முப்போகம் விளையும் 25000 ஏக்கர் விளை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக இரண்டு நாள் எழுச்சி நடைபயணம் நடத்தப்படுகிறது. நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, வாணதிராயபுரம் கிராமத்தில் மக்களிடையே பேசியதாவது. - Agnipuratchi

முப்போகம் விளையும் 25000 ஏக்கர் விளை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக இரண்டு நாள் எழுச்சி நடைபயணம் நடத்தப்படுகிறது. நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, வாணதிராயபுரம் கிராமத்தில் மக்களிடையே பேசியதாவது.

Share This

முப்போகம் விளையும் 25000 ஏக்கர் விளை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக இரண்டு நாள் எழுச்சி நடைபயணம் நடத்தப்படுகிறது. நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, வாணதிராயபுரம் கிராமத்தில் மக்களிடையே பேசியதாவது.

"என்னுடன் கலந்துகொண்டு, இரண்டு நாள் நிகழ்ச்சிகளை நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அண்ணன்-தம்பிகள், பாட்டாளி சொந்தங்கள், விவசாய பெருமக்கள், ஊடக பொதுமக்கள், காவல்துறை, ஊடக நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

49 கிராமங்களில் இருந்து, 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இது 49 கிராமங்களுக்கு மட்டுமான சாதாரண பிரச்சனை கிடையாது, மாவட்டத்தின் பிரச்சனை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது கிராமத்திற்குள் அவர்கள் வரவில்லை, எனது நிலத்தை அவர்கள் எடுக்கவில்லை என நினைக்க வேண்டாம். என்எல்சி நிர்வாகம் 66 ஆண்டு காலத்திற்கு முன்பு 37 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பிடுங்கிக் கொண்டது. இன்று வரை நிலங்கள் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. அன்று நிலம் கொடுத்தவர்களில் ஒருவர் கூட இன்று வேலையில் இல்லை. நிலம் கொடுத்தவர்களில் 1800 பேருக்கு வேலை கொடுத்தார்கள், அவர்கள் இன்று பணியிலும் இல்லை. பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரை என்எல்சி நிர்வாகம் நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.

அரசியலுக்காக, ஓட்டு கேட்டு உங்கள் முன்பு நான் வரவில்லை. இது தேர்தல் பிரச்சாரமும் இல்லை. நமது மண், மக்கள், வாழ்வாதார, விவசாய, தண்ணீர், சுற்றுசூழல் சார்ந்த பிரச்சனை. தற்போது என் கிராமம் வரவில்லை என இன்று நீங்கள் அமைதியாக இருந்தால், பிற்காலத்தில் உங்களின் நிலமும் பாதிக்கப்படும். உங்களின் பிள்ளைகள் பாதிப்பை சந்திப்பார்கள். ஏனென்றால் என்எல்சி நிறுவனம் அப்படியான நிறுவனம்.

இராட்சத குழாய்களை வைத்து நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சுவிடுவார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடியில் நீர் கிடைத்தது. உலகளவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு பின்னர் நெய்வேலியில் மட்டுமே தன்னூற்று இருந்தது. ஆனால், இன்றளவில் அந்நிலை போய்விட்டது. அன்று வீட்டில் கடைக்கால் எடுத்தால் நீர் நிரம்பி நிற்கும். அன்று 10 அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று 1000 அடிக்கு போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் என்எல்சி நிறுவனம், நிலத்தடி நீரை இராட்சத குழாய்கள் மூலமாக உறிஞ்சி கடலுக்கு அனுப்பி வைக்கிறது.  நீரை வெளியேற்றிய பின்னர் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து, அதனை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்.

அவர்களின் மின்தேவைக்கு நெல், கரும்பு, வாழை என முப்போகம் விளைந்த மண்ணை அபகரிக்க நினைக்கிறார்கள். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 இலட்சம் விவசாயிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும் மண்ணை பிடுங்க என்எல்சி முயற்சிக்கிறது.

இதற்கு உடந்தையாக இருப்பது யார் தெரியுமா? நீங்கள் நம்பி வாக்களித்து அனுப்பி வைத்த 2 அமைச்சர்களும், இம்மாவட்டத்தின் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தான். மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் காப்பதே அமைச்சரின் வேலை. உங்களின் நிலத்தை பிடுங்கி என்எல்சிக்கு வழங்குவேன் என இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு அமைச்சர் வேளாண்துறை அமைச்சர். அவரின் வேலை என்ன?.. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் வேலை தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாப்பது, விவசாய மண்ணை பாதுகாப்பதே ஆகும்.

என்எல்சி நிர்வாகமே நீயே நிலத்தை எடுத்துக்கொள், நீ நிலத்தை நாசப்படுத்திக்கொள் என அமைச்சர் கூறினால் அதனை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியுமா? இந்த மாவட்டத்தில் முட்டம் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்ற போராளி வாழ்ந்து வந்தார். அவர் 89ல் மறைந்தார். இந்த மண்ணில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடோடி வந்து போராட்டம் செய்தவர் முட்டம் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி. அவர் யார் தெரியுமா? எம்.ஆர்.கே தான். அப்படிப்பட்டவரின் மகன் தான் இன்றைய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். இப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தவர் ஏன் இப்படி இருக்கிறார்? உங்களின் அப்பா மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடி சென்று மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் போராடி காப்பாற்றினார். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் விவசாயத்தை அழித்து, மக்களையும், மண்ணையும் பற்றி கவலை இல்லாமல் என்எல்சி க்கு எப்படியாவது பிடுங்கி கொடுத்து விடவேண்டும் என துடிக்கிறீர்களே.. ஏன்?.. என்ன காரணம்?.

TELEGRAM: t.me/agnipuratchi1

நான் இங்கு அமைச்சரை பற்றி பேச வரவில்லை. ஆனால், தற்போதைய சூழலை பார்த்தால் எனக்கே சந்தேகம் வருகிறது. விவசாயத்துறை அமைச்சர் விவசாயம் செழுமையாக இருக்கிறதா? பசுமையாக இருக்கிறதா? அதற்கு என்ன தேவை என்பதை கண்காணிக்காமல் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டு விவசாய நிலத்தை பிடுங்கி என்எல்சிக்கு கொடுக்க காரணம் என்ன?

என்எல்சி நிறுவனம் 2 ஆண்டுக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது நிறுவனத்தை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கையின் கீழ் என்எல்சி நிர்வாகம் 2025 க்குள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் எவை கூறினாலும் அது உண்மை. உண்மையை தவிர அங்கு வேறேதும் பேச முடியாது. இப்படி 2 ஆண்டுக்குள் என்எல்சி நிர்வாகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்டால், உங்களுக்கு எதற்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும்?

தற்போது நிலக்கரியா இல்லை? 1989 ல் எடுத்த 10000 ஏக்கர் நிலம் அப்படியே உள்ளது. அந்த 10000 ஏக்கர் நிலத்தில் வெட்டி எடுத்தாலே 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி போதுமானது. அதனை விட்டுவிட்டு இன்னும் 25000 ஏக்கர் பிடுங்க நினைப்பது ஏன்?. எதற்கு? தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்திடவேண்டும் என்ற துடிதுடிப்புதான். அது எந்த நிறுவனம் தெரியுமா?. இந்தியாவிலேயே மிகப்பெரிய A என ஆரம்பிக்கும் நிறுவனம்.

A என்ற கம்பெனிக்கு விற்பனை செய்ய உள்ளார்கள். அமைச்சர்களுக்கும், என்எல்சி நிர்வாகிகளுக்கும் விற்பனை தொடர்பான தகவல் தெரியும். தனியாரிடம் என்எல்சி விற்பனை செய்யப்பட்டுவிட்டால் நிலத்தை எடுக்க முடியாது. அதற்கு முன்பாகவே நிலத்தை எடுத்துவிட்டு என்எல்சியை விற்பனை செய்துவிட்டோம் என கூறவதற்கு, அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், எல்எல்சி நிர்வாகிகளும் A நிறுவனத்திற்கும், NLC நிர்வாகத்திற்கும் தரகர்கள் போல் செயல்படுகிறார்கள்.

அதுவா உங்களின் வேலை? உங்களின் வேலை என்ன? விவசாயத்தை செழிக்க வைப்பது, பாதுகாப்பு, மக்களை பாதுகாப்பு தான். அதற்குத்தான் உங்களை எம்.பி., எல்.எல்.ஏ., அமைச்சராக்கினார்கள். இம்மக்கள் உன்னிடம் நிலத்தை கொடுத்துவிட்டு எங்கோ அகதியாய் சென்று கஷ்டப்பட வேண்டுமா?

TELEGRAM: t.me/agnipuratchi1

மக்கள் எங்கே செல்வார்கள்? நிலத்திற்கு இழப்பீடாக ரூ.25 இலட்சம், ரூ.50 இலட்சம், ரூ.1 கோடி என பொய் சொல்கிறார்கள். கடந்த வாரம் நாங்கள் நிரந்தர வேலை கொடுக்க முடியாது என ஆட்சியர் கூறுகிறார். நான் வருகிறேன் என்ற அறிவிப்பு நேற்று வந்ததும், 500 பேருக்கு 5 ஆண்டுகள் கழித்து நிரந்தர வேலை கொடுப்பதாக கூறுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கு பின்னர் நிறுவனம் உங்களிடம் இருக்கப்போவது இல்லை. அதனை A நிறுவனம் வாங்கியிருக்கும். அன்று உங்களுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தம் இருக்காது. நீங்கள் எப்படி வேலை கொடுப்பீர்கள். A நிறுவனத்திற்கு தரகர் போல இருக்கிறார்கள். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?

25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தில் நெல், கரும்பு, வாழை கிடைக்கும் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?

என்எல்சி 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவில்லை என்றால் தமிழகம் இருண்டு விடும் என முதல்வரிடம் அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள். நீங்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள்? தமிழகத்தின் மொத்த மின்தேவை நாளொன்று 18 ஆயிரம் மெகாவாட். என்எல்சி நிர்வாகம் 2 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கிறது. அதில் தமிழகத்திற்கான பங்கு என்பது 40% மட்டுமே. மீதி மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டிற்கு 800 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பிறவழிகளில் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. என்எல்சி இல்லையென்றால் தமிழகம் இருண்டுவிடும் என பல பொய்கள் கூறி ஏமாற்றி வருகிறார்கள்.

இதைப்போல இனி யாரையும் ஏமாற்ற முடியாது. இம்மண்ணை நாங்கள் விடப்போவது இல்லை.  இராணுவம் உட்பட எதையும் அழைத்து வாருங்கள். உங்களால் ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது. இது 49 கிராம பிரச்சனை இல்லை. என்எல்சி தண்ணீர் எடுத்தால் 30 கி.மீ தொலைவில் உள்ள ஊரிலும் தண்ணீர் இருக்காது. குடிக்க நீர் இருக்காது என்றால், விவசாயம் என்ன நிலை என்று பாருங்கள். எம்.ஆர்.கே ஊரான முட்டத்திலும் அதே நிலை வரும். எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் வீடு குறிஞ்சிப்பாடியில் உள்ளது. அங்கும் நீர் இருக்காது. 10 அடி இருந்த நிலத்தடி நீர் 1000 அடிக்கு சென்றுவிட்டது. எவ்வுளவு அநியாயம் இது.

கடலூர் மாவட்டம் பாவப்பட்ட மாவட்டமாக மாறிவிட்டது. கடலூர் ரசாயன சிப்காட் பக்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்லக்கூட முடியாது. துர்நாற்றம் வீசும்.

அங்கு முதன் முதலாக போராட்டம் நடத்தியது பாமக மட்டும் தான். மருத்துவர் அய்யாவின் தலைமையில் பல போராட்டங்கள் பாமக சார்பில், பசுமைத் தாயகம் சார்பில் நடத்தி, உச்சநீதிமன்றம் வரை சென்று, சிறிது வெற்றி பெற்றோம். சிப்காட் வளாகத்தை ஒட்டியிருந்த கிராமத்தின் மண் அழிந்துவிட்டது. தண்ணீர் மாசாகிவிட்டது. அங்கே பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே எஞ்சிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதே நிலை தான் என்எல்சியால் வரும்.

மருத்துவர் அய்யா அன்று நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கேட்டு பல போராட்டம் நடத்தினார். யார் நீ? எங்கிருந்து வந்தாய்? நாங்கள் கொடுத்த நிலத்தில் தான்  தொழில் செய்கிறாய். நீங்கள் முதலளித்தனமாகவும், நாங்கள் உன் அடிமை போல வேலை கொடுங்கள் என தொழிலாளியாக கெஞ்சினோம். என்எல்சியில் இருப்பவர் பலரும் ஹிந்திக்காரன். தமிழும் தெரியவில்லை.

நமது நிலத்தை சுரண்டி, விவசாயத்தை அழித்து, வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி, நீர், விவசாயத்தை அழித்து ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் பார்த்து, ரூ.2400 கோடி இலாபம் பெறுகிறது என்எல்சி. அந்த இலாபத்தில் எங்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளாய்?

TELEGRAM: t.me/agnipuratchi1

66 ஆண்டுகளாய் நீ இங்கு இருக்கிறாய். 66 ஆண்டுகளாக கடலூர் மாவட்ட எப்படியான வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்னும் அடிமையாக அப்படியே இருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை நீ என்ன முன்னேற்றி இருக்கிறாய்? நேற்று எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிஎஸ்ஆர் நிதி 100 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கிறார். பாமக சார்பில் NT சண்முகம் மத்திய அமைச்சராக இருக்கையில், 1999 ல் அன்று சிஎஸ்ஆர் நிதி 100 கோடி அறிவித்தோம். இன்று நீங்கள் 100 கோடி அறிவிக்கிறீர்கள். மக்கள் என்ன ஏமாளிகளா? எனது தம்பிகள், தங்கைகள் ஏமாளி இல்லை. இனி ஏமாற முடியாது. இன்று நாங்கள் ஏமாறும் நிலையில் இல்லை.

தனியார் நிறுவனத்திற்கு தரகர் வேலை பார்க்கிறீர்கள். பாவப்பட்ட விவசாயிகளை மிரட்டி, நிலத்தை சுருட்டி நிலத்தை தாரைவார்க்கிறீர்கள். தனியார் நிறுவனத்திற்கு என்எல்சி செல்லாது என என்எல்சி நிர்வாகம், அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர் ஆகியோர் உத்திரவாதம் கொடுத்து கையெழுத்திட்டு தர முடியுமா?

திமுக அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை, கொள்கைகளை எதிர்த்தே செயல்படுகிறது. இதற்கு மட்டும் திமுக உடந்தையாக இருப்பது ஏன்? A கம்பெனி 2 ஆண்டுக்குள் என்எல்சியை வாங்கிவிடும். அவர்கள் வந்தார்கள் என்றால் வேலைவாய்ப்பும் போய்விடும். இட ஒதுக்கீடும் சென்றுவிடும்.

சமீபத்தில் 299 பொறியாளர்களை பணிக்கு தேர்வு செய்தார்கள். ஒருத்தர் கூட இம்மண்ணில் பிறந்தவர்கள் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர்களும் இல்லை. அப்புறம் என்னத்துக்கு இங்கு நிறுவனம் நடத்துகிறீர்கள்? என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாங்கள் முட்டாள்களா? எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?

என் மக்களுக்கும், என் இளைஞர்களுக்கும் வேலை இல்லை என்று கூற நீ யார்? நீ காசு கொடுத்தால் சரியாகிவிடுமா?  நீ ரூ.25 இலட்சம் கொடுத்தால் சரியாகிவிடுமா?  ரூ.1 கோடி கொடுத்தாலும் எனக்கு வேண்டாம். காசு காசு என கொடுத்தால் மக்கள் ஏமார்ந்துவிடுவார்கள் என எண்ணமா? அது நிச்சயம் நடக்காது. பிற கட்சிகள் அடையாளத்திற்கு அறிக்கை விடுத்து, போராட்டம் நடத்தி செல்வார்கள். நாங்கள் உணர்வுபூர்வமாக போராட்டம் நடத்துவோம். விளம்பரத்திற்கு நாங்கள் போராட்டம் நடத்தமாட்டோம். விளம்பரம் செய்ய எங்களுக்கு தெரியாது. மருத்துவர் அய்யாவின் காலத்தில் இருந்தே போராட்டம் நடத்தி வருகிறோம். அவை எதற்காக? மக்களுக்காக.

இதே தமிழக அரசு கோவை அன்னூரில் தொழிற்பூங்கா தொடங்க 3500 ஏக்கர் கையகப்படுத்துவதாக அறிவித்தது. அதில் 2000 ஏக்கர் நிலம் அரசு நிலம். 1500 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது. 1500 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்ததாக கூறப்பட்டது.

1500 ஏக்கர் விவசாய நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி சென்று போராடுகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட பல கட்சியினர் போராடுகிறார்கள். நெல், வாழை, பலா, கருப்பு என முப்போகம் விளையும் 25000 ஏக்கர் நிலத்தை எடுக்கக்கூடாது என யாராவது வந்து போராடினார்களா? குரல் கொடுத்தார்களா?

தமிழகத்தில் பல விவசாய சங்கங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்காக குரல் கொடுத்தீர்களா? கொங்கும் இதுவும் வேறு வேறு மண்ணா?.அங்குள்ள மக்களும், இங்குள்ள மக்களும் வேறா? இதுவும் விவசாய நிலம்தான், இங்கும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே? தமிழகத்தில் இதுபோன்று 25000 ஏக்கர் விளைநிலங்கள் ஒரே இடத்தில் எடுக்கும் திட்டம் எங்குமே கிடையாது. இங்கு நடைபெறுகிறது. வாய் பேசாமல் பல அரசியல் கட்சிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வருவார்கள். மக்களுக்கு பிரச்சனை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே உங்களுடன் இருக்கும். எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

இந்த தொகுதியில் 400 வாக்குகளில் தோல்வி, விருத்தாசலத்தில் 300 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். நீங்கள் வாக்களித்தவர்கள் இன்று உங்களுடன் இல்லை. நீங்கள் வாக்களித்தவர்கள் A நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு உங்களின் நிலத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். அதற்கான முயற்சியை எடுக்கிறார்கள். உங்களை ஏமாற்றி கொள்ளையடிக்க அனைவரும் சேர்ந்துள்ளார்கள். நாங்கள் அதற்கு விடமாட்டோம்.

இது வாழ்வாதாரம், விவசாய, வேளாண்மை பிரச்சனை. இம்மாவட்டத்தில் தாது அறக்கட்டளை இருக்கிறது. அது கடலூர் மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்துள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் உள்ளன. இவையெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்காகவே 2 நாட்கள் விழிப்புணர்வு எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ளேன். நெய்வேலி அருகே உள்ள 49 கிராமம் மட்டும் பாதிக்கப்படும் என நினைத்தால் அது தவறு. கடலூரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளது. அதற்கு ஒரேயொரு காரணம் என்எல்சி மட்டும் தான். நாம் எதிர்ப்பு தெரிவித்ததும் நிரந்தர வேலை, தற்காலிக வேலை என பல ஏமாற்றுவேலை செய்கிறார்கள்.

66 ஆண்டுகளாக போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள். எனது தம்பிகள் பலமுறை நிலம் கொடுத்துவிட்டு வேலை கொடு என கதறினான். அடிமையாக உனது வாசலில் காத்திருந்தான். என் தம்பிகள் தங்கைகளுக்கு  ஒரு வேலை கூட கொடுக்கவில்லை. ஆணவத்துடன் நீ செயல்பட்டாய்.

இதற்கு மேல் நீ என்ன கூறினாலும் வேண்டாம். நீ தமிழ்நாட்டில் இருந்து வெளியேறு. என்எல்சியில் கிடைக்கும் இலாபத்தை ஒரிசா, ஜார்கண்ட், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் முதலீடு செய்கிறார்கள். இன்று வரை 55 ஆயிரம் கோடி வெளி மாநிலத்தில் முதலீடு செய்துள்ளார்கள். அது நமது பணம். நாம் கொடுத்த நிலத்தில் உள்ள பழுப்பு நிலக்கரியை எடுத்துக்கொண்டு விற்பனை செய்து வெளி மாநிலத்தில் முதலீடு செய்கிறார்கள். வெளி மாநிலத்தவருக்கு வேலை கொடுக்கிறார்கள். நமது ஊரையும், மண்ணையும், சுற்றுசூழலையும் நாசம் செய்கிறார்கள். இங்குள்ள விவசாய நிலத்தில் சாம்பல் படிந்து கிடக்கிறது. இவற்றில் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய இயலாது. 2 அமைச்சர்களும், பிற எம்.எல்.ஏக்களும் என்எல்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அமைச்சரே வேளாண்துறை சட்டப்படி விவசாயிகளுக்கு ஆதரவாக இருங்கள். விவசாயத்தை காப்பாற்றுங்கள். மாறாக விளைநிலத்தை கையகப்படுத்தி தாரைவார்க்கும் முயற்சியை கைவிடுங்கள். நீங்கள் போலீஸ், இராணுவம் என எதை அழைத்து வந்தாலும் எனது தம்பிகள் விடமாட்டார்கள். எந்த பிரச்சனைக்கும் நான் தான் முதலில் வந்து நிற்பேன்.

மக்களிடம் சென்று பல கோடிக்கணக்கில் கொடுக்குறேன் என பேசி பொய்யுரைப்பார்கள். அவை வேண்டாம். நிலத்தை விட்டுவிடுங்கள், என் மண்ணையும், மக்களையும் விட்டுவிடுங்கள். என்எல்சி நிறுவனமே வெளியேறு. எங்களுக்கு தேவையில்லை. இறுதி வரை நாங்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறோம். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும். இதனை முன்னிலைப்படுத்தியே 2 நாட்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு ஆதரவு தாருங்கள். பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் விழிப்புணர்வு நடந்தாலும் கட்சி, ஜாதி, மதத்தை மறந்து உங்களின் எதிர்காலத்திற்காக வாருங்கள். உங்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் ஏமார்ந்துவிடாதீர்கள். பெண்கள் அதிகளவு விழிப்புணர்வு பெறுங்கள்" என அன்புமணி பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages