எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

Share This

எங்கே தமிழ்? -  பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

7. நடராசன்  - தாலமுத்து உயிர்த்தியாகம்!

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி காந்தியடிகளுக்கு தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி எழுதிய கடிதத்துக்கு எந்த பயனும் இல்லை. சத்தியமூர்த்தி கடிதம் எழுதுவதற்கு முன்பே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்தன. 1937-ஆம் ஆண்டில் இந்தி கட்டாயப்பாடம் என்ற அறிவிப்பை வெளியிட்ட போதே போராட்டங்கள் வெடித்திருந்தன. எனினும் அவை மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி, எங்காவது ஒரு போராட்டம் என்ற அளவில் தான் நடைபெற்றன. இத்தகைய போராட்டங்களுக்கு பணிந்து இந்தி திணிப்பு முடிவை ராஜாஜி கைவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை.

அதன் விளைவாகத் தான்  28.05.1938 அன்று  திருச்சியில் நடந்த  தமிழ் பாசறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அமைக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு வாரியத்தின் மூலம் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1938-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடர் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தை நடத்துவதற்காக அறிஞர் அண்ணா உள்ளிட்ட பலர் சர்வாதிகாரிகளாக  நியமிக்கப்பட்டனர். இந்தித் திணிப்பைக் கண்டித்து வடசென்னை இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளிக்குள் நுழையும் போராட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை தடுப்பையும் மீறி பள்ளிக்குள் நுழைந்த போராட்டக் காரர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜாஜி வீட்டு முன் போராட்டம்

மற்றொருபுறம் முதலமைச்சர் ராஜாஜி வீட்டு முன் செ.தெ. நாயகம் தலைமையில் பலர் மறியல் போராட்டம் மேற்கொண்டனர். பொன்னுசாமி என்பவர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். மறியல் போராட்டம் நடத்திய அனைவரும் அடுத்த சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதக்கணக்கில் சிறைத் தண்டனை, நூற்றுக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தாய்க்கு ஆதரவாகவும், இந்திக்கு எதிராகவும் போராட்டம் நடத்திய வீரத் தமிழர்களை இந்த தண்டனை எந்த வகையிலும்  தடுக்கவில்லை. ஒரு பிரிவினர் கைது செய்யப்பட்டால் அடுத்தப்பிரிவு என போராட்டக்காரர்கள் அணி அணியாகச் சென்று கைதாகினார்கள். மொத்தம் 1271 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது  செய்யப்பட்டனர். அவர்களில் பலருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.

இந்த தண்டனைகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தின. தமிழுக்காக போராடும் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைப்பதா? என மக்கள் கொந்தளித்தனர். ஆனால், அரசோ,‘‘ தமிழுக்காக போராடியதற்காக யாரையும் கைது செய்யவில்லை. முதலமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தியதற்காகத் தான் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்’’ என்று வினோதமான விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து போராளிகள் தேவையின்றி கைதாவதைத் தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் வீட்டு முன் போராட்டம் நடத்த வேண்டாம்; பொது இடங்களில் போராட்டம் நடத்துங்கள் என்று பெரியார் கேட்டுக் கொண்டார். அதன்படியே  தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் குறையாமல் தொடர்ந்தன.

அறிஞர் அண்ணா கைது

போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைத்த ராஜாஜி அரசு, இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான சர்வாதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவை கைது செய்தது. அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாலும், மற்ற தலைவர்களில் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாலும் போராட்டத்திற்கு தலைமையேற்க தலைவர்கள் இல்லை. ஆனாலும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எந்த வகையிலும் தடைபடவில்லை. தலைவர்களுக்கு பதிலாக மாணவர்கள் தலைமையேற்று போராட்டங்களை நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு தீவிரமானது.

தனித்தமிழ்நாடு - தந்தை பெரியார் கோரிக்கை

மற்றொருபக்கம் 1938-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி திருச்சியிலிருந்து சென்னைக்கு இந்தி எதிர்ப்புப் பேரணி புறப்பட்டது. 42 நாட்கள் பயணமாக சென்னை வந்தடைந்த பேரணியினருக்கு சென்னை கடற்கரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார், பி.டி.ராஜன், டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் முழங்கிய தந்தைப் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டார். அதுமட்டுமின்றி, தமிழை வளர்ப்பதற்கு சிறந்த வழி தமிழகத்தை பிரித்து தனிநாடு அமைப்பது தான் என்று 1938-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி நாளிட்ட விடுதலை இதழில் எழுதிய தலையங்கத்தில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

‘‘தோழர் ஈ.வெ.ரா.  11-ந்தேதி சென்னைக் கூட்டத்தில் கூறியது போல் தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கத் தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்துக்கு முதல்படியே. தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தமிழர் மொழியும் இலக்கண இலக்கியங்களும் கலைகளும் நாகரிகமும் விருத்தியடையும். தமிழ்மொழி வளரும் தன்மையுடைய சீரியமொழி - ஜீவமொழி. எல்லாக் கலைகளையும் எல்லா அறிவுகளையும் தன்னுள் அடக்கிக்கொள்ள தமிழுக்கு சக்தியுண்டு. தமிழர் கலைகளையும் மத அறிவையும் வடமொழியில் சேர்த்தே ஆரியப் பார்ப்பனர் வடமொழியை வளப்படுத்திக் கொண்டனர். இதனை ஒரு பார்ப்பனரான காலஞ்சென்ற பண்டித வி.கெ. சூரிய நாராயண சாஸ்திரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தமிழர்களுக்கு இப்பொழுது முக்கியமாக வேண்டப்படுவது மேனாட்டு விஞ்ஞான அறிவு. மேனாட்டு விஞ்ஞான நூல்களை & தமிழில் & நல்ல சுத்தத் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டும். மொழிபெயர்க்குங்கால் சொற் பஞ்சம் ஏற்படுமோ என அஞ்சத் தேவையில்லை. இன்றியமையாத இடங்களில் ஆங்கிலப் பதங்களையும் தாராளமாக வழங்கலாம். பிலாஸபி, லாஜிக், பிசிக்ஸ், கெமிஸ்டிரி முதலிய ஆங்கில அறிவு நூல்களில் வழங்கப்படும் சொற்கள் எல்லாம் ஆங்கில பதங்கள் அல்ல. கிரிக், லத்தீன், பிரஞ்சு, ஜெர்மன், ஸமஸ்கிருதம் முதலிய பதங்களை ஆங்கிலப் பேராசிரியர்கள் தாராளமாகக் கையாண்டிருக்கின்றனர். அம்முறை எம்மொழிக்கும் இழுக்காகாது. தமிழ் மொழியைப் பல வழிகளிலும் வளப்படுத்துவதே நமது முழு நோக்கமாக இருக்க வேண்டும். தமிழ் மொழி அவ்வுயரிய நிலையை அடைய வேண்டுமானால் அது ராஜாங்க பாஷையாகித் தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் வலியுறுத்தியிருந்தார். தந்தைப் பெரியார் தமிழுக்கு எதிரானவர் என்று பரப்புரை செய்யப்படும் நிலையில் தமிழுக்காக தந்தைப் பெரியார் எவ்வாறு குரல் கொடுத்தார் என்பதை மக்களுக்கு விளக்குவதற்காகவே இதை இந்த தருணத்தில் குறிப்பிடுகிறேன்.

பெரியார் கைது

அதைத் தொடர்ந்து 13.11.1938 அன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டிலும் இந்திக்கு எதிராகவும், தமிழுக்கு ஆதரவாகவும் தந்தைப் பெரியார் முழங்கினார். இந்த மாநாட்டில் தான் அவருக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டுக்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களும் தீவிரமாக ஈடுபட்டனர். அதைக் கண்டு ராஜாஜி அரசு சற்று கலங்கியது. அப்போதும் இந்தித் திணிப்பு முடிவை கைவிடாத அரசு போராட்டத்தை ஒடுக்கத் துடித்தது. போராட்டத்துக்கு ஆதரவளித்த தந்தைப் பெரியாரின் குடியரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகிய இதழ்கள் தலா ரூ.1000 பிணைத்தொகை கட்ட வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. ஆனாலும் பயனில்லை.... இந்தி எதிர்ப்பு போராட்டம் ஓயவில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அடுத்தடுத்து தப்புக் கணக்குகளை மட்டுமே போட்டு வந்த ராஜாஜி அரசு, அடுத்ததாகவும் இன்னொரு தப்புக்கணக்கை போட்டது. எரிகிற கொள்ளியை பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும் என்று, அதாவது தந்தைப் பெரியாரை கைது செய்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஓய்ந்து விடும் என்று அரசு கருதியது. அதை அப்படியே செயல்படுத்தவும் செய்தது. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார். வழக்கை எதிர்க்க விரும்பவில்லை என்று தந்தை பெரியார் கூறிவிட்டதால் அவர் மீது கூறப்பட்ட இரு குற்றச்சாட்டுகளான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தூண்டி விடுகிறார், மகளிரை போராட்டத்துக்குத் தூண்டுகிறார் ஆகிய இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஓராண்டு வீதம் இரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு மட்டுமின்றி, அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா உள்ளிட்ட பலருக்கும் தண்டனைகள் கிடைத்தன. தந்தை பெரியாரை விடுவிக்க வேண்டும் என்ற நீதிக்கட்சியின் கோரிக்கையையும் ஏற்க மறுத்து விட்டார் ராஜாஜி. ஆனால், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சூடு மட்டும் குறையவில்லை.

நடராசன் - தாலமுத்து வீரச்சாவு

1938&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பெரியார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இந்தி எதிர்ப்புப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய வடசென்னை இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன் போராட்டங்கள் தீவிரமடைந்தன. திசம்பர் 5-ஆம் தேதி அவ்வாறு போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரான சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த  லட்சுமணன் - குப்பம்மாள் இணையரின் மகனான நடராசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் கடுமையான வயிற்றுவலியால் அவர் அவதிப்பட்டார். அதைப்பார்த்த சிறை அதிகாரிகள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மன்னிப்பு கேட்டும், இனி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று உறுதியளித்தும் கடிதம் கொடுத்தால் விடுதலை செய்வதாகக் கூறினார்கள். ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட நடராசன்,‘‘ கோழையாக உயிர்வாழ்வதை விட வீரனாக சாவதையே விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டு 1939&ஆம் ஆண்டு ஜனவரி 15&ஆம் ஆண்டு காலமானார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்முதலில் உயிர்த்தியாகம் செய்த தமிழர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 13.02.1939 அன்று கைது செய்யப்பட்ட தாலமுத்து 11.03.1939 அன்று சிறைக்கொடுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர்களின் மரணத்தை நினைத்து ஒட்டுமொத்த தமிழகமும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில்,‘‘.நடராசன் படிப்பறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நடராசன், தாலமுத்து ஆகிய இருவருமே கூலிக்கு போராட வந்தவர்கள்’’ என்று கூறி அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தினார் முதலமைச்சர் ராஜாஜி. இது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போன்று அமைந்தது. இன்னும் பலர் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். எந்த பெரியாரை கைது செய்தால் போராட்டம் கட்டுப்படும் என்று நினைத்து அவரை கைது செய்தார்களோ, அதே பெரியாரை விடுதலை செய்தால் போராட்டம் தணியும் என்று நினைத்து அவரை  1939&ஆம் ஆண்டு மே 22&ஆம்  தேதி ராஜாஜி அரசு விடுதலை செய்தது.

வெளியேறியது இந்தி

அதன்பிறகும் போராட்டங்கள் நீடித்தன. ராஜாஜி அரசோ இந்தித் திணிப்பு முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால், இரண்டாவது உலகப்போரில் இந்தியா ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து ராஜாஜி அரசு பதவி விலகியது. அதன் பின்னர் 21 பிப்ரவரி 1940 அன்று ஆளுனர் 'எர்ஸ்கின்' கட்டாய இந்திக்கல்வியை விலக்கி விருப்பப் பாடமாகக் கற்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அது தற்காலிகமாகமானதாகவே அமைந்தது.
நாளை... 1965  இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்புப் போர்!
                        ************

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages