எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

21. எங்கே தமிழ்... எதிலே தமிழ்?

தமிழ் மொழியை மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. நான் செல்லுமிடங்களில் எல்லாம் பார்க்கிறேன்... அரசு அலுவலகங்களுக்காக பன்னடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவற்றின் உச்சியில் ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்ற பலகைகள் அமைக்கப்பட்டு, அவை நியான் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் தமிழ் அந்த அளவு உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒளிரவைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை. மிகுந்த வேதனையுடன் தான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் தமிழ் மொழி கட்டிடத்தின் உச்சிகளில் நியான் விளக்கொளியில் மட்டுமே ஒளிர்கிறது. நிஜத்தில் ஒளிரவில்லை.

தமிழ் மொழியைத் தவிர்த்து பிற மொழிகளைக் கொண்டாடும் போக்கு இப்போது அல்ல... பாரதியார், பாவேந்தர் காலத்திலேயே தொடங்கி விட்டது. அதைப் பார்த்து தான் பாரதியார் வாழ்ந்த  காலத்தில் அவரது ஊருக்கு அருகில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியரான நீலகண்ட சாஸ்திரிகள்  ‘‘ மெல்லத் தமிழ் இனி சாகும்’’ என்று நக்கலாகக் கூறினார். இதனால் கோபடைந்த பாரதியார், நீலகண்ட சாஸ்திரிகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில், “இயற்கையின் பல் நுட்பங்களை வெளிப்படுத்தும் புதிய கலைகள் மேற்கே வளர்கின்றது. அத்தகைய கலைகள் தமிழில் இல்லை; அதைத் தமிழில் எவரும் படைப்பதும் இல்லை; அதைத் தமிழில் சொல்லுவதற்கு தமிழில் வளமும் இல்லை, என்று அந்தப் பேதை மாந்தன் உரைத்தான். இதை அவன் எனக்கு உரைத்தல் தகுமோ? எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர். சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இந்தப் பழி தீரும். என்றுமே தமிழ் புவியில் புகழுடன் திகழும்” என்று பாடினார். இதைக் கூட புரிந்து கொள்ளாமல்  பாரதியார் தமிழ் அழியும் என்று கூறியதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

செயல்படுத்தப்படாத பாரதியாரின் செயல் திட்டம்

ஆனால், மற்றொரு விஷயம் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ் இனி சாகும் என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறியதற்கு அவ்வாறு கோபப்பட்ட பாரதியார்  இப்போது இருந்திருந்தால் சாஸ்திரிகளின் கருத்தை வேதனையுடன் ஒப்புக்கொண்டிருப்பார். காரணம் தமிழ் இப்போது தமிழர்களாலேயே முதுகில் குத்தி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்றிருந்த நிலை மாறி, எங்கே தமிழ்.... எதிலே தமிழ் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

‘‘எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர்’’ என்று பாரதியார் கூறினார். ஆனால், பாரதியாரின் வார்த்தைகளை நாம் மதிக்கவில்லை. பிறமொழிகளில் உள்ள அரிய  கலைச்செல்வங்களை நாம் தமிழுக்கு கொண்டு வரவில்லை. மாறாக, தமிழ் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பாடத்த்திற்கான தமிழ் வழி பாடநூல்கள் யாழ்ப்பாணம் மத்திய நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த நூல்களைக் கூட நமது பாடத்திட்டத்தில் சேர்ந்து தமிழ் வழியில் மருத்துவம் கற்பிப்பதற்குக் கூட நமது ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். தொடர்ச்சியான வலியுறுத்தலுக்குப் பிறகு அடுத்த ஆண்டில் தான் மருத்துவப் படிப்புக்கான பாட நூல்களை தமிழ் மொழியில் வெளியிடுவதற்காக ஏற்பாடுகளை தமிழக அரசுத் துறைகள் மேற்கொண்டு வருகின்றன.

பாரதிதாசன் காலம்

பாரதியார் காலத்திற்கு பிறகும் தமிழை வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.... மாறாக தமிழைப் புறக்கணிக்கும் முயற்சிகள் மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்தன. அதனால் தான் ஆணி விற்பனை நிலையங்கள் தொடங்கி, நகைக்கடைகள் வரை அனைவரும் தமிழைப் புறக்கணிப்பது சரியா? என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சிக் கவிஞர் -பாரதிதாசன் வினா எழுப்பியிருந்தார்.

‘‘வாணிகம் தம் முகவரியை
வரைகின்ற பலகையில்
ஆங்கிலமா வேண்டும்?
வானுயர்ந்த செந்தமிழால்
வரைக என அன்னவர்க்குச்
சொல்ல வேண்டும்!
ஆணி விற்போன் முதலாக
அணிவிற்போன் ஈறாக
அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல்
நந்தமிழின் நலங்காக்கும்
செய்கை யாமோ?’’

சில விதிவிலக்குகள்

மனிதர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் தமிழ் இல்லாமல் போய்விட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் கூட தமிழ் இல்லை என்று தான் பாரதிதாசனார் மேற்கண்டவாறு வருந்துகிறார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தனியாகவும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் ஏராளமான போராட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன். ஆனால், பெயர்ப்பலகைகளில் இன்னும் தமிழைக் கொண்டுவர முடியவில்லை. பெயர்ப்பலகைகளிலும்  இன்னும் ஆங்கிலம் தான் ஆட்சி செய்கிறது. இந்த உண்மையை சொல்வதற்கே வெட்கமாய் இருக்கிறது.

அதேநேரத்தில் இன்னொரு உண்மையையும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். சென்னையின் பல்வேறு இடங்களில் இந்தியன் காஃபி ஹவுஸ் உள்ளது. தொடக்கத்தில் அதன் பெயர் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுதப்பட்டிருக்கும். ஆனால், காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு, இப்போது பல இடங்களில் இப்போது இந்தக் கடைகளில் ‘‘இந்தியன் குழம்பியகம்’’ எனத் தூயத் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேறு சில உதாரணங்களையும் கூறலாம். ஆனால், இவை அனைத்தும் அரிதிலும், அரிதான அதியசங்களாகத் தான் உள்ளனவே தவிர பெரும்பான்மையாக இல்லை.

பள்ளிகளில் தமிழ்

ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்கான அடிப்படைத் தேவை அந்த மொழி பயன்பாட்டில் இருக்க வேண்டும். செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம் அழிவின் விளிம்பில் உள்ளது. முன்னொரு காலத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் மொழியாக சமஸ்கிருதம் திகழ்ந்தது. ஆனால், பயன்பாட்டில் இல்லாததால் அம்மொழி பேசுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து  2001&ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 14,135 ஆக சரிந்து விட்டது. ஆனால், கட்டாய மொழித்திணிப்பு நடவடிக்கைகள் காரணமாக 2011&ஆம் ஆண்டில் 24 ஆயிரம் பேர் சமஸ்கிருதம் பேசுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சமஸ்கிருத மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம் அதிக பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்பட்டது தான். இதிலிருந்து பள்ளிகளில் ஒரு மொழிக்கு முக்கியத்துவம் அளித்தால் அதை வளர்க்க முடியும் என்பது  தெளிவாகிறது.

ஆனால், தமிழை வளர்க்கும் விஷயத்தில் இதை செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் தமிழை பயிற்று மொழியாக்கினால் நிச்சயம் தமிழ் மொழியை வளர்க்க முடியும். ஆனால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூட ஆங்கில வழிக் கல்வி முறையை பின்பற்றுவதன் மூலம் ஆங்கில அடிமைகளைத் தான் வளர்க்கிறோம். களைகள் விளையும் மண்ணில் பயிர் செழிக்காது என்பதைப் போல ஆங்கில அடிமைகள் வளர்க்கப்படும் பள்ளிகளில் தமிழ் எவ்வாறு வளர முடியும்? பள்ளிகளில் தமிழின் பயன்பாடு குறைக்கப்படுவதால் அதன் வளர்ச்சியும் தடைபடுகிறது என்பது உண்மை.

தமிழ் பேசுவோரின் எண்ணிக்கைக் குறைவு

இந்தியாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 2001&ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,  5 .91 விழுக்காடாக இருந்தது. ஆனால், 2011ம் ஆண்டில் இது  5.89  விழுக்காடாக குறைந்து விட்டது. 2011&ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 123 கோடியாகும். அதை அடிப்படையாக வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் பத்தாண்டுகளில் இந்தியாவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை, இயல்பாக இருக்க வேண்டிய அளவை விட 2.46 லட்சம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்களில் முக்கியமானது பள்ளிகளில் தமிழ் இல்லாதது தான்.

ஆலயங்களில் தமிழ் இல்லை

நீதிமன்றங்களில் தமிழ் இல்லாமல் போனது குறித்து முந்தைய அத்தியாயங்களில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆலயங்களிலும் இப்போது தமிழுக்கு இடமில்லை என்பது தான் சோகமாகும். ஆலயங்களில் தமிழ் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தழைத்து வளர்ந்தது. தமிழை வளர்த்ததில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்த பங்களிப்பை எவரும் மறுத்துவிட முடியாது. அவர்கள் இயற்றிய தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியவை தான் இறைவனின்  அழகையும், சிறப்பையும், பெருமையையும் எளிதில் புரியும் வார்த்தைகளால் மக்களுக்கு விளக்கின.

எடுத்துக்காட்டுக்கு தேவாரத் தொகுப்பில் ஏழாவது திருமுறையில் இன்றைய விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானின் புகழை சுந்தரர் கீழ்க்கண்டவாறு போற்றுகிறார். அப்பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்:

பித்தா பிறை சூடீ பெரு
மானேயரு ளாளா
எத்தால்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர்அருள் துறையுள்
அத்தாஉனக்(கு) ஆளாய்இனி
அல்லேன்என லாமே.

தெளிவுரை : பித்தனே! பிறையைக் கண்ணியாகச் சூடியவனே! பெருமை உடையவனே! பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அருள்துறை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! எனது நெஞ்சத்துள் உன்னை நீங்காமல் வைத்தருளினாய். அதனால் உன்னை மறவாமல் நினைந்து முன்பே உனக்கு அடியவனாகி விட்டேன். இப்போது உனக்கு அடியவன் அல்லேன் என எதிர்வழக்காடியது பொருந்துமோ?

இறைவனின் பெருமையை இதைவிட சிறப்பாக விளக்க முடியாது. ஆனால், தேவாரமும், திருவாசகமும் பாடப்பட்ட திருக்கோயில்களில் இன்று தமிழ் இல்லை; எதுவும் தெரியாத சமஸ்கிருதம் தான் கோவில்களில் வழிபாட்டு மொழியாக விளங்கிறது. தமிழகத்திலுள்ள பல ஆலயங்களில் ‘தமிழில் வழிபாடு நடத்தப்படும்’ என்ற பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும்,  தமிழில் வழிபாடு என்பது அரிதிலும் அரிதானதாகவே உள்ளது. தமிழ் வளர்த்த ஆலயங்களிலேயே தமிழ் இப்போது அழிந்து கொண்டிருக்கிறது.

தாலாட்டிலும் தமிழ் இல்லை

என்னைப் பொறுத்தவரை தாலாட்டை விட சிறந்த, இனிமையான தமிழ் இலக்கியம் இல்லை என்று  கூறுவேன். ஒரு குழந்தையை இசை கலந்த பாடல்களால் உறங்க வைக்க முடியும் என்பது ஒர்ய் மொழியின் சிறப்பு. ஆங்கிலத்திலும் Lullaby என்ற பெயரில் தாலாட்டுப் பாடல்கள் உள்ளன. ஆனால்,  தமிழ் தாலாட்டுப்பாடல்களும் ஒப்பிடும் போது ஆங்கிலத் தாலாட்டுப் பாடல்கள் ஒன்றுமே இல்லை. உதாரணத்திற்கு நாட்டுப்புற தாலாட்டுப் பாடல் ஒன்றைக் கேட்போம்....

கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்
என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்டாலே மனது மயங்கும்.... இமைகள் மூடும்... கண்கள் உறங்கும்.

கண்ணதாசனின் தாலாட்டு

இவை மட்டுமின்றி இறைவனுக்கும் தாலாட்டுப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அவை இறைவனை மட்டுமின்றி குழந்தைகளையும் உறங்க வைப்பவை. கண்ணனுக்காக கண்ணதாசன் இயற்றிய தாலாட்டுப் பாடல் ஒன்றின் சில வரிகளை மட்டும் உங்களுக்காக கூறுகிறேன்....

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி)
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
கண்ணதாசனின் இந்த தாலாட்டுப் பாடலை எந்தக் குழந்தையும் முழுமையாக கேட்காது. பாதிப் பாடலை கேட்பதற்குள்ளாகவே உறங்கி விடும். ஆனால், இன்று தமிழ்நாட்டு இல்லங்களில் இத்தகைய தமிழ் தாலாட்டுகள் கூட இசைக்கப்படுவதில்லை. ஆங்கில இசைத்தட்டுகள் இசைக்கப்படுகின்றன. அவற்றைக் கேட்டு குழந்தைகள் உறங்குவதில்லை.... அழுகின்றன என்பது தான் உண்மை.

அரசு நிர்வாகம்

தமிழ்நாட்டில் 66 ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே அரசு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான். மத்திய அரசு அல்லது பிற மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்புகளும், ஆவணங்களும் ஆங்கிலத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற போதிலும் கூட, அவற்றுக்கு தமிழ் மொழிபெயர்ப்பும் செய்யப்பட வேண்டும். அது தான் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஆனால், பெரும்பான்மையான அரசாணைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படுவதில்லை என்பது தான் உண்மை. தமிழக அரசின் சார்பில் வாரத்திற்கு ஒருமுறை அரசிதழ் (கெசட்) வெளியிடப்படுவதுண்டு. அதில் தான் முக்கியமான அறிவிப்புகள்  வெளியிடப்படும். ஆனால், அரசிதழிலேயே 90% அறிவிப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிர்வாகமே தமிழை புறக்கணித்தால் அந்த மொழி எவ்வாறு வளர்ச்சியடையும்?

அன்றாட வாழ்விலும் தமிழ் இல்லை

இவையெல்லாம் ஒருபுறமிருக்க அன்றாட வாழ்க்கையிலேயே தமிழுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்பது தான் மிகவும் வேதனை அளிக்கிறது. இது அவமானகரமானது.

தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாரதிதாசன் கூறியிருக்கிறார். அத்தகைய அமுதுக்கு இணையான தமிழ் மொழியில் அற்புதமான சொல் அம்மா ஆகும். அது உயிருக்கு இணையானது ஆகும். ஆனால், அந்த சொல்லை உச்சரிப்பதற்குக் கூட நமது தமிழ்ப் பிள்ளைகளால் முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்று பெரும்பான்மையான வீடுகளில் அம்மா, அப்பா என்ற சொல்லே புழக்கத்தில் இல்லை. மம்மி, டாடி மட்டும் தான் புழக்கத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் தங்களை குழந்தைகள் அழைப்பதைத் தான் பெற்றோரும் விரும்புகின்றனர். பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள் தங்களை மம்மி, டாடி என்று அழைத்தால் தங்கள் குழந்தை படித்து பட்டம் பெற்றது போன்ற மகிழ்ச்சிக்கு பெற்றோர் ஆளாகின்றனர்.

‘ப்ரோ’ ஆன அண்ணன்

தமிழில் உறவுமுறைகளை அழைக்க தாய்மாமன், மாமன், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமி, சித்தி என பல வார்த்தைகள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் அனைத்துக்கும் அங்கிள், ஆண்டி தான். இந்த அங்கிளும், ஆண்டியும் தான் தமிழ்நாட்டு இல்லங்களில் நிறைந்து கிடக்கிறார்கள். அண்ணன் என்பது அற்புதமான வார்த்தை. அதைக் கூட இங்கு யாரும் பயன்படுத்துவதில்லை. பிரதர என்ற ஆங்கில வார்த்தையை சுருக்கி ‘ப்ரோ’ என்று தான் அழைக்கிறார்கள்.

உணவகங்களுக்குச் சென்றால் அங்கு எவரும் சோறு என்று கேட்பதில்லை. ‘ரைஸ்’ தான் வேண்டுமாம். ரைஸ் என்பதன் தமிழ் சொல் அரிசி ஆகும். ஆனாலும், அதை உணராமல் சோறு என்பதை ரைஸ் என்ற ஆங்கில வார்த்தை மூலமாகவே கேட்கின்றனர். உணவகங்கள் அனைத்தும் ரெஸ்டாரண்டுகளாக மாறிவிட்டன. அதேபோல் பள்ளிகள் மறைந்து ஸ்கூல்களாகி விட்டன.

தமிழகத்திலுள்ள கோவில்கள் அருள்மிகு என்ற வார்த்தையுடன் தான் தொடங்கும். ஆனால், இப்போது அனைத்து கோவில்களின் பெயர்களுக்கு முன்னாலும் ஸ்ரீ என்ற வடமொழிச் சொல் வந்து நுழைந்து விட்டது. இதேபோல் ஆயிரமாயிரம் உதாரணங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். மொத்தத்தில் எங்கே தமிழ்? எதிலே தமிழ்? என்ற நிலை தான் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. இந்த சீரழிவுக்குக் காரணம் தமிழகத்தை 55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் தான்.

நாளை.... தமிழர் வாழ்வுரிமை மாநாடு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages