தியாகத்தைப் போற்றும் திருநாளான பக்ரித் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இக்கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10-ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.
பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.
பக்ரித் திருநாளை கொண்டாடுவது இஸ்லாமியர்களாக இருக்கலாம்; ஆனால், பக்ரித் திருநாள் சொல்லும் செய்தி அனைவருக்குமானது தான். பக்ரித் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான்.
இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment