எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

28. பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை!

இந்தியாவில், ஏன் உலக அளவில் கூட, ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி அங்கு வாழும் மக்களின் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாநிலத்தின் பெயரும் அழைக்கப்படுவதில்லை. ஆனால், தமிழர்கள் வாழும், தமிழ் மொழி பேசப்படும் நமது மாநிலம் தான் தமிழ்நாடு என பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ஆனால், அத்தகைய பெருமை கொண்ட தமிழ்நாட்டில் பிறமொழி கலப்பின்றி தமிழ் பேசப்படுவதில்லை என்பது தான் தமிழர்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.

பிறமொழி பேசும் பேரவலம்

தமிழில் பிறமொழி கலப்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன் தமிழில் பிறமொழி கலக்கப்படுவதை தாங்கிக் கொள்ளமுடியாமல் தான் மறைமலை அடிகளார், தமிழைக் காக்க 1916-ஆம் ஆண்டில் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.

ஆனால், ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு தயிர் விழுந்தால் குடம் பாலும் தயிராகி விடுவதைப் போல  பிறமொழிச் சொற்கள் பிரிக்க முடியாத அளவுக்கு தமிழுடன் கலந்து விட்டன. இன்றைய நிலையில் தமிழர்கள் மம்மி, டாடியில் தொடங்கி சொற்றொடருக்கு நான்கு ஆங்கில சொற்களைக் கலந்து தான் பேசுகின்றனர் என்பது ஒருபுறமிருக்க, தமிழ் சொற்கள் என்று கருதி அவர்கள் பேசுவது கூட பெரும்பாலும் பிறமொழிச் சொற்களாக இருப்பது தான் கொடுமை. தமிழ் எது என்பதைத் தெரியாமலேயே, தமிழ் பேசுவதாக நினைத்து தமிழர்கள் பிறமொழிச் சொற்களை பேசுவதை விட பேரவலம் ஏதுமிருக்க முடியாது.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை

மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கியதைப் போன்று, பிறமொழிக் கலப்பின்றி தமிழை எழுதவும் நம்மால் இயன்ற பணிகளை செய்ய வேண்டும்; மங்காத் தமிழை பொங்கும் தமிழாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை 2002-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கினேன். இந்த அமைப்பின் நோக்கங்கள் உன்னதமானவை.

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் போற்றுவது, கரகாட்டம் மற்றும் அது சார்ந்த பிற கலைகளை வளர்ப்பது, தமிழ் பண்பாட்டை பரப்புவது, தமிழ் மொழியை வளர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வது, தமிழ் மொழியின் பெருமைகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது,  தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த நூல்களை அச்சிட்டு வெளியிடுவது, தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதற்காக செய்தித் தாள்களை அச்சிட்டு வெளியிடுவது, கல்வி குறித்த நூல்கள் தமிழில் வெளியிடப்படுவதை ஊக்குவிப்பது உள்ளிட்டவை பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் முக்கியப் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் கலைகளை வளர்ப்பது, தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்குவது, தமிழ் மொழியில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது, அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளையும் தமிழ் வழியில் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இத்தகைய படிப்புகளை தமிழ் வழியில் படிப்போருக்கு உதவித்தொகை வழங்க வசதியாக அறக்கட்டளைகளை ஏற்படுத்துவது,  மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, தமிழறிஞர்களுக்கும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் அறக்கட்டளை செய்தது.

பரிசுகள், பாராட்டுகள்

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியவற்றில் சிறந்த சேவையாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்குடன், அத்துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பரிசளிப்பு விழாக்களையும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நடத்தியது. சென்னையில் 25.02.2002 அன்று நடைபெற்ற முதலாவது பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவில் தமிழியல் துறையில் சிறந்த தொண்டு ஆற்றியதற்கான பரிசு வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், பதிப்புத்துறையில் பேராசிரியர் முனைவர் மெய்யப்பனுக்கும், படைப்பிலக்கியத்துறையில் இயக்குனர் தங்கர் பச்சானுக்கும், சொல்லியல் துறையில் கோபால் அய்யருக்கும், தொல்பொருள் ஆய்வுத்துறையில்  நடனகாசிநாதனுக்கும், தூய தமிழ்ச்சொல் ஆக்கத்திற்காக பேராசிரியர் அருளிக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.

கிராமியப் பாடலுக்கான பரிசு புட்பவனம் குப்புசாமிக்கும், நாதஸ்வர இசைக்கான பரிசு தில்லானா மோகனாம்பாள் திரைப்பட புகழ் எம்.பி.என். பொன்னுசாமி, சேக்சின்னமவுலானா அவர்களின் பேரன் ச.காசிமுக்கும், புதுக்கவிதைக்கான பரிசு பேராசிரியர் பழமலைக்கும், வானொலி தமிழ்ச் சேவைக்கான பரிசு முனைவர் சேயோனுக்கும், தெருக்கூத்துக் கலைக்கான பரிசு கலைமாமணி பி.கே.சம்மந்த தம்பிரானுக்கும் வழங்கப்பட்டன. மலேஷியத் தமிழறிஞர் சையது பீர்முகமது, பண்ணிசைப் பாடகர் போளூர் தா.சிவசங்கரனுக்கும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் நானே பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தேன். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் விழா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழை வளர்ப்பதே நோக்கம்

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியதாக இருந்தாலும், தமிழறிஞர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்குவதாக இருந்தாலும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி தொடர் போராட்டங்களை நடத்தியதாக இருந்தாலும் அதன் நோக்கம் தமிழை வளர்ப்பது மட்டும் தான். தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை. தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். மேலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் தமிழ்மொழியை பாதுகாக்க உயர்கல்வி தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழை பேசு என கூறுவது வேதனையளிக்கிறது. ஒவ்வொருவரும் பேசும் 10 தமிழ் வார்த்தைகளில் 8 வார்த்தை ஆங்கிலம் கலந்ததாகத்தான் இருக்கிறது. மீதம் உள்ள 2 தமிழ் வார்த்தைகளும் பிற மொழி வார்த்தை கலந்தது தான். இதை நாம் தான் தமிழ் என நினைக்கிறோம். இந்த காலத்தில் ஆங்கிலத்திற்கு முற்று புள்ளி வைத்து எல்லோரும் நல்ல தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அந்த மொழியை அவர்கள் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதுடன் தமிழையும் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழ் மொழியின் விடிவு காலத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களாகிய நாம் தமிழின் மீது ஆர்வம் கொண்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பதைத் தான் நான் செல்லும் இடமெல்லாம் சொல்லி வருகிறேன். நமது இந்த லட்சியத்தை அடைவதற்கான கருவியாகத் தான் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை பயன்பட்டது; பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு பெருமைதான்.

தமிழ்ச் சான்றோர்கள் ஆலோசனை

தமிழ் வளர்ச்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சி வரலாற்றில் நிலைக்கும் வகையில் எண்ணற்றப் பணிகளைச் செய்திருக்கிறது. திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழை மீட்கும் முயற்சிகளின் ஒரு கட்டமாக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 09.03.2008 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் எனது தலைமையில் நடைபெற்ற தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், சான்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு 25.05.2008 அன்று அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று வரை தமிழ் பயிற்றுமொழி ஆகவில்லை.

அதன்பின்னர், தமிழ்நாட்டில் தமிழைக் காக்கும் நோக்கத்துடன், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. எனது தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முனைவர் மா.நன்னன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ,  பேராசிரியர் ஆறு.அழகப்பன்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் இராமசாமி,  ஈழக்கவிஞர் காசி ஆனந்தன், புலவர் கி.த.  பச்சையப்பன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தமிழைக் காப்பதற்கான தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். அக்கூட்டத்தில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இளைஞர்களுக்கு தமிழ்ப் பயிற்சி

இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தமிழ்வழிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நான், முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு  இந்தப் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தேன். அதன்படி 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னையில் பாட்டாளி இளைஞர்களுக்கு  தமிழறிஞர்களைக் கொண்டு தமிழில் பேசுவது, எழுதுவது குறித்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சியின் போது சங்கத்தமிழ் நூல்கள், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள், மொழிப்போராட்டம்  ஆகியவற்றின் வரலாற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததன் மூலம் அவர்களிடையே தாய்மொழிப் பற்று உருவாக்கப்பட்டது. மொத்தம் 8 வாரங்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழா 27.03.2005 அன்று நடைபெற்றது. அதில் மணவை முஸ்தபா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தமிழ் மொழியின் சிறப்புகள், ஆற்றல்கள் குறித்து விளக்கச் செய்ததுடன், தமிழ் இலக்கியம், பிழையின்றி தமிழ் பேசுவது குறித்தும் பயிற்சி அளிக்கச் செய்தேன். இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் மனவை முஸ்தபா அவர்கள் எழுதிய தூய தமிழ் சொற்கள் அடங்கிய நூலை பரிசாக வழங்கினேன். இளைஞர்கள் பிறமொழிக் கலப்பின்றி தமிழில் பேச அப்பயிற்சி பெரிதும் உதவியது.

தமிழ்ச்சொல் பலகைகள்

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சியின் தொடர்ச்சியாக பயனுள்ள இன்னொரு பணியும் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, தூயத் தமிழ் சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்தால் தான், அவர்களை பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி பேசச் செய்ய முடியும் என்று உறுதியாக நம்பினேன். பிறமொழிச் சொற்களுக்கு  இணையான தமிழ்ச் சொற்கள் என்னவென்று தெரியாமலேயே அவர்களைத் தூயத் தமிழில் பேசச் சொல்வது நியாயமல்ல என்பது எனது வாதம். அதன்படி பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் திறந்து வைக்க நான் ஆணையிட்டேன்.

முதல் பலகை 20.03.2005 அன்று சென்னையில் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தமிழகத்தின் அனைத்து ஊர்களின் மையப்பகுதிகளிலும் இத்தகையப் பலகைகள் திறக்கப்பட்டன. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மக்கள் அறிந்து கொள்ள இந்தப் பலகைகள் பெரிதும் உதவியாக இருந்தன. தமிழை வளர்க்க இவை பயன்பட்டன. இதேபோல் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளை பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை செய்தது.

நாளை ... தமிழ்ப் பண்ணிசை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages