அக்னிப்புரட்சி இன்றைய (23.09.2022) முக்கிய செய்திகள்.
* கனடாவில் 3 குழந்தைகளுக்கு பார்வை முழுவதும் பறிபோவதற்குள் பசுமையான நினைவுகளை வழங்க உலகை சுற்றும் தம்பதி
டொரண்டோ: கனடாவின் கியூபெக் நகரைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் பெல்லட்டியர். இவரது மனைவி எடித் லேமே. இவர்களுக்கு மியா, காலின், லாரண்ட், லியோ என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த 4 குழந்தைகளில் 3 பேருக்கு ரெட்டினிட்டிஸ் பிக்மென்டோ என்ற விநோத நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதித்தவர்கள் மெல்ல மெல்ல கண் பார்வையை இழந்துவிடுவர்.
இவர்களின் 12, 7, 5 வயது குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பார்வைத் திறன் முற்றிலும் பறிபோகும் முன்னர் உலகத்தைச் சுற்றிப் பார்க்க செபாஸ்டியன் குடும்பம் கிளம்பியுள்ளது. தங்களது பார்வையை குழந்தைகள் இழப்பதற்கு முன்னதாக உலகில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்க்க இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து செபாஸ்டியன் கூறியதாவது: எங்கள் 3 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதையடுத்தே நாங்கள் உலகைச் சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளோம்.
அவர்கள் பார்வையை இழப்பதற்கு முன்னர் உலகில் உள்ள அனைத்து உன்னத விஷயங்களையும், சுற்றுலாத் தலங்களையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு ரசிக்க நான் முடிவு செய்தேன். பல்வேறு நாட்டு கலாச்சாரங்கள் மற்றும் மக்களைக் காண முடிவு செய்தோம்.
அடுத்த 6 மாதத்தில் உலகின் பல்வேறு இடங்களுக்கு நாங்கள் செல்லவுள்ளோம். 2021-ம் ஆண்டில் நாங்கள் கிழக்கு கனடா பகுதியைச் சுற்றிப் பார்த்தோம். பின்னர் கடந்த மார்ச்சில் நமீபியா பயணத்தைத் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து மங்கோலியா முதல் இந்தோனேஷியா வரை சென்றோம்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
அவ்வப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எங்கள் பயணம் குறித்த புகைப்படங்களை பதிவுசெய்கிறோம். குதிரை, ஒட்டகச் சவாரியை எங்கள் குழந்தைகள் மிகவும்விரும்பினர். பிற்காலத்தில் அவர்களது பார்வை பறிபோனாலும் அவர்கள் உலகைச் சுற்றிய நினைவுகள் படம் போல அவர்கள் மனதில் நிற்கும். அவர்களது திருப்திதான் எங்களது மகிழ்ச்சி. எங்களுக்கு அது போதும்” என்றார்.
குழந்தைகள் விநோத நோயால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் நினைவில் பசுமையான நினைவுகளை இடம்பெறச் செய்ய விரும்பிய இந்த பெற்றோர் பாராட்டத்தக்கவர்கள் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
* 41 பல்கலை., உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசுஅரசாணை வெளியிட்டது. சென்னை, தமிழகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இயங்கிவந்த 41 கல்லூரிகள் நேரடியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய 10 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இணை இயக்குநர் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கீ செயின், பேப்பர் வெயிட்கள், காலண்டர்கள் ஏழுமலையானுக்கு பயன்படுத்திய மலர்களால் 850 வகையான கலை பொருட்கள் தயாரிப்பு: சென்னை உள்ளிட்ட இடங்களில் விற்பனை
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்பட்ட மலர்களை கொண்டு கீ செயின், பேப்பர் வெயிட், காலண்டர் என 850 வகையான கலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட பூக்களை வீணாக்காமல் இவற்றை கொண்டு உலர் மலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலை படைப்புகளை உருவாக்க டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்ட பல்கலைக்கழகத்துடன் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம்தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி திருப்பதி அடுத்த பேரூர் அருகே சிட்ரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 28ம்தேதி முதல் 350 சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வெங்கடேஸ்வர சுவாமி, பத்மாவதி தாயார் போட்டோ, பிரேம்கள், பேப்பர் வெயிட்கள், காலண்டர்கள், கீ செயின்கள் மற்றும் இதர பொருட்கள் என 850 வகையான கலை படைப்புகளை தயாரித்துள்ளனர். இவற்றின் மொத்தம் மதிப்பு ரூ.1 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 56 ஆகும்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
இவ்வாறு உருவான கலை பொருட்கள் கடந்த ஜனவரி 25ம்ததி முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திருமலை மற்றும் உள்ளூர் கோயில்கள், பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை தகவல் மையங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த திட்டம் பக்தர்களிடம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர்களும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்....
* மழையால் கொத்தமல்லி மகசூல் பாதிப்பு: ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை
தொடர்ந்து பெய்த மழையால், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன் கனிக்கோட்டை பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் அதிகளவில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லி சமையலில் அதிக அளவில் பயன் படுத்தப்படுவதால், சந்தையில் தினசரி வரவேற்பும், விற்பனையும் இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு விற்பனை சந்தை வாய்ப்பு எப்போதும் இருக்கும் என்பதால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூளகிரி பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி, சூளகிரி சந்தைக்கு விற்பனை கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கு தினமும் டன் கணக்கில் விற்பனைக்கு செல்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் கனமழையால் கொத்தமல்லி தோட்டங் களில் தண்ணீர் தேங்கி, மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால்,சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொத்தமல்லி தழை ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்ததால், சாகு படி பரப்பளவு குறைந்தது. மேலும், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் கனமழையால் கொத்தமல்லி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகி மகசூல் பாதிக்கப்பட்டது.
இதனால், தினமும் வெளியூர்களுக்கு 50 டன் வரை விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 10 டன்னுக்குள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. மேலும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* அருப்புக்கோட்டை இளைஞர் மர்ம மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
அருப்புக்கோட்டையில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரில் கடந்த 13-ம் தேதி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (34) என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தங்கப்பாண்டியன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் காப்பகத்தில் போலீஸார் சேர்த்தனர்.
பின்னர், இரவு தங்கப்பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவிட்டு மீண்டும் காப்பகத்தில் விட்டுள்ளனர்.
ஆனால், உடல்நிலை பாதிக் கப்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்ட தங்கப்பாண்டியன் திடீரென உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அருப்புக் கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முத்துஇசக்கி விசாரணை நடத்தினார். அவரது முன்னிலையில் கடந்த 17-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் தங்கப்பாண் டியனின் உடல் பிரேதப் பரி சோதனை செய்யப்பட்டது.
சடலத்தை பெற்றுக் கொள்ள மறுத்த குடும்பத்தினர், தங்கப்பாண்டியனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து விருதுநகர் சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
* கோவில்பட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
கோவில்பட்டி அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பரமக்குடியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சில்லாங்குளத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 7,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 16 வயது மாணவி, விடுதியில் தங்கியிருந்து பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இப்பள்ளியில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பசுவந்தனை போலீஸார் விசாரித்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர். அவர்களுடன் பள்ளியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் பெ.கீதாஜீவன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்படும். மாணவியின் கடிதம் ஒன்று காவல்துறை விசாரணையில் உள்ளது” என்றார்.
நேற்று மாலை 4 மணிக்கு மேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்கு ஆவணங்களை பசுவந்தனை போலீஸார், சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று மாலையே சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் பள்ளிக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்
* கோவை : பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு
* வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் டியோ ஆகியவை இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும் என புதிய மசோதாவில் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிய விரைவு தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது.
பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் மசோதா குறித்த விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.
* கேரளா பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பந்த்- பேருந்து கண்ணாடிகள் உடைப்பு.
பந்த்தை மீறி வாகனங்களை இயக்கிய பேருந்துகளின் மீது தாக்குதல்.
ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை இயக்கி வருகின்றனர் டிரைவர்கள்.
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகளில் என்ஐஏ சோதனை.
என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் வேலைநிறுத்தம்.
* டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 81.18 ஆக வர்த்தமாகி வருகிறது.
* B.Ed. சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை தொடங்குகிறது.
tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளேன்-ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன் : எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே நிலைபாடு.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை - அசோக் கெலாட்.
* செப்.26ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த பந்திற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
கேரளாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கேரளா உயர்நீதிமன்றம்
* அக்டோபர் 14 முதல் 20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கு தேர்வு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.
* கனடாவில் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கனடாவில் மதவெறி வன்முறைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
* கால்நடை மருத்துவ படிப்பு - அவகாசம் நீட்டிப்பு.
கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் அக்.3 ம் தேதி வரை நீட்டிப்பு.
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் அறிவிப்பு.
வரும் 26ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு.
* போலி பாஸ்போர்ட் - 41 பேர் குற்றவாளிகள்:
போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல்.
மத்திய அரசு ஊழியர்கள் 14 பேர், தமிழக அரசு ஊழியர்கள் 5 பேர், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 பேர் என மொத்தம் 41 பேர் உள்ளனர் - தமிழக அரசு.
வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் "Q பிரிவு" காவல்துறை தலைவர் மேற்பார்வையில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
* தனியார் நிறுவனத்திடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற தேசிய நெடுஞ்சாலை துறை தலைமை பொது மேலாளர் கைது.
பாட்னா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதன்மை பொது மேலாளர் அலவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பறிமுதல்.
மேலும் 8 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் அதிவிரைவு படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு.
கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனை.
* பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றும் - ஜே.பி.நட்டா.
மத்தியில் தமிழகத்தின் பங்கேற்பு இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் - ஜே.பி.நட்டா.
திமுக அரசு மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது.
பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி.
* இரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இருப்பினும், தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணியர், பட்டாசுகளை எடுத்துச் செல்வர். இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்துவருகிறது. விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.
தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில், அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.
பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
* ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவுடன் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "இன்றைய உலகின் தேவைகளுக்கு சிறப்பாக பதிலளிக்கிற வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்னும் கூடுதல் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமைவதற்கான நேரம் வந்து விட்டது என்று நம்புகிறேன்" என கூறினார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில், "ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வரலாற்று ரீதியாகவும், தொடர்ந்தும் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் இதற்காக நிறைய பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
* காவல் அருங்காட்சியகம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு; வருகிற 28-ந் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்
சென்னை, எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகமானது கடந்த 28.09.21 அன்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட ஓர் ஆண்டில் இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 285 பேர் பார்வையிட்டுள்ளனர்.
காவல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு நாளினையொட்டி வருகிற 28-ந் தேதி(புதன்கிழமை) தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், வருகிற 28-ந் தேதி காலை 11 மணியளவில் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெறுகிறது.
* சொத்து மதிப்பில் பாதிக்கு மேல் இழந்து உலகின் 22-வது பணக்காரர் ஆக மார்க் ஸக்கபெர்க் பின்னடைவு
கலிபோர்னியா: ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் தனது சொத்து மதிப்பில் பாதிக்கும் மேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் இழந்து உள்ளதாக தெரிகிறது. அதனால் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்தை பிடித்துள்ளார். இது ப்ளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தள உலக செல்வந்தர்களின் பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியான தகவலின் அடிப்படையில், மார்க் ஸக்கர்பெர்க் பின்னடைவைக் கண்டுள்ளது தெரிய வருகிறது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு, கடந்த 2014-ம் ஆண்டு வாக்கில் அவர் கொண்டிருந்த சொத்து மதிப்பை காட்டிலும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 106 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 55.9 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இந்த சரிவை சந்தித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் சுமார் 71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிவை எதிர்கொண்டது. அதில் பாதி அவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொத்து மதிப்பை இழந்த செல்வந்தர்களில் ஸக்கர்பெர்க் உடன் இன்னும் பலர் இருப்பதாக தெரிகிறது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என அறியப்படும் எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். பில் கேட்ஸ் 27 பில்லியன் டாலர்களும், மெலிண்டா கேட்ஸ் 26 பில்லியன் டாலர்களை, ஜெஃப் பெசோஸ் 46 பில்லியன் டாலர்களையும் தங்களது சொத்து மதிப்பில் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஃபேஸ்புக் என இருந்த பெயரை மெட்டா என மாற்றிய பிறகு சொத்து மதிப்பில் சரிவை ஸக்கர்பெர்க் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
* கதற வைக்கும் கள்ளச் சந்தை: கோடிகளில் வருவாய் இழப்பு
புதுடில்லி:கடந்த 2019 - 20 நிதியாண்டில் மட்டும், சட்டத்துக்கு விரோதமான வர்த்தகத்தின் வாயிலாக, அரசுக்கு, 58 ஆயிரத்து, 521 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 'பிக்கி' நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில், கள்ளச் சந்தையின் மதிப்பு, கடந்த 2019 - 20 நிதியாண்டில், 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. மொபைல் போன், நுகர்பொருட்கள், புகையிலை பொருட்கள், மதுபானங்கள், உணவு பொருட்கள் ஆகிய ஐந்து துறைகளின் வாயிலாக, அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் மதுபானங்கள் துறையினால் மட்டும், 49 சதவீதம் அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்கள் பிரிவில், 17 ஆயிரத்து, 74 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மதுபான பிரிவில், 15 ஆயிரத்து, 262 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிரான மனுக்கள் - தசரா விடுமுறைக்குப் பின் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் தசரா விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ, மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.
வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ரமணா, தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சமீபத்தில் ஓய்வு பெற்றார். மற்றொரு நீதிபதியான சுபாஷ் ரெட்டியும் ஓய்வு பெற்றுவிட்டார். 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் ஓய்வு பெற்றதை அடுத்து, பழைய அமர்வு களைக்கப்பட்டு புதிய அமர்வு உருவாக்கப்பட்டது. தற்போதைய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான இந்த புதிய அமர்வு, வழக்கை விசாரிக்க உள்ளது. இதில், நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எஸ். ரவீந்திர பட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமர்வு, இந்த வழக்கை எப்போது விசாரிக்கும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தற்போது தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் அமர்வு அறிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, வழக்கை பட்டியலிடுமாறு மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை நிச்சயம் பட்டியலிடுவோம் என தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட மிகப் பெரிய அமர்வு விசாரிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்தது.
* இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்திய ஹீரோ மோட்டோகார்ப்: முழு விவரம்
புது டெல்லி: தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தி உள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். அது குறித்த விவரத்தை பார்ப்போம். இந்த விலை உயர்வு இருசக்கர வாகன மாடல்களை பொறுத்து அமைந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சுமார் 4,62,608 வாகனங்களை விற்பனை செய்திருந்தது அந்நிறுவனம். அடுத்த மாதம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் ஹீரோ நிறுவனம் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் அதிகரித்து வரும் உற்பத்தி செலவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை காட்டிலும் ஹீரோ நிறுவனம் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் பிராண்டாக உள்ளது. 100 முதல் 200 சிசி பைக்குகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. தற்போது ரூ.55,450 முதல் ரூ.1.36 லட்சம் வரையில் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்பிளென்டர், எக்ஸ்பல்ஸ், எக்ஸ்ட்ரீம், மேஸ்ட்ரோ உட்பட பல்வேறு வாகனங்கள் இதில் அடங்கும். இந்த வாகனங்களின் விலையில் அதன் மாடலை பொறுத்து அதிகபட்சம் 1000 ரூபாய் வரையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment