அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2022) முக்கிய செய்திகள்.

* திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.

‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்னும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெறும் மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார்.

* உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், சாப்லினோ ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் நேற்று கொண்டாடியது.

இதையொட்டி பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி சக்திவாய்ந்ததாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

* ட்விட்டர் இந்தியா நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற நிலைக்குழு நாளை ஆலோசனை நடத்த உள்ளது.

ட்விட்டர் பயனபாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

* என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு எழுபதாவது வயது இன்று.

நண்பர் விஜயகாந்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உடல் நலம் பெற்று  துடிப்பான மனிதராக விஜயகாந்த் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* இறந்துபோன 95 வயது மூதாட்டி உடலோடு சிரித்த முகத்துடன் உறவினர்கள் எடுத்த புகைப்படம்

பெரும் சர்ச்சை ஏற்படுத்திய புகைப்படத்திற்கு மகன் கொடுத்த விளக்கம்

கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம். அந்த குடும்பத்தின் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார்.

இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள்.

ஆனால் 4 தலைமுறைகளைச் சேர்ந்த அவர்களில் பலர், மூதாட்டியின் இறுதிமூச்சின்போது அருகில் இருக்க வந்துவிட்டார்கள். மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்

அந்த படம் சமூக வலைதளத்தில் பரவியதும்தான் சர்ச்சை பற்றிக்கொண்டது. மூதாட்டியின் மூத்த மகனான அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ (68), 'மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம்.

பின்னர், அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம். அப்போது எடுத்த ஒரு படம்தான் இது.

10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம்' என்கிறார்...

* கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் அறிவிப்பு

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

வரும் 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு (SSLC). பன்னிரண்டாம் வகுப்பு (HSC), ஐடிஐ (ITI). டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree). பி.இ(B.E) படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது.

* காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக தகவல்.

1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

* பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான தொழில்நுட்ப குழு அறிக்கையில் குறிப்பு.

இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டும் வர நிபுணர் குழு தாக்கல் செய்த 3 பக்க அறிக்கையில் பரிந்துரை.

சட்ட விரோதமான உளவு நடவடிக்கைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வழிமுறைகளை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட 29 செல்போன்களில் 5 செல்போன்களில் உளவு பார்த்ததற்கான செயலி இருந்ததாகவும், ஆனால் அது பெகாசஸ் மென்பொருள் இல்லை எனவும் தகவல்.

* ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை.

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை.

தேர்தல் ஆணைய பரிந்துரை மூலம் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர்  பதவி பறிக்கப்படுகிறது.

* லஞ்சம் வாங்கிய விஏஓ கைது:
கடலூர் மாவட்டம் கொத்தட்டை பகுதியைச் சேர்ந்த வி ஏ ஓ பார்த்தசாரதி, விவசாயி அன்பழகன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

* அதிமுக அலுவலக வழக்கு - சிபிசிஐடி க்கு மாற்றம்.

அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இராயபேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் மாற்றியுள்ளதாக தமிழக அரசு தகவல்.

* ஓபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கமால் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது - சி.வி.சண்முகம்.

அதிமுக ஜுலை 11 பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்த பழனிசாமி மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணை நடத்தினர்

அனைத்து தரப்பினரும் தலா ஒரு மணி நேரம் வாதாட நீதிமன்றம் அனுமதி.

பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

* அதிமுக அலுவலகம் சூரை - ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை சூரையாடியதாக சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு.

* வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய விழாவை முன்னிட்டு இன்று முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்தது.

சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோயிலில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

* பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம்.

மாணவர்களிடம் சாதியை குறிப்பிட்டு பேசிய நிலையில் பேராசிரியை அனுராதாவை பணியிடை நீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம்.

அமெரிக்க பத்திரிகையாளர் அங்கத் சிங் டெல்லி விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்டார், மேலும் இந்தியாவுக்குள் நுழைய மறுத்தார். நாடு கடத்தப்படுவதற்கான காரணங்கள் தற்போது தெளிவாக இல்லை. ஆனால் இதற்குக் காரணம் அவர் ஷாஹீன் பாக் போராட்டத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

* படிப்பகத்துடன் கூடிய கலைஞர் மு.கருணாநிதி சிலை திறப்பு.

ஈரோடு, கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 8 அடி உயர வெண்கல முழு உருவ சிலை திறப்பு.

படிப்பகத்துடன் கூடிய கலைஞர் மு.கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்வு.

* காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி CWC கூட்டத்தில் இறுதி அட்டவணை எடுக்கப்படும். தேர்தல் அட்டவணை ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages