பாட்டாளிகளிடமிருந்து வரும் மகிழ்ச்சி செய்தியே எனக்கு இனிப்புப் பொங்கல்! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல். - Agnipuratchi

பாட்டாளிகளிடமிருந்து வரும் மகிழ்ச்சி செய்தியே எனக்கு இனிப்புப் பொங்கல்! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல்.

Share This

பாட்டாளிகளிடமிருந்து வரும் மகிழ்ச்சி செய்தியே எனக்கு இனிப்புப் பொங்கல்! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல்.

பழையவற்றையும், பயனற்றவற்றையும் விட்டெறிந்து, பழந்துயரங்களை போக்கும் நாளான ‘போகி’ போய்விட்டது.

சாதிப்பதற்கான வழிகளைக் காட்டும் தை பிறந்து விட்டது. பொங்கல் திருநாள் நம்மை சம்பரமாய் கொஞ்சி சென்று விட்டது.

கொண்டாட்ட காலம் நிறைவடைந்து மீண்டும் கடமையே கண்ணாகும் காலம் வந்து விட்டது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கும்பணி கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கியது. இப்போது அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ஒரு சில மாவட்ட செயலாளர்களைத் தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு 40 நாட்கள் முதல் 71 நாட்கள் வரை நிறைவடைந்து விட்டன. மாவட்ட செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முதற்கட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு இந்த கால அவகாசம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி இராணுவ கட்டுப்பாடும், ஒழுங்கும் கொண்ட அமைப்பு மட்டுமல்ல. அதன் செயல்பாடுகளும் இராணுவத்துக்கு இணையானவை தான். அந்த இராணுவத்தை தேர்தல் என்னும் போர்க்களத்தில் வழி நடத்திச் செல்லும் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு   மாவட்ட செயலாளர்கள் தான் தளபதிகள். அனைத்து  தளபதிகளும் துடிப்புடன்  செயல்பட வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்களுக்கென ஓர் அலுவலகத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது மிகவும் அடிப்படை. உங்களை சந்தித்து கட்சிப் பணி குறித்து ஆலோசனை நடத்த வரும் பாட்டாளிகளாக இருந்தாலும்,  தங்களின் குறைகளைச் சொல்லி தீர்வு கோருவதற்கு வரும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்கள் உங்களைச் சந்திப்பதற்கு ஒரு முகவரி தேவை. அதற்காக  ஓர் அலுவலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் பரவாயில்லை.

அன்புமணி இராமதாசின் தளபதிகளான மாவட்ட செயலாளர்களுக்கு பெரும்பாலும் இரு தொகுதிகளைக் கொண்ட இராஜதானி (இராஜ்யம், செயல்பாட்டு எல்லை)தான் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இரு தொகுதிகளின் எல்லைகளையும், அவற்றில் உள்ள நகரங்கள், பேரூர்கள், ஊராட்சிகள் அடங்கிய வரைபடம் 6*4 அடி அளவில் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் அல்லது மாட்டப்பட வேண்டும் அத்தகைய வரைபடம் எப்போதும் உங்கள் மனக்கண்ணில் இருக்கும் என்றாலும் கூட  அலுவலகத்திற்கு வரும் மற்றவர்களின் புரிதலுக்காக அத்தகைய வரைபடத்தை தயாரித்து வைப்பீர்.

மாவட்ட செயலாளர்கள் தளபதிகள் என்றால் அவருக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் பிற நிர்வாகிகள் என பல துணைத் தளபதிகள் இருப்பார்கள். அவர்களின் பெயர்களையும் அந்த வரைபடத்தின் கீழ் அழகாக குறிப்பிடுவது விரும்பத்தக்கது ஆகும்.

தளபதிகளுக்கு நான் கொடுத்த முதல் பணி உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள், பேரூர்கள் அனைத்துக்கும் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வாருங்கள் என்பது தான். இந்தப் பணி வழங்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. அண்மையில் நியமிக்கப்பட்ட சிலர் தவிர மற்ற அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் குறைந்தது 40 நாட்களாவது அவகாசம் கிடைத்திருக்கும். இராணுவத்திற்கு இணையாக செயல்படும் பாட்டாளி  மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு இது மிகவும் கூடுதலான கால அவகாசம்.

அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களுக்கு சென்று வந்த மாவட்ட செயலாளர்கள், அதாவது மருத்துவர் அன்புமணி இராமதாசின் தளபதிகள் அது குறித்த விபரங்களையும், அனுபவங்களையும் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். உங்களிடமிருந்து கிடைக்கும் இத்தகைய மகிழ்ச்சியான செய்திகள் தான் எனது மனதுக்கு இனிப்பான பொங்கலாக அமையும். அனைவரும் இந்த விவரங்களை தெளிவாக  எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

இவற்றைக் கடந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளுதல் என்ற மிகப்பெரிய பணியும் மருத்துவர் அன்புமணி இராமதாசின் தளபதிகளுக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் விருப்ப மனுக்களை வாங்கி வைத்திருப்பீர்கள். இதுவரை விருப்ப மனுக்கள் பெறப்படாத பகுதிகளில் உடனடியாக அவை பெறப்பட வேண்டும். அவற்றை முறையாக ஆய்வு செய்து தகுதியானவர்களை முதற்கட்டமாக தேர்வு செய்து வையுங்கள்.  மேலிடக் குழுவினர் உங்களுடன் கலந்து பேசி வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது வலிமையை நிரூபிக்க வேண்டிய மாபெரும் கடமை உங்களுக்கு உண்டு.

அனைத்துப் பணிகளுக்கும் மதிப்பீடுகள் உண்டு. மருத்துவர் அன்புமணி இராமதாசின்  தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை அவர்கள் எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள்; மக்களின் மனதை எந்த அளவுக்கு ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்காக பிற இராஜதானிகளைச் சேர்ந்தவர்கள் மேலிடப் பார்வையாளர்களாக விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதற்குள்ளாக உங்களுக்கு நான் வழங்கும் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்யுங்கள்... என்னை மகிழச் செய்யுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages