கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 8 அடியில் இருந்த நீர், 40 ஆண்டுகளில் நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. உள்ளூர் மக்களின் நலன்களையும், சுற்றுசூழலையும் மதிக்காமல் செயல்பட்டு வருவதை கண்டித்து பாமக சார்பில் இன்று (04.09.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
"இன்று நெய்வேலி நகரில், நிலம் கொடுத்த மக்களுக்கு துரோகம் செய்து, கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரை உறிந்து, பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கும், மண்ணின் மைந்தர்களுக்கு, தமிழர்களுக்கு வேலை மறுக்கின்ற என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். இந்த நிறுவனம் தமிழகத்திற்கு தேவையில்லை என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
66 ஆண்டு காலமாக இந்த மண்ணையும், இந்த மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து, நிலத்தடி நீரை உறிந்து கடலில் அனுப்பி, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக, என்எல்சி நிர்வாகம் மாற்றிக்கொண்டிருக்கிறது.
40 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் என்பது எட்டடி ஆழத்தில் கிடைத்தது. இன்று ஆயிரம் அடி ஆழத்திற்கு சென்று இருக்கிறது. அதற்கு முழு காரணம் என்எல்சி நிறுவனம் மட்டும்தான். இந்த நிறுவனம் ராட்சத பம்புகளை வைத்து நிலத்தடி நீரை உறிந்து கடலில் அனுப்பிக் கொண்டிருக்கிற ஒரு தீய செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒரு கொடுமையான செயல்.
The Agnipuratchi1 is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1
அதுமட்டுமில்லாமல் 66 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலை இல்லை. இன்று வரை அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. இப்போது கூடுதலாக 25,000 ஏக்கர் நிலத்தை எடுக்கப் போவதாக என்எல்சி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த நிறுவனம் எடுத்துள்ளது. அந்த 37,000 ஏக்கர் நிலத்தில் இருக்கின்ற பழுப்பு நிலக்கரியை இன்னும் 15, 20 ஆண்டுகள் எடுக்கலாம். ஆனால் இன்னும் கூடுதலாக 25,000 ஏக்கர் நிலத்தை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து என்எல்சி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு அதற்கு ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது இது அநியாயம்.
தேர்தலுக்கு முன்பு இதே பகுதியில், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தை, மக்களின் நிலத்தை என்எல்சி நிர்வாகம் எடுக்கக் கூடாது என்று வாக்குறுதி கொடுத்தார். கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்தார். என்எல்சி நிர்வாகத்தின் பங்குகளில் தமிழக அரசுக்கும் 4 சதவீத பங்குகள் இருக்கிறது.நிர்வாகத்தில் தமிழகத்தின் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் இருக்கிறார்.
இப்படி இருந்தும், இந்த மாவட்ட மக்களின் உரிமைகளை காப்பாற்ற தவறிய தமிழக அரசை கண்டிக்கின்றோம். இனி நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவது கிடையாது. என்எல்சி நிர்வாகத்தில் சமீபத்தில் 299 பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சார்ந்தவர் கிடையாது. அப்பறம் எதற்கு இந்த நிறுவனம்? தமிழர்களுக்கு வேலை தராத இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் எதற்கு இருக்க வேண்டும்? 37,000 ஏக்கர் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று ஒருவர்க்கூட வேலையில் இல்லை. அப்பொழுது சிலருக்கு வேலை கொடுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் வாரிசுகளுக்கு எந்தவித வேலையும் கொடுக்கவில்லை. அதன்பிறகு ஒப்பந்த தொழிலாளர்கள் என்கிறார்கள்.
ஆண்டுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்எல்சி நிர்வாகத்திற்கு வருமானம் இருக்கிறது. அதில் லாபம் மட்டும் 2400 கோடி ரூபாய். அந்த லாபத்தில் இந்த மக்களுக்கு இந்த என்எல்சி நிர்வாகம் என்ன செய்தது? வேலை கொடுத்தார்களா? இந்த பகுதியில் கட்டுமானத்திற்கு ஏதேனும் கொடுத்தார்களா? இந்த பகுதியின் மேம்பாட்டுக்கு ஏதேனும் கொடுத்தார்களா?
என்எல்சி நிர்வாகம் 300 கோடி ரூபாய்க்கு பள்ளி கட்டினோம் வாட்டர் டேங்க் கட்டினோம் என்று சொல்கிறார்கள். அதனால்தான் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டோம், தமிழ்நாட்டுக்கு என்எல்சி நிர்வாகம் தேவையில்லை. கடலூர் மாவட்டத்திற்கு என்எல்சி நிர்வாகம் தேவை இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும்.
காலநிலை மாற்றத்தினால் 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் இந்தியா கையெழுத்திட்டே இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் படி இந்தியா 2020க்கு மேல் எந்த ஒரு நிலக்கரியையோ, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையோ அதிகப்படுத்த விரிவாக்கம் செய்ய மாட்டார்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது.
2030 க்குள் இந்தியா நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பயன்பாட்டினை பாதியாக குறைப்பதாக கையெழுத்திட்டு இருக்கிறது. அதேபோல 2050 க்குள் இந்தியா, முழுமையாக நிலக்கரி பயன்பாட்டை கைவிடுவோம் என கையெழுத்திட்டு இருக்கிறது.
அங்கு ஒப்பந்தம் போட்ட பிறகு, என்எல்சிக்கு எதற்கு கூடுதலாக நிலம் வேண்டும்? எதற்கு விரிவாக்கம் செய்கிறீர்கள்? இங்கே 2000 மெகாவாட் அனல் மின் நிலையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கூடுதலாக பத்து மடங்கு நிலக்கரியை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பழுப்பு நிலக்கரி எடுத்து, பயன்படாத நிலத்தையும் நிலத்தின் உரிமையாளர்களிடம் திருப்பி தரவில்லை. நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
8 அடியில் இருந்த நீர், 40 ஆண்டுகளில் நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் சென்றுள்ளது என்றால், சுற்றுசூழல், விவசாயம் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த என்எல்சி நிறுவனத்தில் கிடைக்கக்கூடிய பணத்தை உத்திர பிரதேசம்,ராஜஸ்தான், பீகார், ஒரிசாவில் முதலீடு செய்திருக்கிறார்கள். அங்கே கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து, அது நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.
நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் எதிராக, மண்ணின் மைந்தர்களை புறக்கணித்து வருகின்ற வளர்ச்சி தேவையில்லை. அது எந்த திட்டமாக இருந்தாலும் சரி, அது எட்டு வழி சாலையாக இருந்தாலும் சரி, புதிய விமான நிலையமாக இருந்தாலும் சரி, விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழித்து வளர்ச்சி என்பது எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு நீடித்த வளர்ச்சி தான் தேவை.
இன்று நடைபெற்றது அடையாளப் போராட்டம் தான். அதற்காகத்தான் அடையாளத்துக்கு பூட்டை எடுத்து வந்துள்ளோம். அடுத்த முறை என்எல்சி நிர்வாகத்தை கண்டிப்பாக பூட்டி விடுவோம்.
அப்போது செய்தியாளர்கள் என்எல்சிக்கு ஆதரவாக யார் செயல்படுகிறார்கள் என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, "இந்த மாவட்ட நிர்வாகம், அரசை சார்ந்தவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தான் குறிப்பிடுகிறேன். இவர்கள் சண்டையிட்டு தமிழக மக்களின் உரிமைகளை பெற்றுத்தர சண்டையிட வேண்டும். ஆனால் ஏன் செய்யவில்லை.
தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கிறார்கள் நிலம் எடுக்க விடமாட்டோம் என்று சொல்கிறார்கள். தேர்தலுக்கு பிறகு நிலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். என்ன காரணம் என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்.
இதை நாங்கள் விடுவதாக இல்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாகவும் சந்திக்க இருக்கிறோம். அரசியல் ரீதியாகவும் இதனை போராட்டம் செய்ய உள்ளோம். மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்து போராட்டத்தை நடத்த இருக்கிறோம்" என அன்புமணி பேசினார்.
No comments:
Post a Comment