேசியில் நிலைமையை கேட்டறிந்தார். அதே நேரத்தில், அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ள இந்திய விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவுரியா அங்கிருந்தபடியே தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.
இந்திய விமானப்படையின் உயர்மட்ட விசாரணைக் குழுவும், என்ஐஏவும் இந்த தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வருகின்றன. எல்லையில் இதுவரை துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு, மோதல் போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. தற்போது, நாட்டிலேயே முதன்முறையாக ஆளில்லா விமானம் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எல்லையில் ராணுவ வீரர்கள் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர். நாட்டின் அனைத்து எல்லைகளிலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர்கள் சுற்றுகிறார்களா? ஆளில்லா விமானம் பறக்கிறதா? என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு பின் அங்கு சூழல் மாறிய வருவதால் தேர்தல் நடத்துவது தொடர்பாக, ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 விமானங்கள் ரத்து
ஜம்முவில் இருந்து டெல்லி, ஸ்ரீநகர், லே மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் வழக்கமாக 16 விமானங்கள் தினமும் இயக்கப்படும். விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இரண்டு விமானங்கள் மட்டும் ரத்து செயப்பட்டுள்ளதாக ஜம்மு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர், ராணுவ தளபதி பயணத்திற்கு முன் தாக்குதல்
ராணுவத்தின் தயார்நிலை, சீனாவுடனான எல்லை மோதல் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ராணுவ தளபதி எம்.எம்.நாரவனேவும் மூன்று நாள் பயணமாக நேற்று லடாக் புறப்பட்டு சென்றனர். அவர்கள் பயணத்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 கிலோ வெடிபொருளுடன் லஷ்கர் தீவிரவாதி கைது
ஜம்மு அருகே உள்ள திரிகுதா நகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 6 கிலோ வெடிபொருட்களுடன் சுற்றிய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த நதீம் உல் ஹக் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் வெடிபொருட்களுடன் நதீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதான்கோட்டில் அலர்ட்
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படை தளம் மீது 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உள்பட 8 பேர் பலியானார்கள். தற்போது, ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால், பதான்கோட் தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment