அக்னிப்புரட்சி இன்றைய (21.07.2022) முக்கிய செய்திகள்.
* துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு.
ஆகஸ்ட் 22ம் தேதி வரை tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை.
ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை.
* அரசின் எச்சரிக்கையை மீறி விடுப்பு அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்.
18ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதிலாக ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கம் ஏற்பு.
* கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் - 4 பேர் பலி
கர்நாடக மாநிலம் உடுப்பி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் டோல்கேட்டில் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 4,630 ரூபாய்க்கு விற்பனை.
* இலங்கை புதிய அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே.
134 எம்.பி.க்களின் ஆதரவுடன் இலங்கை அதிபரானார் ரணில்.
புதிய அதிபருக்கு இலங்கை தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
* ஹெராயின் வழக்கு: தமிழகத்தின் 25 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள் பறிமுதல்
சென்னை: சென்னை, திருச்சி உட்பட 25 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் 57 செல்போன்கள், 2 பென்டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று காலை முதல் தமிழகத்தின் 3 முக்கிய மாவட்டங்களான சென்னை, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி, கேரள கடலோர பகுதியான விழிஞ்சம் என்ற பகுதியில், இலங்கை படகு ஒன்றை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். அதில், 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் இருப்பதை கண்டு, அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அப்படகில் பயணம் செய்த 6 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, கைப்பற்றப்பட்ட படகில் ஆயுதம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தினாலும், வெளிநாட்டு தொடர்புடைய கப்பலில் இருந்து இவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த மே மாதம் வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு விவகாரத்தில் ஏற்கெனவே சுரேஷ்- சௌந்தர்ராஜன் என்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் இலங்கை தமிழர் சற்குணம் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். இவர் விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஈரானில் இருந்து தான் இந்த போதை பொருட்களெல்லாம் தமிழகத்திற்கு, குறிப்பாக இந்தியாவிற்குள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாலும் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று காலை முதல் 25 இடங்களில் சோதனை நடத்தினர். அதனடிப்படையில், சென்னையில் 10 இடங்களிலும், திருச்சியில் 10 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும், மற்றும் சில இடங்களிலும் என மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின் முடிவில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ்கள், 1 ஹார்ட் டிஸ்க், 2 லேப்டாப் மற்றும் 8 வைஃபை மோடம்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும், ரொக்க பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், இலங்கை பாஸ்போர்ட், சில தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஆவணங்கள் மூலம் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு நிதி திரட்ட இவர்கள் உதவியுள்ளனரா? எந்தெந்த அடிப்படையில் இவர்கள் உதவியுள்ளனர்? என்பது கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் ஆவணங்களை ஆய்வு செய்த பின்பே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்....
* எடப்பாடியின் முக்கிய பினாமியான கான்ட்ராக்டர் வீட்டில் ஐ.டி. ரெய்டு: 30 இடங்களில் நடந்த சோதனையில் பல நூறு கோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கின
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் கான்ட்ராக்ட் எடுத்து வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள், சரவணப் பெருமாள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சன் என்ற அரசு ஒப்பந்த நிறுவனத்தை தொடங்கினர். ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுனின் நட்பு கிடைத்தது.
அதன்பின்னர் இவர்கள் மளமளவென பெரிய, பெரிய ரோடு கான்ட்ராக்ட் பணிகளை எடுத்து நடத்த தொடங்கினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன் ஏராளமான பணிகள் இவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் நண்பர் செய்யாத்துரையை விட அதிகமான கான்ட்ராக்ட் இவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது.
அதில் தஞ்சாவூர், பழனி, திண்டுக்கல் ஆகிய நெடுஞ்சாலை மண்டலங்களின் பராமரிப்பு மற்றும் ரோடு கான்ட்ராக்ட் பணிகள் முழுமையாக ஒதுக்கப்பட்டது. இந்த 3 மண்டலங்களில் இருந்து மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. அதை தவிர செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரையிலான ரூ.448.645 கோடிக்கு சாலை அமைக்கும் பணியையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இதை தவிர திருப்போரூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பழைய மாமல்லபுரம் சாலை பணிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோடு பணிகள், சேலம் மற்றும் கோவையில் உள்ள அனைத்து மேம்பாலம் மற்றும் பால பணிகள் இந்த ஆர்.ஆர். இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி முதல்வரான பிறகுதான் பல ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக மட்டுமல்லாமல் மனச்சாட்சியான நிறுவனமாகவும் இது செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், தஞ்சை, சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை ஆகிய இடங்களிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை தவிர நத்தம், துவரங்குறிச்சி பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, மதுரையில் அண்ணாநகர், அவனியாபுரம், சிலைமான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெவ்வேறு நிறுவனங்கள் பெயர்களில் தனி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த குடியிருப்பு வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்கியது, வீடுகள் விற்பனையில் பல்வேறு வரி ஏய்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் அரசு கான்ட்ராக்ட் எடுத்த விவகாரத்திலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் எழுந்தன.
இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். அதில் மதுரை விசாலாட்சிபுரம், கலைநகர், கே.கே.நகர், கூடல்நகர், கோச்சடை ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. இதில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு ஒப்பந்தப்பணிகள் எடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அதிகளவிற்கான சொத்துகள் மற்றும் ரொக்க பணப்பரிமாற்றம் நடந்துள்ளது குறித்தும் ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தெரிகிறது.
அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி பகுதியில் தற்காலிக அலுவலகம் அமைத்து நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி செல்லும் நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில்தான் வாகனங்கள், ஜேசிபி இயந்திரங்கள் போன்றவைகளும் நிறுத்தப்பட்டு, இங்குள்ள குடோனில் இருந்து மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது. அதற்கான அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை சுமார் 8 மணியளவில் 3 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்தது.
அலுவலகத்தில் உள்ள நபர்கள் யாரையும் வெளியே விடாமலும், அவர்களின் செல்போன்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டும் சோதனைகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம் அருகே சின்னகரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நேற்று வருமான வரித்துறையின் சோதனை நடந்தது. மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 8 மணி துவங்கி நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் அடுத்த வடபட்டினத்தில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக ஒரு சொகுசு பங்களா உள்ளது. இங்கு வருமான வரித்துறையினர் 5 பேர் கொண்ட குழு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக அந்த பண்ணை வீட்டிலிருந்த ஒரு நபரை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த பண்ணை வீடு அமைந்துள்ள பகுதி கிழக்கு கடற்கரை சாலைக்கும், கடற்கரைக்கும் நடுவே அடர்ந்த மரங்களுக்கு நடுவே மறைவான பகுதியிலும், ஏற்கனவே கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ‘‘கோல்டன் பே” ஓட்டலுக்கு சற்று தூரத்தில் பின்புறத்திலும் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் மட்டும் விலை உயர்ந்த கார்களில் சிலர் வந்து தங்கி அதிகாலை சென்று விடுவார்கள் என அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த வீடுகளில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. ஏராளமான ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் செய்த செலவு குறித்த ஆவணங்கள் அடங்கிய டைரியும் சிக்கியதாக கூறப்படுகிறது.
2021 தேர்தல் செலவை கவனித்த நிறுவனம் சேலம், கோவையின் பாலப்பணிகள் முழுமையாக ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளதால், 2021ம் ஆண்டு தேர்தல் செலவு முழுமையாக இந்த நிறுவனமே செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சேலத்தில் அலுவலகம் அமைத்து பணிகளை செய்துள்ளனர். இவர்கள்தான் தமிழகம் முழுவதும் பணத்தை கொண்டு சென்று விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் கான்ட்ராக்டருமான செய்யாத்துரை வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. தற்போது முருகப்பெருமாள் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* உதயகுமார் நண்பர் வீட்டில் ரூ.27 கோடி சிக்கியது மதுரையை அடுத்த அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்சாமி மகன்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணக்குமார், செந்தில்குமார். இவர்கள் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிரீன்சிட்டி ஆகிய 4 கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இந்நிறுவனங்கள் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்றும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் 50க்கும் மேற்பட்ட புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தன.
இதனையடுத்து, இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அவனியாபுரம், வில்லாபுரம், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.27 கோடி பணம் சிக்கி உள்ளது. முக்கிய ஆவணங்களும் கிடைத்தன. இந்த நிறுவனம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான நிறுவனம் என்று கூறப்படுகிறது....
* வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்: பள்ளிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வீடு, அலுவலகத்தில் நேற்று பொதுப்பணி, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளதா என்பது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்எல்ஏவுமான பி.தங்கமணியின் வீடு உள்ளது. அவர் 2016 முதல் 2021 வரை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தங்கமணி(60), அவரது மனைவி டி.சாந்தி (56), மகன் டி.தரணிதரன் (32) ஆகியோர் மீது கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
2021 டிசம்பர் 15-ம் தேதி தங்கமணியின் வீடு உட்பட 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளதா என்றும், அவற்றின் மதிப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள நேற்று கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டுக்கு பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது தங்கமணி வீட்டில் இருந்தார்.
அவரது வீடு, பள்ளிபாளையத்தில் உள்ள ஜவுளி அலுவலகம், சாயப்பட்டறை உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். காலையில் தொடங்கிய ஆய்வு, மாலை 4 மணிக்கு முடி வடைந்தது.
இதுகுறித்து தங்கமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்ததன் அடிப்படையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தை அளவீடு செய்யவும், மதிப்பீடு செய்யவும் பொதுப்பணி, லஞ்ச ஒழிப்பு மற்றும் வருவாய்த் துறையினர் வந்தனர்.
எனது தொழிற்சாலை, நான் பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
அதிமுக தலைமை அலுவலகத்தை திறக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கேட்கிறீர்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். ஓபிஸ் தரப்பு நீதிமன்றம் உட்பட எங்கு சென்றாலும், நியாயம்தான் ஜெயிக்கும். மின் கட்டண உயர்வு குறித்து, பிறகு விரிவான தகவல் தருகிறேன்”
* இந்திய எல்லை அருகே நீண்ட தூரத்துக்கு சாலை: சீனாவின் புதிய திட்டத்தால் பதற்றம்
புதுடெல்லி: இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் சர்ச்சைக்குரிய அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலை தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவமும் வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்து போருக்கு தயார்நிலையில் இருக்கின்றன. இதன் காரணமாக, பதற்றம் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு ராணுவ மட்டத்தில் இதுவரையில் 16 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சீன ராணுவம் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இந்திய எல்லைக்கு அருகில் உள்ள சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பான்காங் ஏரி பகுதியில் 2 பெரிய பாலங்களை அது அமைத்து வருகிறது.
இந்நிலையில், சிக்கிம், அருணாச்சல மாநிலங்களின் எல்லையை ஓட்டிய அசல் கட்டுப்பாட்டு எல்லைக்கு மிக அருகில் புதியதாக நீண்ட தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை சீனா அமல்படுத்த உள்ளது. சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திபெத்தில் உள்ள லுன்சே மாவட்டத்தில் இருந்து கஷ்கரில் உள்ள மஸா என்ற இடம் வரையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. அருணாச்சல மாநிலத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்த மாநிலத்தை ஒட்டியுள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இந்த சாலையை அமைக்க உள்ளது. சிக்கம் மாநிலம், நேபாளம், ஆகியவை வழியாகவும் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த புதிய திட்டத்தால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது....
* கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய மாணவியின் தந்தை மனு தள்ளுபடி!
"நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும்" - மாணவியின் தந்தைக்கு நீதிபதிகள் கேள்வி!
* ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.
500 கிராம் ஆவின் தயிர் ரூ.35க்கு விற்பனை; 500 கிராம் ஆவின் நெய் ரூ.290க்கு விற்பனை
5% ஜிஎஸ்டி உயர்வால் ஏற்பட்ட இந்த விலை உயர்வு இன்று முதல் அமல் என அறிவிப்பு.
* சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை அகற்றினார்.
அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி வழங்கப்பட்டது.
10 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு -100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
* அதிமுக தலைமைக் கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு.
ஜூலை 11ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை.
கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயம் என தகவல்.
காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை என தகவல்.
* நாம் வாங்கும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உண்டா? இல்லையா?
Watch:
https://youtu.be/mtcfA1_Bcy8
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
* நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸ் கைது செய்தனர்.
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்.
* கருமுட்டை - மருத்துவமனை சீலை அகற்ற உத்தரவு.
கரு முட்டை விற்பனை விவகாரத்தில், ஈரோடு சுதா தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு.
புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசு உத்தரவையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு.
நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியிலும் கனமழைக்கு வாய்ப்பு.
* டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய புதிய வசதி!
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்துள்ளது.
கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தேர்வாணையம், அவ்வாறு விவரங்களை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்துள்ளது.
அதன்படி தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் (Application Correction Window Period) வழங்கப்படும்.
இந்த மூன்று நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தகவல்களை தவறாகப் பதிவு செய்திருந்தால், அதனை மாற்றி சரியான தகவல்களை சமர்ப்பிக்கலாம், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்களை, விண்ணப்பம் திருத்தம் செய்யும் காலத்தில் மாற்றும் போது அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார் விண்ணப்பம் நேர்செய்யும் (Application Correction Window Period) காலத்திற்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்ற முடியாது.
விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்ப நேர் செய்யும் / திருத்தம் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....
* மறுபிறவி எடுக்கும் RX100 பைக்? - யமஹாவின் பலே திட்டம்
புது டெல்லி: யமஹா RX100 பைக் இந்திய சாலைகளில் மீண்டும் றெக்கை கட்டி பறக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது அந்த பைக் பிரியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இதற்கு எப்படியும் நான்கு ஆண்டு காலம் எடுக்கும் எனத் தெரிகிறது.
யமஹா மோட்டார் இந்தியா தலைவர் இஷின் சிஹானா இந்தத் திட்டத்தை ‘பிசினஸ் லைன்’ பேட்டியில் உறுதி செய்துள்ளார். ஆனால், இதனை சந்தையில் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1985 முதல் 1996 வரையில் 2 ஸ்ட்ரோக் எஞ்சினை கொண்ட RX100 மோட்டார் சைக்கிளை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. 1990 முதல் இந்தியாவிலேயே இந்த பைக்கை தயாரிக்க தொடங்கியது யமஹா. அதற்கு முன்னர் ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. அதன்பின்னர் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட R சீரிஸ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்தியது யமஹா.
இருப்பினும் RX100 பைக் மீது மக்கள் கொண்டிருக்கும் மோகம் இதுவரையில் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு காரணம் அதன் பிரத்யேக சத்தம். இந்திய சாலைகளில் இப்போதும் சீறிப்பாயும் RX100 பைக்கிற்கு தனி ரசிகர் கூட்டம் இருப்பதுண்டு. அதன் சத்தத்தை கேட்டதும் அந்த பைக்கின் பக்கம் பெரும்பாலான கண்கள் ஒரு நொடி திரும்பி பார்க்கும். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரிடத்திலும் இதற்கு தனி மவுசு உண்டு.
அவ்வப்போது இந்த பைக் எப்போது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதன் பிரியர்கள் மத்தியில் எகிறுவது உண்டு. இப்போது அவர்களது நெஞ்சத்தை குளிர செய்யும் வகையில் அமைந்துள்ளது யமஹா நிறுவனத்தின் திட்டம்.
கிளாசிக் ரக வாகனங்கள் மீண்டும் புதிய வடிவில் கம்பேக் கொடுத்து வருகின்றன. அதற்கு சிறந்தவொரு உதாரணம் ஜாவா, பஜாஜ் சட்டாக் போன்ற வாகனங்கள். அந்த வகையில் வெகு விரைவில் யமஹா RX100 இணையும் என தெரிகிறது.
இருந்தாலும் அதன் ஒலி, செயல்திறன் போன்றவை இந்த புதிய வடிவத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இப்போது இந்தியாவில் அமலில் உள்ள BSES தரநிலை காரணமாக புதிய RX100 மாடலில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக அதன் எஞ்சின் நிச்சயம் மாற்றப்படும் என தெரிகிறது. வரும் 2026 வாக்கில் RX100 மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது எலெக்ட்ரிக் வடிவிலா அல்லது பெட்ரோல் போன்ற எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
* ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருத வேண்டாம்: இபிஎஸ் கடிதம்
கட்சியில் இருந்து நீக்கியதால் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருத கூடாது: இபிஎஸ்
லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம்
*கள்ளக்குறிச்சி மாணவி இறந்த தனியார் பள்ளியில் விடுதி நடத்த அனுமதி வாங்கவில்லை.
அனுமதி பெறாமலே 24 மாணவர்களை தங்க வைத்திருந்ததாக தகவல். முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்.
கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு பிறகு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேட்டி.
* கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள கோரி காவல்துறையின் முறையீட்டு வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் - உயர் நீதிமன்றம்.
எங்களது மனுவை தள்ளுபடி செய்யவில்லை, உயர் நீதிமன்றத்தை நாட சொல்லி அறிவுறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம் - மாணவியின் தந்தை தரப்பு வாதம்.
மாணவியின் தந்தை தரப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்று விட்டனர். எனவே உடலை பெற்று கொள்ள சொல்லுங்கள் - காவல்துறை தரப்பு வாதம்.
நாளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாக்கல் செய்யுங்கள். காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் - உயர்நீதிமன்றம்.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்ய மாட்டோம் - உயர்நீதிமன்றம்.
* நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என காவிரி மேலாண்மை ஆணையம் தகவல்.
மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், ஆணையம் தரப்பு தகவல்.
* குடியரசுத் தலைவர் தேர்தலில் 15 எம்பிக்கள் ஓட்டு செல்லாத ஓட்டானது!
DraupadiMurmu secures 540 votes with a value of 3,78,000 &
YashwantSinha secures 208 votes with value of 1,45,600. 15 votes were invalid.
* அருணாச்சல் பிரதேச மாநில சகோதரிகள், தமிழில் பாடி அசத்தல்
Watch: https://youtu.be/wlzJ6TCugqQ
"பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற மகாகவி பாரதியின் தேசப்பக்தி பாடலை பாடி அசத்தல்!
* மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கிறார் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்கத்தை, காமராஜர் மக்கள் இயக்கமாக பெயரை மாற்றினார் தமிழருவி மணியன்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர வைப்பதற்காக, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக தமிழருவி மணியன் விளக்கம்.
* நாடு முழுவதும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு:
உச்ச நீதிமன்றம் - 72,062 வழக்குகள்.
உயர் நீதிமன்றங்களில் - 59, 45,709 வழக்குகள்.
மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் - 4,19,79,353 வழக்குகள்.
ராஜ்யசபாவில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ தகவல்.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று - வெள்ளை மாளிகை
* இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரெளபதி முர்மு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்பு மிகுந்த அரசியலமைப்பின் பாற்பட்ட மக்களாட்சியை உறுதி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம் - மு.க.ஸ்டாலின்.
* இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தோல்வி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரெளபதி முர்மு ஒட்டுமொத்தமாக 6,76,803 வாக்குகளை பெற்று வெற்றி.
அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த சின்ஹா 3,80,177 வாக்குகளை பெற்று படுதோல்வி.
* இந்திய குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகள்
1. இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
2. ஒரு காலத்தில் வாழ்வுரிமை இல்லாமல் ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகத்தின் பிரதிநிதி, இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை. இதுதான் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை.
* இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வாக உள்ள திரௌபதி முர்முவுக்கு தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்து.
* 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12-ம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும்.
No comments:
Post a Comment