எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
30. தமிழ் கற்பித்த தமிழ் ஓசை!
‘தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாரதிதாசன் கவலைப்பட்டதைப் போல தமிழ் நாளிதழ்களில் தமிழைக் காணவில்லையே என்ற கவலை எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. தமிழகத்தில் வெளியாகும் பல நாளிதழ்களில் எழுத்துகள் அனைத்தும் தமிழில் தான் இருக்கும்; ஆனால், சொற்கள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களாகவே இருக்கும். லாரி, பஸ், ஆட்டோ, ஆக்சிடெண்ட் போன்ற சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் நிறைந்திருக்கும். இந்த நிலையை மாற்றி பிறமொழிக் கலப்பில்லாத தமிழ் நாளிதழை தொடங்கி நடத்த வேண்டும் என அடிக்கடி நான் நினைப்பேன்.
முன்னோடி ‘தமிழ்நாடு’
இதுகுறித்த தேடலில் நான் ஈடுபட்டிருந்த போது தான் மதுரைக் கருமுத்து தியாகராச செட்டியார் வெளியீட்டாளராக இருந்து நடத்திய தமிழ்நாடு நாளிதழ் குறித்து அறிந்தேன். 1930-களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழில் நல்ல தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டன. காமராசர் காலத்தில் பொதுக்கல்வி இயக்குனராக பணியாற்றி மதிய உணவுத் திட்டம், இலவசக்கல்வி, இலவசச் சீருடை ஆகியத் திட்டங்களைச் செயல்படுத்த காரணமாக இருந்தவரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உயர்ந்தவருமான நெ.து.சுந்தரவடிவேலு மாதம் ரூ.35 ஊதியத்திற்கு இந்த நாளிதழில் பணியாற்றியவர். மிகவும் சிறப்பாக நடத்தப்பட்ட இந்த நாளிதழ் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இதழியல் உலகில் ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மூடப்பட்டு விட்டது.
தமிழ்நாடு நாளிதழில் நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் தனித்தமிழ் சொற்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால், நாம் தொடங்கும் நாளிதழில் தனித்தமிழ் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மிகக்குறுகிய காலத்தில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கி 2006&ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16&ஆம் தேதி தமிழ் ஓசை நாளிதழ் தொடங்கப் பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் தான் தமிழ் ஓசை நாளிதழின் முதல் இதழை வெளியிட்டார். அதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் மு.கிருட்டிணசாமி, இடதுசாரித் தலைவர்கள் நல்லக்கண்ணு, ந.வரதராஜன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழுக்கு முதன்மை
ஒரு நாளிதழைத் தொடங்கும் போது நல்ல ஆசிரியர் குழுவினரைத் தான் தேடுவார்கள். ஆனால், நல்வாய்ப்பாக வே.பாக்கியநாதன் என்ற மூத்த பத்திரிகையாளர் தமிழ் ஓசைக்கு ஆசிரியராகக் கிடைத்தார். அவரது தலைமையின் கீழ் செயல்படுவதற்கு சிறப்பான ஆசிரியர் குழுவும் அமைந்தது. தினமணி நாளிதழில் தலையங்க ஆசிரியராக இருந்த எனது நண்பரும், பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றத்தின் தலைவருமான ஜே.வி.கண்ணன் தமிழ் ஓசையின் தலையங்க ஆசிரியராக பணி செய்தார். தமிழ் ஓசையில் அவர் எழுதிய தலையங்கள் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ் ஓசை நாளிதழுக்காக நான் தீவிரமாகத் தேடியது ஒரு நல்ல தமிழாசிரியரைத் தான். தமிழ் ஓசை நாளிதழின் செய்தி உள்ளடக்கம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; அதன்படியே உள்ளடக்கம் அமைந்தது. தமிழ் ஓசை நாளிதழில் நான் மிகவும் எதிர்பார்த்தது தனித் தமிழ் மணக்க வேண்டும் என்பது தான். இதை சாத்தியமாக்குவதற்காக தமிழ் ஓசை நாளிதழில் மொழிநடைப் பிரிவு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. மொழிநடைப் பிரிவின் ஆசிரியராக தமிழ்நாடு தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் தலைவரும், தனித்தமிழ் ஆர்வலருமான புலவர் கி.த. பச்சையப்பனை நியமித்தோம். தமிழ் நாளிதழ் வரலாற்றில் மொழிநடை என்ற பிரிவு உருவாக்கப்பட்டதும், மொழிநடை ஆசிரியர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டதும் அது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழோசையின் தமிழ் நோக்கம்!
தமிழ் ஓசை நாளிதழின் முதல் இதழில் அதன் நோக்கங்களை விவரித்து முதல் பக்கத்தில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அதில் தமிழ் ஓசையின் தமிழ்ப்பணிகள் குறித்த பகுதி வருமாறு:
‘‘தமிழின் பலமுனை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் - அதற்கான திட்டங்களை முன்னின்று செயற்படுத்துவதற்குமாக நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனம் - தமிழ்க் கலாச்சார மேம்பாட்டுக்குரிய கருவியாகத் தமிழோசையைத் தொடங்கியுள்ளது, தமிழரியக்கம். தமிழியக்கம். தமிழிசையியக்கம் ஆகிய மும்முனைகளில் ஆக்கப்பணிகளை ஆற்றுவதற்குத் தமிழோசை தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்கிறது, திரட்டிக் கூறுமிடத்து, தனிமனித உரிமை, குடும்ப உறவுகளின் அந்தரங்கப் புனிதம், சமூகங்களுக்கிடையே ஒப்புரவு ஆகிய மக்களாட்சி அம்சங்களின் ஆரோக்கிய அடித்தளத்தை வலுப்படுத்துவதில் தமிழோசை முனைந்து பாடுபடும், தமிழகத்தின் வளர்ச்சி. தமிழினத்தின் எழுச்சி. தமிழின் பலமுனை மேம்பாடு - ஆகியவற்றுக்கு ஓயாது உழைக்க தமிழோசை தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்கிறது, தமிழோசையின் இந்த ஒப்பற்ற கலாச்சார சீரமைப்புப் பணிக்கு விழிப்புள்ள தமிழ்ப் பெருமக்களின் ஆதரவு பொங்கியெழுந்து வருவது நிச்சயம் என்ற திட நம்பிக்கையுடன். தமிழோசை தனது கொள்கைப் பட்டயத்தை தமிழ்ச்சமுதாயத்தின் முன் அன்புரிமையுடன் படைப்பதில் பெருமை கொள்கிறது,
தமிழ் ஓசை
சமூக அநீதிகளுக்கு எதிரான இடியோசை
தமிழ்க்கலாச்சாரத்தின் குழலோசை
வருங்காலத் தமிழகத்தின் மணியோசை’’
(தமிழ் ஓசை16.03.2006)
- தமிழ் ஓசை பிறந்த நாளில் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் முழுக்க முழுக்க தமிழுக்காகவே தமிழ் ஓசை நாளிதழ் அர்ப்பணித்துக் கொண்டது.
பெரிய அளவில் எந்த விளம்பரமும் இல்லாமல் தொடங்கப்பட்ட தமிழ் ஓசை நாளிதழ் அடுத்த சில மாதங்களில் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. முதலில் சென்னையிலிருந்து மட்டும் வெளிவந்த தமிழ் ஓசை நாளிதழ் பின்னர் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழ் ஓசை சென்றடையத் தொடங்கிய நிலையில், அதற்கான வரவேற்பு மேலும் அதிகரித்தது. செய்திகளை முந்தி வழங்குவது, செய்திகளை துல்லியமாக வழங்குவது, தரமான செய்திகளை வழங்குவது உள்ளிட்டவற்றில் தமிழ் ஓசை நாளிதழ் சிறந்து விளங்கியது. ஆனாலும், இந்த அத்தியாயத்தின் கருப்பொருள் தமிழ் ஓசையின் தமிழ்ப் பணி தான் என்பதால் அதுகுறித்த செயல்பாடுகள் பற்றி மட்டும் நான் இங்கு விளக்குகிறேன்.
தனித்தமிழ் பயன்பாடு ஏன்?
தமிழ் ஓசை நாளிதழில் மொழிநடைக்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்ததால் அதன் மூலம் நாளிதழில் உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடக்கத்தில் சில சிக்கல்கள் எழுந்தன. இதழியலுக்கும், தமிழியலுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. தனித்தமிழில் எழுதினால் யாருக்கும் புரியாது; யாரையும் செய்தி சென்றடையாது என்று ஆசிரியர் குழுவினர் தரப்பில் வாதிடப்பட்டது. தனித்தமிழில் செய்திகளை வெளியிட்டால் விற்பனையை அதிகரிக்க முடியாது என்று கூறப்பட்டது. அவர்களின் கோணத்திலிருந்து பார்த்தால் அவர்களின் வாதம் சரியானது தான். ஆனாலும், நான் தனித்தமிழில் தமிழ் ஓசை என்ற நிலையிலிருந்து மாறவில்லை.
தனித்தமிழை மக்கள் உடனடியாக புரிந்து கொள்வது சற்று கடினம் தான். காரணம், அந்த அளவுக்கு பிறமொழிச் சொற்கள் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் பேசும் சொற்களில் 80 விழுக்காடு பிறமொழிச் சொற்கள் தான். அவை அனைத்தும் தமிழ் சொற்கள் தான் என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கும் அளவுக்கு பிறமொழிச் சொற்கள் தமிழ் சொற்களுடன் கலந்துள்ளன. அந்த மாயையில் இருந்து மக்களை மீட்டெடுத்து, தனித்தமிழ் சொற்களை புரிந்து கொள்ள வைக்கவும், தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்த வைக்கவும் சிறிது காலம் ஆகும் என்பது உண்மை தான். ஆனால், இப்போது இந்த முயற்சியை நாம் தொடங்காவிட்டால் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு பிறமொழிச் சேற்றில் தமிழ் என்னும் செந்தாமரை புதைந்து விடும். அப்படி ஒரு நிலை உருவாக அனுமதிக்கக்கூடாது என்று ஆசிரியர் குழுவினரிடம் விளக்கினேன். அவர்கள் அனைவரும் எனது நிலையை புரிந்து கொண்டனர்.
நல்ல தமிழ் நாளும் அறிவோம்!
அதன்பிறகு தனித்தமிழுக்கு எந்தத் தடையும் இல்லை. தமிழ் ஓசையில் தனித்தமிழ் சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் புதிதாக பயன்படுத்தப்படும் தனித்தமிழ் சொற்களுக்கான விளக்கம் இரண்டாவது பக்கத்தில் வெளியிடப்படும். இதற்காகவே சில பத்திகள் ஒதுக்கப்பட்டு, அப்பகுதிக்கு ‘நல்ல தமிழ் நாளும் அறிவோம்’ என்று தலைப்பிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏராளமான தமிழ் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய தனித்தமிழ் சொற்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
புல்டோசர் - நிரவி, சமனி (நிரவுதல், சமப்படுத்துதல்)
ஆட்டோ - தானி
லாரி - சரக்குந்து,
சிகரெட் - வெண்சுருட்டு,
செனரேட்டர் - மின்னாக்கி,
டிரான்சுபார்மர் - மின்மாற்றி,
சம்பவம் - நிகழ்வு,
ஆசர் - முன்னிலை ஆதல், நேர் நிற்றல்,
ஆசர் ஆனார் - முன்னின்றார், முன்னிலையானார்,
கலெக்டர் - ஆட்சியர்,
தகவல் - சேதி
சுதந்திரம் - விடுதலை,
தந்தி - தொலைவரி
சஸ்பெண்ட் - பணி இடைநீக்கம்,
கேஸ் சிலிண்டர் - சமையல் எரிவளி உருளை
- இவ்வாறு பல ஆயிரம் தமிழ் சொற்கள் தமிழ் ஓசையில் அறிமுகம் செய்யப்பட்டன.
‘சொல் திறனறி கட்டங்கள்’
சில நேரங்களில் சில ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்களை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்க்க முடியாது. அத்தகைய தருணங்களில் காரணப் பெயர் சூட்டப்படும். எடுத்துக்காட்டாக பொக்லைன் என்பதற்கு என்ன தமிழ்ப் பெயர் சூட்டுவது? சிலர் ராட்சத எந்திரம் என்பார்கள். அது பொதுவானப் பெயர். அதுமட்டுமின்றி, ராட்சத என்பது தனித் தமிழ் அல்ல. அத்தகைய தருணத்தில் தான் பொக்லைனுக்கு இடித்து அள்ளி என்று தமிழ் ஓசையின் மொழிநடைப்பிரிவு பெயரிட்டது. நிலம், கட்டிடம் போன்றவற்றை பொக்லைன் இடித்து, அள்ளி அகற்றும் தன்மை கொண்டது என்பதால் அதற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதாக மொழிநடைப்பிரிவினர் கூறினர்.
அதுமட்டுமின்றி, தமிழ் ஓசை நாளிதழைப் படிப்பவர்கள் புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதுடன் நிற்காமல் அவற்றை பயன்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும்; அதற்காக தனித்தமிழ் சொற்களை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, ‘சொல் திறனறி கட்டங்கள்’ என்ற பெயரில் குறுக்கெழுத்துப் போட்டி தொடங்கப்பட்டது. இதனால் பலர் தனித்தமிழ் சொற்களை சரளமாக பயன்படுத்தத் தொடங்கினர். தானி, போக்கிலி, கலந்தாய்வு போன்ற சொற்களை அடித்தட்டு மக்கள் கூட தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கினர்.
தமிழறிஞர், தமிழ் ஆர்வலர், தமிழியக்கத்தினர், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் தமிழ் ஓசையை படிக்கத் தொடங்கினர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் தெய்வசுந்தரம், தம்மிடம் பயிலும் ஆராய்ச்சி மாணாக்கரிடம் அன்றாடம் தமிழோசை ஏட்டைத் தந்து புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் செய்திப் பிரிவு, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் கூட தமிழ் ஒசையில் பயன்படுத்தப்படும் தனித்தமிழ் சொற்களை இப்போது பயன்படுத்தி வருகின்றன. அவற்றைக் கேட்கும் போதெல்லாம் தமிழ் வளர்வதை நினைத்து மகிழ்ச்சியும், தமிழ் ஓசையின் நிறுவனர் என்ற முறையில் பெருமிதமும் ஏற்படும்.
முன்முனைவர் பட்ட ஆய்வு
இவற்றைக் கடந்து இன்னொரு சிறப்பும் தமிழ் ஓசைக்கு உண்டு. தமிழ் ஓசையில் தனித்தமிழ் சொற்கள் பயன்படுத்தப்படுவது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் ஒரு மாணவி ஆய்வு செய்து முன்முனைவர்(எம்.பில்) பட்டம் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் தான் இந்த ஆய்வுக்கு வழிகாட்டியிருக்கிறார். பொதுவாக ஊடகங்கள், நாளிதழ்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், அந்த ஆய்வுகள் பெரும்பாலும் இதழியல் துறையில் தான் செய்யப்படும். அவற்றுக்கு மாறாக, தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்தியதற்காக தமிழ்த்துறையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ் என்ற பெருமை தமிழ் ஓசை நாளிதழுக்கு மட்டும் தான் உண்டு. அந்த வகையில் எனக்கு இரட்டைப் பெருமிதம்.
இலக்கணப் பிழையின்றித் தொடர்ப் பிழையின்றி நல்ல தமிழில், கலப்புமொழி களைந்து, வெளிவந்த ஒரே நாளிதழ் தமிழோசை மட்டுமே எனத் துணிந்து கூறலாம். மதுரைக் கருமுத்து தியாகராச செட்டியார் வெளியிட்ட “தமிழ்நாடு” நாளிதழை விஞ்சும் அளவுக்குத் தமிழ் வளர்ச்சிக்குப் புதிய புதிய சொற்களை உருவாக்கித் தந்து தமிழோசை உதவியது. இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தமிழ் ஓசை நாளிதழை நடத்தினோம்.
தமிழ் ஓசையில் பணியாற்றியவர்கள் அனைவரையும் எனது தமிழ்க் குடும்பத்தினராகவே கருதினேன். ‘‘தமிழ் ஓசைக் குடும்பத்தினருக்கு வழங்குவதை ஊதியம் என்று சொல்ல மாட்டேன். ஊக்கத்தொகை என்று தான் கூறுவேன். ஊக்கத்தொகையை கைநீட்டி வாங்கக்கூடாது. உங்கள் கைகள் தாளக்கூடாது’’ என்பேன். அதற்காகவே ஒவ்வொரு மாதமும் ஒரு தட்டில் ஊக்கத்தொகை அடங்கிய உறைகளும், ரோஜா மலர்கள் மற்றும் இனிப்புகள் வைக்கப்பட்டிருக்கும். பணியாளர்களே ஊக்கத்தொகை உறையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் நடைமுறையாக இருந்தது. மக்கள் தொலைக்காட்சியிலும் ஊக்கத்தொகை வழங்குவதில் இதே நடைமுறையே கடைபிடிக்கப்பட்டது.
கைவிட்ட தமிழுலகம்
தமிழ்நாட்டில் நாளிதழ் நடத்துவது எளிதான காரியமல்ல. தமிழ் ஓசை இதழை சமரசம் இல்லாமல் நடத்தியதால் பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லை. அரசின் தவறுகளையும் விமர்சித்ததால் அரசு விளம்பரங்களும் அடிக்கடி நிறுத்தப்பட்டன. தமிழ் ஓசையின் தயாரிப்பு செலவு ஓர் நாளிதழுக்கு ரூ.7 முதல் ரூ.8 வரை ஆனது. ஆனால், விற்பனை செய்யப்பட்டது 2 ரூபாய்க்கு தான். அதுவும் கூட வினியோகச் செலவுக்கு சரியாகிவிடும். அதனால் ஒவ்வொரு மாதமும் இழப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது.
அதேநேரத்தில், தமிழுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தமிழ் ஓசை நாளிதழுக்கு பெயரும், பாராட்டுகளும் கிடைத்த அளவுக்கு வணிகமும், விளம்பரங்களும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழாசிரியர்கள் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தாலே தமிழ் ஓசை நாளிதழ் நிலை பெற்றிருக்கும். ஆனால், அத்தகைய ஆதரவு கிடைக்காததால் 2012&ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31&ஆம் தேதியுடன் தமிழ் ஓசை நாளிதழ் வெளியீடு நிறுத்தப்பட்டது. எனது வாழ்வில் நான் எடுத்த வலி மிகுந்த கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று.
நாளை தமிழ் மண் பயனுறச் செய்த மக்கள் தொலைக்காட்சி!
No comments:
Post a Comment