ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் International Trade Settlements in INR - இந்திய ரூபாயில் சர்வதேச வணிகம் குறித்த ஒரு சிறு.. அல்ல அல்ல ஒரு குறுங்கட்டுரை..
Thanks to Sridharan Srinivasan
டிஸ்க்ளைமர்: இது ஒரு விமர்சனக் கட்டுரை அல்ல; விளக்கவுரை மட்டுமே.. இதைப் படிக்கக் கூடிய பல சாதரண மனிதர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டதால்... பல பொருளாதார நிபுணர்களுக்கும், வங்கித்துறையில் பணியாற்றியவர்களுக்கும் முழுமையாக பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்று தோன்றலாம். மன்னிக்கவும், நீளம் கருதி சுருக்கப்பட்டுள்ளது..
முதலில் நாம் அறிய வேண்டியது.. ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த 'Invoicing in INR என்பது புதிய அல்லது புரட்சிகரமான திட்டம் என்று சொல்ல முடியாது. காரணம் ஏற்கனவே ஒன்றுபட்ட ரஷ்யா யூஎஸ்எஸ்ஆர் ஆக இருந்த பொழுது .... அமெரிக்க சோவியத் ரஷ்யா பனிப்போர் காலத்தில் யூஎஸ்எஸ்ஆருடன் நாம் ஏற்படுத்திக்கொண்ட 'ருப்பி-ரூபிள்' எக்ஸ்சேஞ் திட்டத்தின் நீட்டிப்பே இந்த புதிய நடைமுறை...
இதன் சாதகங்களைப் பார்ப்போம்...
1) இன்டர்நேஷனல் டிரேடு என்றால், ஏற்றுமதி, இறக்குமதி என்று வைத்துக் கொள்ளுங்கள்.. உதாரணமாக திருப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு கார்மென்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்பவர் அதற்கு 'டாலரில்' பணத்தைக் கொடுத்தால், திருப்பூர் ஏற்றுமதியாளர் அதை தமது வங்கியில் செலுத்தி / அல்லது தமது வங்கி மூலமாக டாலரைப் பெற்று.... அதை இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ளுவார்... இதுவே அவருக்கு அமெரிக்காவிலிருந்து சில இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தால், இயந்திரங்களுக்கான இந்தியப் பணத்தை தனது வங்கியில் டாலர்களாக மாற்றி அமெரிக்கன் மெஷின் சப்ளையருக்கு அனுப்புவார்.. ப்பூ, இதெல்லாம் எங்களுக்கு தெரிந்தது தானே என்கிறீர்களா? பிரச்சினை எங்கு எப்படி வருகிறது என்பதை அறிய மேலே தொடரவும்...
2) நீங்கள் ஏற்றுமதியாளர் என்றால், வங்கிகள் உங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட டாலர்களை என்ன செய்வார்கள்? அவற்றை அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கி, உதாரணமாக 'சிட்டி பாங்க்'ல் துவங்கியிருக்கும் தமது கணக்கில் டிபாசிட் செய்திருப்பர்... நாளை, வேறு ஒரு இறக்குமதியாளருக்கு தேவைப்படும் டாலரை இந்த கணக்கிலிருந்து எடுத்துக் கொடுப்பார்கள்... இந்த கணக்குகளை, அதாவது நமது இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகளை NOSTRO (our account with you) என்பது வழக்கம்... இதே போல் வெளிநாட்டு வங்கிகள் நமது நாட்டு வங்கிகளில் (அதாவது சிட்டி பாங்க் ஆனது பாரத ஸ்டேட் வங்கியில்) வைத்திருக்கும் கணக்குகளை VOSTRO (your account with us) என்பார்கள்.. இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால், புதிதாக ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இந்த VOSTRO என்ற பெயர் இடம் பெற்றிருக்கும்... இந்த நோஸ்ட்ரோ, வோஸ்ட்ரோ என்பன ஒரு payment settlement mechanism க்கு உபயோகப்படக் கூடிய வங்கிக் கணக்குகள்... இதுவரையிலும் குழப்பம் இருக்காது உங்களுக்கு என நினைக்கிறேன்...
3) எந்த கரன்சியும் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது.. Its like a hot potato. உடனடியாக கை மாற்றி விட வேண்டும் அல்லது உரிய முறையில் hedging அதாவது அந்த கரன்சி மதிப்பிழக்காதவாறு பாதுகாக்க வேண்டும்.. இதைத்தான் வங்கிகள் swap deals என்பார்கள்...
4) முன்பு விடுபட்ட ஒரு விஷயத்தை தற்போது சொல்கிறேன்.. நான் முன்பு சொன்ன உதாரணம், அமெரிக்க டாலருக்கு மட்டுமே. இந்த டாலரை இந்தியப் பணமாக மாற்றுவதற்காக 'எக்ஸ்சேஞ்ச் ரேட்' என்பதைக் கொண்டு மதிப்பிடுவர்... ஆனால் நமது நாட்டு ஏற்றுமதி/இறக்குமதியாளர்கள் பிரிட்டனுக்கு பவுண்ட் ஸ்டெர்லிங் லும், ஜப்பானுக்கு யென் னிலும், ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவிலும் வியாபாரம் செய்யக்கூடும்... இதற்கான 'எக்ஸ்சேஞ்ச் ரேட்' எப்படி தீர்மானிப்பது? உதாரணமாக நீங்கள் ஏற்றுமதியாளர் என்றால், நீங்கள் கொடுக்கும் யூரோ/பவுண்ட் ஸ்டெர்லிங் ஐ முதலில் அமெரிக்க டாலர்களாக மாற்றி பின்னர் அவற்றை இந்திய ரூபாய்களாக மாற்றி தருவார்கள்.. இங்கு இரண்டு முறை எக்ஸ்சேஞ்ச் ரேட் வருவதால் இதை 'கிராஸ் கரன்சி ரேட்' (Cross Currency Rate) என்பார்கள்... நீங்கள் இறக்குமதியாளர் என்றால் உங்களுக்கு தேவையான யூரோ/பவுண்ட் ஸ்டெர்லிங் இதே போன்று முதலில் இந்திய பணம் டாலராக மாற்றப்பட்டு பின்னர் அந்த டாலரைக் கொண்டு யூரோ போன்றவை வாங்கப்படும்... கொஞ்சம் தலை சுற்றுகிறதா? பொறுங்கள் இன்னும் இருக்கு...
5) பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுமதியாளர்களாக இருந்து இறக்குமதியாளர்கள் குறைவாக இருந்தால், அவர்களிடம் அதிக அளவில் சேரும் டாலரை தக்கபடி பந்தோபஸ்து அதாவது swap deals மூலம் செய்ய வேண்டும்...
இதே போல் உதாரணமாக கனரா வங்கியில் அதன் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் இறக்குமதியாளராகவும் குறைந்த அளவில் ஏற்றுமதியாளராகவும் இருந்தால், டாலருக்கு தட்டுப்பாடு ஏற்படும். அவற்றை அவர்கள் வெளிச்சந்தையில் swap deals மூலம் வாங்குவார்கள்... இந்த swap deal என்பதில் spot, forward, carry என பல சிக்கல்கள் அதிகம் உள்ள டிரான்ஸ்சேக்ஷன்கள் நடைபெறும்... இதைச் செய்யாவிடில் இந்த அன்னிய செலாவணிகளின் ஏற்ற இறக்கத்தால் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்...
6) சரி, மேற்குறிப்பிட்ட இந்த deal கள் எப்படி வங்கி வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்? நீங்கள் தங்க நகைகளை வாங்கி விற்றிருப்பீர்கள். அப்போது கடைக்காரர் செய்கூலி, சேதாரம் என வாங்குவார் இல்லையா? அதே போன்றதுதான் வங்கிகளின் இந்த கிராஸ் கரன்சி எக்ஸ்சேஞ்ச் மூலம் வாடிக்கையாளர் கொடுக்க வேண்டிய சேதாரம் (swap cost), செய்கூலி (transaction cost) ... தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்திய ரூபாயில் சர்வதேச வணிகம் என்பது முழுமையாக நடைபெற்றால், நமது வங்கிகள் இந்த அன்னிய செலாவணியை கையாளுவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, வாடிக்கையாளர்களும் பயன் பெறுவர்..
7) உதாரணமாக திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர் ஒரு கார்மெண்ட் தயாரிப்பதற்கு சுமார் 140 ரூ செலவாகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். அதை அவர் வெளிநாட்டவருக்கு இரண்டு அமெரிக்க டாலர் (ஒரு டாலர் 80 ரூ என்ற எக்ஸ்சேஞ்ச் விதத்தில்) விலை வைத்தால் 160 ரூபாய் கிடைக்கும். 20 ரூபாய் இலாபம். ஆனால் இதுவே டாலர் விலை சரிந்து 60 ரூ என்று வந்து விட்டால் நஷ்டம். டாலர் விலை ஏறினால் இலாபம்... இறக்குமதி செய்வோருக்கு இது அப்படியே தலைகீழ்.. இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களைக் கொண்டு தொழில் நடத்த முனைவோர் ஒருவருக்கு திடீரென டாலர் மதிப்பு உயர்ந்தால் அவருடைய முதலீட்டு செலவு அதிகரிக்கும்... மேலும் மற்ற கரன்சிகளின் மதிப்பீடும் அமெரிக்க டாலரைச் சார்ந்தே கணக்கிடப்படுவதால், டாலரின் ஏற்ற இறக்கம் மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பையும் பாதிக்கிறது.. இதனால்தான் இந்த 'இந்திய ரூபாயில் சர்வதேச வணிகம்' எனப்படும் Invoicing in INR முக்கியத்துவம் பெறுகிறது...
8) இதையும் தவிர நமது நாட்டுப் பொருளாதாரத்திலும் இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும்.. அதாவது நமது நாடு வெளிநாடுகளோடு நடத்தும் வணிகத்தின் மூலம் சந்திக்கக் கூடிய Balance of Payment என்ற விஷயம். இவற்றை ஏதாவது ஒரு பொருளாதார அறிஞரிடம் விவரம் கேட்டுப் பெறவும்... தவிர 'அமெரிக்கன் டாலர்' என்பது நமது intervention currency ஆக இருப்பதால், அந்த ஒரே கரன்சி மீதான அதிகப்படியான சார்பு நிலை Over dependence on Dollar என்பதும் நமது பொருளாதாரத்திற்கு ஆபத்து... இந்த ஒரு விஷயத்தையும் Invoicing in INR சமனப்படுத்தும்...
9) ஆக, ரூபாயில் வணிகம் - invoicing in Indian Rupee வங்கிகளின் பணிச்சுமை / செலவினங்கள் குறையும், இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை... நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை...
10) கடைசியாக, இவ்வளவு நன்மைகள் இருந்தும் இவை நடக்குமா என்றால், அது கேள்விக்குறியே... காரணம்... நமது ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தவரை வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் போல வெளிநாட்டுக்காரன் கரன்சி குறிப்பாக அமெரிக்கன் டாலர் என்பது ஸ்டிராங்கானது.. எனவே எக்ஸ்போர்ட் ஆர்டரை கன்ஃபர்ம் செய்யும் பொழுது தற்போதைய எக்ஸ்சேஞ்ச் ரேட் ஆன டாலருக்கு 80 ரூபாய் என கணக்கிட்டு இலாபத்தை உறுதி செய்த பின்.... உற்பத்தியைத் துவங்கி இரண்டு/மூன்று மாதம் கழித்து ஏற்றுமதி செய்து டாலரைப் பெறும்போது அப்போது டாலர் 80/85 என்று ஏறினால் கிடைக்கும் அதிக இலாபத்தில் ஒரு நப்பாசை... வெளிநாட்டில் உள்ள இறக்குமதியாளரும் டாலரில் பணம் பெறுவதைத்தான் விரும்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு கார்மெண்ட் இரண்டு டாலர் அதாவது ரூ 160 தருவதற்கு ஒப்புக்கொண்ட பின் ஒருவேளை ரூபாயின் மதிப்பு 70 ஆக உயர்ந்தால், அட டா, இருபது ரூபாய் அதிகம் கொடுத்து பொருளை வாங்குகிறோமே என்று நினைக்கக் கூடும்... இதே போன்றதுதான் நமது இறக்குமதியிலும்... நாம் இந்திய ரூபாய் கொடுக்கிறோம் என்றாலும் அவன் டாலரில் கொடு என்பான்... எனவே இது ஒரு mind game...
All said, invoicing in INR is a game changer, provided our own people (Exporters & Importers) are able to understand, appreciate and practise. As the adage goes, you can only take a horse to the pond; but its up to the horse to drink. நம்ம குதிரைகள் கொள்ளு என்றால் வாயைத் திறக்கும்; கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும்!
No comments:
Post a Comment