பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் GST வரம்புக்குள் கொண்டுவரப்படுமா?: 45 வது GST குழு கூட்டம் குறித்த எதிர்பார்ப்புகள்!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள 45 வது GST குழு கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் வான் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எரி பொருட்கள் GST வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த விவாதம் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே GST செயலகத்தினால் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட உற்பத்தி மாநிலங்கள் பெரிய அளவில் நட்டத்தை சந்தித்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை மீதான வரி விதிப்பை பெரிதும் நம்பியுள்ள மாநிலங்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்புகளை ஈடுகட்ட மாநிலங்களுக்கு நடுவண் அரசின் பங்கில் இருந்து இழப்பீடு வழங்குவது குறித்தும் பேச்சு நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும்.
கடந்த ஜூன் மாதம், கேரள உயர்நீதிமன்றம் பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரி விதிப்பில் இருந்து மீட்கும் பொருட்டு பெட்ரோலிய பொருட்களை GST வரம்புக்குள் கொண்டுவர ஆய்வு செய்யுமாறு GST குழுவை அறிவுறுத்தியிருந்த நிலையில் அதன் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
GST சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போதே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை GST வரம்புக்குள் கொண்டு வருவதற்கு தடை ஏதுமில்லை என்றும் அதன் செயலாக்க தேதியை முடிவு செய்ய GST குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும் மாநில நிகராளர்கள் உட்பட 3/4 அளவில் GST குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படுத்த இயலும்.
விண்ணை முட்டும் வகையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் GST வரம்புக்குள் கொண்டு வந்தால் வரி மீதான வரி விதிப்பில் இருந்து தவிர்க்க முடியும்.
தற்போதைய நடைமுறைப்படி பெட்ரோலின் அடிப்படை விலை மட்டுமின்றி நடுவண் அரசு விதிக்கும் சுங்க வரியும் மாநில அரசுகள் விதிக்கும் VAT வரிக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது.
தற்போது பெட்ரோல், டீசலுக்கு வரி, சுங்கம், துணைத் தீர்வை என பல்வேறு நடுவண் அரசு வரிகளை விதித்து வரும் நிலையில் இதன்மூலம் மாநிலங்கள் மட்டுமின்றி நடுவண் அரசும் வரி வருவாய் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். எனினும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ள நடுவண் அரசு இதை முன்னெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களுக்கு GST யில் இருந்து ஏற்கனவே விலக்கு அளித்திருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் அது மேலும் நீட்டிக்கப்படலாம்.
மேலும் இணையவழி உணவு வழங்கும் சேவை செயலிகளான Swiggy, Zomato உள்ளிட்டவைகளையும் GST வரம்புக்குள் கொண்டு வர நடுவண் அரசு சார்பில் இந்த கூட்டத்தில் முன்னெடுப்புகள் வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெட்ரோல், டீசலை GST வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து முதன்முறையாக நடுவண் அரசு முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நடைபெறவுள்ள லக்னோ 45 வது GST குழு கூட்டம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
- கதிர் கோ
No comments:
Post a Comment