பா.ம.க.வின் துணை அமைப்புகள்
துணையாக இருக்க வேண்டும்!
நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் பேச்சு
பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்புகளின் கூட்டம் தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்றது. மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச.சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் ஆற்றிய அறிமுக உரை:
1980&ஆம் ஆண்டு பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு 34 அமைப்புகளை நான் தொடங்கியுள்ளேன். முதலில் வன்னியர் சங்கம், பின்னர் சமூக முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிற்சங்க பேரவை, பாட்டாளி மக்கள் கட்சி, அண்மையில் தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் என நான் தொடங்கிய 34 அமைப்புகளையும் எனது குழந்தைகள் போலத் தான் பாவித்து வருகிறேன். பா.ம.க.வின் இந்த துணை அமைப்புகள் அனைத்தும் கட்சிக்கு துணையாக இருக்க வேண்டும்!
ஆலமரத்தின் பலம் என்ன தெரியுமா? அதன் விழுதுகள் தான். ஆலமரத்திற்கு வயதானாலும் கூட அதன் விழுதுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும்.
ஒரு தாய்க்கும், தந்தைக்கும் அவர்களின் பிள்ளைகள் எப்படி துணையாக இருப்பார்களோ, ஆலமரத்திற்கு விழுதுகள் எவ்வாறு ஆதரவாக இருக்குமோ, அதேபோல் தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும் என்ற கனவுக்கு என்னால் தொடங்கப்பட்ட 34 அமைப்புகளும் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு.
எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு இங்கு கூடியுள்ள 19 அமைப்புகள், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு, கொள்கை விளக்க அணி, அமைப்புப் பிரிவு ஆகிய 22 அமைப்புகளில் எத்தனை அமைப்புகள் உதவியாக இருந்து வருகின்றன என்பதை நீங்கள் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசாதீர்கள். போலியான பேச்சுக்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தராதது. நீங்கள் உங்கள் மனசாட்சியுடன் பேசினால் எப்படி பேசுவீர்களோ, அதேபோல் பேசுங்கள் என்று மருத்துவர் அய்யா அவர்கள் பேசினார்கள்.
No comments:
Post a Comment