அக்னிப்புரட்சி இன்றைய (15.09.2022) முக்கிய செய்திகள்.
* உலகில் மிகச்சிறந்த இரண்டு விஷயங்கள், ஒன்று அன்பு மற்றொன்று மன்னிப்பு, முடிந்தவரை, இந்த இரண்டையும் கொடுத்தே பழகு!
சிலநேரங்களில் அன்பை வெளிப்படுத்த, தயக்கம் இருப்பது போலவே கோபத்தை வெளிப்படுத்தும் போதும், தயக்கம் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!
மற்றவரோடு நம்மை ஒப்பிட்டால், ஒன்னு தாழ்வுமனப்பான்மை ஏற்படும், இல்லனா தலைக்கனம் அதிகமாகும், இரண்டுமே, வாழ்க்கைக்குத் தேவை இல்லாத விஷயம் தான்!!!
🙏இனிய இரவு வணக்கம்
* இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் அறிமுகம் செய்து வைத்தார்
மதுரை நெல்பேட்டையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையல் கூடத்தை பார்வையிட்டு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஊட்டிவிட்டார்.
* நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க காலை உணவு திட்டம்: - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க முடிவு எடுத்து காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளோம்.
பசியோடு வரக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் முதலில் உணவு வழங்க உள்ளோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்.
வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது.
பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* கோவாவில் பாஜக-வுக்கு தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்... அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்..!!
பனாஜி: ஒருபுறம் ராகுல்காந்தி இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்க, கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கத்திற்கு மாறானது என்பதால் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியானது.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்தார். ஒருகட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாறும் போது அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையால் கதிகலங்கியிருக்கும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பணம், மத்திய அமைப்புகள் என எல்லா யுக்திகளையும் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு மைக்கேல் லோபோ எம்.எல்.ஏ., பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸ் கட்சியை மேம்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. கட்சியிலேயே பல பிரிவினைகள் உள்ளன. அதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. முதலில் அதை சரி செய்ய வேண்டும். பாரத் ஜோடா யாத்திரை தோல்வியில் முடியும். கோவாவில் காங்கிரஸ் கட்சி வலுவடையக் காரணமாக இருந்த முன்னணி தலைவர்கள் கூடிய விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவர் என கூறியிருந்தார். கோவா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கள் வெற்றி பெற்றால் ஒருபோதும் கட்சி மாறமாட்டோம் என கோவில், சர்ச் மற்றும் மசூதிகளில் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் முன்னிலையில் சத்தியம் செய்தனர்.
தற்போது அந்த சத்தியத்தை மீறி செயல்பட்டிருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கேட்டதற்கு மீண்டும் கோயிலுக்கு சென்று கடவுளிடம் என்ன செய்வதென்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள் என கடவுள் சொல்லிவிட்டதாகவும் முன்னாள் முதல்வரான திகம்பர் காமத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
The Agnipuratchi is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1
* பத்தாவது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு-பள்ளிக்கல்விதுறை.
பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் முதல் 10 இடங்களில் முன்னேற்றும் நோக்கத்தில் சிகரம் தொடு-2022-2023 என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க.
10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யும் வகையில் மேற்கண்ட வகுப்பு மாணவ -மாணவியருக்கு மட்டும் பள்ளி வேலை நாட்களில் கலை மற்றும் மாலையில் 1 மணி நேரமும், மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தாது.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- பள்ளிக்கல்விதுறை.
* 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் ராகுலின் கால்களில் கொப்பளங்கள் உருவாகி உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று ஒருநாள் ஓய்வெடுக்கிறார் ராகுல் காந்தி.
நாளை முதல் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வழக்கம் போல் தொடரும்- காங்கிரஸ் கட்சி.
* இரு மடங்கு கட்டண உயர்வு... பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் ஆம்னி பஸ்கள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
அதன்படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3 ஆயிரத்து 200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதே போல், திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரத்து 950 ரூபாயும், மதுரைக்கு 3 ஆயிரத்து100 வரையும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.
தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு.
* சென்னை : அதிமுக தலைமை அலுவகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டது.
புதிய பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் பன்னீர்செல்வம் பேனர்கள் அகற்றப்பட்டது.
* புதுச்சேரி: சோனாம்பாளையத்தில் ஜிஎஸ்டி பணம் ரூ.55 லட்சத்தை கையாடல் செய்ததாக காசாளர் யோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்துறையின் ஜிஎஸ்டி கணக்கில் 2020 முதல் தற்போது வரை ரூ.55.75 லட்சம் ரொக்கம் செலுத்தப்படவில்லை என ஒதியஞ்சாலை போலீசில் மின்துறை நிதி கட்டுப்பாட்டாளர் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் காசாளர் கைது செய்யப்பட்டார்.
* ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ராஜன்நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ரூ.2.18 லட்சம் ரொக்கம், 5 சொகுசு கார்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* குமரி: இரணியல் அரசு பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக கணக்குப்பதிவியல் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குளச்சல் மகளிர் போலீஸ் கைது செய்தது.
* மதுரை: வைகையாற்றின் கரையோரம் நாராயணபுரத்தை சேர்ந்த ரவுடி மணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை செல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
* சென்னை : குவைத் நாட்டில் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வருகிறது கொண்டுவரப்படுகிறது.
முத்துக்குமரனை கொன்றதாக குவைத் காவலர், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்ட் உள்ளிட்ட 4 பேர் குவைத்தில் கைது செய்யப்பட்டனர்.
* தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.
இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தல்.
மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம்; அனுமதி வழங்கியது பள்ளிக்கல்வித்துறை.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறை.
* கனிமவளக் கடத்தல் பற்றி செய்தி சேகரித்த குழுவினர் மிரட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது: ஊடக சுதந்திரத்தை காக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற ’நியூஸ் தமிழ் 24x7’ செய்தி குழுவினரை கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மிரட்டி, தாக்க முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது!
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக புகார் கொடுத்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டதற்கு அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் துணிச்சல் பெற்றிருப்பதையே இது காட்டுகிறது. இது நல்லதல்ல!
ஊடகக் குழுவினரை மிரட்டியவர்களையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையினரும் உறுதி செய்ய வேண்டும்!
* அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நல்ல தொடக்கம்: சிறு தானியங்களையும் சேர்க்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்!
ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும்!
* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவரின் சிறப்புகளைப் போற்றுவோம் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு
பேரறிஞர் அண்ணாவின் 114-ஆவது பிறந்தநாள் இன்று. சாமானியர்களாலும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்; மதுவிலக்கை உயிர்மூச்சாக கருதியவர். தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான அவரின் சிறப்புகளை இந்த நாளில் போற்றுவோம்!
* போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி.
எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அதிமுக ஆதிராஜாராம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்- TNPSC அறிவிப்பு.
அக்டோபருக்கு பதில் நவ., 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும், நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றம்.
விரிவான அட்டவணை tnpsc.gov.in இணையதளத்தில் வெளியீடு.
* CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணியளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் - யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 16 முதல் ஆக.30 வரை 6 கட்டமாக நடந்தது.
CUET - UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
* சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு:
இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள்-சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்.
தண்டனை விவரம் வரும் 19 ஆம் தேதி அறிவிப்பு- நீதிபதி ராஜலட்சுமி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
* ஜூலை 11ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு.
திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது - மத்திய அரசு.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
அவ்வாறு தளர்வுகளை செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் என விளக்கம்.
வெளிநாட்டில் படித்த இந்திய மாணவர்கள் இடையில் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தில் இல்லை.
உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பவ தொடர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மாணவர்கள் பலரால் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது.
* சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை:
சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என சவுக்கு சங்கர் வாதம்.
சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவு.
* அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தமிழக கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை -சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்.
அரசு உத்தரவாதத்தை ஏற்று யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.
2021ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இதனால், தமிழகத்துக்கு வழங்கிய 9 யானைகளை திரும்பப் பெற அசாம் அரசு நடவடிக்கை.
யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.
* நேர்மை மற்றும் ஒழுக்கமானவர்களை சட்டம் - ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது எனவும் நீதிமன்றம் வேதனை.
சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது - உயர்நீதிமன்றம்.
ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி.
* திமுக முப்பெரும் விழா: சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிப்பு.
விருதுநகர் : சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு திமுக முப்பெரும் விழாவில் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும் வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2 ஆயிரம் பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்குகாவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவிப்பு.
அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தமிழக கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை -சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்.
அரசு உத்தரவாதத்தை ஏற்று யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.
2021ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இதனால், தமிழகத்துக்கு வழங்கிய 9 யானைகளை திரும்பப் பெற அசாம் அரசு நடவடிக்கை.
யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.
* வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 பேர் குற்றவாளிகள்: போக்சோ நீதிமன்றம்
சென்னை: வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூர் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விவரங்களை வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 21 பேரைக் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.
வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. "இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பு விவரங்கள் வரும் செப்டம்பர் 19-ம் தேதியன்று அறிவிக்கப்படும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
* பாகிஸ்தான் சர்ச்சை நடுவர் திடீர் மரணம்
லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஐசிசி எலைட் பேனல் நடுவர் அசாத் ரவுப். 66 வயதான இவர் 64 டெஸ்ட் போட்டிகளில் (49 கள நடுவராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 ஒரு நாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். 2000ம் ஆண்டு கால கட்டத்தில் பாகிஸ்தானின் முக்கிய நடுவர்களில் ஒருவராக இருந்த ரவுப், 2006ல் ஐசிசியின் எலைட் பேனலுக்கு உயர்த்தப்பட்டார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடுவராக பணியாற்றியபோது ஸ்பாட் பிக்சிங் ஊழலில் சிக்கினார். மும்பை காவல்துறையின் விசாரணையில் அவர் ”தேடப்படும் குற்றவாளி” என அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து 2016ம் ஆண்டில், பிசிசிஐ முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ் ரவுப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது. பின்னர் ஐசிசி நடுவர் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் 2012ல் மும்பை மாடல் அழகி ஒருவர் இவர் மீது பாலியல் புகார் எழுப்பினார். இதனால் அவர் தன்மீதான நன்மதிப்பை இழந்தார். பின்னர் பிழைப்புக்காக லாகூர் லாந்தா பஜாரில் துணி மற்றும் ஷூக்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் லாகூரில் நேற்றிரவு அசாத் ரவுப் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்தியது நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ; இன்று முதல் அமல்..!!
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை வட்டி விகிதத்தையும் 8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக பாரத் ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான பழைய அளவுகோல்கள் இவை. இப்போது பெரும்பாலான வங்கிகள் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் அல்லது ரெப்போ அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன. வங்கி பி.எல்.ஆர். மற்றும் அடிப்படை விகிதம் இரண்டையும் காலாண்டு அடிப்படையில் திருத்துகிறது. எஸ்பிஐ-யின் கடன் வட்டி விகித திருத்தம் வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் பின்பற்றப்படும்....
* புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது.
சரிபலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21-ம் தேதி வரை 5 நாள்கள் பூஜைகள் நடைபெறும்.
இந்த நாள்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணியளவில் நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை அபிஷேகம் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.
* 74 ஆண்டுக்குப் பின் இந்தியா வரும் சிறுத்தைகள்:
1948 ல் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது.
அதன்பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியா பெற உள்ளது.
சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக புலி வடிவ டிசைனுடன் சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது.
இதற்காக, சிறப்பு விமானத்தில் இந்த சிறுத்தைகள், நமீபியாவில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, வரும் 17ம் தேதி காலையில் அந்த விமானம் வருகிறது.
அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து வரப்பட உள்ளன.
பிரதமர் மோடி தன் பிறந்த நாளான 17ம் தேதி, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.
இதற்காக இன்று இந்தியாவில் இருந்து நமீபியா சென்றடைந்த சிறப்பு விமானத்தில் நமது தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
* திருடனை 15 கி.மீ தூரம் தொங்க விட்ட ரயில் பயணிகள்!
_பீகார்: செல்போனை பறிக்க முயன்ற திருடனை 15 கி.மீ தூரம் ஜன்னலில் தொங்க விட்டு போலீசில் ஒப்படைத்த பயணிகள்.
* போதைப்பொருள் கடத்தல் மையமாகும் குஜராத்?.. நடப்பாண்டில் ரூ. 4,000 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி
காந்திநகர்: சூரத்: பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக மீன்பிடி படகில் இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரபிக்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குஜராத் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அம்மாநிலத்தின் ஹெச் மாநில கடற்கரை ஓரம் குஜராத் கடலோர காவல் படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜக்கோவ் துறைமுகம் நோக்கி வந்த மீன்பிடி படகு ஒன்றை கண்ட அதிகாரிகள் அதை விரட்டி பிடித்து சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து படகில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது ஹெராயின் பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்த 6 போரையும் கைது செய்து ஜக்கோவ் துறைமுகம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரும் பாகிஸ்தானியர்கள் என்பது தெரிய வந்தது. போதைப்பொருள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக குஜராத் மாநிலத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹெராயின் போதைப்பொருளை குஜராத்தில் இருந்து கடத்த தயாராக இருந்த டெல்லியை சேர்ந்த இருவர் சிக்கியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 200 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பஞ்சாப் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னர்களான ரெஃமோனி, ஹனிசிப், ஒபின்னா ஆகியோர் மோசடியின் ஒரு பகுதியே இந்த கடத்தல் என குஜராத் போலீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இதேபோல கடந்த பிப். மாதம் படகு வழியாக கடத்த முயன்ற 800 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டது.
அதன் தொடர்ச்சியாக மே மாதம் 52 கிலோ, ஜூலை மாதம் 375 கோடி மதிப்பிலான 75 கிலோ, ஆகஸ்டில் 1,026 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும் சிக்கின. தற்போது ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் மையமாக குஜராத் மாறி வருகிறதா? என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
* மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர் 1979ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மக்கள் சேவை ஆற்றியவர். 1963ல் இருந்து மலேசிய வானொலி, மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.
தகவல் தொழில்நுட்பம், பொது பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை டத்தோ சாமிவேலு காலமானார். இவர் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்தவர். மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், ‘டத்தோ’ ஒரு மறக்கவியலா அத்தியாயம். அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டத்தோ சாமிவேலு மறைவுக்கு இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் டத்தோ சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர். எஸ்.சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
* கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்- சபரிமலை தேவசம்போர்டு.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவசம்போர்டு உயர்மட்ட கூட்டம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment