அக்னிப்புரட்சி இன்றைய (20.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.09.2022) முக்கிய செய்திகள்.

* 8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்.

பாலக்காடு, திருப்பதி, தார்வாட், பிலாய், காந்திநகர், புவனேஸ்வர், கோவா மற்றும் ஜம்முவில் உள்ள ஐஐடிகளுக்கு நியமிக்க ஒப்புதல்.

* நாகை மீனவர்கள் 8 பேர் கைது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.

* ஆசிரியர் நியமன முறைகேடு; பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அர்பிதாவின் ரூ.46 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியின் ரூ.46 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் திரிணாமுல் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து 49.80 கோடி ரூபாய் பணம், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மேற்குவங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த கைதை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும், திரிணாமுல் காங்கிரசில் இருந்தும் பார்த்தா சாட்டர்ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி தற்போது சிபிஐ விசாரணை காவலில் உள்ளார். அதேவேளை நடிகையும், உதவியாளருமான அர்பிதா முகர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியின் 46 கோடியே 22 லட்ச ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

40.33 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, 35 வங்கி கணக்குகளில் இருந்த 7.90 கோடி ரூபாய் பணம் என ரூ.46 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

* சமீபத்தில், செயல்படாத நிலையில் உள்ள 284 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷன் மேற்கண்ட சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது.

* புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல்: பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, குருசுகுப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார்.

புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழமையான கட்டடம் பழுது காரணமாக, அங்கு படித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள், புதுச்சேரி குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இரண்டு பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஒரு சில ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு கிருஷ்ணராசு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் சுகுமாரன், "பொய்யான தகவல்களைக் கூறி மாணவிகளை போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை சுப்ரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், குருசுகுப்பம் அரசு மகளிர் பள்ளிக்குச் சென்றனர். அப்போது, அங்குள்ள மாணவிகளுக்கும், இந்தப் பள்ளி மாணவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, தகவலறிந்த பெற்றோர்கள் வகுப்பு அறைகளுக்கு சென்றபோது, மூடப்பட்டு இருந்ததால் வகுப்பு அறை கதவுகள் மற்றும் ஜன்னல்களை தட்டி திறக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெற்றோர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம் உருவானது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸார், இரு பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பின்பு சுப்பிரமணிய பாரதி மாணவிகளை, அவர்களது பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குருசுக்குப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டது.

தகவல் அறிந்து வந்த அமைச்சர் க.லட்சுமி நாராயணன் அங்கு வந்து பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தினார். கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரித்தார். தேவையின்றி ஆசிரியர்கள், மாணவிகள் பிரச்சனை செய்யக் கூடாது என எச்சரித்தார்.

* பிறந்தநாள் அன்றே தற்கொலை.
(மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் பாஸ்கர் தனது பிறந்தநாள் அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

* அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு 29ம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது கடிதத்தை  அனுப்பிவிட்டேன்- திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் அறிக்கை.

மகத்தான வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு, கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது- சுப்புலட்சுமி ஜெகதீசன்.

* ஜப்பானை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்: 90 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

டோக்கியோ,
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நான்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின.

புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது. இடைவிடாமல் கொட்டிய பேய் மழையால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. புயல், மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

புயல், மழை மற்றும் வெள்ளத்தால் கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் குடிநீர் வினியோகம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் தடைப்பட்டுள்ளன.

இந்த புயலால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

புயல் காரணமாக கியாஷூ தீவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், படகு போக்குவரத்து மற்றும் புல்லட் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இதனிடையே 'நான்மடோல்' புயல் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் சுமார் 90 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.

* ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி உயரமான கட்டிடங்களுக்கு அனுமதித்தது எப்படி? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி அரசின் உயரக் கட்டுப்பாட்டு வீதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மகுடேஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பழமையான கோயில் அமைந்திருக்கும் பகுதியில் கோயில் கோபுரங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டக் கூடாது என 1997-ல் அரசாணை உள்ளது. இந்த அரசாணையை மீறி ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி சட்டவிரோதமாக உயரக் கட்டுப்பாட்டை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோயிலில் இருந்து நூறு மீட்டருக்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் 73 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சித்திரை வீதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிகளை மீறி கட்டிடப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஆணையர் நியமித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உயரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி கோயில் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி?” என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

* தமிழகத்தில் பழமையான பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பிப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் பழமையான பள்ளிக் கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த செந்தில் முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டிடங்கள் அதிகளவில் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் மோசமான நிலையில் உள்ளது. மதுரை, கோவை, நெல்லை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

சமீபத்தில் மதுரை கொடிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. எனவே, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிம் அமைக்க குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

* பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு: ஓராண்டில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில், பகிங்ஹாம் கால்வாய் நீளம், அகலத்தை கண்டறிந்து, ஓராண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை, கஸ்தூரிபா நகர் மற்றும் இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அடையாறு கஸ்தூரிபா நகர் முதல் இந்திரா நகர் வரை, கால்வாய் கரை சாலையை ஆக்கிரமித்து குடிசைகள், கான்கிரீட் கட்டுமானங்கள் உள்ளன.

'கால்வாயில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், மழை காலங்களில் எங்கள் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. எனவே, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. 
கடந்த 2014- இல் இந்த வழக்கு தொடரப்பட்டது.

2017க்கு பின், 2022 ஏப்ரலில் தான் இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, பகிங்ஹாம் கால்வாய் மீட்புக்காக 1,281 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்ததற்கான முழுமையான திட்டம் குறித்து, மனுத் தாக்கல் செய்யும்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரனுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

JOIN US: https://t.me/Agnipuratchi1

இவ்வழக்கில், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு:

பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தாக்கல் செய்த பல்வேறு அறிக்கைகளை பார்க்கும்போது, கூவம் மற்றும் அடையாறு ஆறு, பகிங்ஹாம் கால்வாயின் மோசமான நிலைமை தெரிகிறது. இந்த கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை அறிக்கை காட்டுகிறது. பகிங்ஹாம் கால்வாயில், ஒரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்துள்ளது.

இந்த கால்வாயை கப்பல் போக்குவரத்துக்காக மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு அறிவிப்பு செய்தது. ஆனால், ஆக்கிரமிப்புகளால் அது தடைபட்டது.அடையாறு, கூவம் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கான புள்ளி விபரங்கள் உள்ளன. ஆனால், பகிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு, புள்ளி விபரங்கள் வழங்கப்படவில்லை.
இதற்கு, கால்வாயின் எல்லையை கண்டறிந்தால் தான், ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 

* பகிங்ஹாம் கால்வாயின் எல்லையை, ஆறு மாதங்களுக்குள் பொதுப்பணித் துறை நிர்வாக பொறியாளர் வரையறுக்க வேண்டும். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது. கால அவகாசத்தை பின்பற்றவில்லை என்றால், அதற்கு அதிகாரிகளே பொறுப்பு.

* அசல் ஆவணங்கள் அடிப்படையில், கால்வாயின் நீளம் மற்றும் அகலத்தை வரையறை செய்ய வேண்டும். பழைய அளவிலேயே கால்வாய் மீட்கப்பட வேண்டும்.

* எல்லை வரையறை பணிகள் முடிந்த உடன், ஓராண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இந்த அவகாசத்தை பின்பற்ற தவறினாலும், அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

* ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படும் போது, பகிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் நிகழாமல், உள்நாட்டு நீர்வழி ஆணையம் பராமரிக்க வேண்டும்.

* மாடி ரயில் திட்டத்துக்காக கட்டப்பட்ட துாண்கள், மேம்பாலம், பாலங்கள் தவிர்த்து, பகிங்ஹாம் கால்வாயில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும். நீர் வழி போக்குவரத்துக்கு வசதியாக அகற்ற வேண்டும்.

* பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் தொடர் பாக, வேறு எந்த நீதிமன்றமும், வழக்குகளை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. கால்வாயில் உள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகளை, அரசு வரன்முறை செய்யக் கூடாது.

கால்வாயை சுத்தப்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க, வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவர் என நம்புகிறோம். ஆறு, கால்வாய், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. இயற்கை வளங்களை, பொக்கிஷங்களை, அரசும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது

* கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பம் - செப்.26-ம் தேதி கடைசி நாள்

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு வாரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. நேற்று மாலை வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்.14-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

* புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் - பாஜகவினர் இடையே மோதல்.

கற்கள், காலணிகளால் இரு பிரிவினரும் தாக்கிக் கொண்டதால் பதற்றம், போலீஸாரின் மண்டை உடைப்பு.

பெரியார் திகவினர் உரிமை போராட்டம் நடத்தியபோது மோதல், அவர்களுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஊர்வலம்.

* தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சட்ட மசோதா கொண்டுவரப்படுமா என எதிர்பார்ப்பு.

ஜெ.மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

* தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்?

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதோடு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது?

இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

* அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு.

இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்து பார்த்து விளக்கமளிக்க மனுதாரருக்கு அவகாசம்-சென்னை உயர்நீதிமன்றம்.

வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளிவைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு.

* சட்டப்படிப்புக்கென தெற்காசியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைமிகு பல்கலைக்கழகம் இது.

அம்பேத்கரின் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு- அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும்.

வாதத்திறமையை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும்.

நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும்- அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

* சென்னையில் 2வது நாளாக ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

வாரத்திற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்திவிட்டு புதிய விதிகளை  அறிமுகப்படுத்தியதால் வேலை நிறுத்தம்.

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குறிப்பிட்ட சில ஊழியர்கள் உணவுகளை டெலிவரி செய்து வருகின்றனர்.

* ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

tnhealth.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அக்.12ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

* உலகின் பெரிய வைரம் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச பரம்பரை செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்து உள்ளன.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து 1905-ம் ஆண்டில் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் இந்த வைரம் பின்னர் அரச செங்கோலில் பதிக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிக பெரிய, 530.2 காரட் கொண்ட நீர் துளி வடிவிலான இந்த வைரம், சிலுவையுடன் கூடிய செங்கோலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் மறைவை அடுத்து, இந்த கல்லினன் வைரம் தங்களுக்கு சொந்தம் என்றும் அதனை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படியும் தென்ஆப்பிரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.

சமூக ஊடகங்களில் பல பயன்பாட்டாளர்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தின் கைவசம் உள்ள தங்களது நாடுகளின் பல்வேறு வைரங்களை திருப்பி ஒப்படைக்கும்படி கோரி பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். அவற்றில் தென்ஆப்பிரிக்க நாடும் இணைந்துள்ளது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இதுபற்றி தென்ஆப்பிரிக்காவின் சமூக ஆர்வலரான தண்டுக்சோலோ சபேலோ என்பவர், எங்களுடைய நாட்டின் மற்றும் பிற நாடுகளின் தாதுக்கள் எங்களது மக்களின் உழைப்பின் பலனால் தொடர்ந்து இங்கிலாந்துக்கு பயன் அளித்து கொண்டிருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.

இதனை திருப்பி அளிப்பதற்காக 6 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஆன்லைன் வழியே மனு அளிக்கும் கோரிக்கையும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தென்ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் உயோல்வெது ஜுங்குலா என்பவர் டுவிட்டரில், இங்கிலாந்து செய்து தீங்கு அனைத்திற்கும் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. பிரிட்டனால் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்கம், வைரங்கள் ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த வைரத்தின் உண்மையான பணமதிப்பு தெளிவாக தெரிய வரவில்லை. எனினும், அரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைரம் அதிக பணமதிப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

* 28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்: 2 வாரத்தில் வழங்க அரசு போக்குவரத்து கழகங்கள் தீவிரம்

சென்னை: தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 28 லட்சம் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செல்ல புதிய இலவச பஸ்பாஸ் அட்டை அடுத்த இரண்டு வாரத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீத இலவச பயணத்துக்கான பஸ்பாஸ்வழங்கப்பட்டு வருகிறது. தனியார்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.

இதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்குகிறது. இலவச பஸ்பாஸ் வழங்க நடப்பாண்டில் ரூ.928 கோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காகித அட்டையில் வழங்கப்பட்டு வந்த பஸ்பாஸூக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை கொடுக்க கூடுதல் நிதியும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி இடை நிற்றலை தடுக்கவும், மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வரவும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ஏழ்மையின் காரணமாக நீண்ட தூரம் நடந்து சென்று படிக்க வேண்டிய சிரமமான நிலை அறிந்து இலவச பஸ்பாஸ்களை அரசு வழங்கி வருகிறது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

பஸ்பாஸ் வழங்கும் திட்டம் முதன்முதலில் 1996-97 ஆண்டில்தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரைமட்டுமே இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டு வந்தது. பிறகு பிளஸ் 2 வரைபடிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு பள்ளி படிப்பை முடித்து இளைஞர்கள் உயர்கல்வி பெற்று தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் கொள்ள 2007-ம்ஆண்டு முதல் கல்லூரிகளில், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்பட்டன.

கரோனாவால் பழைய அட்டை: இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச பஸ்பாஸ் அட்டை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர்கள் சிரமமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்க கடந்த ஆண்டு அட்டையை நடத்துநரிடம் காண்பித்துப் பயணிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் போது பேருந்துகளின் ஓட்டுநரும் நடத்துநரும் கண்டிப்பாக நடந்து கொள்ளாமல் மாணவர்கள் ஏறி,பயணிக்க, இறங்க அனுமதிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்தநான்கு மாதங்களாக அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

ஏழு போக்குவரத்துக் கழகங்கள்: இந்நிலையில் தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் 28 லட்சம் பேருக்கு புதிய பஸ்பாஸ் தயாரித்து வழங்கும் பணி சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் நடந்து வருகிறது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: இலவச பஸ்பாஸ் அட்டை தயாரித்து வழங்க டெண்டர் விடப்பட்டு தமிழகம் முழுவதும் பஸ்பாஸ் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெயர், பள்ளி முகவரி உள்ளிட்ட விவரம் சென்னை, விழுப்புரம், மதுரை, சேலம், கோவை, கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய ஏழு போக்குவரத்துக் கழகங்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு ஆண்டுக்குரிய பஸ்பாஸ் தயாரிக்கப்படும். இன்னும் இரு வாரத்தில் அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நடப்பாண்டில் தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 23 லட்சத்து 42 ஆயிரம் பேர் இலவச பஸ்பாஸ் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-ஆஸி. இன்று முதல் டி.20 போட்டியில் மோதல்: வெற்றியுடன் தொடங்குவது நம்பர் 1 அணியா, நடப்பு உலக சாம்பியனா?

மொகாலி: இந்தியாவுக்கு எதிராக 3 டி.20 போட்டிகளில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வந்துள்ளது. இரு அணிகள் இடையே முதல் டி.20 போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதற்காக ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 3வது நாளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஆசிய கோப்பையில் தோல்வியால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சொந்தமண்ணில் சிறப்பாக ஆடவேண்டிய நெருக்கடி உள்ளது. பேட்டிங்கில் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி என முதல் 3இடத்தில் மாற்றமில்லை. அடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வர். டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாததால் ரிஷப் பன்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் தினேஷ்கார்த்திக் களம் இறங்குவது சந்தேகம் தான். காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, ஹர்சல்பட்டேல் வருகை வலு சேர்க்கிறது. இவர்களுடன் பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், சாஹல்  இடம்பிடிப்பர். கூடுதலாக ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் போட்டியில் அஸ்வின், அக்சர்பட்டேல் உள்ளனர். இதில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

மறுபுறம் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்  ஆகியோருடன்  புதுமுக அதிரடிவீரர் டிம் டேவிட்  மிரட்டகாத்திருக்கின்றனர். பவுலிங்கில் வேகத்தில் ஹேசல்வுட், கம்மின்ஸ் , சீன் அபோட் ,சுழலில் ஆடம் ஜம்பா,ஆஷ்டன் அகர் இடம் பிடிக்கலாம்.

உலக கோப்பை டி.20 தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுவதால் ஆடும் லெவனைதேர்வு செய்ய பெரிதும் உதவும்.  மேலும் நடப்பு உலக சாம்பியன்  ஆஸ்திரேலியாவும், நம்பர் 1 டி.20 அணியான இந்தியாவும் மோதுவதால் ரசிகர்களுக்கு பெரும் தீனி காத்திருக்கிறது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ராசியான மொகாலி: பஞ்சாப் மாநிலம்  மொகாலியில் உள்ள பிந்த்ரா ஸ்டேடியத்தில் இதுவரை 5 டி.20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இந்தியா 2009ல் இலங்கை, 2016ல் டி.20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, 2019ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக என 3 டி.20 போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. இந்த 3ஆட்டத்திலும் சேசிங் செய்துதான் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா இங்கு 2 போட்டிளில் ஆடி ஒரு தோல்வி(இந்தியாவுடன்), ஒரு வெற்றி(பாகிஸ்தானுக்கு எதிராக)கண்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இங்கு  மோத உள்ளன.  பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்சில் இந்தியா 2009ல் இலங்கைக்கு எதிராக 211/4 ரன் குவித்ததுதான் அதிகம். . ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக 193/4 ரன் அடித்தது.

இதுவரை நேருக்கு நேர்...
டி.20 போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்குநேர் மோதி உள்ளன. இதில் 13ல் இந்தியா, 9ல் ஆஸ்திரேலியா வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஆஸி. 3, இந்தியா 2ல் வென்றுள்ளன. இதற்கு முன் இரு அணிகளும் 9 டி.20 தொடர்களில் மோதியதில் 4முறை இந்தியாவும், 2 முறை ஆஸ்திரேலியாவும் கைப்பற்றி உள்ளது. 3 தொடர்  சமனில் முடிந்துள்ளது.

* ஆஸி.க்கு எதிராக இந்தியா 2013ல் ராஜ்கோட்டில்202/4 ரன் எடுத்த தான் அதிகபட்சம். இதே போட்டியில் ஆஸி.201/7 ரன் அடித்தது தான் பெஸ்ட் ஸ்கோர்.

* மெல்போர்னில் 2008ல் இந்தியா 74ரன்னிலும், மிர்பூரில் ஆஸி, 86 ரன்னிலும் சுருண்டதுதான் குறைந்த பட்ச ஸ்கோராகும்.

* ஆஸி.க்குஎதிராக கோஹ்லி 19 போட்டியில் 7 அரைசதத்துடன் 718 ரன்னும்,பிஞ்ச் , இந்தியாவுடன் 15 போட்டியில்2 அரை சதத்துடன் 440ரன்னும் எடுத்து டாப்பில் உள்ளனர்.

* பவுலிங்கில் பும்ரா 11 போட்டியில் 15  விக்கெட்டும், வாட்சன் 8 போட்டியில் 10 விக்கெட்டும் எடுத்து முதல் 2 இடத்தில் உள்ளனர்.

ஹர்திக்-கோஹ்லி நடனம்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி மற்றும் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். தி பீட்நட்ஸின் ‘சே அகபோ’ நடனத்தில் ஹர்திக், உற்சாகத்துடன் ஈடுபடும்நிலையில் கோஹ்லியால் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. நாங்கள் எப்படி செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் என்று ஹர்திக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கோஹ்லி பதிலளித்து சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
...

* காய்ச்சல் தொடர்பாக தமிழகம் முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பரவி வரும் நிலையில் நாளை சிறப்பு முகாமை மருத்துவத்துறை நடத்துகிறது.

காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் மக்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பரிசோதனை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் முதல் ஒரே இடத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருந்தால் அங்கு சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும்.

பருவ நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது.

மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1166 ஆக அதிகரித்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திறன் அடிப்படையிலான பாடங்களை அறிமுகப்படுத்துவதையும் கல்வியை மேலும் தனியார்மயமாக்குவதையும் ஏஐஎஸ்இசி எதிர்க்கிறது

தமிழக அரசாங்கம் தொடங்கியுள்ள 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் திறன் அடிப்படையிலான பாடங்களை ஒவ்வொரு பருவத்திலும் (செமஸ்டர்) சேர்க்க முடிவெடுத்துள்ளது. இந்தப் பாடங்கள் எல்லாம் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் ஆன்லைன் முறையில் அல்லது பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மூலம் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு திறன் அடிப்படைப் பாடத்தை மாணவர் தேர்வு செய்ய வேண்டுமென்று தகவல்கள் தெரிவிகின்றன. முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது மற்ற பல்கலைக்கழகங்களிலும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழக அரசாங்கத்தின் இந்த முடிவால் உயர்கல்வி என்பது முற்றிலும் தொழில்மயமாக்கப்பட்டு,  உயர்கல்வியில் உயர்தரத்திலான பகுத்தாய்வு செய்யும் கருத்தாக்கத் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்புக்கான கதவு அடைக்கப்பட்டுவிடும் என்பதால் இதனை அகில இந்திய கல்விப்பாதுகாப்பு இயக்கம் (ஏஐஎஸ்இசி) எதிர்க்கிறது.

அதோடு இந்தப் பாடங்களை அரசுக் கல்லூரிகளில்  தனியார் நடத்துவதற்கு அனுமதிப்பதென்பது உயர்கல்வி முழுமையையும் தனியார்மயம் கார்ப்பொரேட்மயமாக்கும் நடவடிக்கை என்று ஏஐஎஸ்இசி  கருதுகிறது. அரசு கல்லூரிகளில் ஏற்கனவே ஆயிரக்கணகான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசாங்கத்தின் இந்த முடிவு ஆசிரியர் பணியிடங்களையே குறைத்துவிடும். 

கிரெடிட் அடிப்படையிலான பாடங்களை தனியார் மூலம் நடத்துவதும், அதைக் கட்டாயமாக மாணவர்கள் படிக்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதும் தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ள கல்வி கிரெடிட் வங்கித் திட்டத்தை
(Academic Bank of Credits) அமல்படுத்தும் நடவடிக்கையே ஆகும்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

எனவே பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் திறன் அடிப்படையிலான பாடங்களை அறிமுகப்படுத்தும் முடிவை உடனடியாகக் கைவிடவேண்டுமென்று தமிழக அரசாங்கத்தை ஏஐஎஸ்இசி வலியுறுத்துகிறது.

தமிழக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து இதனை கைவிட வலியுறுத்தி ஒன்றுபட்ட வலுவான கல்வி இயக்கத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியை நேசிக்கும் அனைவரையும் ஏஐஎஸ்இசி அறைகூவி அழைக்கிறது.
- சதாசிவம் எஸ்., ஏஐஎஸ்இசி

* உலகிலேயே ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளில் ரயில் இயக்கம்: எலெக்ட்ரிக் பயன்பாட்டுக்கு மத்தியில் புதிய திட்டம்

புதுடெல்லி: உலகிலேயே ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளில் ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் எரிபொருட்களுக்கு மூலதனமாக விளங்கும் கச்சா எண்ணெயை பல ஆண்டுகளாக உறிஞ்சிவிட்ட நிலையில், உலகெங்கிலும் கச்சா எண்ணெய்க்கான மூல ஆதாரங்கள் நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகின்றன. இது மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால், அதிக புகை கலந்து சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதன் விளைவாக பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், பெட்ரோல், டீசல் போன்ற புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக நிலையான எரிபொருள் வழிமுறைக்கு மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வழிமுறையை பின்பற்றி, இந்தியாவும் நிலையான எரிபொருள் தேவையை நோக்கி நகர்ந்து வருகிறது.

தற்போதைய சூழலில், இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஏதுவாக இரண்டு எரிபொருள் வகைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக எலெக்ட்ரிக் எரிபொருள், இரண்டாவதாக ஹைட்ரஜன் எரிபொருள் ஆகும். மின்சார வசதி தாராளமாக இருப்பதால் ஆங்காங்கே சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேநேரம் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாடு குறித்தும் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவையை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதால் புவி வெப்பமாகி வருவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம், ஹைட்ரஜன்  எரிபொருளில் இயங்கும் 14 ரயில்களை சுமார் 92 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கி  ஜெர்மனிக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியை அடுத்து இந்தியாவிலும் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘இந்தியன் ரயில்வே,  ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை மாற்ற திட்டமிட்டுள்ளது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

அடுத்தாண்டு (ஆக. 15ம் தேதிக்குள்) முதல் டீசல் ரயில்களுக்கு பதில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும். இதனையடுத்து ஜெர்மனியை அடுத்து ஹைட்ரஜன் எரிபொருளை வைத்து  ரயிலை இயக்கும் நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது. ஹைட்ரஜனை ரயில் எரிபொருளாக பயன்படுத்துவதால், பூஜ்ஜிய கார்பன் இலக்குகளை அடைய முடியும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமானது; உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம்  மணிக்கு 180 கிலோமீட்டர். இந்த ரயில் 52  வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டியது. அதிகபட்ச வேகம்  மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்’ என்றார்.

* இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்கள் தாக்குதல்: தூதரகம் கண்டனம்

லண்டன்: இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் இந்தியர்கள் மீதும், கோயில்கள் மீதும் பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை தோற்டித்து இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் மோதல் வெடித்துள்ளது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்துக்களையும், அவர்களின் வீடு, கடைகள், கோயில்கள் ஆகியவற்றையும் குறிவைத்து பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானியர்கள் தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகப் பரவின. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், அமைதி நிலவ ஒத்துழைப்பு வழங்குமாறும் லீசெஸ்டர் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், வீடியோக்களை பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள லீசெஸ்டர் போலீசார், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்துக்கான இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியர்களுக்கு எதிராகவும், அவர்களுக்குச் சொந்தமான இடங்கள், கோயில்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து உயர் அதிகாரிகளிடம் விளக்கி, கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம். தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள்.

3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு அதைத்தான் செய்யும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை.

விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்க வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* மருத்துவ படிப்புக்கு செப்.,22 முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

* சென்னை மழைநீர் வடிகால் பணி 60% மட்டுமே நிறைவு; அக்.20-க்குள் சாலைகளை சீரமைக்க உத்தரவு

சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் பணிகளை 60 முதல் 70 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், சாலைப் பணிகளை அக்டோபர் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மட்டும்தான் 80 சதவீத அளவில் நிறைவடைந்துள்ளது. மற்ற திட்டப் பணிகளை 60 முதல் 70 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், திட்டப்பணிகள் முடிந்த இடத்தில் சாலைப்பணிகளை அக்.20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதில், மழைநீர் வடிகால்களை சுற்றி எந்த அளவு சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இதைத் தவிர்த்து கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் மேட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்த இடங்களில் உயர் குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகளும், குறைந்த அளவு குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகளும் என மொத்தம் 400 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இதன் முழு விவரம்:

சுரங்கப் பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.
மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
உபகரணங்களை முன் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வடிகட்டி தொட்டிகளில் இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்லும் இணைப்பு குழாய்களில் அடைப்புகள் ஏதுமின்றி பராமரிக்க வேண்டும்.
நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் தங்கு தடை இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

முழுமைத் திட்டமும் சென்னை பெருநகரும்: உங்களின் கருத்துகளை தெரிவிப்பது எப்படி?

சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டத்தை (2027 - 2046) தயார் செய்யும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து தரப்பு மக்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளது.

முழுமைத் திட்டம் என்றால் என்ன? - ஒரு பெருநகரம் அடுத்த 20 ஆண்டுகளில் அடையும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நகரத்தின் உட்கட்டமைப்பு வசதி முதல் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்த தயார் செய்யப்படும் திட்டம்தான் முழுமைத் திட்டம் (Master Plan) ஆகும். இந்த முழுமைத் திட்டத்தின் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதை தயார் செய்வதுதான் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பணியாகும்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இரண்டு கட்ட முழுமைத் திட்டம்: இதுவரை சென்னைக்கு 2 முழுமைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டம் 1976-ம் ஆண்டும், 2-வது முழுமைத் திட்டம் 2006 முதல் 2026 வரையும் அமலில் இருக்கும். இந்த 2-வது முழுமைத் திட்டத்தில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

3-வது முழுமைத் திட்டம்: 3-வது முழுமைத் திட்டம் (2027 - 2046) தயார் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி, போக்குவரத்து மேம்பாடு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, கால நிலை மாற்றம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

அனைவருக்கும்: பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழுந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மீனவர்கள், வீடற்றவர்கள், திருநங்கைகள், மாணவர்கள், சாலையோர வியாபாரிகள் அனைவரின் கருத்துகளை பெற்று இந்தத் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

கருத்துக் கேட்பு: பொதுமக்கள் https://cmavision.in என்ற இணையதளத்தில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். பொதுமக்கள் கருத்துகள் மற்றும் சட்டமன்ற தொகுதி வாரியாக பயிலரங்கு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்படும்.

* கிரெனேடியர் காவலர்களின் கொடி முதல் கிரீடம் வரை... ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியில் இடம்பெற்றுள்ளவை என்ன?

லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ராணியின் கணவர் பிலிப், தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் ஏஞ்சலா, சகோதரி மார்கரெட் ஆகியோரின் உடல்களும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு அருகில் இரண்டாம் எலிசபெத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் சென்றனர். அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தாயை பிரியும் கடைசி தருணத்தில் சோகத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

* ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியில் என்ன இருக்கிறது?

வீடியோ: https://youtu.be/yp6WeJoISis

சவப்பெட்டியில் பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்கொத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறப்பு அர்த்தத்தை கொண்டுள்ளது. ராணி 1947 இல் இளவரசர் பிலிப்பை மணந்தபோது தனது திருமண பூங்கொத்தில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மிர்ட்டல் வகை பூ ஆகும். இது ராணியின் மகிழ்ச்சியான திருமணத்தை குறிக்கிறது.

அதுமட்டுமின்றி, ரோஸ்மேரி, ஆங்கில ஓக் மற்றும் அவர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை குறிக்கும் வகையில் ஏப்ரல் பூக்கள் மற்றும் டஹ்லியாஸ், ரோஜாக்கள், இலையுதிர்கால ஹைட்ரேஞ்சாஸ், செடம், ஸ்கேபியஸ் ஆகியவை சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பூக்கள் அனைத்தும் அரசத்துக்கு குடும்பத்துக்குச் சொந்தமான பக்கிங்ஹாம் அரண்மனை, கிளாரன்ஸ் ஹவுஸ் மற்றும் ஹைக்ரோவ் ஹவுஸ் தோட்டங்களில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸால் தேர்ந்தெடுக்கப்பட்டு பறிக்கப்பட்டது. பூங்கொத்தில் மன்னர் சார்லஸ் எழுதிய கடிதமும் இடம்பெற்றுள்ளது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இதுதவிர, இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் ஒரு குஷன் மீது வைக்கப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கோல் ஒன்றும் கிரெனேடியர் காவலர்களின் கொடியும் இடம்பெற்றுள்ளன. கிரெனேடியர் காவலர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவு ஆகும். இந்தப் படை ராணியின் உடலை அவர் வாழும்போதும் மரணத்திற்கு பிறகும் பாதுகாக்கவே ஏற்படுத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும்.

* இன்ஸ்டா ரீல்ஸில் குறைபாட்டை சுட்டிக்காட்டிய இந்திய மாணவருக்கு ரூ.38 லட்சம் சன்மானம்

ஜெய்ப்பூர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இருந்த குறைப்பாட்டை அந்நிறுவனத்திற்கு தெரிவித்த காரணத்தால் ரூ.38 லட்சத்தை சன்மானமாக பெற்றுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். இது அமெரிக்காவின் மெட்டா தளங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை கொண்டு பாடல் எழுதி, அதனை கொடையுள்ளம் படைத்த மன்னர்களிடம் காட்டி பரிசல் பெற்று செல்வார்கள் என பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இதுவோ டிஜிட்டல் காலம். அனைத்தும் இணைய மயமாகிவிட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் அதிகம் உலாவும் தளங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை தங்களது தொழில்நுட்ப மூளையின் திறன் மூலம் கண்டுபிடித்து, அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் கிடைக்கிறது.

அந்தப் பட்டியலில் புதியவராக இணைந்துள்ளார் ஜெய்ப்பூரை சேர்ந்த சர்மா என்ற மாணவர். ஒரு ரீலின் தம்ப்னைலை பாஸ்வேர்டு இல்லாமல் வெறும் ஐடியை மட்டும் கொண்டு மாற்ற முடியும் என்பதை அவர் கண்டுள்ளார். இதனை ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்துப் பார்த்துவிட்டு இன்ஸ்டா வசம் அதனைப் பகிர்ந்துள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு அதன் டெமோ வீடியோவை பகிரச் சொல்லி இன்ஸ்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நன்றாக சோதித்த பின்னர் தங்கள் தளத்தில் குறைபாடு இருப்பதை அறிந்து கொண்டுள்ளது இன்ஸ்டா.

இதனை கடந்த மே மாதம் அடையாளம் கண்டுள்ளது இன்ஸ்டா. அப்போது அவருக்கு 38 லட்ச ரூபாய் சன்மானமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை அறிவிக்க நான்கு மாத காலம் தாமதமாகியுள்ளது. அதனால் 4 மாத தாமதத்திற்கு கூடுதலாக 3.6 லட்ச ரூபாயும் சேர்த்து ஒதுக்கீடு செய்துள்ளது மெட்டா.

பயனர்களின் பாதுகாப்பு, ரிஸ்க் போன்றவற்றை கருத்தில் கொண்டு மூன்றாம் நபர்கள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கு டெக் நிறுவனங்கள் சன்மானம் வழங்குகின்றன. சர்மாவின் முயற்சியினால் மில்லியன் கணக்கிலான இன்ஸ்டா கணக்குகள் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தப்பியுள்ளதாக தெரிகிறது. அதனால் அவருக்கு லட்சங்களில் சன்மானம் அறிவித்துள்ளது மெட்டா.

* அண்ணா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்த சார்பதிவாளர் அகிலா மற்றும் சக ஊழியர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட நேரமாக மக்கள் காத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஓநாய்க்கு  " மாயா" என பெயர் சூட்டிய சீனா...!

JOIN US: https://t.me/Agnipuratchi1

சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டு சாதனை செய்துள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஓநாய் இதுவே. பெய்ஜிங் ஆய்வகத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி பிறந்த இந்த ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குளோனிங் என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். குளோனிங் முறைக்கு அடிப்படை, கலவியில்லா இனப்பெருக்கம். உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் விலங்கு செம்மறி ஆடு ஆகும்.

குளோனிங் தொழில்நுட்பம் மூலமாக இதுவரை பூனை, நாய், எலி, குரங்கு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்க பல நாடுகளில் தடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* 3 முதன்மைக்கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்தும், 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கியும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி துணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு மாவட்ட CEO-ஆகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட CEO விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட CEO-ஆகவும், நெல்லை மாவட்ட CEO சுபாஷினி, நாகை மாவட்ட CEO-ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டங்களுக்கு பதவி உயர்வின் மூலம் CEO இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக நிர்வாக அலுவலர், தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்கக துணை இயக்குநர், SCERT துணை இயக்குநர் ஆகிய CEO அந்தஸ்திலான பணியிடங்களும், DEO பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

* யூடியூபர் டிடிஃஎப் வாசன் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages