எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

2. தமிழ் இலக்கியத்தின் சிறப்பு

‘‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி
போல் இனியதாவது எங்கும் காணோம்‘‘
என்று பாடிய பாரதியார் தான்
‘‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
  வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்
  பூமிதனில் யாங் கணுமே பிறந்ததில்லை
   உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’’
என்றும் பாராட்டியுரைத்தார்.

காரணம்.... தமிழுக்கு இலக்கியப் படைப்புகளை வழங்கியதில் கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோருக்கு நிகர் யாருமில்லை. பாரதியார் பார்த்த கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோரைக் கடந்து தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் பங்களித்தவர்கள் ஏராளம்.

அகத்தியம்

தமிழ் இலக்கியம் என்பது பெருங்கடலுக்கு இணையானது. அதிலுள்ள இலக்கியங்களை தேடிக் கண்டுபிடித்து ஆய்வு செய்வதென்பது ஆழப் பெருங்கடலில் இறங்கி மணலைத் தேடி எடுத்து ஆராய்ச்சி செய்வதற்கு இணையானதாகும்.

தமிழின் முதல் இலக்கியப் படைப்பு எனக் கூறப்படுவது அகத்தியம் ஆகும். அகத்திய முனிவரால் படைக்கப்பட்டது தான் அகத்தியம் ஆகும். அகத்தியத்தில் மொத்தம் 12,000 பாடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அனைத்துப் பாடல்களும் இன்னும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. அகத்தியம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்டிருக்கிறது. முதல் சங்கம், இடைச்சங்கம். கடைச்சங்கம் ஆகிய முச்சங்க காலத்திலும் அகத்தியம் தான் முதல் இலக்கியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகத்தியத்தைத் தொடர்ந்து தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், பதிற்றுப் பத்து, பரிபாடல், பதிணென்கீழ் கணக்கு நூல்கள், பதிணென் மேல்கணக்கு நூல்கள் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

தமிழ் இலக்கியங்களின் சிறப்பு

தமிழில் இலக்கியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால், அவற்றுக்கான சிறப்பு என்ன? என்று கேட்டால் அதற்கு பதில் கூற ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளன. பிறமொழிகளின் இலக்கியங்கள் பெரும்பாலும் கற்பனை வளம் கொண்டவையாகவும், வரலாற்றைப் பதிவு செய்பவையாகவும் மட்டுமே இருக்கும்.

ஆனால், தமிழ் இலக்கியங்கள் மட்டும் தான் வாழ்க்கை நெறியை பயிற்றுவிப்பவையாக உள்ளன.  உதாரணமாக சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அதன் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்துமே வாழ்க்கைப் பாடங்களாகத் தான் அமைந்துள்ளன. கோவலன் பிரிந்து சென்றதால் கண்ணகி மிகுந்த மன வேதனை அடைகிறாள். ஆனால், அதை அவள் ஒருபோதும் வெளிப்படுத்திக்  கொண்டதில்லை.

இல்வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்காததற்காக வருத்தப்படாத கண்ணகி, அதேநேரத்தில் கணவனுடன் சேர்ந்து தான் செய்ய வேண்டிய அறங்களை செய்ய முடியாததற்காக மிகவும் வேதனைப்படுகிறார். கண்ணகி சிலம்பின் கதைத் தலைவி.
கதைத்தலைவியான அவள் இன்பங்களைவிடவும் துன்பங்களையே அதிகமாகப் பெறுகிறாள். அந்நிலையிலும் தன்னிலை மாறாமல் பத்தினித் தெய்வமாக உயருகிறாள். கணவன் கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பதற்காகக் கலங்காமல், தன் வாழ்வை இயல்பாக அவள் நடத்துகிறாள்.

கண்ணகியின் துயரம்

அவ்வாழ்வினைப் பற்றிக் கோவலன் அறிய முற்பட்டபோது தனித்து வாழ்ந்ததால், தாம் பட்ட துயரங்களை அவள் எடுத்துரைக்கிறாள்.

‘‘அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’’ ( சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை, 71-73)

இந்தப் பாடலில் அமைந்துள்ள இந்நான்கு அறங்களைத் தன்னால் செய்ய இயலவில்லை என்று கண்ணகி கோவலன் பிரிந்த காலத்தில் வருத்தப்பட்டுள்ளாள்.

அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் ஆகிய அறங்களைக் கண்ணகி இழந்தாளாம். தனித்திருக்கிற இல்லறப் பெண் இந்த அறங்களைச் சிலப்பதிகாரக் காலத்தில் செய்ய இயலாது என்பது கருதத்தக்கது. கணவனும் மனைவியும் இணைந்து இல்லறம் பேணுவது என்பதே சிறப்பு. தனித்து உறைவது என்பது சிறப்பல்ல என்ற அடிப்படை இல்லற அறம் இங்கு காட்சிகளின் கோர்வையால் உருவாக்கப்பெற்றுள்ளது.

மருத்துவவியல்

தமிழ் மொழியில் வெளியாகியுள்ள பழைய இலக்கியங்களில் வாழ்க்கை முறையைக் கடந்து மருத்துவம் பற்றியும் விரிவான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

பழந்தமிழ் மருத்துவ நூல்கள் முழுமையாகத் தற்போது கிடைக்கவில்லை. சங்க காலத்துக்கு முன்னிருந்த மருத்துவ நூலகள் மறைந்தொழிந்தன. மார்பிலே அம்பு தைத்துப் புண்பட்டுக் கிடக்கும் வீர்ர்களுக்கு அறுவை மருத்துவம் (ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீ) செய்து காப்பாற்றியுள்ளனர் என்னும் செய்தி எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்துப் பாடல் ஒன்றில் கிடைக்கிறது. தனது கூரிய நீண்ட அலகினால் நீரைக் கிழித்து உள்ளே புகுந்து பின்னர் வெளியேறும் மீன்கொத்திப் பறவைபோல, நெடிய கூரிய ஊசியை நெஞ்சினுள் செலுத்தி, குருதியுள் தோய்ந்து பின்னர் ஊசியை வெளியே எடுத்துத் தைத்துள்ளனர் பழந்தமிழ் மருத்துவர்கள்.

மணிமேகலையிலும் அறுவை மருத்துவம் செய்த காட்சி ஒன்று வருகிறது. மாடு ஒன்று ஒருவரைக் குத்திக் கிழித்தது. அவரது குடல் அரளிப்பூ மாலைபோல் வெளியே வந்தது. அதனை உள்ளே வைத்துத் தைத்துச் சரிப்படுத்தினர் என்னும் குறிப்பினையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

திருவாசகத்திலும், திருமந்திரத்திலும் மருத்துவச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு மாதத்திலும் கரு எவ்வாறு வளர்கிறது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பதிவு செய்துள்ளார். இன்றைய மருத்துவர்கள் சொல்லும் பல முடிவுகளை மணிவாசகரின் கருத்தினோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். வயிற்றில் வளரும் கருவைக் குறித்துப் போற்றித் திருவகவல் என்னும் பதிகத்தில் சிறப்பாகக் காணமுடியும்.

பேரண்ட பெருவெடிப்பு

உலகம் முழுவதும் இப்போது தீவிரமாக செய்யப்பட்டு வருவது பேரண்டம் குறித்த ஆராய்ச்சிகள் தான். ஆனால், பதிற்றுப் பத்து, பரிபாடல் ஆகியவற்றில் பேரண்ட பெருவெடிப்பு பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.  இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியிருக்கமுடியும் என்பதை  பழந்தமிழர்கள் கணித்தறிந்து வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை ‘பழந்தமிழில் அறிவியல்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார் அதன் ஆசிரியர் முனைவர் க.பலராமன். பேரண்டத் தோற்றம் குறித்து மற்ற நாடுகளில் தொன்மக் கதைகள் விரிந்து கிடக்கின்றன. அவற்றுள் அறிவியல் கூறுகள் இருக்கலாம் என்றுகூடச் சிலர் கருதுவர். ஆனால், பழந்தமிழர்கள் தொன்மக் கதைகளைக் கடைவிரிக்கவில்லை. அறிவியல் பார்வையோடு அவற்றை விளக்க முற்பட்டனர் என்பதே உண்மை.

இந்தப் புவியைத் தாண்டி வெளியே சென்றால் காற்று அற்ற பகுதி இருக்கிறது என்று சுட்டியுரைத்துள்ளனர். வறிது நிலைஇய காயம் (புறம்.20&30), வளியிடை வழங்கா வானம் (புறம்.35) என்று தெளிவாகச் சொல்லியுள்ளனர். செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறம்.30) என்பதாகச் ஞாயிற்று மண்டிலத்தைக் குறித்தனர். வீங்கு செலல் மண்டிலம் (புறம்.😎 என்று கபிலர் சுட்டுவதையே இன்றைய வானிலை வல்லுனர்கள்  ணிஙீறிகிழிஞிமிழிநி ஹிழிமிக்ஷிணிஸிஷிணி என்கின்றனர். பரிபாடலில் கீரந்தையார் வளர்வானம் என்கின்றார். சனிக்கோள் புகைவதையும் கபிலர் பாடியுள்ளார். ஆக, சங்கத் தமிழர் தொன்மக் கதைகளாக வானியல் செய்திகளைப் பதிவு செய்யவில்லை என்று தெளியலாம் என்று பழந்தமிழில் அறிவியல் என்ற நூலில் நிறுவப்பட்டிருக்கிறது.

பேரண்டமும் இந்த உலகமும் எவ்வாறு தோன்றின என்பதனையும் அறிவியல் கண்கொண்டு கீரந்தையார் என்னும் சங்கப் புலவர் பரிபாடலில் கூறியுள்ள பெருவெடிப்புக் கோட்பாடு இன்றைய வானிலை வல்லுனர்கள் கருத்துகளுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
பரிபாடலில் பேரண்டத் தோற்றம்

பரிபாடலின் இரண்டாவது பாடலின் முதல் பதினைந்து அடிகள் பேரண்டம் மற்றும் உலகத் தோற்றத்தை மிக விரிவாக விவரிக்கின்றன. பாடலின் முதலிரு அடிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் பரிமேலழகர் உரையால் பொருளைப் புரிந்து கொள்ளமுடியும்.

தொன்முறை யியற்கையின் மதி.................
............................................................ மரபிற்றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கருவளர் வானத்து இசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுஉயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை (பாடல் 2)

இப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் பொதிந்த கருவூலமாய் இருப்பதைக் காணமுடியும்.

‘‘மண்ணுலகமும் பசும்பொன்னுலகமும் பாழ்பட ஒன்றிற்கொன்று மாறிவருதலாகிய பழைய இயல்பினையுடைய மதியமும் ஞாயிறும் கெடுதலால் அழகிழந்த இயல்பிற்றாக விசும்பு கெட்ட ஊழிகள் முறை முறையாகத் தோன்றின” என்று பரிமேலழர் முதல் நான்கு அடிகளுக்கு விளக்கம் தருகிறார்.

ஞாயிறும், திங்களும் இல்லாது அழகற்றதாய் இருந்த காலம் ஒன்று உண்டு என்கிறார் கீரந்தையார். விசும்பு கெட்ட ஊழிகள் என்கிறார் பரிமேலழகர்.

இதேபோல் அறிவியலும், மருத்துவமும் நிறைந்த தமிழ் இலக்கியப் படைப்புகள் ஏராளமாக உள்ளன. மற்ற நூல்களில் வாழ்வியல், வேளாண்மை, அறிவியல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அவை அனைத்தும் திருக்குறளில் உள்ளன. திருக்குறளில் அறிவியல், மருத்துவம், மனிதநேயம், அறம், வாழ்க்கை நெறி என அனைத்தும் திருக்குறளில் உள்ளன.

இந்த சிறப்பு பிறமொழி இலக்கியங்களுக்கு இல்லை. அது தான் தமிழ் இலக்கியங்களில் சிறப்பு ஆகும். அதனால் தான் உலக இலக்கிய அரங்கில் தமிழ் தழைத்தோங்கி வருகிறது. தமிழ் தழைத்தோங்க  பங்காற்றியவர்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் உள்ளிட்டோர் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

நாளை.... தமிழ் வளர்த்த ஆழ்வார்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages