இன்று தொடங்குகிறது "முதலாவது இமாலய திரைப்படத் திருவிழா": நடுவண் அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைக்கிறார் - Agnipuratchi

இன்று தொடங்குகிறது "முதலாவது இமாலய திரைப்படத் திருவிழா": நடுவண் அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைக்கிறார்

Share This

இன்று தொடங்குகிறது "முதலாவது இமாலய திரைப்படத் திருவிழா": நடுவண் அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைக்கிறார்

முதல் முறையாக இமாலய திரைப்படத் திருவிழா என்ற பெயரில்  செப்டம்பர் 24 முதல் 28 வரை லடாக் ஒன்றிய ஆட்சிப்பரப்பின் (Union Territory) 'லே' நகரில் இந்த ஐந்து நாள்  திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை திரைப்பட விழாக்களின் இயக்குநரகம் (DFF) மற்றும் இந்திய அரசின்  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்  ஆகியவற்றுடன்  இணைந்து லடாக் ஒன்றிய ஆட்சிப்பரப்பின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  தேசிய விருதுகள் மற்றும் இந்திய திரைப்படத் திருவிழாக்களில் திரையிட தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த  விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறன.

பரம் வீர் சக்ரா பதக்கம் வென்ற கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட "ஷெர்ஷா" இந்த விழாவின் முதல் திரைப்படமாக இடம்பெற உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கிய தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் விஷ்ணு வர்தன் மற்றும் படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக நடுவண் அரசு அறிவிப்பு.

இமாலய மலைத் தொடர் மாநிலங்களான லடாக், ஜம்மு & காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து முதலிய மாநிலங்கள்/ ஒன்றிய ஆட்சிப்பரப்புகளை சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் மட்டும் இந்த போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர். மூன்று பிரிவுகளின் கீழ் ஆவண மற்றும் குறும்படங்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவின் முதன்மை நோக்கமாக இமய மலைத் தொடர் பகுதியில் உள்ள  உள்ளூர் ஆவண/ குறும்பட கலைஞர்களை ஏற்பளிக்கவும், திரைப்படத்தை உருவாக்கும் செயல்முறைகளை  மையப்படுத்தி, உள்ளூர் திறமைகளை திரைப்படத் தொழிலில் தொடர ஊக்குவிக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்பட விழாவுடன் தனித்துவமான  லடாக்கின் தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளை மையப்படுத்தி உணவுத் திருவிழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர லடாக்கின் புகழ்பெற்ற பண்பாட்டை  எடுத்துரைக்கும் வகையில் பண்பாட்டு (Cultural) துறையுடன் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும்  இசைத் திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட விழாவின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் தலா ₹3.5 லட்சம் பணத்துடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த கதை, ஒளிப்பதிவாளர், தொகுப்பாளார் ஆகிய பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ₹1.75 லட்சம் வழங்கப்பட உள்ளது.

நடுவர் குழுவின் தலைவராக அசாமைச் சேர்ந்த திருமதி மஞ்சு போரா, உறுப்பினர்களாக தமிழகத்தின் திரு ஜி.பி. விஜயகுமார் மற்றும் ஜம்மு காஷ்மீரின் திரு ராஜா ஷபீர் கான் ஆகியோர் செயல்படுவார்கள் என நடுவண் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

~ கதிர் கோ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages