மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களின் ஆசிரியர் நாள் வாழ்த்து!
தாய், தந்தையருக்கு அடுத்த உயர்வான இடத்தில் வைத்து வணங்கப்படும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘ஏணி தோணி அண்ணாவி நாரத்தை’’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஏணி என்பது அனைவரையும் மேலே ஏற்றி விட்டு, அதே இடத்தில் நின்று கொண்டிருக்கும். தோணி என்பது நீர் நிலைகளை கடக்க நினைக்கும் அனைவரையும் கரையேற்றி விட்டு, தண்ணீரிலேயே கிடக்கும். அதே போல் அன்னாவி, அதாவது ஆசிரியர் தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை உயர்ந்த இடத்திற்கு அனுப்பி விட்டு, அவர் மட்டும் அதே இடத்தில் இருப்பார். நார்த்தங்காய் வயிற்றுக்குள் சென்றால் மற்ற உணவுப் பொருட்களை செறிக்க வைத்து விட்டு, அது மட்டும் செறிக்காமல் வயிற்றில் இருக்கும். ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம் என்பதை 4 வார்த்தைகளில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். அது தான் ஆசிரியர் சமுதாயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
ஆசிரியர்கள் நலனில் பாட்டாளி மக்கள் கட்சி உண்மையான அக்கறை கொண்டிருக்கிறது. அதனால் தான் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கச் செய்திருக்கிறது. அதே போல், பகுதி நேர ஆசிரியர்களாகவும், ஒப்பந்த ஆசிரியர்களாகவும், சிறப்பு ஆசிரியர்களாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பா.ம.க. போராடி வருகிறது. இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படுவதை பா.ம.க. உறுதி செய்யும்.
அனைவரையும் உயர்த்தும் ஆசிரியர்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும்; அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்ற அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment