பாட்டாளி தொண்டனைக் காப்பது தானே தலைவனின் கடமை! - காடுவெட்டி - ரவி DME அரியலூர் மாவட்ட செயலாளர் ஒன்றிய குழு தலைவர்- செயங்கொண்டம் - Agnipuratchi

பாட்டாளி தொண்டனைக் காப்பது தானே தலைவனின் கடமை! - காடுவெட்டி - ரவி DME அரியலூர் மாவட்ட செயலாளர் ஒன்றிய குழு தலைவர்- செயங்கொண்டம்

Share This

பாட்டாளி தொண்டனைக் காப்பது
தானே தலைவனின் கடமை! - காடுவெட்டி - ரவி DME
அரியலூர் மாவட்ட செயலாளர்
ஒன்றிய குழு தலைவர்- செயங்கொண்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தனிவீடு ரவி,’’எனது முதல் பிறவி இறைவன் தந்தது... இரண்டாம் பிறவி மருத்துவர் அய்யா அவர்களும்,மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் கொடுத்தது!” என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

தனிவீடு ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு  நலம் பெற்று தேறியிருப்பது வியப்பான உண்மை தான். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டது வரையிலான ஓராண்டில்  அவர் அனுபவித்த வேதனைகளும், வலிகளும் மிக அதிகம். மருத்துவர்கள் அவருக்கு சிறப்பான மருத்துவம் அளித்து தேற்றினார்கள்.

திருச்சியில் அவருக்கு மருத்துவம் அளித்த மருத்துவர் விவேக் சுந்தரம் எனக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்நாடு கதர்த்துறை அமைச்சர் காந்தி அவர்களின் மருமகன்.  தனிவீடு ரவி மருத்துவம் பெற்று வந்த போது ரவி , அவரது மனைவி, மருத்துவர் விவேக் சுந்தரம் ஆகியோரிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசுவேன்.

இதைக் கண்டு மருத்துவர் விவேக் சுந்தரம் வியந்து போனார்.  அவரே ஒருமுறை என்னிடம் தொலைபேசியில் பேசும் போது,’’ உங்களைப் பற்றி நான் எனது மனைவியிடம் பெருமையாக கூறியிருக்கிறேன் அய்யா.  எந்த ஒரு கட்சித் தலைவரும் அவரது தொண்டனைக் காப்பாற்றுவதற்காக இந்த அளவுக்கு சிரத்தை எடுக்க மாட்டார்கள். ஆனால், மருத்துவர் அய்யா அவர்கள் தினமும் மூன்று முறை என்னிடமும்,  மருத்துவம் பெறும் ரவியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் தொலைபேசி நலம் விசாரிப்பார். அவரைத் தலைவராக பெற்றது அவரது கட்சித் தொண்டர்கள் செய்த பாக்கியம் என்று எனது மனைவியிடம் கூட கூறினேன் அய்யா” என்று தெரிவித்தார்.

தனிவீடு ரவியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் நமது பாட்டாளி தொண்டனை காப்பது எனது கடமை. அந்தக் கடமையைத் தான் நான் செய்தேன்.

இதோ.... காடுவெட்டி தனிவீடு ரவியின் பதிவு:

எனது முதல் பிறவி இறைவன் தந்தது...
இரண்டாம் பிறவி மருத்துவர் அய்யா அவர்களும்,மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் கொடுத்தது!
---------------------------------------
கொரோனாவால் மிகவும் கொடுமையாக பாதிக்கப்பட்டவர்களில்  நானும் ஒருவன். கொரோனா எனது உயிரைக் கிட்டத்தட்ட பறித்து விட்ட நிலையில், அதை போராடி மீட்டு, எனக்கு மறுபிறவி  தந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.

2019&ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட நான், மருத்துவர் அய்யா, மருத்துவர் சின்ன அய்யா  ஆகியோரின் ஆசியுடனும், ஆதரவுடனும் ஜெயங்கொண்டம் ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

பதவியேற்ற சில மாதங்களில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவத் தொடங்கி விட்டது.  அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்ற முறையில் மேற்கொண்டேன். தீயனைப்புத் துறை வாகனங்களைக் கொண்டு ஜெயங்கொண்டம் ஒன்றியம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கச் செய்தேன். நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கொரோனா பரவல் மிகவும் குறைவாகவே இருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற நான், முதல் அலை முடியும் தருவாயில் கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டேன்.

அரியலூரில் உள்ள மருத்துவர் கொளஞ்சிநாதனிடம் மருத்துவம் பெற்ற நான், அதன் பின் சிதம்பரத்தில் உள்ள எனது மைத்துனர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டேன். சுமார் 10 நாட்கள் ஆன நிலையில்,  கொரோனாவின் தீவிரம் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எனக்கு மூச்சுத் தினறல் ஏற்பட்டது. சிகிச்சைப் பெறுவதற்காக அரியலூர் மருத்துவர் கொளஞ்சிநாதனை தொடர்பு கொண்டால், அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி சுந்தரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்குள்ள மருத்துவர் விவேக் சுந்தரம் அவர்களிடம் மருத்துவம் பெற்று வருவதாக தெரிவித்தார். எனது நிலை மோசமாக இருப்பதால் என்னையும் அதே மருத்துவமனையில் சேரும்படி பரிந்துரைத்தார்.

அதன்படி திருச்சி சுந்தரம் மருத்துவமனைக்கு 2020&ஆம் ஆண்டு செப்டம்பர் 28&ஆம் தேதி சென்றேன். என்னுடன் எனது ஓட்டுனரும், உதவியாளரும் தான் வந்தனர். மருத்துவமனைக்கு செல்வதற்குள் எனக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றவுடன் மயக்கம் ஏற்பட்டு சரிந்து விட்டேன்; சுய நினைவையும் இழந்து விட்டேன். திருச்சி சுந்தரம் மருத்துவ மனையில் படுக்கைகள் இல்லாததால் என்னை அங்கு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் எனது உதவியாளரும், ஓட்டுனரும் தவித்துக் கொண்டிருந்தனர்.

எனக்குத் தொடக்கத்தில் சிகிச்சை அளித்த அரியலூர் மருத்துவர் கொளஞ்சிநாதன் அன்று தான், திருச்சி சுந்தரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப இருந்தார். அவர் தான் என்னை சுந்தரம் மருத்துவமனையில் சேர்த்தார். நான் சுயநினைவு இழந்திருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டேன். அங்கு மருத்துவர் விவேக் சுந்தரம் தான் எனக்கு மருத்துவம் அளித்தார். எனது உடல்நிலை குறித்து எனது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் மட்டும் என்னுடன் இருக்க அனுமதிக்கப்பட்டார்.

எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விவேக் சுந்தரம் தமிழக கதர்த்துறை அமைச்சர் இராணிப்பேட்டை காந்தி அவர்களின் மருமகன் ஆவார். அவரது திருமணத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  சென்றிருக்கிறார் என்பதால் அவரை மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மருத்துவமனைக்கு வந்த எனது மனைவி, எனது உடல்நிலை குறித்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்களும், சின்ன அய்யா அவர்களும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அதன்பின்னர் மருத்துவமனையில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. விவேக் சுந்தரம் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் என்னை மிகச்சிறப்பாக கவனித்துக் கொண்டனர்.. எனக்கு நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததால் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. அப்போது எந்த  கட்டத்திலும் எனது ஆக்சிஜன் அளவு 70 என்ற அளவைத் தாண்டவில்லை. சில நேரங்களில் 58, 60 என்ற அளவுக்கு சரிந்தது. எனது நிலைமை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

அந்த நேரத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் தினமும் காலையிலும், இரவு 9 மணியளவிலும் எனது மனைவியை தொடர்பு கொண்டு எனது உடல் நலம் குறித்து விசாரிப்பார். சில நேரங்களில் மதிய நேரத்திலும் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிவார். அதன் பின் மருத்துவர்களை  தொடர்பு கொண்டு எனக்கு எவ்வளவு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது என்பது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டறிவார்கள். என்னை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள். மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் பலமுறை என்னிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்கள்.

மருத்துவர் அய்யா அவர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு எனது உடல்நிலையை விசாரிப்பதைக் கண்டு மருத்துவர்கள் வியந்து விட்டனர். எனது உடல்நிலை தேறிய பிறகு ஒருமுறை என்னிடம் வந்த மருத்துவர் விவேக் சுந்தரம்,‘‘நீங்கள் யார்? என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? ஏதேனும் பெரிய பதவியில் இருக்கிறீர்களா? மருத்துவர் அய்யா அவர்கள் ஒரு நாளைக்கு இத்தனை முறை என்னை தொடர்பு கொண்டு உங்களின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறாரே? எனக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லையே. ஒரு தலைவர் அவரது கட்சிக்காரரின் உடல்நிலை குறித்து இத்தனை முறையா விசாரிப்பார். நீங்கள் பாக்கியம் செய்திருக்கிறீர்கள்’’ என்று வியந்தார்.

அவரிடம் என்னைப் பற்றி விளக்கிய நான்,‘‘ நான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக  இருக்கிறேன். எங்கள் அய்யா சாதாரண தொண்டனாக இருந்தாலும் இப்படித் தான் பலமுறை தொலைபேசி உடல் நலம் விசாரிப்பார்’’ என்று கூறினேன். அதைக் கேட்டு அவர் இன்னும் வியந்து போனார்.

ஒரு கட்டத்தில் நான் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டேன். எனக்கு அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.   ஆக்சிஜன் அளவு போகப் போகத் தான் சரியாகும் என்று கூறி 40 நாள் சிகிச்சைக்குப் பிறகு என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த 40 நாட்களில் மருத்துவர் அய்யா அவர்கள் குறைந்தது 100 முறையாவது எனது உடல் நலத்தை விசாரித்திருப்பார்.

வீடு திரும்பியும் கூட ஆக்சிஜன் சிலிண்டருடன் தான் எனது காலம் கழிந்தது. அதனால் 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட என்னால் பாட்டாளி மக்கள் கட்சிக்காக பணியாற்ற முடியவில்லை. அந்த காலத்திலும் கூட மருத்துவர் அய்யா அவர்கள் தவறாமல் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார். மருத்துவர் அய்யா அவர்களின் தொலைபேசி அழைப்புகள் தான் எனக்கு நம்பிக்கையளித்து எனது உடல்நிலையை தேற்றின.

தேர்தலுக்குப் பிறகு ஒருமுறை எங்களின் குடும்ப நண்பரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  வீட்டுக்கு வந்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் கடலூர் தனியார் மருத்துவமனையிலும், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையிலும் சில காலம் சிகிச்சை பெற்றேன். நிறைவாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் ஆக்சிஜன் செலுத்தாமல் இயல்பாகவே சுவாசிக்கும் நிலைக்கு எனது உடல் நிலை முன்னேறியது.  2020 ஆண்டு செப்டம்பர் 28&ஆம் தேதி முதல் 2021&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  வரை சுமார் ஓராண்டு ஆக்சிஜன் உதவியுடன் தான் வாழ்ந்து வந்தேன்.

கொரோனாவுடனும், கொரோனாவுக்கு பிந்தைய பதிப்புகளாலும் நான் அவதிப்பட்ட காலம் முழுவதும் மருத்துவர் அய்யா அவர்கள் குறைந்தது 600, 700 முறையாவது தொலைபேசி மூலம் நலம் விசாரித்திருப்பார். மருத்துவர் சின்ன அய்யாவும் பலமுறை என்னிடம் நலம் விசாரித்தார்.

மருத்துவர் அய்யா அவர்கள் தான் பலமுறை மருத்துவர்களை தொடர்பு கொண்டு எனக்கு தரமான மருத்துவம் அளிக்கும்படி அறிவுறுத்தினார்கள். அவர் தான் என்னை பொத்திப்பொத்தி பார்த்துக் கொண்டார். கொரோனா பாதிப்பிலிருந்து நான் மீண்டு வந்தது மறுபிறவி தான். மருத்துவர் அய்யா அவர்கள் இல்லை என்றால் எனக்கு மறுபிறவி இல்லை. எனக்கு முதல் பிறவி தந்தது கடவுள் என்றால் இரண்டாவது பிறவி கொடுத்தது மருத்துவர் அய்யா அவர்கள் தான். அவருக்கு கடைசி வரை விசுவாசமாகவும், நல்ல தொண்டனாகவும் இருப்பது தான் எனது கடமையும், பெருமையும் ஆகும்.
---------------------
என்றும்,
``-சமூகநீதி போராளி,
#மருத்துவர்_அய்யா அவர்கள்..
``-இனமான இளவல்,
#மருத்துவர்_சின்னஅய்யா அவர்கள் நல்லாசியோடு அவர்களின் வழிகாட்டுதலில்,
------------------------------
காடுவெட்டி - ரவி DME
அரியலூர் மாவட்ட செயலாளர்
ஒன்றிய குழு தலைவர்-செயங்கொண்டம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages