இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் -பாமக தலைவர் ஜி.கே.மணி
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக்கரினாள்,கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
எங்கெங்கு பார்க்கினும் கிராமங்கள்தோறும், நகரங்கள்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தெருக்களில் ஒலி பெருக்கிகள் ஒலிக்கும். நற்பணி மன்றம், நல சங்கம், நிறய மன்றங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். இரவில் இசை கச்சேரிகள், நாடகம் என்று ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடைபெறுவதும் உண்டு. கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். இலட்சக் கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள்.
இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படு மோசமாக காயப்படுத்தி விடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகை சூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள். இது தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.
இது தவிர "ரேக்ளா ரேஸ்" எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் கூட பல இடங்களில் நடைபெறும். இதற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.சில பகுதிகளில் சேவல் சண்டை (சேவல் கட்டு)நடைபெறும்.
அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment