நான் தான் காவிரி... உங்கள் கண்ணீரைத் துடைக்கும் என்னை கண்ணீர் விட வைக்காதீர்! - மருத்துவர் இராமதாசு அய்யா பதிவுகள் - Agnipuratchi

நான் தான் காவிரி... உங்கள் கண்ணீரைத் துடைக்கும் என்னை கண்ணீர் விட வைக்காதீர்! - மருத்துவர் இராமதாசு அய்யா பதிவுகள்

Share This

நான் தான் காவிரி...
உங்கள் கண்ணீரைத் துடைக்கும்
என்னை கண்ணீர் விட வைக்காதீர்! - மருத்துவர் இராமதாசு அய்யா பதிவுகள்

எனது அன்பான தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!

நான் தான் காவிரி. தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உடலிலும் ஏதோ ஒரு வகையில் நான் கலந்திருக்கிறேன். அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழகமும் எனது சொந்தங்கள் தான். கடந்த சில நாட்களாக நான்  மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறேன். ஆனாலும், உங்களுடன் பகிர்ந்து கொள்ள  என்னிடம் பல கண்ணீர் கதைகள் உள்ளன.

என்னை தங்க வைத்து பாதுகாக்கும் மேட்டூர் அணையை, அது கட்டப்பட்ட 88 ஆண்டுகளில், நான் இப்போது 41 ஆவது முறையாக நிரப்பியிருக்கிறேன். அதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் வறண்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது. அது மிகவும் அவசியமானது தான். நான் தங்குவதற்கு இடம் கொடுத்த மாவட்டம் சேலம் மாவட்டம் தான். நான் தங்குமிடமான மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அந்த இடம் தொடங்கி, நான் தமிழ்நாட்டில் நுழையும் எல்லைப் பகுதி வரை அனைத்தும் சேலம் மாவட்டமாகத் தான் இருந்தன.

ஆனாலும், அந்த மாவட்டத்து மக்களுக்கு கடந்த 88 ஆண்டுகளில் எந்த உதவியையும் நான் செய்யவில்லை; அவர்களின் குடிநீர், பாசனத் தேவைக்கு நான் எந்த வகையிலும் பயன்படவில்லை. அதற்காக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் நீண்டகாலமாக போராடி வந்தார். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அந்தத் திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்து விட்ட நிலையில், ஏரிகளில் உபரி நீரை நிரப்ப வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் பாமக  தான் வலியுறுத்தியது. இப்போது ஏரிகளில் உபரி நீர்  நிரப்பப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

காவிரி எனும் நான் என்றால் பிரமாண்டம் என்று பொருள். சங்க இலக்கியங்கள் அனைத்தும் எனது பெருமைகளை பத்தி பத்தியாக எழுதிக் குவித்துள்ளன. சிலப்பதிகாரம், மணி மேகலை, பட்டினப் பாலை, புறநானூறு, கம்பராமாயணம், பெரியபுராணம், பத்துப்பாட்டு, பாரதம் உள்ளிட்ட இலக்கியங்களில் எனது அழகு, செழுமை குறித்து வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

பாரதியாரும், பாரதிதாசனும் தங்களின் படைப்புகளில் என்னை தாயினும் மேலாக போற்றிப் பாடி உள்ளனர். தமிழ் மூதாட்டி அவ்வைப்பாட்டி அதியமான் மன்னனிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது காவிரி பாயும் மண்ணிலிருந்து வருவதாக பெருமையும் குறிப்பிடுகிறார். ஒட்டக்கூத்தர், புகழேந்தி புலவர், சொக்கநாதப் புலவர், காளமேகப் புலவர் என என்னைப் பற்றிப் பாடாத புலவர்களே கிடையாது.

‘‘வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி
வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி’’ என்று என்னைப் போற்றுகிறது  பட்டினப்பாலை. காவிரி என்றால் காலம் தவறாமல் தண்ணீர் கொண்டு வருவது, பஞ்ச காலத்திலும்  பாசனத்திற்கு தண்ணீர் தருவது என்று கூறி என்னைப் பெருமைப்படுத்துகிறது பட்டினப்பாலை.

‘‘வெள்ளி எனப்படும் நட்சத்திரமானது தான் செல்லுவதற்குரிய திசையாகிய வடக்கு செல்லாது தெற்கு நோக்கிச் சென்றாலும், வானம்பாடி என்னும் பறவை மழை துளியாகிய உணவைப் பெறாமல் வருந்தும்படி மேகம் பொய்த்த பஞ்சகாலம் உண்டானாலும் காவிரி தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்து வருகிறது. குடகுமலையினிடத்தே தோன்றி கடலில் சென்று விழுவதுமான காவேரியாறு என்றும் நீர் வருவதின் தவறாத் தன்மையுடன் திகழ்கிறது’’ என்பது தான் இந்தப் பாடலின் பொருள் ஆகும்.

தோன்றும் இடத்தை வைத்து ஒப்பீடு செய்தால் நானும், என்னால் வளரும் ஆலமரங்களும் ஒன்று தான். ஆலமரம் கண்ணுக்கே தெரியாத விதையிலிருந்து தான் உருவாகிறது; ஆனால், ஒரு மன்னரின் படைக்கே நிழல் தரும் அளவுக்கு பரந்து விரிந்து வளர்கிறது. நானும் அதே போல் தான். நான் உருவாவது  குடகு மலையில் தான். அங்கு நான் சிறு ஓடையைப் போல தான்  தோன்றுகிறேன். ஆனால், சோழ நாட்டின் பூம்புகாருக்கு அருகில் வங்கக் கடலில் கலப்பதற்கு முன் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயனளிக்கிறேன்.

பொதுவாகவே எனது பயன்பாட்டை காவிரி பாசன மாவட்டங்களுக்கு அப்பால் பார்க்க பலருக்கும்  தெரியவில்லை. சோழநாடு சோறுடைத்து என்பது மிகவும் பொருத்தம் தான் என்றாலும் கூட, அதையும்  கடந்து ஒட்டுமொத்த தமிழகமும் எனது பயனாளிகள் என்பது தான் உண்மை.

எனது  மொத்த பயணத் தொலைவு 800 கிலோமீட்டர் ஆகும். கர்நாடகத்திலும் தமிழகத்திலும் நான் பயணம் செய்யும் மாவட்டங்களின் எண்ணிக்கை 14 தான் என்ற போதிலும், இரு மாநிலங்களிலும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளை நான் தான் நிறைவேற்றுகிறேன்.

தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் நான் தான். நம்புவதற்கே உங்களுக்கு கடினமாக இருக்கிறதா?  சென்னை மாநகரம், மதுரை மாநகரம், திருச்சி மாநகரம், தஞ்சாவூர் மாநகரம், வேலூர் மாநகரம், சேலம் மாநகரம், திருப்பூர் மாநகரம், ஈரோடு மாநகரம் உட்படத் தமிழகத்தின் பெரும்பாலான மாநகரங்கள் என்னைத் தான் குடிநீர் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும்  நான் தான் தண்ணீர் கொடுக்கிறேன். செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படும் தஞ்சாவூருக்கும், வறட்சியின் சின்னமாக பார்க்கப்படும் ராமநாதபுரத்திற்கும் என்னைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. இரு வகையான மாவட்டங்களின் பசி தீர்ப்பதிலும், தாகம் தணிப்பதிலும்  நான் அனைவருக்கும் பொதுவானவள் தான்.

இப்போது காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களைக் கடந்து விருதுநகர் மாவட்டம் வரை வளப்படுத்துவேன். அவற்றையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 30 லட்சம் ஏக்கர் நிலங்கள் என்னால் பாசன வசதி பெறும். தமிழ்நாட்டில் என்னால் வாழ்வாதாரம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் 25 லட்சம் ஆகும்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களே....

மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து சொல்லுங்கள். உங்களுக்கு இவ்வளவு நன்மை செய்த என்னை நீங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும். ஆனால், நீங்கள் எனக்கு அளித்தப் பரிசு என்ன?
கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் எல்லா மக்களுக்கும் நான் தான் குடிநீராகிறேன். ஆனால், அதற்காக அவர்கள் எனக்குத் தரும் வெகுமதி என்ன தெரியுமா?

தினமும் 150 கோடி கழிவு நீரை என் மீது கொட்டுவது தான்.

தமிழ்நாட்டிலும் என் நிலைமை மிகவும் பரிதாபமானது தான்.

மேட்டூரில் தொடங்கி ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நச்சுக்கழிவு நீர், சாயப்பட்டறைக் கழிவு நீர் உள்ளிட்ட அனைத்தையும் என் மீது திறந்து விடுகிறார்கள். புனித நீராடும் தலங்களில் ஒன்றாகத் திகழும் கும்பகோணத்தில் எனது நீரை   எடுத்து ஆய்வு செய்த போது, அதில் 52 வகை நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாக  தெரியவந்துள்ளது

ஒரு காலத்தில் எனது நீரில் குளித்தால் நோய்கள் தீரும் என்ற உன்னத நிலை இருந்தது; ஆனால், இப்போது எனது நீரில் குளித்தால் தோல் நோய்கள் முதல் தொற்றுநோய்கள் வரை அனைத்தும் பீடிக்கும் என்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் புனித நதியாக இருந்த நான் இப்போது புற்றுநோயைக் கூட ஏற்படுத்தும் கழிவுகளின் கலவையாக மாறிவிட்டது தான் சோகம். உங்களால் எனக்கு ஏற்பட்ட இந்த நிலையை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் கண்ணீர் என்னை விட பெரியதாக உள்ளது.

தாயை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவருக்காவது ஏற்படுமா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயாக கொண்டாடப்பட வேண்டிய என்னை கொலை செய்கிறார்கள். மணல் கொள்ளை செய்யும் மனிதர்கள் என்னை நான் செல்லும் வழிநெடுகிலும் 50 அடி, 60 அடி ஆழத்திற்கு குத்திக் குதறி எனது மணலைக் கொள்ளை அடித்துச் செல்கின்றனர். இது என்னால் ஏற்படும் நன்மைகளையும் கடந்து ஏராளமான தீமைகளை உங்களுக்குத் தருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல் நீர் ஊருக்குள் நுழைந்து நிலத்தடி நீரை உப்பாக மாற்றுதல் ஆகியவை இந்தத் தீமைகளில் சிலவாகும்.

அடுத்து தடுப்பணைகள்....

என்னை வீணாக கடலில் கலக்க விடாதீர்கள். 5 கி.மீ தொலைவுக்கு ஓர் தடுப்பணை அமைத்து  நிலத்தடி நீரை உயர்த்திக் கொள்ளுங்கள். கடல் நீர் நிலத்தடி நீர் மட்டத்தில் ஊடுருவுவதை தடுத்து நிறுத்துங்கள் என்பது தான் எனது வேண்டுகோள். இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அரசாங்கம் தான் இதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. காவிரி ஆற்றிலும், அதன் கிளை நதியான கொள்ளிடத்திலும் ஓரிரு கதவணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அரசு நினைத்தால் காவிரியிலும், கொள்ளிடத்திலும் 50&க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியிருக்கலாம். ஆனால்,  அரசாங்கமும் செய்யவில்லை.... நீங்களும் கேட்கவில்லை.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தான் மேட்டூர் அணை கட்டப்பட்டது. அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருக்காவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள். மழையாலும், கர்நாடக அணைகளில் இருந்தும் கிடைக்கும் தண்ணீர் நேரடியாக கடலுக்கு சென்று கலந்து விடும். அத்தகைய சூழலில் பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்காது... குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காது. அணைகளின் அருமையை உணர்ந்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் செய்யவில்லை.

உங்களுக்கெல்லாம் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கும் எதற்கும் மதிப்பு தெரியாது. அப்படித் தான் எனது மதிப்பும் உங்களுக்குத் தெரியவில்லை. வெள்ளம் வந்தால் எனது கரையில் நின்று செல்பி எடுப்பதைத் தவிர வேறு எதுவும் உங்களுக்குத் தெரியாது.

உண்மையில் நான் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. என்னைப் பாதுகாத்து எனது முட்டைகளை மட்டும் பயன்படுத்தும்போது உங்களுக்கு எல்லையில்லாத பயன் கிடைக்கும். ஆனால், அதிக லாபத்துக்கான என்னையே அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சி தடுக்கப்படாவிட்டால் இப்போது நான் விடும் கண்ணீரை எதிர்காலத்தில் நீங்களும் விட வேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டு மக்களே இது எச்சரிக்கை அல்ல.... அக்கறை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages