பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனையை தீர்க்க நடுவண் அரசின் புதிய அறிவிப்பு: பலன் தருமா Bad Bank? - Agnipuratchi

பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனையை தீர்க்க நடுவண் அரசின் புதிய அறிவிப்பு: பலன் தருமா Bad Bank?

Share This

பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனையை தீர்க்க நடுவண் அரசின் புதிய அறிவிப்பு:  பலன் தருமா Bad Bank?

2021 பொக்கீட்டு (Budget) உரையில் அறிவிக்கப்பட்ட வாராக் கடன் வங்கி(Bad Bank) தற்போது உருவம் பெறத் தொடங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்த போது வாராக் கடன்களை மீட்டெடுக்கும் வகையில் தேசிய சொத்து மீள்- கட்டுமான குழுமம் (National Asset Reconstruction Company) நிறுவப்பட்டு  ₹30,600 கோடி மதிப்பிலான 5 ஆண்டுகால சேமுறுதி சீட்டுகள் (Security Receipts) பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

அதாவது, Bad Bank என்கிற தேசிய சொத்து மீள்- கட்டுமான குழுமம் வாரக்கடனின் 15 % மதிப்பை ரொக்கமாகவும், மீதமுள்ள 85 % ஐ சேமுறுதி சீட்டுகளாகவும் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கி வாராக் கடன்களை  வாங்க உள்ளது.

மேலும், வாங்கப்பட்ட வாராக் கடன்களை நிர்வகிக்க இந்திய கடன் தீர்வுக் குழுமம் (India Debt Resolution Company) ஒன்றையும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த குழுமத்தில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு நிதி சார்  நிறுவனங்கள் 49 % பங்குகளை வைத்திருக்கும் என்றும் தனியார் துறை வங்கிகளும் அதில் குறிப்பிட்ட அளவிலான  பங்குகளை வைத்திருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த Bad Bank வங்கி பல கட்டங்களாக ₹ 2 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை பல்வேறு வணிக வங்கிகளிலிருந்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு அறிவித்துள்ள உடனடி 15 % ரொக்கம் வழங்கல் என்பது அனைத்து பொதுத் துறை வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு பிரித்து வழங்கப்படும் எனில் குறுகியகாலத்திற்கு இதனால் எந்தவொரு பெரிய நன்மை கிட்டப்போவதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

வெற்றிகரமான முறைமை

அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் செயல்படுத்தக் தொடங்கிய 1980 களில் இருந்து இந்த முறைமையை இந்தியாவில்  செயல்படுத்த ஒரு கருத்து இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா, ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் Bad Bankகள் நிறுவனமயமாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகின்றன.

ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் "அரசு தலைமையிலான Bad வங்கியின்" யோசனையை எதிர்த்தார். அதற்கு பதிலாக தற்போது நடப்பில் உள்ள தனியார் துறை சொத்து மீள் கட்டுமான குழும  நிறுவனங்களை வங்கிகளிடமிருந்து வாராக் கடன்களை நிர்வகிக்க வலுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

தற்போது 28 தனியார் ARCக்கள் இருந்தாலும் கூட  வங்கிகள் மற்றும் மீள் கட்டுமான நிறுவனங்கள் இடையே இந்த சொத்துக்களை  நியாயமான மதிப்பீட்டில்  பெரும் வேறுபாடுகள் எழுவதால், வாராக் கடன்களின் மீட்பு மதிப்பு (Recovery loan amount) அதிகரிக்கவில்லை.  எனவே அரசு ஆதரவு சேமுறுதி சீட்டுக்களுக்கான  தேவை ஏற்படுகிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வங்கி அலுவலர்கள் சங்கம் எதிர்ப்பு

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என அரசின் கடந்த கால அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
இதே போன்று 2016 இல் ஏற்கனவே Insolvency and Bankruptcy சட்டம் வாராக் கடன்களை வங்கிகளுக்கு மீட்டளிக்க கொண்டுவரப்பட்டது. ஆனால், இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 396 வழக்குகள் தீர்க்கப்பட்டு 6.82 இலட்சம் கோடி வாராக் கடன்களில் 36 % ஆன வெறும் 2.45 இலட்சம் கோடி மட்டுமே மீட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தனது செய்தியாளர் சந்திப்பில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ₹5 இலட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பெருமிதத்தோடு கூறினார். ஆனால் அதே காலக்கட்டத்தில் ₹10 இலட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் வங்கிகளால் தள்ளுபடி (Written Off) செய்யப்பட்டன என்பதை கூற மறந்து விட்டார்.

மேலும், வாராக் கடன்களை திருப்பி செலுத்த தவறிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை  மீட்டெடுப்பதை காட்டிலும் கடன் தள்ளுபடிகள் மூலம் வாராக் கடன்கள் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.

இதனால்  கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பொதுத் துறை வங்கிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுத் துறை வங்கிகளின் தலை முதலீடுகளை மீளமைப்பு செய்ய சுமார் ₹3.36 இலட்சம் கோடியை வழங்கியது நடுவண் அரசு.

மார்ச் 2021 நிலவரப்படி இந்தியாவில் பட்டியலிடப்பட்ட வணிக  வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு சுமார் ₹8.7 இலட்சம் கோடி. அதில் 78% பெரு நிறுவன முதலாளிகள் பெற்ற கடனாகும். மேலும், அதில் 75% கடன் பொதுத் துறை வங்கிகளிடம் பெறப்பட்டுள்ளது. வாராக் கடன்களை NARC யிடம் கை மாற்றுவதை காட்டிலும் கடன்களை செலுத்தத் தவறியவர்களிடம் பணத்தை மீட்டெடுப்பது மட்டுமே வங்கிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என நிறைவு செய்கிறது  AIBOC பொதுச் செயலாளர் சௌமியா தத்தாவின் அறிக்கை.

நரேந்திர மோதி அரசின் இந்த NARCL உருவாக்க  அறிவிப்பு என்பது வாராக் கடன் மேலாண்மையில்  தொடர்ச்சியான முன்முயற்சிகள், கொள்கை முடிவுகள், சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை தூய்மைப்படுத்தலின் கடைசி படியாகும். இந்த மாற்றங்கள் நடைமுறை வகையிலும் அரசியல் வகையிலும் செயல்படுத்துவதற்கு கடினமான ஒன்றாக இருப்பினும் அரசின் ஐந்து ஆண்டு கால சேமுறுதி சீட்டுகள் எவ்வளவு விரைவாக ரொக்கமாகும் என்பதை பொறுத்தே இதன்  வெற்றி அமையும்.

நன்றி: ~ கதிர் கோ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages