எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?
29. தமிழ்ப் பண்ணிசை!
தமிழ்ப் பண்ணிசை என்று இந்த அத்தியாயத்திற்கு தலைப்பிட நேர்ந்ததற்கு நான் உண்மையாகவே வெட்கப்படுகிறேன். தமிழ்நாட்டில் மொழி என்றால் அது தமிழைத் தான் குறிக்க வேண்டும்; இசை என்றால் அது தமிழிசையைத் தான் குறிக்க வேண்டும். பிற நாடுகளிலும், மாநிலங்களிலும் மொழி என்பதும், இசை என்பதும் தாய்மொழியையும், தாய்மொழி இசையையும் தான் குறிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய நிலை இல்லை. பண்ணிசை என்றாலே அது தமிழ்ப் பண்ணிசையாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் பண்ணிசை என்றால் அது தமிழர்களுக்கு விளங்காத ஒன்றாக உள்ளது. அதனால் தமிழ்ப் பண்ணிசை என்று குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கனியிருப்பக் காய்....
‘இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ என்று வள்ளுவர் கண்டித்தாலும் நமது மக்களுக்கு கனியை விட காயே பிடித்தமானதாக உள்ளது. உலகின் இனிமையான மொழியான தமிழை சரளமாக பேசக்கூடியவர்கள் கூட, ஆங்கிலத்தில் பேசுவதையும், எழுதுவதையும் எவ்வாறு பெருமையானதாக கருதுகிறார்களோ, அதேபோல் தான் செவிக்கினிய தமிழிசை இருக்கும் போது, அதை அனுபவிக்காமல் கர்நாடக இசைக்கும், மேற்கத்திய இசைக்கும் அடிமையாகி இருக்கின்றனர்.
ஆங்கிலத்தில் பேசினால் நாம் ஆங்கிலேயர்களாகவே மாறி விடுவதாக உணரும் தமிழ் மக்கள், கர்நாடக இசையை ரசிப்பதாகக் காட்டிக் கொண்டால், தங்களையும் மேட்டுக்குடி மக்களாக மற்றவர்கள் நினைப்பார்கள் என்று கருதுவது தான் தமிழிசையை வீழ்த்தி, பிறமொழி இசைக்கு தமிழகத்தில் மகுடம் சூட்டியிருக்கிறது.
உண்மையில் இசை என்பது தமிழை வளர்ப்பதற்கான சிறந்த கருவி ஆகும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியவை பக்தி இலக்கியங்கள் மட்டுமல்ல. அவை இசை இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களும் ஆகும். தமிழை வளர்ப்பதில் இந்த இலக்கியங்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. இன்றும் கிராமப்பகுதிகளில் மார்கழி மாதத்தில் தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்கள் பஜனைகளில் இசைக்கப்படுவதைக் காணலாம். ஆனால், இவை இப்போது அரிதிலும், அரிதானவையாக மாறிவிட்டன.
இவை அனைத்துக்குமே காரணம் போலித்தனம் தான். ஆங்கிலமே அறியாதவன் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கி, சுருட்டி கைகளில் வைத்துக் கொண்டு நடப்பதை எப்படி பெருமையானதாக கருதுகின்றானோ, அதேபோல் தான் கர்நாடக இசை கொஞ்சமும் தெரியாவிட்டாலும், கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறும் அரங்கத்திற்கு சென்று தலையாட்டி வருவதை பெருமையாகக் கருதுகிறார்கள்.
நாமக்கல் கவிஞரின் கருத்து
இந்த நிலை இப்போது ஏற்பட்டதில்லை. பல பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த நிலை ஏற்பட்டுவிட்டது, நாமக்கல் கவிஞர் காலத்திலேயே இத்தகைய நிலை இருந்திருக்கிறது. கர்நாடக இசைக் கச்சேரியை காணச் செல்லும் தமிழன் எப்படியெல்லாம் நெளிவான்; வளைவான் என்பதை நாமக்கல் கவிஞர் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்.
‘‘ பாட்டுக்கச்சேரி கேட்கப் போகிறவர்களில் பெரும்பாலரும், கொஞ்சங்கூட தங்களுக்கு விளங்காத வார்த்தைகளையும், உணர்ச்சி ஊட்டாத ஓசைகளையும் கேட்டுக் கொண்டே நெடுநேரம் உட்கார்ந்திருப்பார்கள். பாடுகின்ற வித்வானுடைய சலவைச் சட்டையையும், சரிகைத் துப்பட்டாவையும், அவர் வாங்கிய தோடா மெடல்கள் இருந்தால் அவற்றையும், அவர் முகத்தையும், உடலையும் கோணிக் கொண்டு கைகளையும், தலையையும் நீட்டிக் கொண்டு ஆட்டிக் கொண்டிருப்பதையும், இடையிடையே பொடி போடுவதையும், கனைப்பதையும், தும்முவதையும், இருமுவதையும் பார்த்துவிட்டு தாங்களும் பாட்டுக் கேட்டதாகச் சொல்லிக் கொண்டு போவது தான் தமிழ்நாட்டில் பாட்டுக்கச்சேரிக்குப் பதப்பொருள் என்று ஆகிவிட்டது. அவர்கள் பாடுகின்ற சாகித்தியத்தின் சரியான அர்த்தமோ, அதிலுள்ள ‘‘பாவம்’’ என்று சொல்கிறார்களே, அதன் பாவமோ, புண்ணியமோ கூட தெரியுமா என்பதே சந்தேகம் தான்’’ என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை கிண்டலாகவும், வேதனையுடனும் எழுதியிருக்கிறார்.
பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம்
நாமக்கல் கவிஞர் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் உண்மையானவை. தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களில் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற ஆயிரக்கணக்கான பாடல்களின் தாளம் நாட்டுப்புறப்பாடல்களில் இருந்து எடுத்தாளப்பட்டவை தான். இதை இளையராஜாவே பலமுறை ஒப்புக்கொண்டிருக்கிறார். வயல்வெளிகளில் வேலை செய்யும் தாய்மார்கள் பணிச்சுமை தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் நாட்டுப்புற பாடல்கள் அனைத்தும் மக்களைக் கவரக்கூடியவை தான். ஆனால், அதை ரசிப்பவர்கள் கூட ரசித்ததாக வெளியில் கூறிக் கொள்ள மாட்டார்கள்; அந்த பாடல்களை பாடுபவர்களை பாராட்டவோ, போற்றவோ மாட்டார்கள். காரணம்..... அவ்வாறு செய்தால் அவர்களின் கவுரவம் குறைந்து விடுமாம். இப்படியிருந்தால் தமிழகத்தில் தமிழிசை எங்கு செழிக்கும்.... இசை மூலமாக தமிழ் எவ்வாறு வளரும்? தமிழகத்தில் தமிழிசைக்காக சில அமைப்புகள் இருந்தாலும், அவை மக்களிடையே சென்றடையவில்லை. அதனால் தான் தமிழிசையை மக்களிடம் கொண்டு செல்ல ஓர் அமைப்பைத் தொடங்க தீர்மானித்தேன். அந்த சிந்தனையின் பயனாக உருவானது தான் ‘பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம்’ ஆகும்
ஜே.வி.கண்ணனின் ஒத்துழைப்பு
பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றத்தின் அலுவலகம் சென்னை தியாகராயர்நகர் அபிபுல்லா சாலையில் அமைக்கப்பட்டது. மணிமன்றத்தின் தலைவராக தமிழிசையில் வல்லமை பெற்றவரும், முதுபெரும் பத்திரிகையாளருமான ஜே.வி.கண்ணனும், செயலாளராக ஜி.கே.மணியும் நியமிக்கப்பட்டனர். பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தை வழிநடத்திச் செல்வதில் அதன் நிறுவனரான எனக்கு பெரும் துணையாக இருந்தவர் ஜே.வி. கண்ணன் தான். அவர் 50 ஆண்டுகளுக்கும் கூடுதலான அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் ஆவார். பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அவர், தினமணி நாளிதழில் தலையங்க ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
தமிழிசை மீது ஆர்வம் கொண்ட அவர், உலகின் ஆதி இசை தமிழிசை தான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கி புத்தகம் எழுதி வெளியிட்டவர். பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் தமிழிசை விழாக்களை முறைப்படுத்தி நடத்தியவர் இவர் தான். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட அனைத்து பக்தி இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தவர். அனைத்து பாடல்களையும் ராகத்துடன் பாடும் திறன் பெற்றவர். அவருக்கும், எனக்கும் பெரிய அறிமுகம் இல்லாத நிலையில் என்னை சந்தித்த போது அவர் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? ‘‘தமிழையும், தமிழிசையும் கண்டுகொள்ள இன்று தமிழகத்தில் யாருமில்லை. தமிழையும், தமிழிசையும் உங்களால் தான் காப்பாற்ற முடியும்’’ என்பது தான். அவர் கூறிய வார்த்தைகளை நிறைவேற்றும் வகையில் தான் செயல்பட்டு வருகிறேன்.
பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம் சென்னையில் தொடங்கப்பட்டவுடன், மார்கழி மாதத்தில் சபாக்களில் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுவதைப் போலவே தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாக்களை நடத்த தீர்மானித்தோம். அதன்படி முதல் பண்ணிசைப் பெருவிழா 17.12.2003 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்த இசைவிழாவை எனது தலைமையில் திமுக தலைவர் கலைஞர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு இசைவிழாவில் தமிழ் மணத்தது.
கலைஞரின் பாராட்டு
பண்ணிசைப் பெருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய கலைஞர், தமிழகத்தில் தமிழிசைக்கு தொய்வு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
‘‘தமிழ்நாட்டில் தமிழிசைக்கு தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் தான் அறக்கட்டளைத் தேவைப்பட்டு இந்த விழாவும் நடத்தப்படுகிறது. திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பேசும்போது தமிழிசை விழாவை நடத்துவோம் என்று கூறினேன். ஆனால், இடையில் ஏற்பட்ட அல்லல்கள், எனக்கு வந்த சோதனைகள், சோகங்கள் காரணமாக அதை நடத்த முடியவில்லை. இருப்பினும் அந்தப் பொறுப்பை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா ஏற்று நடத்துவது பாராட்டுக்குரியது’’ என்று கலைஞர் பாராட்டினார்.
விழாவுக்கு தலைமை வகித்துப் பேசிய நான், ‘‘ தமிழிசை வெள்ளம் தமிழ்ச் சமுதாயத்தின் அடிவாரம் வரை சென்று பாயுமாறு செய்வதை பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கிறது’’ என்று கூறினேன். இரண்டாம் ஆண்டு பொங்குதமிழ் பண்ணிசைப் பெருவிழா 2004-ஆம் ஆண்டு திசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டேன். தமிழிசையின் சிறப்புகள் குறித்து விரிவாக விளக்கிய நான், தமிழிசைக்கு அத்தனை சிறப்புகள் இருந்தும் அது வளர்ச்சியடையாதது ஏன்? என்று வினவினேன். தமிழிசை வளராததற்கான காரணங்கள் குறித்து 12 வினாக்களை பார்வையாளர்களிடம் எழுப்பினேன். அவை:
1. தமிழ் நிலத்தில் சமூக நீதி இயக்கமும், தன்மான இயக்கமும் மகத்தான வெற்றியைப் பெற்று விட்டன. அதே அளவுக்குத் தமிழிசை இயக்கம் ஏன் சாதிக்க முடியவில்லை?
2. தமிழிசை இயக்கம் தோன்றி அறுபது ஆண்டுகள் ஆகின்றன. அப்படி இருந்தும் தமிழர் வாழ்வில் பல முனைகளிலும் தமிழிசை இன்னும் ஏன் முழங்கவில்லை?
தமிழிசைக்கு உரிய இடம் கிடைக்காதது ஏன்?
3. தேவாரப் பண்கள் சைவ, வைணவத் திருத்தலங்களில் பாடப்பட்டவை. அப்படி இருந்தும் கோவில்களில் இந்தத் தமிழிசைக்கு ஏன் இன்னும் உரிமையான இடம் கிடைக்கவில்லை?
4. கோவில்களுக்குச் செல்லும் தமிழர்கள், கோவில் வழிபாட்டை இனிய தமிழில் நடத்த வேண்டும் என்ற உரிமை முழக்கத்தை ஏன் எழுப்பவில்லை?
5. சென்னையில் மட்டும் வேற்றுமொழி இசைப்பாடல் சங்கீதக் கச்சேரி நடத்துவதற்கு முதன்மையான இடம் 120 சபாக்கள் இருக்கின்றன. அதில் பத்தில் ஒரு பகுதி அளவுக்குக்கூட தமிழிசைக்கான சபாக்கள் ஏன் இல்லை?
6. கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த இசைவாணர்களுக்கு ஓயாத விளம்பரங்கள் பல்வேறு ஊடகங்களில் திட்டமிட்டுத் தரப்படுகின்றன. கர்னாடக இசையே இந்தியாவின் தொன்மையான இசை என்பதுபோன்ற ஒரு மாய சித்திரத்தைத் தீட்டிக் காட்டுவதில் ஊடகங்கள் முழு மூச்சுடன் முனைந்திருக்கின்றன. ஆனால் தமிழிசையும் தமிழிசை வாணர்களும் இருட்டடிப்புக்கு உள்ளாகி வருவது ஏன்?
பத்ம விருதுகள் வழங்காதது ஏன்?
7. இசைக் கலை சாதனையாளர்களுக்கான மத்திய அரசின் விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீத வித்வான்களுக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது. தமிழிசைவாணர் ஒருவருக்குக்கூட அத்தகைய விருது கிடைக்காததற்குக் காரணம் என்ன?
8. வேற்றுமொழி - சங்கீதக் கலை பலமான அமைப்புகள் மூலம் பாரம்பரியமான குரு - சிஷ்ய முறையிலும் கட்டுக்கோப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாணியில் தமிழிசையின் முறையான வளர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லாதது ஏன்?
9. தமிழர்களின் பலத்தையும், ஆதரவையும் கொண்டு வேற்றுமொழி சங்கீதம் புதர்போல் மண்டி வரும்போது தமிழிசை மட்டும் ஏன் அனாதையாகி - சவலைப் பிள்ளையாக நிற்கிறது?
10. தமிழ்ச் சமுதாயத்தில் எல்லாத் துறையிலும் தமிழ் அதற்க்கு உரிமையான இடத்தைப் பெறுவது எப்போது? நிர்வாகத்தில், நீதி மன்றத்தில், உயர் கல்விக் கூடங்களில், கோவில்களில் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெறுவது எப்போது?
11. வீட்டிலும், வீதியிலும், குடும்ப நிகழ்ச்சியிலும், சமூக விழாக்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலை எப்போது வரும்?
12. தமிழ் நிலம் இருக்கிறது. தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்தான் இல்லை - அது ஏன்?
மேற்கண்ட வினாக்களுக்கு விடைகளைக் கண்டு, அவற்றின் அடிப்படையில் தீர்வுகளையும் கண்டால் தமிழிசை உலகம் முழுவதும் பரவுவதற்கும், தழைத்தோங்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், இந்த வினாக்களுக்கு விடை காணவோ, அவற்றின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ தமிழகத்தை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் முயற்சி செய்யவில்லை.
தமிழகத்தில் மற்ற இசைக்கு நிகராக தமிழ் இசை வளர்ச்சி அடையவில்லை. இந்திய விடுதலைக்கு பிறகு ஜனநாயக ஆட்சியில் தமிழிசை கலைஞர்களுக்கும், தமிழ் இசைக்கும் எந்த பயன்பாடோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. எனது கருத்தில் எந்த அரசியலும் இல்லை. தமிழ் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழிசை கலைஞர்கள் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு நல்ல ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் இசையை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை.
தமிழிசைப் பயிற்சி
தமிழிசை வளர்ச்சிக்கான யோசனைகளை தெரிவிப்பதுடன் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி நின்று விடுவதில்லை. செயலிலும் காட்டுவது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். அதைப் போலவே, தமிழிசையை பரப்பும் நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணியினருக்கு தமிழிசைக் கற்றுக் கொடுக்கப்பட்டது. சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கக் கட்டிடத்தில் 05.02.2005 முதல் 26.03.2005 வரை 8 வாரங்களுக்கு சனிக்கிழமை தோறும் தமிழிசைப் பயிற்சி வழங்கப்பட்டது. அடுத்தடுத்தக் கட்டங்களில் இசைவாணர்களைக் கொண்டு பெண் குழந்தைகள், மாணவிகள் உள்ளிட்டோருக்கும் தமிழிசை பயிற்றுவிக்கப்பட்டது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தில் நெல்லை, மதுரை, கோவை, சேலம், சீர்காழி, வேலூர் ஆகிய இடங்களிலும், தில்லி, மும்பை உள்ளிட்ட பிற மாநில தலைநகரங்களிலும் சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பண்ணிசைப் பெருவிழாக்கள் நடத்தப்பட்டன. தமிழிசையின் வளர்ச்சிக்கு பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
நாளை ..... தமிழ் கற்பித்த தமிழ் ஓசை!
**********
No comments:
Post a Comment