எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

19. செம்மையாக இயங்காத செம்மொழி நிறுவனம்!

தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் 125 ஆண்டு கால கனவு ஆகும். 1870&ஆம் ஆண்டில் பிறந்து 1903&ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிதிமாற்கலைஞர் என்றழைக்கப்பட்ட சூரியநாராயண சாஸ்திரிகள், அவரது ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்ற நூலில் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்று தொடங்கிய தமிழ் செம்மொழி கனவு 2004-ஆம் ஆண்டு மத்தியில் திமுக, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் சாத்தியமானது. அதைத் தொடர்ந்து செம்மொழி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழி தமிழ் உயராய்வு மையம் 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட இந்த அமைப்பு  2008-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட பல மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்த ஆய்வுக்காக மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழி உயராய்வு மையம் அமைப்பது மட்டும் தான் வழக்கம். ஆனால், தமிழுக்கு மட்டும் தனியாக, அதுவும் அந்த மொழி பேசப்படும் மாநிலத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு மொழி குறித்த ஆய்வுக்காக மத்திய நிறுவனம் அமைக்கப் பட்டிருப்பது தமிழ் மொழிக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சிறப்பும், முக்கியத்துவமும் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளுக்கு வழங்கப்படவில்லை என்பது தான் வேதனையாகும்.

ஆராய்ச்சியல்ல.... அரசியல்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்ட போதே அறிஞர்கள் அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உருவாக்கப்படும் போதே அது அரசியல் அமைப்பாக உருவாக்கப்பட்டு விட்டது. அது தான் தமிழ் செம்மொழி குறித்த ஆராய்ச்சிகளுக்கு பெரும் தடையாக உள்ளது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்  தொடங்கப்பட்ட போது, தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பவர் தான் அதன் தலைவராக இருப்பார் என்று விதி வகுக்கப்பட்டது. 2008&ஆம் ஆண்டு இந்த நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். அதனால் அவர் இந்நிறுவனத்தின் தலைவர் ஆனார்.

கலைஞர் தலைவர் ஆனதும் தமிழ் செம்மொழி நிறுவனத்தின் உயர்நிலைக்குழுவில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற இரு அமைப்புகளை ஏற்படுத்தினார். ஐம்பெருங்குழுவின் உறுப்பினர்களாக முனைவர் அவ்வை நடராசன், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா, கவிப்பேரரசு வைரமுத்து, முனைவர் பு.பா.இராஜராஜேஸ்வரி, கவிஞர் கனிமொழி (மாநிலங்களவை உறுப்பினர்) ஆகிய ஐவரும் நியமிக்கப்பட்டனர். எண்பேராயத்தில் முனைவர் மா. நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன், கவிஞர் வாலி, பேராசிரியர் சாலமன் பாப்பையா, கவிவேந்தர் கா. வேழவேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரும், எழுத்தாளருமான இரவிக்குமார், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் ஆகிய 8 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

கலைஞருக்குப் பிறகு....

கலைஞர் முதலமைச்சராக இருந்தவரை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருகை புரிவதையும், ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், கலைஞருக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற  ஜெயலலிதா அவர் 2016-ஆம் ஆண்டு இறுதியில் மறையும் வரை ஒருமுறை கூட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை. அவருக்குப் பிறகு முதலமைச்சராக வந்த ஓ.பன்னீர்செல்வமும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டியதில்லை. 2017-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பின்னர் ஒருமுறை செம்மொழி நிறுவனத்தின் அதிகாரிகளை தமது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

2021-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கடந்த 17.01.2022 அன்று சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன் புதிய நூல்களையும் வெளியிட்டார்.

கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அவரது சொந்த நிதி ரூ.1 கோடியை வழங்கி   ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’ என்ற அமைப்பை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் முதலமைச்சர் இருந்த காலத்தில் 2009-ஆம் ஆண்டு மட்டும் இந்த விருது வழங்கப்பட்ட நிலையில் அதன் பின் 12 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படாமல்  நிறுத்து வைக்கப்பட்டிருந்தன. மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தான் அந்த விருதுகள் வழங்கப்பட்டன.

நிரந்தர இயக்குனர் இல்லை

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அதை முடக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனம் அமைக்கப்பட்ட நாளிலிருந்தே அதற்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. இது நடுவண் நிறுவனம் என்பதற்காக தமிழகத்திலுள்ள ஐஐடி, என்ஐடி, அஞ்சல்துறை போன்ற ஏதோ ஒரு நடுவண் நிறுவனத்தின் அதிகாரியை பொறுப்பு இயக்குனராக நியமிப்பதை நடுவண் அரசு வழக்கமாக வைத்திருந்தது.  அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு தமிழே தெரியாது என்பதால், அவர்களால் தமிழின் வளர்ச்சிக்கும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் செய்ய முடியவில்லை. இந்த நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக தமிழறிஞர் ராமசாமி பணியாற்றிய காலத்தில் ஓரளவு தமிழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அந்த பணிகளும் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன.

கடந்த 2014 ஆம் ஆண்டில் முனைவர் பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நடுவணில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவருக்கு பணி ஆணை வழங்க இப்போதுள்ள நடுவண் அரசு மறுத்து விட்டது. இடையில் சில காலம் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்.ஐ.டி) பதிவாளராக பணியாற்றிய அ.பழனிவேல் என்பவர்   செம்மொழி நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொண்டார். திருச்சியில்  பணியாற்றும் ஓர் அதிகாரி சென்னையில் உள்ள செம்மொழி நிறுவனத்தின் பணிகளை கவனித்துக் கொள்வது எவ்வாறு சாத்தியம்? அதிலும் தமிழ் மொழி குறித்து எதுவும் தெரியாதவர்களால்  என்ன செய்ய முடியும்? இத்தகைய செயல்களால் தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முடங்கியது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு முழு நேர இயக்குனர்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 01.06.2020 அன்று அப்போதைய அதிமுக அரசுடன் கலந்து பேசி, நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக திருப்பூர் மாவட்டம் முள்ளிபுரத்தில் உள்ள காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த இரா. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த பதவிக்கான அவரது தகுதி குறித்து தமிழறிஞர்கள் மத்தியில் வினாக்கள் எழுப்பப்பட்டன. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது மத்திய பல்கலைக்கழகத்திற்கு இணையானது ஆகும். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் என்பவர், மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், உதவிப் பேராசிரியர் நிலையில் இருந்த முனைவர் சந்திரசேகரனை இயக்குனராக நியமித்தது சரியானது அல்ல என்பதே தமிழறிஞர்களின் கருத்தாக இருந்தது. இதே கருத்தை நானும் தெரிவித்தேன்.

பத்து முதன்மைத் திட்டப் பணிகள்

செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் பத்து முதன்மைத் திட்டப்பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வகுத்துள்ளது. அவற்றின்  விவரங்கள் வருமாறு:

1. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு : தொன்மைக்காலம் முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும் மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரை மேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்கப்படும்.

2.பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்: 41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளை மேற்கொள்ளப்படும்.

3. வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்: தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் இலக்கண ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கென இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் மொழிநடை கருத்தில் கொள்ளப்படும்.

4.தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வு: பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

5.தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்: வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும்.

6. தமிழும் பிற மொழிகளும்: தமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

7.பழந்தமிழ் ஆய்விற்கான மின் நூலகம்: அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக் கொள்ள மின் நூலகம் வடிவமைக்கப்படும்.
8. இணையவழிச் செம்மொழியைக் கற்பித்தல்: உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணைய வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப்படும்.

9. பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்: 41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற்பொருட்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்படும். இந்நூற்களைப் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும்.

10. பழந்தமிழ்க் குறுங்காட்சிப் படங்கள்: தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்குதல்.

ஆனால், மேற்கண்ட 10 முதன்மைத் திட்டப் பணிகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. குறும்படங்கள் எடுத்தல், சில ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் தவிர வேறு எந்த பணிகளும்  மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 19-ஆவது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்தக் கால இடைவெளியில் தமிழின் பெருமை உலக அளவில் பரப்பப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மொழியின் படைப்புகள் பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வ பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. இரா.சந்திரசேகரன் பொறுப்பேற்ற பிறகு இரு கட்டங்களாக 24 ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் கூட தமிழாராய்ச்சி என்ற யானைப் பசிக்கு இவை சோளப்பொறியை விட சிறியவை என்பதே உண்மை.

சுருங்கியப் பணிகள்

அதுமட்டுமின்றி, ஏற்கெனவே 12 துறைகளாக இயங்கிவந்த செம்மொழி நிறுவனத்தை வெறும் 7 தற்காலிகத் திட்டங்களாக சுருக்கிவிட்டனர். அந்நிறுவனத்தால் சிறப்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுவந்த செய்தி இதழ் நிறுத்தப்பட்டு விட்டது. செம்மொழி ஆய்வுகளை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றிற்கு வழங்கி வந்த நிதியையும் குறைத்துவிட்டனர்.

செம்மொழி நிறுவனத்தை மூட நடந்த சதி

இதற்கெல்லாம் மேலாக  சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை திருவாரூர் நடுவண் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக மாற்ற 2017-ஆம் ஆண்டு தீர்மானித்தது.  இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முயற்சியில் நடுவண் அரசு ஈடுபட்டது. திட்ட ஆணையத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு தான் இதற்கான பரிந்துரையை நடுவண் அரசுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் என்பது நடுவண் பல்கலைக் கழகத்தை விட உயர்ந்த  அமைப்பு ஆகும். தமிழக முதலமைச்சர் தான் இதன் ஆட்சிக்குழுத் தலைவர் என்பதிலிருந்தே இதன் பெருமையை உணர முடியும். இந்நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும் நடுவண் பல்கலைக்கழகமாக மாற்ற முடியும்.

அவ்வாறு மாற்றினால் அது திருவாரூரில் உள்ள நடுவண் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த நிலை அமைப்பாக திகழும். அப்படிப்பட்ட அமைப்பை நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது ஒரு மாநிலத்தை இன்னொரு மாவட்டத்துடன் இணைப்பதற்கு சமமான செயலாக அமையும். இதனால், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் தன்னாட்சி உரிமை பறிபோகும். இந்த நிறுவனத்தின் ஆய்வுகள் முற்றிலுமாக முடங்கி விடும். சிறு செலவுகளுக்கு கூட துணைவேந்தரை சார்ந்திருக்க வேண்டும். தமிழை இப்படி ஒரு இழிநிலைக்கு தள்ள வேண்டும் என்பது தான் தமிழ் எதிரிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுகுறித்த செய்தி வெளியானவுடன் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது. அதன்பயனாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற அட்சயப் பாத்திரத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த உலகத்திற்கும் தமிழ் விருந்து படைக்கப்பட்டிருக்க  வேண்டும். ஆனால், அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை.

நாளை..... தமிழ்: மொழியல்ல... உணர்ச்சி அரசியல் ஆயுதம்!
                         *****************

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages